Friday, July 11, 2025
முகப்புஉலகம்அமெரிக்காகிறிஸ்துமஸ் தாத்தாவிடம் உணவு கேட்கும் அமெரிக்க சிறுமி !

கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் உணவு கேட்கும் அமெரிக்க சிறுமி !

-

மெரிக்காவின் டெக்சாஸ் – எடின்பர்க்கைச் சேர்ந்த ரூத் எஸ்பிரிகுட்டா (Ruth Espiricueta) என்ற ஆசிரியை தனது மாணவி கிரிஸ்டல் பசேகோ (Crystal Pacheco) கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு எழுதிய கடிதத்தை புகைப்படமாக ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார்.

எடின்பர்க்கின் மான்டே கிறிஸ்டோ ஆரம்பப்பள்ளியில் முதலாம் வகுப்பு ஆசிரியை ரூத் எஸ்பிரிகுட்டா

எடின்பர்க்கின் மான்டே கிறிஸ்டோ ஆரம்பப்பள்ளியில் முதலாம் வகுப்பு (1st Grade) ஆசிரியையான அவர், தனது வகுப்பில் விருப்பம் மற்றும் தேவை ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டை விளக்கியுள்ளார். பின்னர் மாணவர்களிடம் அவர்களது விருப்பம் மற்றும் தேவையை இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பரிசாக கேட்டு கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு (Santa Claus) கடிதம் எழுதுமாறு கேட்டுள்ளார்.

வழமையாக பொம்மைகள், வீடியோ கேம் போன்ற விலையுயர்ந்த விளையாட்டுப் பொருட்களை மாணவர்கள் பரிசாக கேட்டிருப்பார்கள் என்றே அவர் எதிர்பார்த்துள்ளார். ஆனால், அந்த மாணவர்களின் கடிதங்களை படித்துப்பார்த்த போது அவை இதயத்தை உருக்கும் விதமாக இருந்துள்ளன.

குறிப்பாக, கிரிஸ்டல் பசேகோ என்ற 7 வயது குழந்தை “நான் இன்று நல்லாயிருக்கிறேன். இந்த கிறிஸ்துமஸ்க்கு நான் ஒரு பந்து மற்றும் உணவைப் பெற விரும்புகிறேன். எனக்கு ஒரு கம்பளிப் போர்வை தேவை” என எழுதியிருந்தாள்.

தனது மாணவர்கள் பசி பட்டினியாலும், உறைபனியில் பாதுகாத்துக்கொள்ள போர்வை இன்றியும் இருக்கும் வறுமை நிலையை அறிந்து வருந்திய ஆசிரியை அதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கிரிஸ்டல் பசேகோ என்ற 7 வயது குழந்தை

அந்தக் குழந்தையின் தாய் மரியா இசபெல் கார்டெஜ் (Maria Isabel Cortez) இந்தக் கடிதம் குறித்து, அவளது அண்ணனும் அவளும் சேர்ந்து விளையாட பொம்மைக்கு பதிலாக ஒரு பந்தை விரும்பியிருக்கிறாள். வீட்டில் உண்பதற்கு உணவு வேண்டும், குளிரில் பாதுகாத்துக் கொள்ள கம்பளி வேண்டும் என்ற தங்களது குடும்பத்தின் நிலையை நினைத்து தான் அவள் அந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறாள். என்று தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக்கில் இந்த பதிவு பலரை சென்றடைந்ததைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் பேர்வைகளை நன்கொடை பெறும் இயக்கத்தை ஆரம்பித்தது. இதைப் பார்த்த பலர் அந்தப்பள்ளிக்கு கம்பளிப் போர்வைகளை கொடையளித்துள்ளனர்.

இது பூலோக சொர்க்கமான அமெரிக்காவில் அபரிதமாக உயர்ந்துவரும் வறுமையையால் பாதிக்கப்படும் ஏழைகளின் வாழ்நிலையைப் பற்றிய பார்வையை வழங்குகிறது.

அமெரிக்க அரசின் அமெரிக்க கணக்கெடுப்பு பணியகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான அறிக்கையின் படியே 2016 -ம் ஆண்டில் 40.6 மில்லியன் (4.06 கோடி) அமெரிக்கர்கள் வறுமையில் இருக்கின்றனர். இது அமெரிக்க மக்கட் தொகையில் 12.7 சதவீதமாகும். இந்த வறியவர்களில் 13.3 மில்லியன் (1.33 கோடி) பேர், அதாவது மூன்றில் ஒரு பகுதியினர் குழந்தைகளாவர்.

மேலும் :