Friday, June 21, 2024
முகப்புசெய்திமக்கள் அதிகாரம் மாநில பொதுக்குழு தீர்மானங்கள் !

மக்கள் அதிகாரம் மாநில பொதுக்குழு தீர்மானங்கள் !

-

நாள் : 11-3-2018

திருச்சியில் நடந்த மாநில பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

  1. காவிரி ஆறு, தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை உருவாக்கி வளர்த்த வரலாறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலானது. இருபது மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரம் காவிரி தண்ணீர்தான். நடுவர் மன்ற தீர்ப்பின் படி தமிழகத்தின் பங்கு 192 டி.எம்.சி என்பதை குறைத்து, நிலத்தடி நீரை காரணம் காட்டி 177.25 டி.எம்.சி என உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு வழங்கி தமிழகத்தை வஞ்சித்துள்ளது.ஆறு வார காலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற நம்பிக்கையை மத்திய அரசும், கர்நாடகாவும் பொய்த்து போக வைத்துள்ளது. பா.ஜ.க. மோடி அரசின் இச்செயலை கண்டித்து தமிழக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் அனைவரும் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்.
  1. கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம், தஞ்சை டெல்டாவில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், போன்றவற்றால் டெல்டாவே பாலை வனமாக்கப்பட்டு, விவசாயிகள், மீனவர்கள் உட்பட பல கோடி மக்கள் அகதிகளாக பஞ்சம் பிழைக்க செல்லும் அவல நிலை வர இருக்கிறது.காவிரியில் மட்டுமல்ல, கட்டாய நீட் தேர்வு, இந்தி திணிப்பு, நீதிமன்றங்களில் தமிழ் புறக்கணிப்பு, கெயில் குழாய் பதிப்பு, கூடங்குளம் அணு உலை, நியுட்ரினோ திட்டம், என எல்லா விதத்திலும் தமிழகத்தை வஞ்சிக்கும் டெல்லிக்கு எதிராக தமிழக மக்கள் போராட வேண்டும்.காவிரி பிரச்சினையில் ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு என்ற நிலைப்பாட்டைதான் டெல்லி எடுக்கிறது. இந்த சமத்துவமற்ற தேசிய ஒருமைப்பாடு எதற்கு?. தமிழகத்தின் மீது தொடர் தாக்குதல் நடத்தும் டெல்லியை கண்டித்து, மக்கள் அதிகாரம் சார்பில் மாநில அளவிலான முற்றுகை போராட்டம், இம்மாதத்தில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இப்போராட்டத்தில் அனைத்து விவசாய சங்கங்களும் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அழைக்கிறோம்.
  1. கல்வித்துறை முழுவதும் வணிகமயமானதுடன், ஊழல்மயமாகி விட்டது. கல்வியையும் வேலைவாய்ப்பையும் வழங்க வேண்டிய அரசு தன் பொறுப்பை கை கழுவி விட்டது. படித்த 80 சதம் பேருக்கு உரிய வேலையில்லை. கிடைக்கும் வேலையும் எட்டுமணி நேரம், குறைந்தபட்ச ஊதியம், அடிப்படை வசதிகள் என எதுவும் இல்லை. கூலி அடிமைகளாக உத்திரவாதமின்றி சொற்ப சம்பளத்திற்கு வேலை செய்ய வேண்டிய அவலம். பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, படித்த இளைஞர்கள் பக்கோடா விற்பதையும் ஒரு வேலை வாய்ப்பு என கூறுகின்றனர்.விவசாயம், சிறுதொழில், அழிவை நோக்கி செல்வதால் வேலையிழப்பு நாளுக்குநாள் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. எனவே இளைஞர்கள் மாணவர்கள், மக்கள் விரோதமாக மாறிய இந்த அரசு கட்டமைப்பை அகற்றும் கடமையில் ஈடுபடுவதுதான் முதல் வேலை, என கருதி செயல்பட வாருங்கள் என மக்கள் அதிகாரம் அறைகூவி அழைக்கிறது.
  2. போலீசு தமிழக மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தமிழக காவல் துறையின் அனைத்து உறுப்புகளும் நஞ்சாகி விட்டது .வழிப்பறி, கள்ளநோட்டு, சிலை திருட்டு, போதை பொருள் கடத்தல், பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள், லஞ்ச ஊழல், என காவலர் முதல் டி.ஜி.பி வரை கிரிமினல் குற்றங்கள் புரையோடி போய் உள்ளது.போலீசாரால் தினமும் நூற்றுக்கணக்கான அத்து மீறல்கள் மக்கள் மீது நடத்தப்பட்டு வருகிறது. காவல் துறை மக்களை காக்கும் அருகதையை இழந்து விட்டது. திருச்சி உஷா படுகொலைக்கு நீதிகிடைக்க சட்டப்படி சாத்தியமில்லை. பல ஆயிரம் மக்கள் திரண்டு நடத்திய போராட்டத்தால்தான் போலீசு ஆய்வாளர் காமராஜ் கைது என்ற பெயரளவிலான நடவடிக்கையும். எடுக்கப்பட்டது.இதற்குகூட மக்கள் தடியடி பொய்வழக்கு, கைது என போலீசின் அடக்குமுறைகளை சந்திக்க வேண்டும். ஆய்வாளர் காமராஜை மீது கொலை வழக்கு பதிவு செய்வதுடன், உஷா மரணத்திற்கு நீதி கேட்டு போராடிய மக்கள் மீது கொடுரமாக தடியடி நடத்திய காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், நீதி விசாரணை நடத்த வேண்டும். போலீசுக்கு எதிராக யாரும் போராடக்கூடாது என அச்சுறுத்த மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும். போலீசின் செயல்பாடுகளை மக்களே கண்காணித்து கட்டுப்படுத்தும் அதிகாரத்தை வென்றெடுக்கப் போராட வேண்டும்.
  3. புதுச்சேரி, கேரளா, தமிழ்நாடு, ஆகிய மாநிலங்கள் பா.ஜ.க. மோடி அரசை தனிமைப்படுத்தி நதிநீர் பங்கீட்டில் ஒன்றிணைந்து நியாய உரிமையை நிலைநாட்ட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் பெரும்பான்மை முடிவை அமுல் படுத்த வேண்டும். மாநில உரிமையை, அதிகாரிகள் மட்டத்தில் முடிவு செய்வதை ஏற்க முடியாது.

தலைமை:
வழக்கறிஞர் சி.ராஜூ
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்

பங்கேற்பாளர்கள் :
மாநில பொதுக் குழு உறுப்பினர்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு, தொடர்புக்கு : 99623 66321.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க