privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்ஆளை மாற்றாதே! அதிகாரத்தை மாற்று !! விருதை பொதுக்கூட்டம்

ஆளை மாற்றாதே! அதிகாரத்தை மாற்று !! விருதை பொதுக்கூட்டம்

-

விருத்தாச்சலம் வானொலித் திடலில் மக்கள் அதிகாரத்தின் ” அரசியல் அராஜகங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் முடிவு கட்டு” – பொதுக்கூட்டம் 30/12/2017 சனி அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. தோழர் முருகானந்தம் தலைமை தாங்கினார், தோழர் காளியப்பன் மாநிலப் பொருளாளர், சி.ராஜு மாநில ஒருங்கிணைப்பாளர் சிறப்புரையாற்றினார்கள்.

தலைமை உரையில் தோழர் முருகானந்தம், ”விருத்தாச்சலம் வட்டத்திற்க்கு உட்பட்ட தே.புடையூர் கிராமத்தில் மருத்துவக்கழிவு கிடங்கை அரசு நிறுவ உள்ளது. கிடங்கில் கொட்டப்படும் மருத்துவக் கழிவினால் சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர், விவசாயம், காற்று மாசுபடுவதினால் பல்வேறு நோய்களுக்கு ஆட்பட நேரிடும் என்று தங்களுடைய கிராமத்துக்கு அந்த மருத்துவக்கிடங்கு வரக்கூடாது என்று போராடுகின்றார்கள் தெ.புடையூர் கிராம மக்கள். அவர்களைக் கைது செய்கிறது காவல்துறை.

ஒக்கி புயலால் கடலில் இறந்த மீனவர்களின் பிணங்களைக்கூட மீட்பதற்கு வக்கற்றுப்போன மத்திய மாநில அரசுகள் தான் திட்டமிட்டு மீத்தேனுக்கும் ஷெல் கேஸ்க்கும் விவசாயிகளை அவர்களுடைய சொந்த நிலத்தை விட்டு துரத்துகிறது.  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடல் வளங்களை அள்ளிக்கொடுப்பதற்காக மீனவர்களை மீன்பிடி தொழிலிலிருந்து விரட்டுகிறது. அதற்காகத்தான் மீனவர்களை புயலிலிருந்து பாதுகாக்கத் தவறியது, முன் அறிவிப்பின்றி கொல்கிறது மத்திய மாநில அரசுகள்” என்று கூறி முடித்தார்.

வழக்கறிஞர் புஷ்பதேவன் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், ”நீதிமன்றங்கள்தான் ஆளும் காவிக் கும்பலுக்கு ஆதரவாகவும் மக்களுடைய உரிமைக்கான போராட்டங்களை ஒடுக்குவதற்கும் தன்னெழுச்சியாக முன்வருகிறது. இவர்கள் நம்முடைய பிரச்சனைகளை தீர்க்கப் போவதில்லை, நீதிமன்றங்களோ நமக்கானதாக ஜனநாயகமானதாக இல்லை. மக்கள் பிரச்சனைக்ளுக்கு தீர்வு  மக்கள் மன்றங்கள் – மக்கள் அதிகாரமாக மாறும்போதுதான் உழைக்கும் மக்களுக்கான வாழ்வு உறுதி செய்யப்படும் “என்று கூறி முடித்தார்

தோழர் காளியப்பன்

சிறப்புரை: தோழர் காளியப்பன், மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம்

கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ஆர்.கே. நகர் தொகுதியில் 89 கோடி ரூபாய்க்கு பணப்பட்டுவாட  நடைபெற்றதால் தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது.  தற்போது இந்த தேர்தலிலும்  பணப்பட்டுவாடா நடந்துள்ளது. அதிமுக 100 கோடியென்றால் டிடிவி தினகரன் 200 கோடி என்ற அளவில் நடந்துள்ளது.  ஆனால் தேர்தல் ஆனையம் தேர்தலை ரத்து செய்யவில்லை, இப்போது நடந்த தேர்தல் செல்லும் என்கிறது. அராஜகமும் அக்கிரமும் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மறுபுறம் சட்டத்தின் ஆட்சி என்ற பேரில் உச்ச்நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அரசியல் சட்டத்திற்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று கூறுகிறார். சட்டம் அனைவருக்கும் நியாயம், சமத்துவம், சகோதரத்துவம் என்று இந்திய அரசியல் அமைப்பு சட்டம் சொல்கிறது அப்படி எதுவுமே நடைமுறையில் இருப்பதாக தெரியவில்லை. திருச்சியில் உள்ள காவல்துறை உயர் அதிகாரி ஐஜி  சொல்கிறார், அரசு நிர்வாகத்தை பாதுகாக்கின்ற பொறுப்பில் நாங்கள் இருக்கின்றோம், நீங்கள் அரசுக்கு எதிராக பேசுகிறீர்கள் அதனை நாங்கள் அனுமதிக்க முடியாது என்கிறார். மக்களுடைய உரிமைக்குத்  தடையாக இருப்பதே இந்த அரசு தான்.

அ.தி.மு.க அரசு விவசாயிகளுடைய கரும்பு பாக்கியை கூட கொடுக்க முடியாதென்கிறது. மத்தியில் ஆளும்  மோடி அரசு விவசாயிகளிடம் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வசூலித்த ப்ரீமியத் தொகையை விளைச்சல் இல்லை  வறட்சி நிவாரணம் கொடு காப்பீட்டு நிதி கொடு என்று கேட்டால் தர மறுக்கிறது. அதோடு மட்டுமில்லை மக்கள் சொத்துகளை கொள்ளை அடிப்பது இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதற்கென்றே மத்திய அரசு (FRDI) என்ற திட்டத்தை கொண்டு வருகிறது.

கடந்த நவம்பர் மாத இறுதியில் ஒக்கி புயலால் மீனவ கிராமங்கள் பட்ட துயரங்கள் எண்ணி மாளாது. காப்பாற்ற வக்கில்லாத மோடி அரசின் கடலோர கப்பற்படை 25 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் சென்றால் எங்களுடைய உயிருக்கு ஆபத்து என்று சொல்கிறது. மக்களை பாதுகாக்க வக்கற்றுப்போய் தோற்று நிற்க்கும் கேவலமான அரசியலமைப்பை நாம் சுமந்து கொண்டிருக்கிறோம்.

சென்ற வாரம் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு செய்தி, ஒரு பெண் டிஎஸ்பி ஒரு தரப்புக்கு ஆதரவாக விளைந்த நெல் விளைச்சலை டிராக்டரை விட்டு ஓட்டி அழிக்கிறார். இன்னொரு அதிகாரி விவசாயத்தின் இணை இயக்குனர், விவசாயிகளின் மனுவைக்கூட வாங்க மறுக்கிறார். திக்குதிசை தெரியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் மக்கள் அதிகாரமாக போராட்டங்களை ஒன்றிணைத்து மக்களை வாழவிடாமல் தடுக்கும் அரசியல் அக்கிரமங்களுக்கும் அராஜகங்களுக்கும் முடிவுகட்ட வேண்டும் என்று பேசினார் தோழர் காளியப்பன்.

தோழர் சி.ராஜு, மாநிலஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

ஒவ்வொரு தனி மனிதருக்கும் கல்வி ,மருத்துவம்,சுகாதாரமான காற்று, குடிநீர் இவையனைத்தும் தடையின்றி கிடைக்கும் பட்சத்தில்தான் ஒரு மனிதன் வாழ முடியும். ஆனால் காசு இருந்தால்தான் வாழ முடியும் என்ற நிலையை இந்த அரசு உருவாக்கியுள்ளது.

