Tuesday, June 18, 2024
முகப்புவாழ்க்கைஅனுபவம்ஐயர் மனசுல பெரியார் !

ஐயர் மனசுல பெரியார் !

-

யார் கடவுள்…
பக்திக்கு பலி கேட்பவனா?
பசிக்கு உணவு அளிப்பவனா?
சிந்தித்துப் பார்.
– என்றார் பெரியார்.
அதை நானும் வழி மொழிகிறேன் என்றுபேசினார் ஒரு பார்ப்பனர். நம்ப முடியவில்லையா? எனக்கும் அதே அதிர்ச்சிதான்.

சென்னையின் கோடம்பாக்கத்தில் உள்ள புறநகர் இரயில் நிலையம். அதன் நுழைவாயிலில் பிள்ளையாருக்கும் அம்மனுக்கும் சேர்த்து சின்னதாக ஒரு கோயில். இரயிலுக்கு போறவங்க வரவங்க அவசரமா ஒரு பிராத்தனையுடன் கன்னத்துல போட்டுகிட்டு கையில கிடைச்ச சில்றைய உண்டியல்ல போட்டுட்டு பரபரப்போ போயிட்டும் வந்துட்டும் இருந்தாங்க.

மாலை 6 மணிக்கி சென்னையில ரயில் நிலையம் எப்படி இருக்கும். தெரிஞ்சவங்களே எதிர்ல வந்தாக் கூட தெரியாதது போலதான் இருக்கும். அத்தனை பரபரப்பான உலகத்துல வாழ்ந்துட்டு இருக்கோம்.

இந்த பரபரப்புக்கும் நடுவுல ஒரு அம்மா பத்து ரூவாய் நோட்டை அம்மன் மடியில வச்சு கும்பிட்டுட்டு போனாங்க. அடுத்த அஞ்சு நிமிசத்துல அழுக்கு படிஞ்ச சட்ட போட்ட 30 வயசு மதிக்க தக்க ஒருத்தரு வந்து அம்மன கும்பிட்டுட்டு அந்த அம்மா வச்ச பத்து ரூவா பணத்த எடுத்துட்டு போகப் போனாரு.
பிள்ளையாரு பக்கத்துல இத பாத்துட்டு உக்காந்திருந்த அந்த கோவில் குருக்களான ஐயரு பதறிட்டாரு.

“ஏய் யாருய்யா நீ. அம்மன் மடிமேல இருந்த பணத்த எதுக்கு எடுக்குற”
“அதுவா அய்ரே! நான் முக்கியமா ஒரு காரியத்துக்கு போரேன். எனக்கு அம்மன்னா ராசி அம்மனுக்கு சொந்தமானது எங்கூட இருந்தா போற காரியம் நிறைவேறும் அதுக்குதான்.”
“அதுக்காக கருவறைக்குள்ள கால் வச்சு எடுப்பியா”
“வெளிய நின்னு எடுத்தா எட்டாது அய்ரே”
“திருடுனது மட்டும் இல்லாமே திமிரா வேற பேசுறியா”
“அந்தம்மா வச்ச காச நியுந்தா எடுப்ப அப்ப நீ திருடனா. திருட்டுன்னு சொல்லி அசிங்கப் படுத்தாதே அய்ரே. ராசின்னு செல்றேன்ல…..”

காச எடுத்தவர் ஐயர்ட கொஞ்சம் செல்லமா கோச்சிகிட்டது போல தெரிஞ்சது.
“ராசின்னா சாமி மடியில உள்ள ஒரு ரோஜாப் பூவ எடுத்துக்க வேண்டியதுதானே எதுக்கு காச எடுக்குற”

“ரோஜாப்பு எடுக்க மட்டும் நான் உள்ள போகலாமா அய்ரே.”
“காசு வேணும்னு என்ன கேட்டா குடுக்க போறேன். சாமி காச எதுக்கு எடுக்குற. போறவங்க வாரவங்க எல்லாம் இஷ்டத்துக்கு நடக்குறதுக்கு நாங்க எதுக்கு. சொல்லு பாப்போம்.”

“சாமிக்கி இன்னா செலவு இருக்கு சொல்லு. காச வச்சு அது இன்னா பன்னப் போகுது. ஒனக்கும் எனக்கும் தான் செலவுருக்கு. அதான் மல்லுகட்டிகினு கெடக்குறோம். நான் சொல்றது சரிதானே அய்ரே”

ஏடாகூடமா பேசுறாரு இவர்ட்ட என்ன பேச்சுன்னு தோணுச்சோ இல்ல அவரு பேசுறது சரின்னு தோணுச்சோ ஐயர் மௌனமாய்டாரு. காசு எடுத்தவரு மேல பேசுனாரு.

