எடப்பாடி பழனிச்சாமி அரசின் ஓராண்டு சாதனையை கொண்டாடும் விதமாக தமிழக அரசின் சார்பில் பலவித கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இதைப் பார்த்து, ‘அம்மா மட்டும் இருந்திருந்தா இப்படி எல்லாம் நடக்குமா?’ என்று ஆதங்கப்பட்டார் ஒருவர். அம்மா இருந்தபோது இப்படி நடக்கவில்லையா என்ன? ’நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை’, ’சாதனை புரிந்த ஈராண்டு… சரித்திரம் சொல்லும் பல்லாண்டு’ – வசனம் எல்லாம் யார் சொன்னது? ’அவற்றை சொல்வதற்கு ஜெயலலிதாவுக்கு தகுதி இருக்கிறது.. எடப்பாடிக்கு என்ன தகுதி இருக்கிறது?’ என்பது அவர்கள் சொல்ல வருவதன் உட்பொருள்.
’அம்மா மட்டும் இருந்திருந்தா..’ – என்ற இந்த டயலாக்கை பலர், ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு பலர், பல சந்தர்ப்பங்களில் சொல்கிறார்கள்.
– ’’ஜெயலலிதா இருந்திருந்தா தமிழ்நாடு இவ்வளவு அசிங்கப்பட்டிருக்குமா?” – என ஒரு ஆதங்கம் போல…
– ’’ச்ச… அம்மா இல்லாம போயிட்டாங்களே” என ஓர் ஏக்கம் போல…
– ‘’அம்மா இருந்திருந்தா நடக்கிறதே வேற’’ என ஒரு சவடால் போல…
பலவித உணர்வுகளில் இந்த வார்த்தை உச்சரிக்கப்படுகிறது. சாதாரண மக்களில் தொடங்கி படித்தவர்கள், அறிவுஜீவிகள் என பலர் இப்படி பேசுகின்றனர்; எழுதுகின்றனர். ஜெயலலிதா இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்ற ஆய்வு ஒரு பக்கம் இருக்கட்டும். என் கேள்வி ஜெயலலிதா இப்போது இல்லையா?
’ராமனுக்கு அயோத்தியில் கோயில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது?’ எனக் கேட்ட ஜெயலலிதாவின் நடவடிக்கையும், மோடி தலைமையிலான கொலைகார பாரதிய ஜனதாவின் ஒவ்வொரு செயலையும் பாதம் பணிந்து ஆதரிக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கையும் வேறு, வேறா? ரத யாத்திரையை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்து, அதற்கு பாதுகாப்புக் கொடுத்து, எதிர்ப்போரை கைது செய்து சிறையில் அடைக்கும் எடப்பாடி அரசின் செயல்பாடுகளில் ஜெயலலிதா தெரியவில்லையா?
நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இசக்கிமுத்துவும், அவரது மனைவியும், சின்னஞ்சிறு இரண்டு குழந்தைகளும் தீயில் வெந்து கருகி செத்தார்களே… எத்தனையோ முறை மனு கொடுத்தும் காவல்துறை அதை கண்டுகொள்ளாமல் கந்துவட்டி கிரிமினல்களுக்குத் துணை போனதே… இதில் ஜெயலலிதாவை உங்களால் ‘உணர’ முடியவில்லையா?
ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம், போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், செவிலியர்களின் உள்ளிருப்புப் போராட்டம்… என அனைத்திலும், ‘போராட்டம் பண்ணினா வேலை இருக்காது. பரவாயில்லையா?’ எனக் கேட்டது எடப்பாடி அரசாங்கம். அப்படி போராடியவர்களை ‘எஸ்மா’ சட்டத்தின் கீழ் வேலையை விட்டே தூக்கினார் ஜெயலலிதா. இரண்டு நடவடிக்கைக்கும் என்ன வித்தியாசத்தை கூற முடியும்?
வளர்மதி, திருமுருகன் காந்தி, பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் மீது குண்டர் சட்டம், துண்டு நோட்டீஸ் விநியோகித்தால் கைது என கருத்துரிமையை காக்கும் கருணை மிகுந்த நடவடிக்கையில் ‘ஜெயலலிதா’வின் சாயல் உங்கள் கண்களுக்குத் தென்படவில்லையா?
