Sunday, January 16, 2022
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க கட்டணம் இல்லா பேருந்து பயணம் - சென்னையில் துவங்கியது மக்கள் அதிகாரத்தின் போராட்டம் !

கட்டணம் இல்லா பேருந்து பயணம் – சென்னையில் துவங்கியது மக்கள் அதிகாரத்தின் போராட்டம் !

-

நள்ளிரவில் பேருந்துக் கட்டண உயர்வை அறிவித்து மக்களிடம் வழிப்பறி செய்து வருகிறது எடப்பாடியின் தலைமையிலான பாஜகவின் அடிமை அரசு. இந்த அநீதியான கட்டண உயர்வு மக்களிடம் ஏற்படுத்திய கொந்தளிப்பைப் போராட்டமாக மாற்றுவதற்கு மக்கள் அதிகாரம் பிரச்சாரம் செய்து வருகிறது. மக்களோடு போராடியும் வருகிறது. சென்னையில் மக்கள் அதிகாரத்தின் உறுப்பினர்களான ஐந்து மாணவிகள் பாரிமுனை பேருந்து நிலையத்தில் 21.1.2018 அன்று நடத்திய பிரச்சாரத்தின் அனுபவத்தை அவர்கள் மொழியிலேயே தருகிறோம்.

*****

காலை 10 மணியளவில் பாரிமுனை பணிமனைக்குள் நுழைந்தோம். முதலில் பேருந்து கட்டண வழிப்பறியை கண்டிக்கும் சுவரொட்டிகளை பணிமனை முழுவதும் ஒட்டினோம். அதைப் படித்த மக்கள் மோடியின் பினாமி எடப்பாடி கும்பல் மீது கோபத்தைக் கொட்டினார்கள். சரியாக சொன்னால் கழுவி ஊற்றினார்கள்.

பாரிமுனை பேருந்து நிலையம் மாதிரிப்படம்

பின் பேருந்துகளில் ஏறி பிரச்சாரத்தைத் தொடங்கினோம். போராட்ட முழக்கம் எழுதப்பட்ட அட்டையை உயர்த்திப் பிடித்தோம். இந்த சின்னப் பொண்ணுங்க என்ன செய்யப் போகுதுங்க என கேள்வி மக்களின் கண்களில் தெரிந்தது.

  • போக்குவரத்து துறையை மொட்டை அடிக்குது அதிகாரிகள் கும்பல்!
  • பி.ஜே.பி பினாமி அதிமுக அரசின் ஊதாரி செலவை ஈடுகட்டவே கட்டணக் கொள்ளை!
  • ஊழல் கும்பலை சந்தியில் விட்டு செருப்பால் அடிப்போம்!
  • கட்டண உயர்வை செலுத்த மறுப்போம்!

என நாங்கள் முழக்கம் எழுப்பியதும் அனைவரும் ஆர்வமுடன் கவனித்தனர். ஒரு தோழர் மக்களிடம் பேச ஆரம்பித்தார் “போக்குவரத்து துறை நஷ்டத்துக்கு காரணம் நிர்வாகத்தோட ஊழல்தான். நாம கொடுக்கிற காசையும், தொழிலாளிங்க காசையும் அள்ளித் தின்ன அதிகாரிகளும், அமைச்சர்களும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள். இப்போ நஷ்டம்ங்கிற பேருல திரும்பவும் நம்ம கிட்ட கொள்ளையடிக்க வர்ராங்க. இந்த ஊழல் கும்பல் திருடி சேர்த்த சொத்தை பறிமுதல் செஞ்சா நஷ்டத்தை ஈடுகட்டலாம். அதனால, பேருந்து கட்டண உயர்வை செலுத்த மறுப்போம்.” –என்று பேசினார்.

இதைத் தொடர்ந்து, மக்கள் துண்டறிக்கைகளை கேட்டுவாங்கி படிக்க ஆரம்பித்தனர். இக்கருத்துக்கள் சரியென அனைவரும் பேசினார்கள். பழைய கட்டணம்தான் கொடுப்பேன்னு சொல்லுங்க, இல்லைன்னா டிக்கெட் எடுக்க மாட்டேன்னு சொல்லுங்க என்ற போது தயங்கினார்கள். மற்றவர்களை ஏமாற்றி வாழக் கூடாது என்ற உழைக்கும் வர்க்கத்தின்நேர்மை உணர்வு அந்த தயக்கத்தின் பின்னே இருந்தது. நாம் யாரையும் ஏமாற்றவில்லை. இந்த அரசுதான் நம்மளை ஏமாத்துது. பழைய கட்டணத்தை செலுத்த தயாராகத்தான் இருக்கிறோம். ஈவு இரக்கமில்லாத இந்த அரசை பணிய வைக்க வேறு என்ன வழி இருக்கிறது என பேசினோம்.