“சாமிகிட்ட போயி காச நானு எடுத்தது தப்புன்னா அந்தம்மா உள்ள போயி வச்சதும் தப்புதானே. அப்ப எதுக்கு உள்ள போயி வச்சிங்கன்னு சண்ட போடல. காசு வருதுண்ணா மட்டும் கணக்கு பாக்க மாட்டிங்க அப்புடிதானே அய்ரே.”

அழுக்கு சட்டக்காரர் விதண்டா வாதமா பேசினாலும் லாஜிக்கா பேசுனாரு. ஐயரும் சாதி வெறியோட பேசாமெ கொஞ்சம் நிலமைய யோசிச்சு பாத்து போசுனாப் போலதான் இருந்துச்சு.

ஒரு நாணயமான அந்த சண்டைய நிதானிச்சு பாக்கவோ கேக்கவோ அங்க யாருக்குமே நேரமில்ல. அடுத்த அஞ்சு நிமிசத்துக்கான மின்சார ரயிலுக்குக் கூட தாமதிக்காம ஓடிட்டே இருந்தாங்க. நமக்கு பக்கத்துல நடந்தது என்னன்னு தெரிஞ்சுக்க நேரமில்லாம அலாரம் கட்டிட்டு ஓட வேண்டிய தேவை மனுசனுக்கு.

“நீங்க பாத்துட்டு தானம்மா இருந்தீங்க அவர் செஞ்சது நியாயமா?” என்னப் பாத்து கேட்டாரு ஐயரு.

நான் ஒரு நண்பர பாக்குறதுக்காக கோயில் பக்கம் காத்திருந்த வேளையிலதான் இந்த சண்டை நடந்தது. சண்டைய பாத்தது பாவமா? என்ன நாட்டாமையாக்கி பஞ்சாயத்த ஏம்பக்கம் திருப்பினாரு ஐயரு.

எனக்கு எப்பவுமே பஞ்சாயத்துல பிராது குடுக்குற ரோல் தான் இருக்குமே தவிர தீர்ப்பு சொல்ற நாட்டாமை ரோல் வந்ததே கிடையாது. ஐயரு அப்புடி சொன்னதும் என்னடா செய்றதுன்னு சமாதானப் படுத்தினேன்.

“விடுங்க சாமி. பாவம் கையில காசு இல்லாம எடுத்துருப்பாரு”
“என்னம்மா இப்படி சொல்றீங்க. இருக்கப்பட்டவங்க காசு போடுவாங்க இல்லாதபட்டவங்க எடுப்பாங்கன்னு சொல்றாப்போல இருக்கு. அப்ப கோயில்… நிர்வாகத்த எப்படி நடத்துறது.”

ஐ!…. ஐயரே நமக்கு சாதகமா பஞ்சாயத்த வேற பக்கம் திருப்புறாரு நாமும் அதே ரூட்டுல போயிடுவோம். திரும்பவும் காசு எடுத்தது குத்தமா குத்தம் இல்லையா என்ற பட்டிமன்றம் வேண்டாமுனு நினைச்சேன்.

“கோயில் நிர்வாகம் நீங்க பாக்கனுமா? ஏன் அரசாங்கம் பாத்துக்காதா?”
“இது என்ன அறநிலைத்துறைக்கு சொந்தமான கோயிலா அவங்க பாக்குறதுக்கு. கோயில் மராமத்து செலவு எங்களுக்கு சம்பளம் எல்லாமே உண்டியல நம்பித்தான். கோயில் திருவிழா விசேசம், கட்டுமானம் போல பெரிய செலவுகள இந்த பகுதி பெரியவா நிதி வசூல் செஞ்சு பாப்பாங்க.”

“உண்டியல்ல விழற காச யாரு எடுப்பாங்க.”
“கோயில்ல முன்ன ரெண்டு ஐயரு இருந்தோம். காசு பிரிச்சுக்கறதுல சண்ட சச்சரவு… பிறகு அதிகாரிங்க டெண்டர் விட்டுட்டாங்க. டெண்டர் எடுத்தவங்க சம்பளம் தருவாங்க. தட்டுல விழறத நாங்க எடுத்துப்போம்.”

“உண்டியல்ல காசு விழாம போச்சுன்னா டெண்டர் எடுத்தவங்க எப்புடி சாமி சம்பளம் குடுப்பாங்க.”

“முன்ன விட இப்பதான் கோயிலுங்கள்ள உண்டியல் அதிகமா நெறையுது. தெரியுமா உங்களுக்கு.”
“மக்களுக்கு முன்னவிட இப்ப கடவுள் பக்தி அதிகமாச்சின்னு சொல்றீங்களா?”
“மக்களுக்கு கஷ்டம் அதிகரிச்சுப் போச்சுன்னு சொல்றேன்.”
“சாமி சொல்றது சரியா புரியலையே”னு விளக்கம் கேக்கும் போது ரெண்டு பேரு சாமி கும்பிட வந்தாங்க.

