Tuesday, March 21, 2023
முகப்புவாழ்க்கைஅனுபவம்இரண்டு பீட்சா ஒரு கொசுவர்த்தி மற்றும் பாகுபலி - 2

இரண்டு பீட்சா ஒரு கொசுவர்த்தி மற்றும் பாகுபலி – 2

-

சென்னை புறநகர் ஒன்றின் ஆவின் பால் நிறுவனத்துல ஒரு ஐஸ்க்ரீம வாங்கி எம்புள்ள கையில குடுத்துட்டு புல்லு தரையில குந்தி இருந்தேன். ஆறு துண்டா நறுக்குன ஒரு பீட்சா தட்ட வச்சுகிட்டு நாக்குல எச்சில் ஊற மூணு பசங்க குந்திருந்தாங்க. பீட்சா தின்னப் போறோம்னு அந்தன சந்தோசம் அவங்க முகத்துல. ஆனா இன்னொரு பீசா வாங்கிட்டு வரப்போன நண்பன் வர்ற வரைக்கும் பசங்ககிட்ட பொறுமை இல்ல. பசங்களாச்சே, கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாம காத்துக் கிடக்கும் எரிச்சல் அவர்களுக்குள் சலசலப்ப ஏற்படுத்திருச்சு.

ன்னடா, இவன இன்னும் காணோம்.

கூட்டமாருக்குல்ல வாங்கிகினுதான்டா வரனும். இன்னாத்துக்கு அவுசரப்பட்ற நீ.

இவருக்கு மட்டும் அவுசரம் கெடையாதாக்கும். பீட்சாவ பாத்துனே இருக்க தோணுதா? துன்ன தோணலையா?

இவன இட்டாந்துருக்கவே கூடாதுடா!

ம்க்கூ. நீ ஏதோ துட்டு போட்டு இட்டாந்த மாறி சொல்ற. வெங்காயம் பொறுக்கி சேர்த்த துட்ட ஒனக்கு நாந்தாண்டி குடுத்துருக்கேன்.

உந்தம்பி தானடா. விட்டு குடுக்க மாட்டியா? அவனுக்கு செலவழிக்குற துட்டுக்கு கணக்கு பாக்குற. வந்த எடத்துல சண்ட வலிக்கிற. ஒனக்கே நல்லாருக்காடா.?

நீ நடிக்காதடா. ஒனக்கு மட்டும் சீக்கரம் துண்ணனும்னு ஆசையில்ல?

சண்டை பெருசாக மாறுவதற்குள் பீட்சா தட்டுடன் நண்பர்களே வந்துட்டாங்க. பீட்சாவ நடுவுல வச்சு, வட்டமா உக்காந்து சந்தோசமா சாப்பிட ஆரம்பிச்சாங்க.

இன்னாடா இது காக்கா முட்டை படத்துல சொன்னாப் போல நல்லாவே இல்லையே.

ஆமாடா! இதுக்கு ஐஸ்க்கிரீமே வாங்கினுருக்கலாம்.

ஒரு பால் பாக்கெட்டும் ப்ரட்டும் வாங்கினு வீட்டுக்கு போயிருந்தா டீ போட்டு நல்லா முக்கி சாப்ட்ருக்கலாம்.

சூப்பரா தானடா இருக்கு. எனக்கு புடிச்சுருக்குப்பா.

கை கழுவாமெ துன்னா நல்லாதாண்டா இருக்கும்.

அந்த பாப்பா பீட்சாவையே பாத்துகினு இருக்கு அதுக்கு ஒன்னு குடுடா.

இவர்கள் பேச்சில கவரபட்ட நான் என்னோட குழந்தைய மறந்துட்டேன். தான் கையில இருக்குற ஐஸ் க்ரீம் கரையறது தெரியாம பல கலர்ல பளிச்சினு இருக்குற பீட்சா தட்டையே வெறிச்சு பாத்துட்டுருந்த எம்பொண்ணுட்ட பசங்க பீட்சாவ எடுத்து நீட்டிட்டாங்க.

அதெல்லாம் வேண்டாப்பா நீங்க சாப்பிடுங்க.

பரவால்ல ஆன்டி. பாப்பாவுக்கும் குடுங்க.

