privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராஜஸ்தான் : பெண்களின் உரிமைகளை மறுக்கும் மோடி அரசின் டிஜிட்டல் இந்தியா !

இராஜஸ்தான் : பெண்களின் உரிமைகளை மறுக்கும் மோடி அரசின் டிஜிட்டல் இந்தியா !

-

பொதுச்சேவைகளை வழங்கும் போது பா.ஜ.க அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் மேலோட்டமாக தான் செயல்படுகிறது. மேகாசபீன் கதையை எடுத்துக் கொள்வோம். ஆதார், பமாஷா, பிறப்புச் சான்றிதழ் மற்றும் வங்கிக்கணக்கு பரிமாற்ற தகவல்கள் உள்ளிட்ட தேவையான அனைத்து ஆவணங்களும் இருந்த போதிலும் ஜனனா மருத்துவமனையில் 2015, ஆகஸ்ட் 5 -ம் தேதி அவருக்கு பெண்குழந்தை பிறந்ததை உறுதிப்படுத்த இயலவில்லை. இதனால் மாநில அரசின் “சுபலட்சுமி யோஜனா” திட்டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய உதவித்தொகை இன்னும் அவருக்கு கிடைக்கவில்லை.

மேகாசபீன்

நடந்தது இதுதான். மேகாசபீனுடைய மகப்பேறு தகவல்களை இராஜஸ்தான் அரசின் ஒஜாஸ் (OJAS) இணைய கட்டண மென்பொருளில் பதிவிடும் போது குழந்தையின் பாலினம் தவறுதலாக ஆண் என்று மருத்துவமனையால் பதியப்பட்டது. தனக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை என்று 2017 -ம் ஆண்டில் முறையிட்ட பின்னர் தான் குழந்தையின் பாலினம் பெண் என்று மாற்றப்பட்டது. ஆயினும் முதல் தவணைக்கான கால அவகாசம் 2016 -ம் ஆண்டிலேயே முடிந்துவிட்டதால் பண உதவியை அவரால் பெற முடியவில்லை.

“அவர் பெரும் எதிர்பார்ப்புடன் ஒவ்வொரு முறையும் வருகிறார். ஆனால் பின்னர் சோர்ந்து திரும்பி விடுகிறார். முதல் தவணைத் தொகையை அவர் பெறவில்லை என்பதால் இரண்டாவது தவணைப் பெறுவதை மென்பொருளால் செயல்படுத்த முடியாது” என்று ஜனனா மருத்துவமனையில் தகவல் பதிவேற்றம் செய்யும் அசோக் தாத்ரியா கூறினார்.

பார்சானாவுடையதும் கிட்டத்தட்ட அதே கதைதான். அவர் 2015 -ம் ஆண்டில் சுபலட்சுமி யோஜனா திட்டத்தின் கீழ் முதல் தவணை உதவித் தொகையைப் பெற்றார். ஆனால் இரண்டாவது தவணைக்காக சென்றபோது பமாஷா அடையாள அட்டை அவரிடம் கேட்கப்பட்டது.

முதல் தவணையை 2015 -ம் ஆண்டில் பெரும் போது எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் ஓராண்டுக்குப் பிறகு இரண்டாவது தவணைக்காக சென்ற போது பமாஷா அட்டையை பெரும் வரை பணம் கிடையாது என்று கூறப்பட்டதாக பார்சானா கூறினார்.

பமாஷா அட்டையை வாங்கும் போது ஏற்கனவே இரண்டாவது தவணைக்கான கால அவகாசமும் முடிந்து விட்டதாக அவரிடம் கூறப்பட்டது.

“கடந்த ஓராண்டாக அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரிந்து கடைசியாக பமாஷா அட்டையை வாங்கிய பிறகு கடைசியில் திட்டம் முடிந்து விட்டதாக கூறுகிறார்கள்” என்று பார்சானா கூறினார்.

