privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்மக்கள் அதிகாரம் : கதறும் மீனவ குடும்பங்கள் ! வஞ்சிக்கும் அரசு !!

மக்கள் அதிகாரம் : கதறும் மீனவ குடும்பங்கள் ! வஞ்சிக்கும் அரசு !!

-

கதறுகின்றன மீனவக் குடும்பங்கள்!
வஞ்சிக்கிறது அரசு !

அன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே,

கடற்கரையில் ஒதுங்கும் செத்த மீன்களைப் போல, தமிழக மீனவர்களின் பிணங்கள் சிதைந்து பல நாடுகளில் கரை ஒதுங்குகின்றன. ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோரை ஒக்கிப் புயலுக்குக் காவு கொடுத்துவிட்டன, எடப்பாடி, மோடி அரசுகள் என்று ஆத்திரத்தில் நெருப்பாய்த் தகிக்கிறார்கள், மீனவ மக்கள். கிறிஸ்துமசுக்குள் வீடு திரும்பாத மீனவர் குடும்பங்களுக்கு இருபது லட்சம் ரூபாய் நிவாரணம் என்றது, அரசு. தாய்மார்களோ “ஒன்னு வேண்டா, எங்க மக்கள திருப்பித்தா’ என்று கதறுகிறார்கள். ஒரு குடும்பத்தில் கணவனும் இல்லை, சகோதரனும் இல்லை. ஒரு குடும்பத்தில் தந்தை, மகன், மருமகன் இல்லை. இது போன்று அதிகமான சம்பவங்களை தொலைக்காட்சிகள் வெளிக்கொணர்ந்துள்ளன. மீனவ மக்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியைக் கண்டு இனியும் நாம் அமைதி காக்கலாமா?

“குமரி மாவட்டம் கடந்த நூறாண்டுகளில் இத்தகைய உக்கிரத்தைக் கண்டதில்லை” என தப்பி வந்த மீனவர்கள் அதிர்ச்சியோடு கூறுகிறார்கள். புயல் ஓய்ந்ததும் மீட்பு பணிகளில் இறங்கியிருந்தால்; உரியகாலத்தில் ஆழ்கடலுக்கு சென்று இந்திய கப்பற்படையும், மோடி அரசும் உண்மையாகத் தேடி இருந்தால் நூற்றுக்கணக்கான மீனவர்களை உயிருடன் மீட்டிருக்க முடியும். எடப்பாடி அரசு முன்கூட்டியே எச்சரிக்கவுமில்லை; காணாமல் போன மீனவர்கள் எண்ணிக்கையைக் குறைத்து, கூசாமல் புளுகியது. பல்லாயிரம் மீனவர்கள் ரயில், பஸ் மறியல் போராட்டங்கள் நடத்திய பிறகுதான் ஒக்கிப்புயலுக்கு முன்பே தொழிலுக்கு சென்ற ஆயிரம் பேருக்கு மேல் கரை திரும்பவில்லை என்ற உண்மை வெளி உலகுக்கு தெரிய வந்தது. போராடிய பல ஆயிரம் மீனவர்கள் மீது வழக்கும் போட்டுள்ளது, அரசு.

மீனவ மக்களுக்கு ஆதரவு தரச் சென்ற மக்கள் அதிகாரம் தோழர்கள் ஏழு பேரை வன்முறையை தூண்டியதாகச் சொல்லி கொல்லங்கோடு போலீசு நிலையத்தில் வைத்து, ‘மீனவன் செத்தால் உனக்கென்ன? வெளி மாவட்டத்தில் இருந்து ஏன் இங்கு வந்த?” எனக் கேட்டு, நிர்வாணப்படுத்தி, அடித்து சித்ரவதை செய்து சிறையில் தள்ளியது, குமரி மாவட்ட போலீசு. மீனவ மக்களுக்கு ஆதரவாக ஏன் போராடக்கூடாது?

