privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஅமேசான் வழங்கும் கறுப்பு வெள்ளி !

அமேசான் வழங்கும் கறுப்பு வெள்ளி !

-

ரு பொருள் வேண்டும் என்று நீங்கள் நினைத்து முடிப்பதற்குள் அலாவுதின் அற்புத விளக்குபோல் அதை உங்கள்முன் தோன்றச் செய்ய என்ன செய்யவேண்டும்? அமேசானின் கவலையெல்லாம் இது ஒன்றுதான். வேகமாக, இன்னும் வேகமாக, மேலும் வேகமாக வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விரும்பியதைக் கொண்டுபோய் சேர்ப்பதில்தான் தங்களுடைய வெற்றி அடங்கியிருக்கிறது என்பது அமேசானுக்குத் தெரியும். எனவே அவர்கள் வேகத்தைக் கூட்டிக்கொண்டே போகிறார்கள். வேகத்தைக் கூட்டக்கூட்ட வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது. அதன்மூலம் லாபமும் பெருகிக்கொண்டே இருக்கிறது. ஓரிடத்திலிருந்து ஒரு பண்டத்தை இன்னோரிடத்துக்குக் கொண்டுசெல்லும் ஒரு எளிய நிறுவனமாகத் தொடங்கிய அமேசான் இன்று உலகையே தன் உள்ளங்கைக்குள் கொண்டு வந்துவிடத் துடித்துக்கொண்டிருக்கிறது.

நவீன தொழில்நுட்பமே அமேசானின் பிரமாண்டமான வெற்றிக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இது மேல் பார்வைக்கு சரிதான் என்றுகூட நமக்குத் தோன்றும். நம் கண்களுக்கு அமேசானின் மொபைல் ஆப் மட்டுமே தெரிகிறது என்பதால் இப்படி முடிவு கட்டிவிடுகிறோம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்துக்குப் பின்னால் இருப்பவர்கள் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்தாம். ஆனால், இவர்கள் நம் பார்வைக்கு தெரிவதில்லை..

உலகம் முழுக்க பல்லாயிரம் தொழிலாளர்கள் சரக்கு அறைகளில் அமர்ந்து நமக்கான பண்டங்களைத் தனித்தனியே பிரிக்கிறார்கள். மனிதர்கள்தான் பாக்கிங் வேலையையும் செய்யவேண்டியிருக்கிறது. முகவரியைச் சரி பார்த்து பார்சலில் ஒட்டுவதும் தொழில்நுட்பம் அல்ல, மனிதர்கள். எது எங்கே போகவேண்டும் என்பதையும் எப்போது போகவேண்டும் என்பதையும் மனிதர்களே முடிவு செய்கிறார்கள். மனிதர்களே பார்சல்களை வண்டிகளில் போட்டு அனுப்புகிறார்கள். மனிதர்களே நமக்கு டெலிவரியும் செய்கிறார்கள். மிஞ்சி மிஞ்சி போனால் நாம் இவர்களை மட்டுமே நேரடியாகப் பார்க்கிறோம். மற்றவர்களின் முகம், பெயர் நமக்குத் தெரியாது. அமேசான்தான் நமக்குத் தெரிந்த ஒரே முகம். அந்த முகத்தை நாம் மொபைலில்தான் பெரும்பாலும் பார்க்கிறோம் என்பதால் தொழிலாளிகள் குறித்து நாம் சிந்திப்பதில்லை.

நாம் மட்டுமல்ல அமேசானும்கூடத் தொழிலாளர்கள் குறித்து அக்கறையுடன் சிந்திக்கவில்லை. ஏனென்றால் தொழிலாளர்கள் எவரையும் அமேசான் தன்னுடைய தொழிலாளர்களாக பொறுப்பெடுத்துக் கொள்வதில்லை. தன்னுடையை தேவையை செய்து முடிக்கும் பொருட்டு, உலகின் எந்த ஒரு மூலையிலும், எந்த ஒரு நிறுவனத்தையும் வேலைக்கு அமர்த்திக் கொள்ள முடியும். இவர்களுக்கு வேலைநிரந்தரம் கிடையாது; உழைப்புக்கேற்ற ஊதியமும் கிடையாது. மேற்படி நிறுவனம் தனது தொழிலை வேறு ஊருக்கு மாற்றிவிட்டாலோ, வேறு ஒரு இடத்தில் இதைவிட மலிவான ஊதியத்துக்கு ஆள் கிடைத்துவிட்டாலோ இந்த தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிவிடும். இதனை அவுட் சோர்சிங், அதாவது அயல்பணி என்கின்றன, பன்னாட்டுக் கம்பெனிகள்.

தொழில்நுட்பத்துக்குப் பின்னால் இருப்பவர்கள் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்தாம். ஆனால், இவர்கள் நம் பார்வைக்கு தெரிவதில்லை..