இதே போல மதியம் வரை பிரச்சாரம் செய்தோம். எல்லா பேருந்துகளிலும் மக்கள் நம் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால், பேருந்துகள் கிளம்பும் போது டிக்கெட் வாங்கினார்கள். மக்களின் தயக்கத்தை எப்படி உடைப்பது என விவாதித்தோம். மக்களின் தயக்கத்தை வெறும் வார்த்தைகளால் உடைக்க முடியாது. அதற்கு செயல் வேண்டுமென புரிந்து கொண்டோம். அதன் பின்னர் பேருந்தில் பிரச்சாரம் செய்வதோடு நின்று கொள்ளாமல் மக்களோடு பயணம் செய்து டிக்கெட் எடுக்காமல் இருந்து நம்பிக்கையூட்டுவது என முடிவு செய்தோம்.

பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பிய 15G பேருந்தில் ஏறினோம். அதே போல முழக்கம், பிரச்சாரம். பேசி முடித்ததும் மக்களின் குமுறல் வெளிப்பட்டது. ஒரு பெரியவர் சொன்னார் “ஊழல் அதிகாரிகளை செருப்பால் அடிக்கணும்னு சரியா சொல்றேம்மா. அந்த நோட்டீசை கொடும்மா. எங்க ஊருல மத்தவங்க கிட்ட கொடுக்கிறேன்” என்று சொல்லி ஒரு கட்டு துண்டறிக்கைகளை வாங்கினார்.

இன்னொரு அம்மா நடத்துனரைப் பார்த்து, “நீங்க போராடுனதால தான் டிக்கெட் வெலைய ஏத்திடாங்க” என்றார். உடனே அவர், “அந்த பிள்ளைங்க சொன்னத கேட்டுட்டு பேசும்மா” என்றார். நாம் அந்த அம்மாவிடம் அதிகாரிகளின் ஊழலை எடுத்து சொல்லி, அவர்கள் அடித்த கொள்ளையை ஈடுகட்ட தொழிலாளிகளோட பி.எஃப் பணம் 7000 கோடியை சுருட்டிக்கிட்ட கொடுமையை விளக்கினோம். மக்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொன்னோம். நமக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஓட்டுநர் மெதுவாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.

இந்த சூழலில் நடத்துநர் டிக்கெட் கொடுக்க எழுந்தார். மக்களிடம் நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட தயக்கம் வெளிப்பட்டது.

எங்களைத் தவிர எல்லோரும் டிக்கெட் எடுத்தார்கள். ஆனால், 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி டிக்கெட் எடுக்க மறுத்தார். “இந்த பிள்ளைங்க சொல்றதுதான் சரி. டிக்கெட் விலையை குறைக்கிற வரை நான் டிக்கெட் எடுக்க மாட்டேன்.” என ஓங்கிய குரலில் அறிவித்தார். அந்த அறிவிப்பு ஒரு போராட்ட விதையின் துவக்கமாக இருக்குமா? என்ற யோசனையுடன் சென்ட்ரல் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இறங்கினோம்.

இறங்கும் போது ஓட்டுநர் , “பார்த்து பத்திரமா இறங்குங்கம்மா”, என்று அன்புடன் வழியனுப்பி வைத்தார்.

சென்ட்ரல் பேருந்து நிலையத்தில் இருந்து 15B பேருந்தில் ஏறினோம். அங்கும் இதே போல முழக்கத்தோடு, பிரச்சாரத்தோடு ஆரம்பித்தோம். முதல் பேருந்தை விட இங்கு நிறைய ஆதரவு இருந்தது. ஒரு மாணவர் “இவங்க சொல்றதுதான் சரி. அவனுங்க கொள்ளையடிக்க நான் காசு தர மாட்டேன். நீங்களும் யாரும் டிக்கெட் எடுக்காதீங்க” என்றார். இதே போல பலர் டிக்கெட் எடுக்க மறுத்தார்கள். அரசைக் கிழித்து தொங்க விட்டார்கள்.

எழும்பூரில் நாம் இறங்கிய போது ஒருவர் சொன்னார், “மக்கள் அதிகாரம் கீழே இறங்கிட்டாங்க இனி அவ்வளவுதான்”. இதைக் கேட்டதும் மீண்டும் பேருந்தில் ஏறிக் கொண்டோம். மக்களின் கேள்விகளுக்கு பதில் சொன்னோம். பலர் அமைப்பின் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார்கள். அவர்களது எண்ணைக் கொடுத்தார்கள். தங்கள் பகுதிகளில் நம் பிரசுரத்தை விநியோகிக்கப் போவதாக சிலர் கூறினார்கள்.