அரசு செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதால் அடையாறு வெள்ளம் நூற்றுக்கணக்கான தென் சென்னை மக்களைப் பலிகொண்டபோது, தங்கள் படகுகளோடு போய் மக்களை மீட்டது மீனவர்கள்தாம். மெரினா ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது போலீசு கடலுக்குள்ளும் மீனவக் குப்பங்களுக்கும் விரட்டியபோதும் மாணவர்களுக்கு தஞ்சமளித்ததும் மீனவர்கள்தாம். அதற்காக அவர்களுக்கு எதிராக தமிழகப் போலீசே தீவைப்பு முதலிய குற்றச்செயல்களில் ஈடுபட்டது. விவசாயிகளுக்கு ஆதரவாகத் திரளும் மாணவர்களை விரட்டுகிறது. சென்னை மெரினா, கோவை, மதுரை, நாகர்கோவில் போன்ற நகரங்களில் மாணவர்கள், மீனவர்கள், விவசாயிகளை ஒன்று சேரவிடாமல் அரசும் போலீசும் தனிமைப்படுத்தி விரட்டுகிறது.

மீனவர்களைப் பலிகொண்டது ஒக்கிப் புயல் அல்ல; மோடி – எடப்பாடி அரசுகள் நடத்திய படுகொலை. நிவாரணம் கொடுப்பது மட்டும் இதற்கு தீர்வு அல்ல. பல நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்களைக் காக்கத் தவறிய – அவர்கள் உயிரிழப்பிற்கு காரணமான, கடலோர காவல் படை, கப்பற்படை, மீன்வளத்துறை அதிகாரிகள், கிரிமினல் அலட்சியத்துக்காகத் தண்டிக்கப்பட வேண்டும். மீனவர்கள் ஆண்டுக்கு அறுபதாயிரம் கோடி அந்நிய செலாவணி ஈட்டி தருகிறார்கள். ஒரு மீனவன் கடலுக்கு சென்றால் பதினாறு பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகிறது. இவர்களின் பாதுகாப்பிற்கு அரசிடம் எந்த கொள்கையும் இல்லை.

தமிழக கடற்கரை முழுவதும் அனல்மின் நிலையம், அணுமின் நிலையம், கப்பல் கட்டும் துறைமுகம், ரசாயன உரத் தொழிற்சாலை, சரக்கு பெட்டக துறைமுகம் என பன்னாட்டு கம்பெனிகளுக்கு முழுமையாக தாரை வார்க்கப்படுகின்றன. அதனால் தான் மீனவர்களை கடலில் இருந்து அப்புறப்படுத்தும் வாய்ப்பாக பியான் – ஒக்கிப் புயல்களையும் சுனாமியையும் கருதுகின்றன, மத்திய மாநில அரசுகள்.

உயிரிழந்தவர்களை காணாமல் போனவர்கள் என வெறும் காகித விபரங்களாக மாற்றி மீனவர்கள் வாழ்க்கையை அழிக்க நினைக்கிறது. கடைசி மீனவனையும் தேடுவோம் என இன்னும் வெறும் சவடால் அடிக்கிறது. மக்களை காக்கும் கடமையில் முழு தோல்வி அடைந்துவிட்டது இந்த அரசுக் கட்டமைப்பு. இந்த அரசுக் கட்டமைப்பை இனியும் நம்பினால் மேலும் மேலும் அழிவுகள்தான் ஏற்படும். ஆள்பவர்களால் இந்த அரசுக் கட்டமைப்பிற்குள் மக்கள் பிரச்சினைகள் எதையும் தீர்க்க முடியாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. பழவேற்காடு தொடங்கி குமரி மாவட்ட நீரோடி வரை உள்ள கடற்கரை கிராம மீனவர்கள், மாணவர்கள் ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் மக்கள் விரோத இந்த அரசை பணிய வைக்க முடியும். ஜல்லிக்கட்டு மெரினாவில் மாணவர்களோடு மீனவர்கள், கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டத்தில் விவசாயி களோடு மாணவர்கள். இந்த ஒற்றுமைதான் அரசை அச்சுறுத்தி பின்வாங்க வைத்தது.

புதிய மாற்றத்தை, தீர்வை, மக்கள் போராட்டங்களிலிருந்து உருவாக்குவோம் !

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மக்கள் அதிகாரம்
சென்னை

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க