பார்சானா

இராஜஸ்தானின் மருத்துவ, சுகாதார மற்றும் குடும்பநலத் துறையின் தரவுப்படி 2016 – 17 ஆண்டு வரை கிட்டத்தட்ட பதினைந்து லட்சம் (15,54,374) பயனாளிகளுக்கு முதல் தவணை உதவித் தொகை கிடைத்திருக்கிறது. ஆனால் அது தற்போது முடிந்துவிட்டது. இரண்டாவது தவணை ஏழு லட்சத்து 64 ஆயிரம் (7,64,896) நபர்களுக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது தவணையில் உதவித்தொகை கிடைக்காதவர்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்து 89 ஆயிரம் (7,89,478).

இலட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கையில், “சுபலட்சுமி யோஜனா” -க்கான இரண்டாவது தவணையை 2018, பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் இராஜஸ்தான் அரசு நிறுத்த முடிவு செய்துள்ளது. சுபலட்சுமி யோஜனா திட்டமானது 2013 முதல் 2016 வரை பெண்குழந்தையைப் பெற்ற தாய்மார்களுக்காக 7,300 ரூபாய் உதவித்தொகையை மூன்று தவணைகளில் கொடுக்க தொடங்கப்பட்டது.

அரசு மருத்துமனைகளிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துமனைகளிலோ குழந்தையை பெறும் போது மட்டுமே முதல் தவணை வழங்கப்படும். குழந்தைக்கு ஓராண்டு முடியும் போது இரண்டாவது தவணையும் ஐந்து வயது முடிந்து பள்ளியில் சேர்க்கப்படும் போது மூன்றாவது தவணையும் வழங்கப்படும்.

ஆனால் பணத்தை பெற முயற்சிக்கவில்லை என்று பயனாளிகள் மீது மருத்துவ, சுகாதார மற்றும் குடும்பநலத் துறை குற்றம் சுமத்துகிறது.

சுபலட்சுமி திட்டம் 2013 -ல் தொடங்கப்பட்டது. 2018 -ம் ஆண்டு ஆகியும் இன்னும் வரவில்லை எனில் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருப்பது? 2018 -ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு கோப்புகளை மூடலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால் பிப்ரவரி முதல் தேதியிலேயே மூடச்சொல்லி எங்களுக்கு உத்தரவு வந்திருக்கிறது என்று மருத்துவ, சுகாதார மற்றும் குடும்பநலத் துறையின் திட்ட இயக்குனர் தருண் சௌத்ரி கூறினார்.

PCTS மென்பொருளில் உள்ள பிரச்சினைகள்:

எனில் பிரச்சினை மென்பொருளில் உள்ளதா? கருவுறுதல், குழந்தை கண்காணிப்பு மற்றும் சுகாதார சேவைகள் மேலாண்மை அமைப்பு (PCTS) என்பது இராஜஸ்தானின் மருத்துவ, சுகாதார மற்றும் குடும்பநலத்துறை பயன்படுத்தும் இணைய மென்பொருளாகும். மகப்பேறு மற்றும் நோய்த்தடுப்புகளை PCTS அடையாள எண் மூலம் கண்காணிக்க இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

மகப்பேறு பராமரிப்பு சோதனைகள் மற்றும் குழந்தைகளுக்கான நோய்த்தடுப்பூசிகள் தவிர மேலும் மூன்று திட்டங்களை செயல்படுத்த இராஜஸ்தானில் இந்த அடையாள எண் பயன்படுத்தப்படுகிறது – ஜனனி சுரக்க்ஷா (அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் மகப்பேறு மேற்கொண்டால் வங்கிக்கணக்கு வைத்திருக்கும் தாய்மாருக்கு கிராமமாக இருந்தால் 1400 ரூபாயும் நகரமாக இருந்தால் 1000 ரூபாயும் கொடுக்கப்படும்), சுபலட்சுமி யோஜனா, முக்யமந்திரி ராஜ்ஸ்ரீ யோஜனா (அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் பமாஷா அட்டை, மற்றும் வங்கிக்கணக்கு வைத்திருக்கும் தாய்மார்கள் மகப்பேறு பார்த்தால் ஆறு தவணைகளில் அவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும்).