தோழர் ராஜூ

இதையும் தாண்டி கதிராமங்கலத்தில் எண்ணெய் எடுக்கின்றோம் என்ற பெயரில் நிலத்தடி நீரை நாசமாக்கினால் நாங்கள் எப்படி வாழமுடியும் என்று போராடுகின்றார்கள். போராடுகின்ற மக்களை குழந்தை முதியோர் என்று பாராமல் நாயை அடிப்பது போல் அடிக்கின்றது தமிழக காவல்துறை. புதுக்கோட்டை ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனமாகிவிடும் என்று நோட்டீஸ் கொடுத்ததற்க்காக மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்.

செவிலியர்கள் போராட்டம் சென்னையையே அதிரவைத்தது. நாங்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு பத்து ஆண்டுக்கு மேலாகியும் எந்தவித ஊதிய உயர்வும் கிடையாது. வெறும் 8 ஆயிரம் ரூபாய் ஊதியத்தை வைத்துக் கொண்டு தற்போது நிலவும் சூழ்நிலையில் வாழ முடியவில்லை. பணிநிரந்தரம் செய்து சம்பளத்தை உயர்த்திக்கொடு என்ற கோரிக்கையை முன்வைத்து போராடுகிறார்கள். போராட்டத்தை ஒடுக்குவதற்க்காக இயற்கை உபாதையை கழிக்கும் கழிவறைக்கு கூட பூட்டு போடுகிறது தமிழக அரசு. நீதிமனறம் போராட்டத்தை கைவிடவில்லை என்றால் வேலையை இழக்ககூடும் என்று மிரட்டுகிறது.

போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 40 ஆண்டு காலமாக சம்பளத்தில் பிடித்த பணம் எதையும் கொடுக்கவில்லை இந்த அரசு. உடனே பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று போராடுகிறார்கள். மக்கள் போராடக்கூடாது என்றால் மக்களுடைய பிரச்சினைகளை இந்த அரசு தீர்க்க வேண்டும்.

கந்துவட்டிக்கு ஜந்து முறை புகார் கொடுத்து கந்துவட்டிக் கொடுமைக்கு ஆதரவாக நடந்துகொண்ட காவல் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்ககோரி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுத்தால் அந்த மனு யார் மீது விசாரிக்க கொடுக்கப்பட்டதோ, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியிடமே அந்த மனு செல்கிறது.  அதன் விளைவு நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன் தான் பெற்ற பிள்ளைக்கு தலையில் கொள்ளி வைக்கிறார், இசக்கிமுத்து. யாரெல்லாம் இந்த அரசு காப்பாற்றும் என்று போரடுகிறார்களோ அவர்கள் அனைவரும் இறந்து போகின்றார்கள்.

ஆர்.கே.  நகர் தொகுதியில் டிடிவி தினகரன் ஓட்டுக்கு பணம் என்ற நிலை மாறி டோக்கனே பணம் என்றாகி வெற்றியும் பெற்றுவிட்டார். இந்த வெற்றி தேர்தல் ஆணையம், ஊழல் அதிகாரிகள் காவல்துறை  இவர்களின் துணையில்லாமால் நடைபெறவில்லை.

கன்னியாகுமரியில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஒக்கி புயலை பற்றிய முன்னெச்சரிக்கை இருந்திருந்தால் அவர்கள் இறந்திருக்கமாட்டார்கள்.  கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஒரு குடும்பத்தில் தாயும் விதவை, மகளும் விதவை, மருமகளும் விதவை இவர்களுடைய குடும்பத்தில் சந்ததியே அழிந்து விட்டது. இவர்களுடைய நிவாரணம் யாருக்கு பயன்படப்போகிறது. மத்தியில் காவியும், மாநிலத்தில் ஆவியும் ஆட்சி செய்கிறது கிரிமினல் கூட்டம் நம்மை ஆளுகிறது. நூற்றுக்கணக்கான பொது நல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எதற்காகவாவது தீர்வு எட்டப்பட்டு இருக்கிறதா?