ஒரு பாட்டி நம்மிடம் 100 ரூபாயை நீட்டி, “பசியோட இருப்பீங்க ஏதாவது சாப்பிடுங்கம்மா” என்றார். அவருடைய பாசத்தை ஏற்றுக் கொண்டு சொன்னோம், “பாட்டி, நாங்க இந்த காசுல இந்த நோட்டீசை ஜெராக்ஸ் எடுத்து மக்களுக்கு கொடுப்போம். ” என்றோம். அவர் மகிழ்ச்சியுடன் தலையாட்டினார். அரை மணி நேர பயணத்தில் கிடைத்த புதிய சொந்தங்களிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இறங்கினோம்.

அடுத்து கோயம்பேட்டிற்கு சென்று கொண்டிருந்த ஒரு பேருந்தில் ஏறினோம். நாம் முழக்கம் போட ஆரம்பித்ததும் நடத்துனர் தடுத்தார். நாம் அவருக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்த போதே ஓட்டுநர் நாம் யாரென விசாரித்தார். நமது முழக்க அட்டையைப் பார்த்ததும் சொன்னார், “மக்கள் அதிகாரம் நமக்காக போராடுனவங்களாச்சே. எல்லா இடத்திலேயும் உங்க போஸ்டரை பார்த்து இருக்கேன்மா” என நம்மை அடையாளம் காட்டினார். நம் பேச்சைக் கேட்டு இங்கும் பலர் டிக்கெட் எடுக்கவில்லை.

இந்தப் பேருந்தில் ஒரு வயதான அம்மா நம்முடன் சேர்ந்து கொண்டார். உற்சாகமாக முழக்கம் போட்டார். பிரச்சனைக்கு அவர் சொன்ன தீர்வு முக்கியமானது. “மக்களைக் கொள்ளையடிச்சி ஜெயலலிதா சேர்த்த எல்லா சொத்தையும் எடுத்து போட்டு நஷ்டத்தை ஈடுகட்ட சொல்லு அவனை….”. நாம் வண்டியை விட்டு கீழே இறங்கும் போது மன்னிப்பு கேட்கும் குரலில் சொன்னார், “எனக்கும் உங்களோட வரணும்னுதான்மா ஆசையா இருக்கு. ஆனா இன்னைக்கு அடகு கடைக்கு போகணும். கடையை மூடிடுவான். அதான் …”

அன்று முழுவதும் பயணங்களைப் பிரச்சாரம் ஆக்கினோம். நாம் எதை செய்தாலும் மக்கள் வாய் மூடி மவுனியாக இருப்பார்கள் என மக்களைப் புழுவாகப் பார்க்கும் இந்த அரசுக்கு எதிராக மக்களால் பேச முடியும், போராட முடியும் என்பதை நேரடியாக அறிந்து கொண்டோம்.

எங்களைப் போன்ற நூற்றுக் கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மக்கள் அதிகாரத்தின் தலைமையில் பிரச்சாரத்தையும், போராட்டத்தையும் நடத்தி வருகிறோம். இந்த எண்ணிக்கை லட்சக்கணக்காக மாறினால் அரசின் எல்லா வழிப்பறிகளையும் ஒரே நாளில் முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியுமே என்ற ஏக்கம் நெஞ்சை வாட்டுகிறது.

அதனால்…

வாருங்கள், எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். நாம் இணைந்தால் மெரினா தூரமில்லை.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
தொடர்புக்கு : 91768 01656.

 

  1. இதெல்லாம் சரி.அரசு கிட்ட பணம் இல்லாத அப்போ MLA KU ETHUKU DA SALARY 150% INCREMENT NU KELUNGA MAKKAL KITA . APO THAN ELARUKUM PURIYUM ,

  2. புரியவில்லை உங்கள் போராட்ட வடிவம், NGOக்கள் மக்களை ஒன்று பட்ட போராட்ட வடிவங்களை தவிர்த்து சிறு சிறு போராட்ட வடிவமாக அவை ஆளும் கும்பல்களின் மீதான கோவத்தை திசைத் திருப்பும் வேலையாக உள்ளது போல், அரசின் ஆணையை எதிர்க்க அரசை எதிர்க்காமல் கடைநிலை ஊழியரின் மீதான தாக்குதல் என்பது அம்பெய்தவனை விட்டு அம்பை தேடுவது போல் உள்ளது… லெனினிய வரையறைத்தான் இங்கே சற்று கூற முடியுமா??? தோழமைகளே!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க