ராஜஸ்தானில் திருடனைப் பிடிக்கப் போன இடத்தில், கூட வந்த போலீஸ்காரனே சுட்டு ஒரு இன்ஸ்பெக்டர் இறந்துபோக…. திருடனைப் பிடிக்க நடந்த வீரதீர சாகசத்தில் திருடன்தான் சுட்டுவிட்டதாக கதைக்கட்டி, அந்த கொலையை தியாகமாக்கி, கொலையாளிக்கு 1 கோடி ரூபாய் பரிசு அறிவித்ததே எடப்பாடி அரசு… இந்த கேவலத்தில் ஜெயலலிதாவை இனம் காண முடியவில்லையா? ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஆட்டோவுக்கு தீ வைத்த போலீஸ், திருச்சியில் கர்ப்பிணி பெண்ணை எட்டி உதைத்து கொலை செய்த போலீஸ், திருப்பூர் சாமளாபுரத்தில் பொதுமக்களை அடித்து நொறுக்கிய போலீஸ், ஆரணியில் விளைந்த நெல்வயலில் டிராக்டரை விட்டு ஏற்றிய போலீஸ்.. என எடப்பாடி அரசின் போலீஸ் வீரத்துக்கும், ஜெயலலிதா அரசின் போலீஸ் வீரத்துக்கும் ஆறு வித்தியாசமேனும் உங்களால் கூற முடியுமா?
சென்னை பெருவெள்ளத்தின்போது, மக்களின் துயரம் தாளாது இதரப் பகுதி மக்கள் நிவாரணப் பொருட்களை அனுப்பியபோது அதன் மீது வெட்கமே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது ஜெயலலிதா அரசு. குமரி ஒக்கிப் புயலின்போது, தாமாக கரை மீண்ட மீனவர்களையும் தாங்கள் காப்பாற்றியதாக கணக்கெழுதி ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டது எடப்பாடி அரசு. ஒட்டும் ஸ்டிக்கரின் நிறத்தில் வேறுபாடு இருக்கலாம். ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வதில் எடப்பாடியின் முன்னோடி ஜெயலலிதா என்பதை யாரேனும் மறுக்க முடியுமா?
எம்.ஜி.ஆர். என்னும் செத்துப் போன பாம்பை வைத்து பூச்சாண்டி காட்டி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்திக்கொண்டிருக்கும் எடப்பாடி அரசுக்கு முன்னோடி யார்? ஜெயலலிதாதானே?
அகம்பாவம், ஆணவம், பொய், பித்தலாட்டம், ஜனநாயகம் என்றால் என்னவென்றே தெரியாத தற்குறித்தனம், பார்ப்பனத் திமிர், சாதி மேட்டிமைத்தனம் அனைத்திலும் ’ஜெயலலிதா லெகசி’யை நகல் எடுத்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த ஆட்சியில், இவர்கள் சொல்கிறார்கள்… ‘அம்மா மட்டும் இருந்திருந்தா’.
பார்ப்பனர்கள் இப்படி நினைப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இப்படி சொல்வதில் பெரும்பகுதி பார்ப்பனர்கள் இல்லை. அவர்களிடம் இந்த ஆற்றாமையின் ஊற்றுக்கண் எங்கிருந்து வருகிறது? ‘பார்ப்பன தலைமைக்கு பணிந்து போவது ஓ.கே. ஆனால், இந்த சூத்திர தலைமைக்கு எல்லாம் பணிந்துபோக வேண்டியிருக்கிறதே’ என்பதா? கொஞ்சம் உள்ளே பார்த்தால் மிஞ்சுவது இந்த பார்ப்பன அடிமைப் புத்திதான். ‘எங்களவா சி.எம்.மா இல்லாம போயிட்டாளே’ என்ற பார்ப்பனர்களின் ஏக்கத்தை விட இது கீழ்மையானது; கேவலமானது. இல்லாமல் போன ஜெயலலிதாவுக்காக வருந்தும் இவர்கள்தான் கருணாநிதி இருப்பதற்காகவும் வருந்துகிறார்கள்.
ஜெயலலிதா இல்லையே என்ற ஏக்கம் உண்மையில் யாருக்கு வர வேண்டும்? ஜெயலலிதா இருப்பதால் யாருக்கு ஆதாயமோ, அவர்களுக்குதான் அந்த ஏக்கம் வர வேண்டும். ஆனால் ஜெ.வால் ஆதாயம் அடைந்த சசிகலா, தினகரன், எடப்பாடி, பன்னீர்செல்வம் குழுவினர் ஜெ. இல்லாததால் மகிழ்ச்சிதான் அடைகின்றனர். மாறாக, ஜெயலலிதா இருந்த போது நாலு வார்த்தை எழுத முடியாத, நாலு வார்த்தை பேச முடியாத அறிவுலகினர் பலர், ஜெ. இல்லாமைக்காக வருந்துகின்றனர். ஜெயலலிதா இருந்தவரைக்கும் யாரை எல்லாம் தூக்கிப் போட்டு மிதித்தாரோ அவர்கள் எல்லாம், ‘அந்தம்மா இல்லையே’ என்று உச்சுக் கொட்டுகிறார்கள். உதைத்த காலையே வணங்கும் உங்கள் பெருந்தன்மை ஒரு பக்கம் இருக்கட்டும். அதற்குப் பின்னால் இருக்கிற உளவியல் என்ன?