ஆதார் அட்டை, பமாஷா அட்டை மற்றும் வங்கிக்கணக்கு இல்லையென்றால் பயனாளிகள் உதவித்தொகை பெற முடியாது. ஆயினும் பெரும்பான்மையானோர் ஆவணங்கள் கொடுத்த போதிலும் மென்பொருள் ஏற்படுத்தும் அற்பமான பிரச்சினைகளால் உதவித்தொகையைப் பெற முடியாமல் போராடுகின்றனர்.

கருவுற்ற மூன்றே மாதங்களில் கட்டாயப் பதிவீடு :

மகப்பேறு பராமரிப்பு பதிவீடு (ANC) செய்த தேதிக்கும் மகப்பேறு தேதிக்கும் இடைவெளி 5 மாதத்தை விட குறைவாக இருந்தால் மகப்பேறு தேதியை PCTS மென்பொருள் ஏற்றுக்கொள்ளாது.

“பொதுவாக பெண்கள் மகபேறுக்காக வேறு நகரங்கள் அல்லது கிராமங்களில் இருக்கும் தங்களது தாய்வீட்டிற்குச் செல்லுகிறார்கள். எனவே PSRS மென்பொருள் கேட்கும் அந்த ஐந்து மாத இடைவெளி என்பது அரிதாகவே இருக்கும்” என்கிறார் தாத்ரியா.

கருவுற்ற சமயத்தில் போடப்படும் டெட்டானஸ் டாக்ஸிட் (Tetanus Toxid) தடுப்பூசி தகவல்களை உள்ளீடு செய்த பிறகு அடையாள அட்டையின் பதிவீட்டுத் தேதியை மாற்ற முடியாது.

“கருவுற்ற பெண்ணுடைய PCTS அடையாள தகவலில் மகப்பேறு தேதி இடம் பெறவில்லையெனில் உதவித்தொகையை எந்தவொரு மகப்பேறுத் திட்டத்தின் கீழும் பெற முடியாது” என்கிறார் தகவல் பதிவாளரான யோகேஷ்.

ஆயினும் மகப்பேறு பராமரிப்பு பதிவீட்டிற்கும் மகப்பேறு தேதிக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்கிறது நிர்வாகம்.

“கடைசி மாதவிலக்கு நாளுக்கும்(LMP) மகப்பேறு நாளுக்கும் இடையே 154 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்பது மென்பொருளில் உள்ளீடு செய்ய அடிப்படைத் தேவையாகும். மகப்பேறு பராமரிப்பு பதிவீட்டிற்கும் மகப்பேறு தேதிக்கும் சம்மந்தம் ஒன்றுமில்லை” என்கிறார் சௌத்ரி.

ஆயினும் நடைமுறை வேறுவிதமாக இருக்கிறது. ஆம்பரை சேர்ந்த பூஜா, 2017, நவம்பர் 1 –ம் தேதி பெண்குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். அவர் 8 -வது மாதத்தில் அதாவது 2017, அக்டோபர் மாதம் 10 –ம் தேதி பதிவு செய்யப்பட்டார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் ஒவ்வொரு முறை அவரது மகப்பேறு தேதியை மென்பொருளில் உள்ளீடு செய்யும் போதும் “மகப்பேறு பராமரிப்பு பதிவீட்டு தேதியை விட மகப்பேறு தேதி குறைவாக இருக்கக்கூடாது” என்கிறது மென்பொருள்.

“அனைத்து ஆவணங்களையும் நாங்கள் கொடுத்து விட்டோம். ஆனால் உதவித்தொகை எதுவும் கைக்கு வந்து சேரவில்லை” என்கிறார் பூஜாவின் கணவர் பாபுலால்.

மருத்துவமனையில் சேர்த்த அதே நாளில் மகப்பேறு நடக்கக் கூடாது :

PCTS அடையாளம் என்பது ஒரு பெண்ணிற்கு எப்பொழுதுமே மாறாது. எனவே மகப்பேறு வெற்றிகரமாக முடிந்தவுடன் அவருக்கு மறுபதிவு செய்ய வேண்டும். ஆனால் மென்பொருளைப் பொறுத்தவரை மறுப்பதிவு நாளுக்கும் மகப்பேறு நடந்த நாளுக்கும் இடையே ஒருநாளுக்கும் அதிகமாக இடைவெளி இருக்க வேண்டும்.

“மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளிலேயே பெரும்பாலான பெண்களுக்கு மகப்பேறு நடப்பதால் அந்த நாளிலேயே மறு பதிவு செய்யப்படுகிறார்கள். எனவே மறு பதிவீட்டு தேதியும் மகப்பேறு தேதியும் ஒன்றாகவே இருப்பதால் முடிவில் மென்பொருள் அதை நிராகரித்து விடுகிறது” என்கிறார் தகவல் உள்ளீடு செய்யும் தாத்ரியா .

எடுத்துக்காட்டாக, பாரதாப்பூரைச் சேர்ந்த மம்தாவுக்கு ஏப்ரல் 4 -ம் தேதி ஜனனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அன்றே மகப்பேறு நடந்தது. மருத்துவமனை நிர்வாகம் அவரை மறு பதிவு செய்த பிறகு மகப்பேறு தேதியை உதவித்தொகை பெறுவதற்காக உள்ளீடு செய்த போது ”மறு பதிவு நாளுக்கும்(re-registration date) மகப்பேறு அல்லது கருச்சிதைவு ஏற்பட்ட நாளுக்கும் இடையே ஒருநாளுக்கும் மேல் இடைவெளி இருக்க வேண்டும்” என்று மென்பொருள் கூறியது.

“எங்களது பெண்குழந்தைக்கு இரண்டு வயதாகிறது. ஆனால் உதவித்தொகை இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. நாங்கள் பல தடவை ஜெய்ப்பூருக்கு சென்று முறையிட்டு விட்டோம். எதாச்சும் இப்ப வாய்ப்பு இருக்கிறதா?” என்று மம்தா கேட்டார்.

பயனாளர்களுக்கு உதவித்தொகை கொடுப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிக்கு பன்முறை ஜனனா மருத்துவமனை நிர்வாகம் முறையிட்டு விட்டது. ஆயினும் பதிலொன்றும் கிடைக்கவில்லை. ஜனனா மருத்துவமனையில் மட்டும் உதவித்தொகை கிடைக்காமல் கிட்டத்தட்ட 32,042 வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.

ஆனால் அதிகாரிகள் இக்குற்றச்சாட்டை மறுக்கின்றனர். “அதுபோன்ற ஒரு வழக்கு கூட எங்களுக்கு வரவில்லை. இது சாத்தியமில்லை. இதுபோன்ற தவறான தகவல்களை யார் உங்களுக்கு தருகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை” என்று சௌத்ரி கூறினார்.

தவறான தகவல்களை தரும் மென்பொருள் :

உதவித்தொகைக்கான இணையப் பரிமாற்றம் பல சமயங்களில் வெற்றிகரமாக முடிந்துவிட்டதாக மென்பொருள் காட்டினாலும் தங்களது வங்கிக்கணக்குகளுக்கு உதவித்தொகை வந்து சேரவில்லை என்று சில பயனாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

உதவித்தொகை வங்கி கணக்கிற்கு செலுத்தப்படாமலே செலுத்தப்பட்டதாக காட்டும் மென்பொருள்

எடுத்துக்காட்டாக, ஜனனி சுரக்ஸா யோஜனா திட்டத்தின் கீழ் மோனு கண்வருக்கு 1,400 ரூபாய் வழங்கப்பட்டு விட்டதாக OJAS மென்பொருள் கூறியது. ஆனால் பணம் தன்னுடைய வங்கிக்கணக்கிற்கு வந்து சேரவில்லை என்று அவர் கூறினார்.