புரட்சிகர கலைநிகழ்ச்சி

இல்லை தாது மணல், கிரானைட், மணல் கொள்ளை குற்றவாளிகள் தண்டிக்கபட்டுள்ளனரா? இத்தனை கொள்ளைகளுக்கும் காரணமான, மக்கள் சொத்தை இயற்க்கை வளங்களை கொள்ளையடித்தவனுக்கு துணை நின்ற அனைத்து துறை அதிகாரிகள் தான் முதற் குற்றவாளிகள். குற்றம் நிருபிக்கப்பட்டதா எதுவும் இல்லை குட்கா ஊழல் பற்றி கண்டு பிடித்து விசாரித்த வருமான வரித்துறை அதிகாரி அஷோக்குமார் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்.

இந்தியாவில் மொத்த உற்பத்தியில் 70% மக்கள் விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள் ஆனால் இந்த அரசு விசாயத்துக்கு ஒதுக்கும் நிதி 2.3%.  கடந்த பத்தாண்டுகளில் தமிழக மக்களை சுயமரியாதை அற்றவர்களாக மாற்றி இருக்கிறது அதிமுக கும்பல். விருத்தாசலத்தில் மருத்துவகழிவு கிடங்கை தடைசெய்யகோரி போராடுகிற மக்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவர்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். இதனை கேட்டால் மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரி மக்களுக்கு பாதிப்பு வராது என்கிறார். அப்படி சொல்கிற அதிகாரிகளின் ஆதாரை நாம் கைப்பற்றவேண்டும். பிரச்சனை என்றால் விடக்கூடாது பாதிப்பு ஏற்பட்டால் அவர் வேலையில் இல்லை என்றாலும் பதில் சொல் என்று கேள்வி எழுப்ப வேண்டும்.

வணிக ரீதியாகவும், நிறுவனங்கள் இவைகளின் மூலமாகவும் கோடிக்கணக்கானப் பணம் விருத்தாச்சலம் பகுதியில்  கிடைக்கிறது. நகராட்சியிலோ குப்பையை அள்ளுவதற்க்குகூட பணம் இல்லை. இதனை கேட்டால் பதில் இல்லை எதிரியாக பார்க்கிறது நகராட்சி நிர்வாகம். இந்த அரசுக்கு நாம் ஒன்றும் அடிமை கிடையாது மக்கள் கேள்வி கேட்கக் கூடாது போராடக்கூடாது என்று சட்டம் சொல்கிறதா? மக்களுடைய கருத்துகளை, ஜனநாயகத்தை மறுத்திட தடுத்திட யாருக்கும் அதிகாரம் கிடையது.  இசக்கிமுத்து தான் கொளுத்திக்கொண்டபோது கலெக்டரை கட்டி பிடிக்க எவ்வளவு நேரமாகும், மாணவர்கள் விவசாயிகள் வணிகர்கள் மீனவர்களின் அனைத்து போரட்டங்களும் ஒன்றிணையவேண்டும்.  கோரிக்கையை முடிவுசெய்யும் அதிகாரத்தை நாம் பெறவேண்டும்.

விருத்தாசலத்தில் 31 வார்டிலும் மக்கள் அதிகார கிளை இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வார்டுக்கு என்ன செய்ய வேண்டும்  என்று மக்கள் அதிகாரம் அதை தீர்மானிக்கும்.  மக்கள் அதிகாரம் என்பது நாம் உருவாக்கவில்லை. உருவாக்கியது இந்த அரசு கட்டமைப்புதான். மக்கள் அதிகாரம் தான் தீர்வு என்று நாம் சொல்லவில்லை வேறு வழி இல்லை. ஆளை மாற்றுவது தீர்வு அல்ல அதிகாரத்தை மாற்றுவதுதான் தீர்வு என நிறைவு செய்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்
மக்கள் அதிகாரம்
விருத்தாச்சலம்


 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க