’ஜெயலலிதா எவ்வளவு பெரிய ஆளு. அந்தம்மா இருந்த இடத்துல கண்ட, கண்ட கழிசடை எல்லாம் இருக்குது. அததுக்கு ஒரு தராதரம் வேண்டாமா?’ என்று கேட்கிறார்கள். உண்மைதான். இந்த தராதரமற்ற கழிசடைகளை எம்.எல்.ஏ.க்களாகவும், அமைச்சர்களாகவும் உருவாக்கியது யார்? தமிழ்நாடு இன்று அடைந்திருக்கும் இழிவான நிலைக்கு யார் பொறுப்பு? அதற்கு ஜெயலலிதான் பொறுப்பேற்க வேண்டும்.
ஜெயலலிதா தைரியசாலி; ஜனநாயகவாதி; நிர்வாகத் திறமையுள்ளவர் என்ற கூற்றுகள் அனைத்தும் பொய்யானவை என்பதற்கு அ.தி.மு.க. அமைச்சரவையே சாட்சி. ஒரு துறையை நிர்வகிக்கக் கூடத் தெரியாத முட்டாள்களை அமைச்சர்களாக்கிய ஜெயலலிதா ஒரு மூடர்கூடத்தின் தலைவி என்பதைத் தவிர மேலதிகமாக எதுவும் இல்லை. ஜெயலலிதா இருந்தபோது தமிழ்நாடு எவ்வளவு கேவலமாக இருந்ததோ, அதைவிட இப்போது ஒருபடி கூடுதலாக கேவலம் அடைந்துள்ளது என்று வேண்டுமானால் சொல்லலாம். இதன்படி, ஜெயலலிதா லெகசியை இவர்கள் வளர்த்தெடுத்துள்ளனர் என்றுதான் மதிப்பிட வேண்டும். மாறாக, ‘அது ஒரு பொற்காலம்’ என்பதைப் போல சித்தரிப்பது அடிமை புத்தியும், அயோக்கியத்தனமும் நிறைந்தது.
’ஜெயலலிதா இருந்தபோது கட்சிக் கட்டுக் கோப்பாக இருந்தது. எல்லோரும் அந்தம்மா பேச்சைக் கேட்டு நடந்தார்கள். இப்போது ஆளாளுக்கு ஒரு பக்கம் இழுத்து கட்சி வீணாகப் போய்விட்டது’ என்பது பலருடைய கருத்து. கார்ட்டூனீஸ்ட் பாலா கூட இதுபற்றி ஒரு கார்ட்டூன் வரைந்திருந்தார்.
இரட்டை இலை வாடி உதிர்ந்து கொண்டிருக்கிறது. அந்த இடத்தில் தாமரை துளிர்க்கிறது. வானுலகில் இருந்து ஜெயலலிதா, ‘நான் பாடுபட்டு வளர்த்த கட்சியை இப்படி பண்ணிட்டீங்களே… பாவிகளா!’ என கண்ணீர்விடுகிறார். இதற்காக ஜெயலலிதா எதற்கு கண்ணீர் விட வேண்டும் என்று புரியவில்லை. இரட்டை இலையில் இருந்து தாமரை மலர வேண்டும் என்பது ஜெயலலிதான் விருப்பம். குடும்பத் தலைவரின் சாவுக்கு பின் சொத்துகளை உரிய வாரிசிடம் ஒப்படைப்பதைப் போல, அ.தி.மு.க.வை பா.ஜ.க.விடம் ஒப்படைக்க வேண்டும். அதைதான் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் செய்து வருகிறார்கள்.
நிலைமை இப்படி இருக்க… ஏதோ அந்தம்மா, புரட்சித் தலைவின்னு பட்டம் கொடுத்து விட்டதாலேயே புரட்சிகரமாய் வாழ்ந்தது போலவும், தன் கட்சி காவிமயமாவது கண்டு கண்ணீர் விடுவதைப் போலவும் அரசியல் அறியாமையுடன் சித்தரிக்கிறார்கள். ஒரு மாநிலத்தின் அமைச்சரவையை அடிமைகளின் கூடாரமாக, நாடே எள்ளி நகையாடும் வகையில் சுய மரியாதையற்ற வகையில் கீழ்த்தரமாக நடத்திய ஜெயலலிதாவின் நடவடிக்கையைப் பார்த்து, ‘ஏ யப்பா… எவ்வளவு துணிச்சல்’ என்று வியக்கிறார்கள். அப்படி வியக்கும் கணத்தில் மானசீகமாக அவர்களும் புரட்சித் தலைவியின் காலடியில் ஒருமுறை விழுந்து எழுகின்றனர்.
