Saturday, February 8, 2025
முகப்புவாழ்க்கைமாணவர் - இளைஞர்பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து தமிழகமெங்கும் மாணவர் போராட்டம் !

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து தமிழகமெங்கும் மாணவர் போராட்டம் !

-

மிழக மக்களின் தலையில் இடியாக இறங்கியுள்ளது பேருந்து கட்டண உயர்வு. போக்குவரத்துத் துறையை அதிகாரிகள் அமைச்சர்கள் ஊழலால் சூறையாடி, கழகத்தின் சொத்துக்களை அடமானம் வைத்து திவாலாக்கிவிட்டு அந்த சுமையை மக்களின் தலையில் இறக்கியுள்ளது.

இன்றைய சூழலில் அனைத்துபக்கங்களில் இருந்தும் மக்களின் எதிர்ப்புக் குரல்கள் வலுக்கத்தொடங்கியுள்ளன. மாணவர்கள் 22.01.2018 அன்றே பல இடங்களில் தன்னிச்சையாக போராட ஆரம்பித்தனர். தமிழகம் முழுக்க பல்வேறு கல்லூரி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு, சாலை மறியல் என 23.01.2018 அன்றும் போராட்டம் தொடர்ந்தது. அந்த போராட்டங்களில் சிலவற்றை இங்கு தொகுத்துத் தருகிறோம்.

*****

திருச்சி ஈ.வெ.ரா அரசுக் கல்லூரியில் பேருந்து கட்டண உயர்வை  கண்டித்து போராட்டம்.

டுபிடி எடப்பாடி அரசின் பேருந்து கட்டண உயா்வை கண்டித்து ஈ.வெ.ரா அரசுக் கல்லூரியில் மாணவர்களின் வகுப்பு புறக்கணிப்புடன்  போராட்டம் நடைபெற்றது. இன்று காலை, மதியம் கல்லூரி வாயில் முன்பாக மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.

மாணவா்கள் அனைவரும்  பேருந்து கட்டண உயா்வை வாபஸ் பெறுமாறும், கையாலாகாத இந்த அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா். இதில் நிரோஷா என்ற மாணவி,

“தான் மணப்பாறையில் இருந்து வருவதாகவும்  பழைய கட்டணமாக 15 ரூபாயிலிருந்து இப்போது 35 ஆக ஊயா்த்தப்பட்டுள்ளது. நான் பகுதி நேரமாக வேலைபார்த்து தான் என்னுடைய பேருந்து செலவை ஈடுசெய்து படித்தும்  வருகிறேன். இப்போது புதிய பேருந்து கட்டண உயா்வால் என்னால் கல்லூரிக்கு வருவதே சிரமமாகியுள்ளது. இதனால் என் வீட்டில் நீ படித்தது போதும் படிக்க வேண்டாம்  என்றும் கல்யாணம் பற்றிய பேச்சையும் எடுக்கின்றனா்.  இந்த பேருந்து கட்டண உயா்வால் என்னுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகியுள்ளது” என்றும் மிகவும் வேதனையுடன் கூறினார்.

பல மாணவிகளுக்கும் , மாணவா்களுக்கும் தங்களுடைய படிப்பே கேள்விக்குறியாகிறது. அதனால் புதிய  கட்டணத்தை திரும்பப் பெறும் வரையிலும் போராட்டம் செய்ய வேண்டும்,மெரினா போன்று மீண்டும் ஒரு மாணவா் போராட்டம் தான்  இந்த அரசின் கொட்டத்தை அடக்க முடியும் என்றும் கூறினா்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
திருச்சி.

***

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் அரசின் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் அனைவரும் கல்லூரி வகுப்பை புறக்கணித்து கல்லூரி வாயிலில் காஞ்சிபுரம் – தாம்பரம் சாலையில் நின்று தொடர் முழக்க போராட்டம் நடத்தினர்.

மாணவர்கள் அனைவரும் முதலில் கல்லூரிக்கு வரும் பொழுதே இன்று பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என்ற முடிவுடன் வந்தனர். அப்போது தலைமை பேராசிரியர், மற்ற சில பேராசிரியர்கள் நிற்க்காதே கிளம்பு கிளம்பு என்று மாணவர்களை அனுப்பி வைத்தனர். ஆனால் மாணவர்கள் முதல் வகுப்பு முடிந்தது நாம் அனைவரும் போராட்டம் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து திட்டமிட்டபடி வெளியில் வந்தனர்.

மீண்டும் மாணவர்கள் போராட்டம் நடத்தி விடுவார்களோ என்று பேராசிரியர்கள் மாணவர்கள் கையில் வைத்திருந்த முழக்கங்கள் எழுதிய அட்டைகளை வாங்கிக் கொண்டு மிரட்டி அனுப்பப் பார்த்தார்கள்.

ஆனால் மாணவர்கள் பேராசிரியர்களிடம் “1 லட்ச ரூபாய்கு மேல சம்பளம் வாங்குற நீங்களே போராடறீங்க… எங்க வீட்டில எங்கப்பா கூலி வேலைக்கு போய் என்ன படிக்க வைக்குராறு, பஸ் டிக்கட் ஏத்துனா நான் எப்படி காலேஜ்க்கு வருவேன்…? நீங்க வேணும்னா எங்களுக்கு பஸ்க்கு காசு கொடுங்க, நாங்க போராடாம போயிடுறோம்” எனக் கூறி முழக்கங்களை எழுப்பினர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
காஞ்சிபுரம்.

***

குடந்தை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து அனைத்து பள்ளி − கல்லூரி மாணவர் போராட்டக் குழு தலைமையில், 23.01.2018 அன்று மதியம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
குடந்தை.

***

னவரி 23, 2018 அன்று காலை சென்னை கந்தசாமி நாயுடு கலை – அறிவியல் கல்லூரியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பில் மாணவர்கள் பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இப்போராட்டத்தில் எடப்பாடி அரசைக் கண்டித்து “எடப்பாடி கும்பலின் வழிப்பறியே கட்டணக் கொள்ளைக்குக் காரணம்”  என முழக்கங்களை எழுப்பினர்.​​

சென்னை வேலப்பன் சாவடி அருகில் உள்ள சிந்தி கல்லூரி மாணவர்கள், பேருந்து கட்டண கொள்ளையை கண்டித்து பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து, அதனை மக்கள் மத்தியில் பிரச்சாரமாக செய்தனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை.

***

கரூர் அரசு கல்லூரியில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பில் இன்று (23-01-2018) போராட்டம் நடந்தது.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கரூர்.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க