எந்த ஏரீயாப்பா நீங்கள்ளாம்?

மதுரவாயல் ஆன்டி.

இன்ன படிக்கிறீங்க.?

நாங்க மூணு பேரும் 8 வது. அவனுங்க ரெண்டு பேரும் 7 வது.

எந்த ஸ்கூல்ல படிக்கிறீங்க.?

மதுரவாயல் கெவர்மெண்ட்டு ஸ்கூல்.

பீட்சா சாப்பிடவா இங்க வந்தீங்க?

இல்ல ஆன்டி. ஸ்கூலு லீவு, படம் பாக்கலாம்ன்னு வந்தோம்.

என்னா படம் பாத்தீங்க?

பாகுபலி -2 பாக்கலாம்ன்னு வந்தோம். டிக்கெட்டு கெடைக்கல.

பக்கத்துல வேற தியேட்டருல ஓடுதே போயி பாக்க வேண்டியதுதானே?

அதுக்கெல்லாம் துட்டு பத்தாது ஆன்டி. அஞ்சு பேரும் ஆளுக்கு அம்பதுதான் கொண்டாந்தோம். அதுக்கே இவங்க ஆயா அத்தன திட்டு திட்டுச்சு. பஸ்ல வந்தா துட்டு பத்தாதுன்னு சைக்கிள்ள வந்தோம். தியேட்டர்ல சைக்கிள் வச்சா காசு குடுக்கனுமேன்னு பக்கத்து ஏரியாவுல இவங்க அத்த வீட்டுல விட்டுட்டு நடந்தே போனோம்.

திரும்பவும் நாளைக்கி வருவீங்களா படம் பாக்க?

துட்டல்லாம் செலவு பண்ணிட்டோம். இனிமே வீட்டுல கேட்டா பூசதான் விழும்.

எல்லா துட்டுக்கும் பீட்சா சாப்பிட்டிங்களா?

இல்ல ஆன்டி. ரெண்டு பீட்சா  120 ரூபா. ஒரு கொசுவத்தி பாக்ஸ் 60 ரூபா. பத்துருவா பேனாவுல அஞ்சுது வாங்கிகினோம்.

கொசுவத்தியா அது எதுக்குடா வாங்குனீங்க?

பிக் பஜார சுத்திபாக்க போனோம் ஆன்டி. எதாவது ஒன்னு வாங்காம வர கூச்சமாருந்துச்சு. அதான் யூசாருக்குமேன்னு கொசு வத்தி வாங்கினு வந்தோம்.

என்னடா சொல்றீங்க? எனக்கு ஒன்னுமே புரியல?

ஆமா ஆன்டி. எங்க ஏரியாவுல ஒரே கொசு தொல்ல. பொழுதுக்கா நாங்க பேசினுருக்க சொல்ல கொசு கடி பின்னி எடுத்துரும். இவந்தா சொன்னா கொசு வத்தி வாங்குனா கத பேசும் போது கொளுத்தி வச்சுகலாமுன்னு…

அது இல்லடா பிக் பஜார எதுக்கு சுத்தி பாக்க போனீங்க?

அதுவா ஆன்டி. சினிமாவுக்கு டிக்கெட்டு இல்லாங்காட்டி விஜய் மால சுந்தி பாக்கலாமுன்னு போனோம்.

நா அப்பவே சொன்னன் ஆன்டி உள்ள விட மாட்டாங்கெடா வேணாமுடான்னு. இவந்தா சொன்னா, எங்க அப்பாவும் விஜய் மால் ஓனரும் திக் ப்ரண்டு. வாடா போடான்னுதா கூப்புடவாரு ஓனரு. இந்த கட்டடம் இம்மாம் பெரிசு வர்ரதுக்கு எங்க அப்பாதான் காரணமுன்னான். அளந்து விட்டான் ஆன்டி. ஆனா உள்ள விடலனுட்டாங்க.

அப்புடி சொல்லல ஆன்டி. இந்த கட்டடம் கட்டசொல்ல அங்க அப்பாவும் அம்மாவும் சித்தாள் வேல பாத்தாங்கன்னுதான் சொன்னேன். இவந்தான் ஓவரா பேசுரான்.