அமேசான் உள்ளிட்ட பன்னாட்டுக் கம்பெனிகள் உலகெங்கும் தங்களது கிளைகளை வேர்பிடிக்க வைக்க அயல்பணி தொழிலாளர்களையே பயன்படுத்திக் கொண்டு வருகின்றன. இவ்வாறு இத்தாலியிலும் ஜெர்மனியிலும் அயல்பணி வேலைமுறையில் ஈடுபடுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இரு மாதங்களுக்குமுன்பு வேலை நிறுத்தத்தில் இறங்கினர். காரணம் என்ன? இங்கே தீபாவளி, பொங்கல் போல் அமெரிக்காவில் நன்றியறிதல் நாள் என்பது ஒரு மிகப் பெரிய கொண்டாட்ட தினம். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நான்காம் வியாழன் அன்று இந்த நிகழ்வு கொண்டாடப்படுகிறது. ஆபிரஹாம் லிங்கன் ஆரம்பித்து வைத்த வழக்கம் இது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு போல் இதையும் அமெரிக்கர்கள் விமரிசையாக வரவேற்று மகிழ்வது வழக்கம்.

இந்த நன்றியறிதல் முடிந்த மறுதினமான வெள்ளிக்கிழமையை ”கறுப்பு வெள்ளிக்கிழமை” என்று அழைக்கிறார்கள். இதற்கு இன்னொரு பெயர், பிரம்மாண்டமான ஷாப்பிங் தினம் என்பதாகும். இந்தத் தினத்தின்போது உள்ளூர் பெட்டிக்கடை தொடங்கி வானுயர்ந்த மால்கள்வரை எல்லாவிடங்களிலும் மாபெரும் கழிவுகள் கொடுத்து வாடிக்கையாளர்களை ஈர்ப்பார்கள். நள்ளிரவில்கூட கடைகளைத் திறந்து வைத்து விற்பனை செய்வார்கள். மக்கள் வரிசையில் நின்று வாங்கிச் செல்வார்கள். கடைகளிலும் மால்களிலும் பணியாற்றும் தொழிலாளர்கள் பல நாள்களுக்கு அல்லது வாரங்களுக்கு முன்பே இதற்குத் தயாராக ஆரம்பித்துவிடுவார்கள். வழக்கமான பணிநேரத்தைக் காட்டிலும் அதிக நேரம் பணியாற்றும்படி இவர்கள் நிர்பந்திக்கப்படுவார்கள். டார்கெட் அச்சுறுத்தல்களும் பலருக்கு இருக்கும். அவசரம் என்றால்கூட விடுமுறை கிடையாது. பக்கத்து கடையைவிட அல்லது போட்டி நிறுவனத்தைவிட அதிக லாபம் ஈட்டவேண்டும் என்பதில் மட்டும்தான் நிறுவனங்கள் அக்கறை கொண்டிருக்கும் என்பதால் தொழிலாளர்களின் நிலை குறித்து யோசிப்பதற்குக்கூட அவர்களுக்கு அவகாசம் இருக்காது.

அமேசானிலும் இதே நிலைமைதான். அமேசான் என்னவோ ஆன்லைன் நிறுவனம்தான். ஆனால் உலகம் முழுக்க பல நாடுகளில் பெரிய பெரிய சரக்கு கிடங்குகளை வாடகைக்குப் பிடித்து வைத்து அங்கே பணியாளர்களை நியமித்து அவர்கள் வாயிலாகவே உலகம் முழுக்க பண்டங்களை அனுப்பிக்கொண்டிருக்கிறது அமேசான். நேரடியாகக் கடைகளுக்குச் சென்று வாங்கும் வாடிக்கையாளர்களையும் தம் பக்கம் இழுப்பதே அமோசானின் நோக்கம். பொருள் என்றாலே ஆன்லைன்தான் என்று மக்கள் மாறவேண்டும் என்பதுதான் அதன் கனவும்கூட. அதனால் நேரடி விற்பனை விலையைக் காட்டிலும் பல மடங்கு அதிரடியாக விலையைக் குறைத்து, தொடக்கத்தில் இழப்பு வந்தாலும் பரவாயில்லை என்று கருதி வாடிக்கையாளர்களை மடக்கி வைத்திருக்கிறது அமேசான். தற்போது நடந்திருப்பதும் அதுதான். பிளாக் ஃபிரைடே தினத்தின்போது மக்கள் அமேசானைக் கைவிடக்கூடாது என்பதற்காக போட்டிப்போட்டுக்கொண்டு பல டெலிவரிகளை மின்னல் வேகத்தில் நடத்திக்காட்ட விரும்பியது அமேசான்.

தொழில்நுட்பம் வருவதற்கு முன்பே உழைப்பு இருந்திருக்கிறது. உழைப்பாளிகள் இருந்திருக்கிறார்கள்.