ஜெயலலிதாவின் பலமே இத்தகைய அடிமைத்தனத்தை தமிழகத்தில் நிறுவனப் படுத்தியதுதான். ஆண்டானை வீழ்த்துவதை விட அடிமைகளுக்கு சொரணை வரவழைப்பது பெரும் சிரமம். ஜெயாவோடு ஒப்பிட்டு எடப்பாடியை விமரிசிப்பவர்களும், கேலி செய்பவர்களும் அ.தி.மு.க அடிமைகளை விட கூடுதலான அடிமைகள். பா.ஜ.க-வின் செருப்பாய் ஆளும் எடப்பாடியை வீழ்த்துவதற்கு இந்த ஜெயா போற்றி அடிமைகளை அம்பலப்படுத்துவது ஒரு முன் நிபந்தனை!
-வழுதி
//ஒரு மாநிலத்தின் அமைச்சரவையை அடிமைகளின் கூடாரமாக, நாடே எள்ளி நகையாடும் வகையில் சுய மரியாதையற்ற வகையில் கீழ்த்தரமாக நடத்திய ஜெயலலிதாவின் நடவடிக்கையைப் பார்த்து, ‘ஏ யப்பா… எவ்வளவு துணிச்சல்’ என்று வியக்கிறார்கள். அப்படி வியக்கும் கணத்தில் மானசீகமாக அவர்களும் புரட்சித் தலைவியின் காலடியில் ஒருமுறை விழுந்து எழுகின்றனர்.//
மாற்றுகருத்தே இல்லாத மகத்தான உண்மை. கோமாளிகளையும் கொத்தடிமைகளையும்தான் அமைச்சர்களாய் வைத்து அரசாங்கம் நடத்திக்கொண்டிருந்தார் புரட்சித்தலைவி…இப்படிப்பட்டவர்களே அவர் குணத்திற்க்கு பொறுத்தமானவர்கள் என்பதும் உண்மை.
ஆனாலும் அவரிடம் மத்தியாரசுக்கு பணிந்து அடிமை பட்டயம் எழுதிக்கொடுத்த தன்மை இல்லை
என்ற காரணம் சிலரை அவர்மேல் உணர்ச்சிவயப்பட வைத்துவிடுகிறது.
அடிமைகள் நிச்சயம் அடிமைகளாய்த்தான் இருப்பார்கள்.அவர்களால் அதிகாரம் செய்ய முடியாது.
பழைய எஜமான் மரிக்க புதிய எஜமானுக்கு பணிகிறார்கள்.அடிமைகளை குறை சொல்லி பயனில்லை.
ஜெயலலிதாவின் அடிப்படை குணம் அருவருப்பானதே..
ஆனாலும் இறுதிகாலத்தில் ,தன் தலைமையிலான மாநிலத்தை தரம் உயர்த்தி நிமிரச்செய்ய வேண்டும் என்ற உறுதி தன்னம்பிக்கை அவரிடம் இருந்தது.
எதற்க்கும் யாருக்கும் பணியாத துணிவும் அவரிடம் இருந்தது.இதுவே அவரின் மேல் ஒரு ஈர்ப்பை பலருக்கு கொடுக்கிறது.
நிச்சயம் அந்த மயக்கத்தை இந்த கட்டுரை சற்று தெளியவைக்கும்.
எடப்பாடியையோ பன்னீரையோ திட்டுபவர்கள்,
இவர்களைப்போன்றவர்களை தமிழ் மக்களை ஆள்பவர்களாய் விட்டுச்சென்ற புரட்சித்தலைவியைத்தான் நொந்துகொள்ள வேண்டும் என்ற உண்மையை கட்டுரை பளிச்சென்று அறைந்து சொல்கிறது.
//ஆனாலும் இறுதிகாலத்தில் ,தன் தலைமையிலான மாநிலத்தை தரம் உயர்த்தி நிமிரச்செய்ய வேண்டும் என்ற உறுதி தன்னம்பிக்கை அவரிடம் இருந்தது.//
ஆதாரம் அற்ற கூற்று.இதே மனநிலையை தான் கட்டுரை சுட்டுகிறது.விமர்சனம் வைக்கிறது.
//எதற்க்கும் யாருக்கும் பணியாத துணிவும் அவரிடம் இருந்தது.இதுவே அவரின் மேல் ஒரு ஈர்ப்பை பலருக்கு கொடுக்கிறது.//
அது தான் பார்ப்பன அகங்காரம்.அதற்க்குத்தான் அடிமைகள் வியந்தோதி காலில் விழுகிறார்கள்.
test