Monday, September 27, 2021
முகப்பு புதிய ஜனநாயகம் தமிழகம் பேருந்துக் கட்டண உயர்வு : தமிழகத்தைப் பின்னோக்கித் தள்ளும் பேரிடி !

பேருந்துக் கட்டண உயர்வு : தமிழகத்தைப் பின்னோக்கித் தள்ளும் பேரிடி !

-

பயணச்சீட்டுக் கட்டணம் இரு மடங்காக உயர்ந்திருப்பதால், கிராமப் பகுதியைச் சேர்ந்த ஏழை பெற்றோர் பெண் பிள்ளைகளின் கல்வியை நிறுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
–  பிரியா, கல்லூரி மாணவி, உத்திரமேரூர்.

பா.ஜ.க.வின் தயவிலும் பாதுகாப்பிலும் இருந்துகொண்டு, தமிழகத்தில் சட்டவிரோதமாக ஆட்சி நடத்திவரும் எடப்பாடி கும்பல் அறிவித்துள்ள பேருந்து கட்டண உயர்வு பகிரங்கமான பகற்கொள்ளை என்பதையும் தாண்டி, தமிழகத்தை ஓர் இருண்ட காலத்திற்குள் இழுத்துச் செல்லும் சதி என்பதைக் கல்லூரி மாணவி பிரியாவின் எதிர்வினை அம்பலப்படுத்துகிறது.

3,600 கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ள இக்கட்டணக் கொள்ளை ஏழை மாணவர்களின் படிப்புக்கு வேட்டு வைப்பதோடு, ஏழைகளின் அன்றாடப் பிழைப்பையே சூறையாடக்கூடிய அபாயத்தையும் கொண்டிருக்கிறது. பூ, கீரை, காய்கறிகளை வாங்கி வந்து விற்கும் ஏழைத் தாய்மார்கள், வீட்டு வேலைக்குச் செல்லும் ஏழை, ஆதரவற்ற பெண்கள், சித்தாள் வேலைக்குச் சென்று திரும்பும் கூலிகள், கடைச் சிப்பந்திகள் – இப்படியான பல தரப்பட்ட தொழிலாளர்களின் வருமானத்தில், கூலியில் ஏறத்தாழ 30 சதவீதம் வரை பேருந்துக் கட்டணத்திற்கே அழுது தொலைக்க வேண்டிய நிலை, இக்கட்டண உயர்வால் ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் வேலைக்குச் செல்வோரில் 23.3 சதவீதம் பேர் அரசுப் பேருந்தை மட்டுமே நம்பியிருப்பதாக 2011-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிக்கிறது. இவர்களுள் ஆகப் பெரும்பாலோர் கூலித் தொழிலாளர்களாக இருப்பது உறுதி. கிடைக்கும் கூலியில் 30 சதவீதத்தைப் பேருந்துக் கட்டணத்திற்கே செலவழித்துவிட்டால், இந்த ஏழைகளால் எப்படி வாழ்க்கை நடத்த முடியும் ?  விலைவாசி உயர்வைச் சமாளிக்க உணவுச் செலவுகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொண்டு வாழும் இம்மனிதர்களிடம் இனியும் இழப்பதற்கு என்ன இருக்க முடியும் ?

டீசல் விலை உயர்ந்த அளவிற்குப் பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல், இது காறும் பேருந்துகளை இயக்கி வந்ததால்தான் போக்குவரத்துக் கழகங்கள் பெரும் நட்டத்தில் சிக்கிக் கொண்டுவிட்டதாகப் பொருளாதாரக் கணக்கொன்றை எடுத்துவிட்டு, இக்கட்டணக் கொள்ளையை நியாயப்படுத்துகிறது சட்டவிரோத எடப்பாடி அரசு. அதற்கு பொன்னார் உள்ளிட்ட பா.ஜ.க.வினரும் பொருளாதார நிபுணர்கள் என்ற போர்வையில் உலவிவரும் மக்கள் விரோதிகளும் ஒத்தூதி வருகிறார்கள்.

இந்தக் கணக்கு பொய்யும் மோசடியும் நிறைந்தது என்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்த உண்மை. அது மட்டுமல்ல, ஆற்று மணலையும், தாது மணலையும், கிரானைட் கற்களையும் கொள்ளையடித்த அ.தி.மு.க. கொள்ளைக்கூட்டம் போக்குவரத்துக் கழகங்களையும் விட்டுவைக்கவில்லை என்பதும் தமிழக மக்கள் அறிந்து வைத்திருக்கும் உண்மை. அதனால்தான் எடப்பாடி கும்பலின் வாதத்தைத் தெருநாய்கூடச் சீந்தவில்லை.

ஏதோ மலிவான கட்டணத்தில் அரசு பேருந்துகளை இயக்கி வந்ததாக எடப்பாடி அரசு அளித்துள்ள விளக்கம் ஒரு வடிகட்டிய பொய். அல்ட்ரா டீலக்ஸ் பஸ், பாயிண்டு டு பாயிண்டு பஸ், எக்ஸ்பிரஸ் பஸ், ஒன் டு ஒன், ஒன் டு த்ரீ சர்வீஸ் என விதவிதமான பெயர்களில் இயக்கப்படும் பேருந்துகளிலும், திருவிழா மற்றும் தொடர்விடுமுறை நாட்களையொட்டி இயக்கப்படும் பேருந்துகளிலும் வழமையான கட்டணத்தைவிடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு, மறைமுகக் கட்டண உயர்வு ஏற்கெனவே அமலில் இருந்துவருகிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் 22,000 பேருந்துகள் இயக்கப்படுகின்றன; அப்பேருந்துளில் 2 கோடி பேருக்கும் அதிகமானோர் பயணம் செய்கின்றனர். இந்த 22,000 பேருந்துகளில் 70 சதவீதத்துக்கும் மேலான பேருந்துகள் காயலாங்கடைக்குப் போக வேண்டிய நிலையில் உள்ளன என்றால், 2 கோடி பேர் தரும் கட்டணம் மூலம் கிடைக்கும் வருமானம் எங்கே போனது? இதோடு, தொழிலாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு பணப்பலன்களைத் தராமல், 7,000 கோடி ரூபாயை அவர்களிடமிருந்து போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் சுருட்டிக் கொண்டுள்ளன.