“ஒரு வாரத்திற்கு முன்பு அவரது கணவர் மருத்துவமனைக்கு வந்து வங்கியிருப்பு கையேட்டைக் காட்டினார். எந்த பணமும் வந்து சேரவில்லை என்று வங்கியும் கூட கூறியது. ஆனால் மென்பொருள் வெற்றிகரமான பரிமாற்றமாக காட்டிவிட்டதால் எழுத்து வடிவில் கட்டளைகள் எதுவும் கிடைக்காதவரை எங்களால் உதவி எதுவும் செய்ய முடியாது” என்று தாத்ரி கூறினார்.

போலி அடையாளங்கள் :

மாநில மருத்துவ, சுகாதார மற்றும் குடும்பநலத் துறை 2016 -ம் ஆண்டில் 2,07,420 PCTS அடையாளங்களில் மகப்பேறு தகவல்கள் இல்லை (அதாவது தகவல்கள் பதியப்படவில்லை) என்று கூறியது. இதற்கு போலி அடையாளங்களே ஒரு இன்றியமையாத காரணமாக இருக்கிறது.

“ஒரு தனிப்பட்ட PCTS அடையாளம் என்பது 16 இலக்க எண்களை கொண்டிருப்பதால் கைப்பேசியில் இருந்து கூட எளிதாக இதை பதிய முடியும். கருவுற்ற பெண்களை பதிவு செய்யும் பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்கனவே உள்ள அவர்களது மகப்பேறு பராமரிப்பு அடையாள எண்ணைத் தேட முயற்சிக்காமல் புதிய எண்ணைப் பதிவு செய்கிறார்கள்” என்கிறார் யோகேஷ்.

“கருவுற்றப் பெண்ணுக்கு புதிய PCTS அடையாளத்தைப் பதியும் போது ஆதார், பமாஷா மற்றும் வங்கிக்கணக்கு உள்ளிட்ட தகவல்களை கொடுக்காவிட்டால் மென்பொருள் எச்சரிக்கை எதுவும் செய்வதில்லை” என்கிறார் ஜெய்பூரைச் சேர்ந்த மாவட்ட நர்சிங் அதிகாரியான தர்மேந்திரா சௌத்ரி.

வேறுபட்ட திட்டங்கள் ஆனால் சிக்கல் ஒன்று :

இலட்சக்கணக்கான பயனாளர்களுக்கு பணம் வந்து சேரவில்லை என்றாலும் கூட 2016, ஜூன் முதல் தேதியில் சுபலட்சுமி யோஜனா திட்டத்தை எடுத்து விட்டு அந்த இடத்தில் 50,000 ரூபாய் உதவித்தொகை கொண்ட முக்யமந்திரி ராஜ்ஸ்ரீ யோஜனா திட்டத்தை இராஜஸ்தான் மாநில அரசு அறிமுகப்படுத்தியது. ஆயினும் திட்டத்தை மாற்றினாலும் மென்பொருளின் அடிப்படையை பெரிதாக எதுவும் மாற்றவில்லை.

பூனம் கண்வரின் மகளுக்கு தற்போது ஒரு வயதிற்கு மேலாகிறது. ஆயினும் மென்பொருள் அவளை இன்னும் ஒரு பையனாகவே அடையாளப்படுத்துகிறது.

“இராஜ்ஸ்ரீ யோஜனா திட்டத்தின் கீழ் பூனத்திற்கு உதவித்தொகை கிடைப்பதற்காக குழந்தையின் பாலினத்தை மாற்றச் சொல்லி மருத்துவமனை நிர்வாகத்திடம் நான் பலதடவைக் கெஞ்சி விட்டேன். ஆயினும் ஒருவரும் கேட்பதில்லை. உதவித்தொகை கிடைக்காவிட்டால் சரியாக உதவி செய்யவில்லை என்று ஆஷா மீது குற்றம் சுமத்துகிறார்களே ஒழிய இணைய மென்பொருளை அல்ல” என்கிறார் முர்ளிபூராவைச் சேர்ந்த ஆஷா பணியாளரான பிரேம்.

– தமிழாக்கம்: சுந்தரம்

நன்றி – THE WIRE

https://thewire.in/214738/software-glitches-leave-many-mothers-lurch-rajasthan/

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க