ஏய் கோச்சுக்காதடா விட்றா விட்றா.

ஏண்டா அவன வம்புக்கிழுத்துட்டே இருக்க. மாலுக்குள்ள போனீங்களா இல்லையா?

இல்ல ஆன்டி. வாட்சுமேனு அண்ணா சொன்னாரு நீங்க எதுக்குடா உள்ள போறீங்க தொறத்தி விட்ருவானுங்க. எந்த பொருளும் 250 -ரூபாய்க்கு கம்மியா கெடைக்காது. வடபழனி கோயில் பஜாருல இருக்கறததாங் இங்க கண்ணாடிக்குள்ள வச்சுருப்பாய்ங்க. காசு வச்சுருந்தா வாங்கி துன்னுட்டு வீட்டப்பக்க போங்க. இல்ல உள்ள போயித்தான் ஆகனுமுன்னா அம்மா அப்பாவ இட்டுனு வாங்கன்னு தொரத்திட்டாரு.

என்னங்கடா எங்குட்டு திரும்புனாலும் பெயிலியரா பூடுது. இன்னைக்கி ஏதாவது பாத்து எஞ்சாய் பண்ணிட்டுதான் போவனும். வாங்கடா அடுத்த அட்டம்ட்டா பிக் பஜாரு போவலாமுன்னு சொன்னான். இந்த ஐடியாவ குடுத்தவனும் இவந்தான் ஆன்டி.

விஜய் மால் போல இருந்துச்சா பிக் பஜாரு?

பிக் பஜாரு போல இருந்துச்சான்னு விஜய் மால பாத்துருந்தாதானே தெரியும். ஆனா பிக் பஜாருல யாரும் எங்கள தடுக்கல. வாச்சுமேன் அண்ணே சொன்னாப் போல இங்கேயும் எதுவும் வாங்கறாப் போல இல்ல. சுத்தி பாத்துட்டு சும்மா வர கூச்சமாருந்துச்சு. சரி இருக்குற காசுக்கு யூசாகரப் போல ஒரு பொருள (கொசுவத்தி) வாங்கினு வந்துட்டோம்.

லீவு விட்டா இது போல எங்கெல்லாம் போவீங்க?

எங்கயும் போக மாட்டோம். வீட்டாண்டதான் வெளையாண்டுகினு இருப்போம். எப்பனா ஒருக்க லீவுல எங்க ஆயக்கூட நானும் இவனும் கோயம்பேடு மார்கெட்டுக்கு காயி பிரிக்கப் போவோம். நல்லக் காய், கெட்டக் காய், பெரிசு, சின்னது இது போல பிரிச்சு குடுத்தா துட்டு குடுப்பாங்க. அந்த துட்டுல பம்பரம், பேட்டு பந்து எதுனா வாங்கிப்போம். வீட்டுல ஊரு சுத்திப் பாக்கெல்லாம் துட்டு கேட்டா அப்புரம் வாயி மேல போட்ருவாங்க.

ஆன்டி நாங்க ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டிங்களே!

என்னங்கடா! மீதி இருக்குற பீசாவெ என்ன தின்ன சொல்ல போறீங்களா?

அது இல்ல ஆன்டி. இந்தா பக்கத்துல இருக்க மெகா மார்ட் கடைக்குள்ள போனா விடுவாங்களா?

எனக்கும் அதே சந்தேகம்தான்!

– சரசம்மா
(உண்மைச் சம்பவம்)


 

  1. மனிதனின் மிகப்பெரிய மூடத்தனமான கண்டுபிடிப்புகளில் ஒன்று பணம்….

  2. இப்படிப்பட்ட சமுதாயத்துடன், நாம் எப்படி நகர்ந்து போவோம்?
    பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தங்கத்தை பொடியாக்கும் /மருந்தாக்கும்
    நிபுணத்துவம் வாய்ந்த கூட்டம்…..இன்று,இந்தியா என்ற நாட்டின் அரசியல் அமைப்பு
    உளவுப் பிரிவு,திட்டமிடல் சாம்ராஜ்யம்,….நம்மை குழிதோண்டி புத்தைத்து விட்டது!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க