இந்தப் பணமெல்லாம் எங்கே போய்ச் சேர்ந்திருக்கிறது, எப்படி மாயமானது என்பதும், எந்தெந்த வழிகளிலெல்லாம் போக்குவரத்துக் கழகங்களில் ஊழல், திருட்டு நடந்திருக்கிறது என்பதும் பொதுமக்களைவிடத் தொழிற்சங்கத் தலைமைக்குத்தான் நுணுக்கமாகத் தெரிந்திருக்கும். பேருந்துக் கட்டணக் கொள்ளையை எதிர்த்துப் பள்ளி – கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் தெருவில் இறங்கிப் போராடியபோது, போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்கள், நிர்வாகத்தில் நடந்துள்ள ஊழலையும் கொள்ளையையும் விரிவாக மக்கள் மத்தியில் பிரச்சாரமாக எடுத்துச்சென்று போராட்டத்தை வலுப்படுத்தியிருக்க வேண்டும். ஒரு சட்டவிரோத ஆட்சிக்குப் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் முடிவை எடுக்கும் அதிகாரம் கிடையாது எனப் பொதுமக்களிடம் அம்பலப்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால், தி.மு.க. மற்றும் இடதுசாரி தொழிற்சங்கத் தலைமையோ வெறும் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு ஒதுங்கிக் கொண்டன. இத்தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களோ சட்டவிரோத எடப்பாடி அரசு ஏவிவிட்ட கட்டண உயர்வைப் பொதுமக்களிடமிருந்து பிடுங்குவதில் எவ்வித தயவுதாட்சண்யமும் காட்டவில்லை. உயர்த்தப்பட்ட கட்டணத்தைக் கொடுக்காமல் கலகத்தில் இறங்கும்படி புரட்சிகர அமைப்புகள் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தபோது,  இந்தக் கட்டண உயர்வை முன்பே, படிப்படியாக அமல்படுத்தியிருக்க வேண்டும் என எடப்பாடி அரசின் குரலில் பேசி, இக்கட்டணக் கொள்ளையைப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் நியாயப்படுத்தினார்கள். பொங்கலுக்கு முன்பாகப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆதரித்து நின்ற தமிழக மக்களுக்கு இடதுசாரி மற்றும் தி.மு.க., தொழிற்சங்கங்களும் போக்குவரத்துத் தொழிலாளர்களும் செய்திருக்கும் கைம்மாறு இது.

இத்தகைய அநீதியைக் குற்ற உணர்வின்றிச் செய்யத் துணியும் அளவிற்குத் தொழிற்சங்கத் தலைமையிடமும் தொழிலாளர்களிடமும் சுயநல, பிழைப்புவாத தொழிற்சங்கவாதம் ஆழமாக ஊடுருவியிருக்கிறது. பொதுமக்களும் தொழிலாளர்களும் இணைந்து போராட உருவாகியிருந்த வாய்ப்பை இந்தத் தொழிற்சங்க பிழைப்புவாதம் ஒதுக்கித் தள்ளியதால் பலன் அடைந்தது எடப்பாடி கும்பல்தான். போராட்டம் வலுவடையாத சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, இக்கட்டண உயர்வை நிரந்தரமாக்குவதில் அது வெற்றியடைந்துவிட்டது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தமிழகம் தழுவிய அளவில் ஓர் எழுச்சி நடைபெற்றதைப் போன்று, இக்கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை உருவாக்கியிருக்க முடியும். அந்தளவிற்குப் பேருந்து கட்டண உயர்விற்கு எதிராகத் தமிழக மக்களிடம் ஆத்திரமும் வெறுப்பும் சூல் கொண்டிருந்தது. மக்கள் எழுச்சியுறும் தருணங்களில் அவர்களுக்கு எதிராகத் தமது துப்பாக்கிச் சனியன்களைத் திருப்ப போலீசும், இராணுவமும் மறுத்திருப்பதை வரலாற்றில் கண்டிருக்கிறோம். போக்குவரத்துத் தொழிற்சங்கத் தலைமையும், தொழிலாளர்களும் மக்களுடன் இணைந்து கட்டண உயர்வை ஏற்கமறுத்துப் பேருந்துகளை நிறுத்திக் கலகத்தில் இறங்கியிருக்க வேண்டும். அத்தகையதோர் ஐக்கியப்பட்ட போராட்டம் வெடித்திருந்தால், அது எடப்பாடி அரசை வீழ்த்தவல்ல ஒரு மக்கள் எழுச்சியாகவும் வளர்ந்திருக்கும். அத்தகையதொரு முன்மாதிரியான அரசியல் எழுச்சி உருவாகாமல் சிதைத்த பழிக்கு  போக்குவரத்துத் தொழிற்சங்கத் தலைமையும், தொழிலாளி வர்க்கமும் பொறுப்பேற்க வேண்டும்.

ரஹீம்

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2018 இதழ்

மின்னூல்:

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க