இந்த இலக்கை நிறைவேற்றும் பொறுப்பை மேற்படி அயல்பணி தொழிலாளர்கள் தான் சுமக்கவேண்டும். பண்டிகை காலங்கள் வந்துவிட்டாலே இவர்களுடைய பாடு திண்டாட்டம்தான். வேகம், இன்னும் வேகம், இன்னும் வேகம் என்று சாட்டையைச் சொடுக்காத குறையாக மேலாளர்கள் முதுகில் ஏறி அமர்ந்து விரட்டத் தொடங்கிவிடுவார்கள். இரண்டு நாளில் முடிக்கவேண்டிய ஒரு டெலிவரியை ஒரே நாளில் முடி. ஒரு நாளில் முடிக்கவேண்டியதைச் சில மணி நேரங்களுக்குள் முடிக்கப் பார். சில மணி நேரம் ஆகவேண்டியதை அரை மணி நேரத்தில் ஏன் முடிக்க முடியாது? வீடு, குடும்பம், குழந்தைகளை எல்லாவற்றையும் மறந்துவிட்டு அமேசானே கதி என்று கிடந்தால்கூட அவர்கள் நிர்ணயிக்கும் டார்கெட்டுகளைச் சரியாக முடிப்பதற்குள் முழி பிதுங்கிவிடும்.

இத்தாலியில் உள்ள மிலான் பகுதியில் பணியாற்றும் 500 தொழிலாளர்கள் முதல்முறையாக அமேசான் கொடுக்கும் அதீத அழுத்தத்துக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் குதித்திருக்கிறார்கள். இது போக, ஊதிய உயர்வும் அவர்களுடைய முக்கியமான கோரிக்கைளில் ஒன்றாக இருக்கிறது. கூடுதல் பணி நேரத்துக்கு ஏற்ப கூடுதல் ஊதியம் என்பதையும் அமோசான் பல இடங்களில் சரியாக அமல்படுத்தவில்லை. அதற்கு எதிராகவும் தொழிலாளர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

ஜெர்மனியில் 2,500 தொழிலாளர்கள் அமேசானுக்கு எதிரான வேலைநிறுத்தத்தில் பங்கேற்று உலகின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறார்கள். சரக்குக்கிடங்குகளில் பணியாற்றும் பலருக்கு அடிப்படை ஊதியம்கூட மிகக்குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது தொழிலாளர்களின் கோபத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. இப்போது உயர்த்துவார்கள், பிறகு உயர்த்துவார்கள் என்று நம்பி காத்திருந்ததுதான் மிச்சம். ஊதிய உயர்வு கேட்கும் ஒவ்வொரு முறையும் ஏதேனும் சாக்கு சொல்லி தட்டிக்கழிப்பதையே நிர்வாகிகள் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அது போதாதென்று, கறுப்பு வெள்ளி தினத்துக்குக் கூடுதலாக உழைக்கவேண்டும், டார்கெட்டை முடிக்கவேண்டும், தவறுகள் இருக்கக்கூடாது, விடுமுறைகள் எடுக்கக்கூடாது, ஒரு நொடி தாமதமாக வந்தாலும் நடடிவக்கை என்றெல்லாம் அடுக்கடுக்காக பல நிபந்தனைகளையும் தொழிலாளர்கள்மீது விதித்து அவர்களுடைய வேதனையை அதிகப்படுத்தியிருக்கிறது அமேசான்.

இந்த வெள்ளி மட்டுமல்ல எங்களுக்கு எல்லா நாள்களுமே கறுப்பு தினங்கள்தான் என்று வெகுண்டெழுந்த தொழிலாளர்கள், எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலைக்குத் திரும்பமாட்டோம் என்று அறிவித்து வீதியில் திரண்டுவிட்டார்கள். மலையளவு லாபம் சம்பாதித்து, உலகமெங்கும் கிளைகளைப் பரப்பிக்கொண்டிருக்கும் அமேசான், அதன் வெற்றிக்காக உழைப்பைச் செலுத்தும் எங்களை மட்டும்தொடர்ந்து புறக்கணித்துவருவது சரிதானா என்று கேள்வி எழுப்புகிறார்கள் தொழிலாளர்கள்.

உலகெங்கும் தொழிலை பரப்புவதற்கு தகவல் தொழில்நுட்பம் உதவலாம். ஆனால், அதுவே உழைப்பாளிக்கு மாற்றாக முடியாது. தொழில்நுட்பம் வருவதற்கு முன்பே உழைப்பு இருந்திருக்கிறது. உழைப்பாளிகள் இருந்திருக்கிறார்கள். அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியில் அவர்களுடைய பங்களிப்பு திடமானது, மறுக்கமுடியாதது. இதை அமேசான் உள்ளிட்ட எந்த நிறுவனமும் உணரப்போவதில்லை. ஆனாலும், அதை உணர்த்தவேண்டியது நம் கடமை. வேலைநிறுத்தப் போராட்டத்தால் தான் தொழிலாளர்களுடைய உரிமையை நிலைநாட்ட முடியும் என்பதை உலக முதலாளிகள் மீண்டும், மீண்டும் சொல்லித்தருகின்றனர்.

– மருதன்
புதிய தொழிலாளி, ஜனவரி 2018
New Democratic Labour Front I.T. Employees Wing