சோராபுதீன் வழக்கை விசாரித்தால் ஒன்று மாற்றம் அல்லது மரணம் !

0

சோராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் டி.ஜி.பி வன்சாரா உள்ளிட்டவர்களின் விடுதலையை எதிர்த்து நடந்துவரும் மேல்முறையீடு வழக்கின் நீதிபதி அவ்வழக்கிலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் மாற்றப்பட்டுள்ளார்.

டி.ஜி.பி வன்சாரா ( கோப்புப் படம் )

நீதிபதி ரேவதி மொஹித் – திரே இவ்வழக்க கடந்த இரண்டு வாரமாக தினசரி விசாரத்துவருகிறார். இவ்வழக்கின் சாட்சிகளில் சுமார் 33 பேர் பிறழ் சாட்சிகளாக மாறிய நிலையில் இது குறித்து பத்திரிகைகளில் எழுத செசன்ஸ் நீதிமன்றம் விதித்திருந்த தடையை நீக்கி இந்நீதிபதி கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார். மேலும் விசாரணையின் போது சி.பி.ஐ தரப்பு தனக்கு உதவுவதில்லை என்பதை பலமுறை குறிப்பிட்டுள்ளார். குற்றச்சாற்றப்பட்டவர்களுக்கு எதிராக ஆதாரங்களை பதிவுசெய்யவில்லை என்றும் குறிப்பாக விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்களுக்கு எதிரான ஆதரங்களை பதிவு செய்யவில்லை என்பதை தெரிவித்திருந்தார்.

“அரசுத்தரப்பின் முதன்மை பணியே ஆதாரங்களை நீதிமன்றத்தில் பதிவு செய்வதுதான். அனால் இந்த வழக்கில் நீதிமன்றம் பலமுறை கேட்டுக்கொண்ட பிறகும் விடுவிக்கப்பட்டவர்களிள் மேல்முறையீடு செய்துள்ள இரண்டு நபர்களுக்கு எதிராக மட்டுமே வாதிடுகிறார்கள். சி.பி.ஐ தரப்பில் இருந்து எனக்கு ஒத்துழைப்பு இல்லாததால் அரசுத்தரப்பின் வழக்கு எனக்கு இன்னும் குழப்பமாக இருக்கிறது” என்று நீதிபதி மொஹித் – திரே தெரிவித்திருந்தார்.

இது குறித்து மும்பை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்கள். அதில் “ நீதிபதி மொஹித் – திரே இவ்வழக்கில் சி.பி.ஐ.யின் நடவடிக்கைகள் குறித்து கண்டனங்கள் தெரிவித்துள்ள நிலையில் நீதிபதியை மாற்றியிருப்பது பொதுமக்களுக்கு தவறான அடையாளத்தைக் கொடுப்பதுடன், நீதிமன்றத்தின் மீதான் நம்பிக்கையையும் குறைத்துவிடும் என்றும் அதனால் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

நீதிபதி ரேவதி மொஹித் – திரே

மேலும் அக்கடிதத்தில் தங்கள் சங்கத்தின் சார்பாக மேற்கூறிய சோராபுதீன் வழக்கில் அமித்ஷா -வின் விடுதலையை எதிர்த்தும் மேல்முறையீடு செய்ய சி.பி.ஐ -க்கு உத்தரவிட கோரி மனுதாக்கல் செய்திருந்தோம். அவ்வழக்கு நீதிபதி புஷன் கவி -யின் அமர்வுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்நீதிபதி நீதிபதி லோயா-வின் சந்தேக மரணத்தின் போது உடன் இருந்த நீதிபதிகளில் ஒருவர். லோயாவின் சாவு குறித்து முன்னுக்கு பின்னான தகவல்கள் வந்தபோதும் தாங்கள் மருத்துவமனையில் உடன் இருந்ததாகவும் இம்மரணத்தில் எவ்வித சந்தேகமும் தனக்கு இல்லை என்று இன்றும் கூறிவருபவர். இது குறித்தும் தங்களது கவலைகளை தெரிவித்துள்ளனர்.

மும்பை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த நீதிபதி லோயா குறித்த வழக்கை இப்படித்தான் உச்சநீதிமன்றத்தின் தீபக் மிஷ்ரா அமர்வுக்கு மாற்றினார்கள். லோயா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தங்களுக்கு சார்பான ஒருவரை உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வைத்து அதன் மூலம் மும்பை வழக்கை டெல்லிக்கு மாற்றிய பிறகு வழக்கை தாக்கல் செய்தவர் தனக்கு லோயா மரணத்தில் சந்தேகமே இல்லை என மாற்றி வாதாடியது பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.

இவ்வழக்கில் அரசுக்கு எதிராக வாதாடி வரும் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே மீது ஒழுங்கு நடவடிக்கைக்கும் மற்றும் அவரது வழக்கறிஞர் உரிமையை ரத்து செய்வதற்கு பார்கவுன்சில் நடவடிக்கை எடுத்துவருகிறது. இது தொடர்பாக பார்கவுன்சில் துஷ்யந் தவேவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு பணிவழங்கப்படும் முறைகளின் உள்ள விதிமீறல்கள் மற்றும் லோயா வழக்கு ஆகியவை தொடர்பாக உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செல்லமேஷ்வர் தலைமையில் நீதிபதிகள் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தி அம்பலப்படுத்தினர்.

தனக்கு வேண்டிய நீதிபதிகளிடம் வழக்கை மாற்றி அதன் மூலம் வேண்டிய தீர்ப்பை பெறுவதை ( bench hunting, forum shopping ) எவ்வித அச்சமுமின்றி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றமும் செய்கின்றது.

நான்கு நீதிபதிகளின் அம்பலப்படுத்தலுக்கு பிறகும் இந்நடவடிக்கைகள் தொடருவது உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றங்களும் மக்களை கடுகளவும் மதிக்கவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. பாரதிய ஜனதா கட்சியின் உயர்பொறுப்புக்களில இருக்கும் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு இவர்கள் எந்த எல்லை வரை செல்வார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று! சான்றுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன; தீர்வு எப்போது?

மேலும் :

 

சந்தா செலுத்துங்கள்

மக்கள் பங்களிப்பின்றி ஒரு மக்கள் ஊடகம் இயங்க முடியுமா? வினவு தளத்திற்குப் பங்களிப்பு செய்யுங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க