privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காபழைய ஐ - போன்களின் செயல்திறனை குறைக்கும் 420 ஆப்பிள் நிறுவனம் !

பழைய ஐ – போன்களின் செயல்திறனை குறைக்கும் 420 ஆப்பிள் நிறுவனம் !

-

ப்பிள் ஐ – போன்களை வைத்திருப்பது கௌரவத்தின் அடையாளமாக முதலாளித்துவ உலகில் கருதப்படுகிறது. தனது வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான மற்றும் சிறப்பான செயல்திறனுள்ள தொழில்நுட்ப சாதனங்களை வழங்குவதை தனது நோக்கமாக விளம்பரப்படுத்துகிறது ஆப்பிள் நிறுவனம்.

சீனா ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் தொழிலாளிகளை கொத்தடிமைகளாக நடத்துவது உள்ளிட்டு ஆப்பிள் நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் ஏற்கனவே இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

இத்தகைய ‘பெருமைக்குரிய’ ஆப்பிள் நிறுவனம் புதிய ஐ – போன்களை வெளியிடும் போது தனது பழைய ஐ – போன்களின் செயல்திறனை வேண்டுமென்றே குறைப்பது தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தின் மீது அதன் பயனர்களை ஏமாற்றியதாக அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன.

ஆப்பிளின் கைப்பேசி ஐ – போன் மாடல்கள் 5, 6 மற்றும் 7 ஆகியவற்றில் நாட்பட (வயதாக) அவற்றின் செயல்வேகம் குறைந்து வந்துள்ளது. இது தொடர்பாக ஐ-போன்களின் மொத்த செயல்திறனுக்கும் அவற்றின் மின்கல செயல்திறனுக்குமுள்ள உறவைக் குறித்து ரெட்டிட் (Reddit.com) என்ற கருத்துப் பரிமாற்ற தளத்தில் ஒரு விவாதம் நடந்துள்ளது.

இதைத் தொடர்ந்து பிரைமேட் லேப்ஸ் (Primate Labs) என்ற செயல்திறன் பகுப்பாய்வு நிறுவனம் ஒரே கைபேசியில் வெவ்வேறு பதிப்பு (version) ஆப்பிள் இயங்கு தளங்களை (iOS) கொண்டு ஆய்வு செய்தது. அந்த ஆய்வில் ஆப்பிள் நிறுவனத்தின் ஒவ்வொரு புதுப்பதிப்பு இயங்கு தளத்தை புதுப்பித்தபோதும் (upgrade) ஐ-போனின் ஒட்டுமொத்த செயல்பாடு குறைந்ததை கண்டறிந்தது. ஐ – போன் 5, 6 மற்றும் 7 மாடல்கள் அனைத்திலுமே இது நடந்துள்ளது. இந்த ஆய்வின் மூலம் ஐ – போன்களின் திறன்குறைவிற்கு ஆப்பிள் இயங்கு தளங்களே (iOS) காரணம் என்று தெரியவந்துள்ளது.

இதையடுத்து கடந்த 20, டிசம்பர் 2017 அன்று ஆப்பிள் நிறுவனம் புதிய பதிப்பு இயங்குதளங்களின் மூலம் கைப்பேசியின் மொத்த செயல்திறன் வேகத்தை குறைத்ததை ஒப்புக்கொண்டது. தனது பழைய ஐ-போன்களில் வயதான மின்கலன்கள் (Aged Batteries) உச்ச மின்னாற்றல் தேவையை (Peak Power demands) பூர்த்தி செய்வதில் குறைபாடு இருப்பதாகவும், அதனால் எப்போது வேண்டுமானாலும் கைபேசி அணைந்து (Shutdown) விடலாம் என்ற நிச்சயமற்ற தன்மையை சரி செய்வதற்கே அவ்வாறு செயல் வேகத்தை குறைத்ததாகவும் கூறியது ஆப்பிள். மேலும், தனது சேவை மையங்களை அணுகி மின்கலத்தை மாற்றிக் கொண்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்றிருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.

மற்ற திறன் கைபேசிகளைப் (Smart Phones) போலவே ஆப்பிள் ஐ – போன்களிலும் லித்தியம் அயனி மின்கலன்கள் (Liththium-Ion Battery) பயன்படுத்தப்படுகின்றன. மின்கலன்கள் நாட்பட (வயதாக) அவற்றின் மின்னேற்றம் (Charging), மின்னிறக்கம் (Discharging), மற்றும் உச்ச மின்னாற்றல் தேவையை (Peak Power demands) பூர்த்திசெய்தல் போன்ற செயல்திறன்கள் குறைகின்றன.

இவ்வாறு மின்கலங்களின் செயல்திறன் குறைவது, மின் செயல்பாடுகளை தவிர்த்து கைப்பேசிகளிலுள்ள செயலி (Processor), நினைவகம் (Memory) போன்ற மற்ற மின்னனு பொருட்களின் செயல்வேகத்தை குறைப்பதில்லை; குறைக்கக்கூடாது. அதாவது மின்கலனை புதியதைக் கொண்டு மாற்றும் போது பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடும். ஆனால், மின்கலத்தை மாற்றும் படி பரிந்துரைக்காமல், பயனர்களுக்கு தெரியாமலேயே கைபேசிகளின் செயல்திறனை – வேகத்தை குறைத்துள்ளது ஆப்பிள்.

கலிபோர்னியா, நியூயார்க், இல்லினாய்ஸ் போன்ற இடங்களில் ஆப்பிள் நிறுவனம் தனது லட்சக்கணக்கான பயனர்களை ஏமாற்றி வருவதாக ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் அமெரிக்க நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளன. அவ்வழக்குகளை தொடுத்த பயனர்கள் தாங்கள் மட்டுமின்றி மொத்த அமெரிக்க பயனர்களும் ஆப்பிள் நிறுவனத்தின் இம்முறைகேட்டால் பாதிப்படைந்துள்ளதால், மக்களுக்கும் – ஆப்பிள் நிறுவனத்துக்குமான வழக்காக (Class action Suit) இவ்வழக்கை தொடுத்துள்ளனர்.

அவற்றில் ஒன்றான ப்ரூக்ளின் ஃபெடரல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் படி ஆப்பிள் சேவை மையத்தினை அணுகி தங்கள் மந்தமான தொலைபேசிகளைப் பற்றி விசாரித்தபோது, வெறுமனே புதிய மின்கலனை மாற்றும்படி பரிந்துரைப்பதற்கு பதிலாக புதிய ஐ – போன் வாங்குவதற்கு ஊக்கப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார் ஒரு பயனர்.

ஒவ்வொரு புது மாடல் ஐ – போன் வெளியிடப்படும் போதும் பழைய ஐ – போன்களின் செயல் வேகம் இயங்குதளத்தின் (iOS) புதுப்பதிப்புகள் (updates) மூலம் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு முறைகூட பயனர்களுக்கு மின்கலப் பிரச்சினையை வெளிப்படையாக ஆப்பிள் அறிவிக்கவில்லை. இது வெறுமனே வெளிப்படைத்தன்மை பற்றிய பிரச்சினை மட்டும் இல்லை. தனது புதிய மாடல் ஐ – போனை வாடிக்கையாளர் தலையில் கட்டும் லாப நோக்கம் மட்டுமே இதன்பின்னால் உள்ளது.

ஐ – போன் போன்ற ஆப்பிள் சாதன பயனர்கள் பெருமையை சிலகாலம் பீற்றிக் கொள்ளலாம். பின்னர் அந்நிறுவனம் புதுவடிவமைப்பில் புதுமாடல்களை சந்தையில் இறக்கும் போது தங்கள் பழைய சாதனத்தை தூக்கிக் கடாசிவிட்டு அவற்றை வாங்குவதற்கு வந்தாக வேண்டும். பழைய சாதனங்களை பழுது பார்க்க உதிரிப்பாகங்கள் கிடைக்காமல் செய்வது; உதிரிப்பாகங்களின் விலையை மிகமிக அதிகமாக வைப்பது போன்றவற்றின் மூலம் புதிய சாதனத்தை வாங்க வைக்கின்றன. அது நல்ல இயங்கும் நிலையில் இருந்தாலும் கூட, மென்பொருளை மேம்படுத்தும் வகையில் செயல்வேகத்தைக் குறைப்பதன் மூலம் புதியதை வாங்க வைக்கின்றன. ஆப்பிள் மட்டுமின்றி எல்லா மின்னணு தொழில்நுட்ப சாதன தயாரிப்பு நிறுவனங்களும் இம்முறையில் தான் செயல்படுகின்றன.

ஆப்பிள் சாதன உரிமையாளர்களின் பெருமை; பிறரது ஏக்கமல்ல. அந்தப் பெருமைதான் ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் லாபவெறிக்கு அடிப்படை.

மேலும் :