மளிகைக் கடை அண்ணாச்சி பேசிக்கிட்டே மளிகைப் பொருள பொட்டணம் போட்றாப் போல, ஐயரும் பேசிகிட்டே கற்பூறத்த சாமி முகத்துல காட்டிட்டு விபூதி குங்குமத்த கொடுத்தாரு.
ஐயருக்கு பக்தியே இல்லன்னு யாரும் நெனச்சுரக் கூடாது. ஆரம்பத்துல பயபக்தி நிறைய இருந்துருக்கும். இப்ப இதுவே தொழில்ன்னு ஆனதால தொழில் அனுபவத்துல ஐயரு அர்சனைய அசால்டா செய்றாருன்னு சொல்லலாம்.  அவரும் விடாமெ பேசிட்டுதான் இருந்தாரு.

“எவ்வளவு சம்பாரிச்சாலும் மனுசனுக்கு பிரச்சன கொறைய மாட்டேங்குது. திருட்டு, கொள்ள, வழிப்பரின்னு கெட்ட விசயமும் அதிகரிச்சு போச்சு. அதனால உண்டியல் நெறையிது.”
“என்ன சாமி சொல்றீங்க. கெட்ட விசயத்துக்கும் கடவுளுக்கும் என்ன சாமி சம்மந்தம்.”

“கடவுளப் பத்தி சொல்லல. தப்பு செய்றவங்க பன்னுன பாவத்த போக்க பாதிய உண்டியல்ல போட்றாங்கன்னு சொல்றேன்.”
“களவாண்டதுல கடவுளுக்கும் பங்கு இருக்குன்னு… சொல்ல வர்றீங்களா சாமி.”

“நீங்க கடவுள தப்பா நெனைக்கிறீங்க”
“லஞ்சம் வாங்கிட்டு கண்டுக்காம விட்றது தப்பில்லையா சாமி.”

“திருடிட்டு வந்த தின்பண்டத்த ஒருத்தர் உங்களுக்கும் கொஞ்சம் தர்ரார்னு வச்சுப்போம். திருட்டு பொருளுன்னு தெரியாம தின்னுட்டிங்க. தின்னதுக்காக திருட்ட நீங்க ஏத்துப்பீங்களா? சொல்லுங்க.”
“திருடன்னோ திருட்டு பொருளுன்னோ எனக்கு எதுவும் தெரியாம இருக்கலாம் சாமி. ஆனா கடவுளுக்கு எல்லாம் தெரியுமே.”

“நீங்க வேண்டிக்கிட்டது ஏதோ நடக்கல போல அதான் கடவுள் மேல கொஞ்சம் கோபமா இருக்கீங்க.”
“எனக்கு கடவுள் மேல கோபம் இல்ல சாமி, தந்தை பெரியார் மேல பாசம் அதிகம்.”

“அப்புடி சொல்லிட்டு போங்க. நானும் கடவுள எந்த அளவு மதிக்கிறேனோ அந்த அளவு பெரியாரையும் மதிக்கிறம்மா.”

“என்னா சாமி சொல்றீங்க. உங்கவா எல்லாருக்கும் பெரியார் எதிரியாச்சே?”

“யாரும்மா சொன்னது அப்புடி… பெரியாரு இல்லன்னா நாம ரெண்டு பேரும் இப்படி ஒன்னா உக்காந்து பேசிட்டு இருக்க முடியுமா?”

“பெண்ணுரிமை பத்தி சொல்றீங்களா?”

“அதுவும்தான். ஆனா நான் சொன்னது அது இல்ல. பெரியார் காலத்துல பத்து தர்மகர்தா, பத்து பெரும் பணக்கார ஐயர் இவங்க கைதான் ஓங்கி இருந்துச்சு. ஐயர்னு சொல்லிகிட்டு நாங்களும் பணக்கார ஐயர் கிட்ட நிக்க முடியாது. தர்மகர்தா வந்தா அர்சன தட்டு புடிக்கிற ஐயரு எல்லாம் அடிமையா ஒடிங்கிதான் நிக்கனும். நாங்க ஜாதி ஒன்னுதான். காசு பணத்த வச்சு பாத்தா வேற ஜாதி.

பெரியாரு சாதிய ஒழிக்கனுன்னு சொன்னதே சமத்துவத்த கொண்டு வரணுன்னுதான். அதுக்காக பண்ணையாருங்க (தர்மகர்தா) கூட கூட்டு வச்சுகிட்டு திமிரா இருந்த ஐயருங்கள எதிர்த்தாரு. அத புரிஞ்சுகிட்டு எங்களுக்கு கொஞ்சம் விட்டு கொடுத்தாங்க அந்த பணக்கார ஐயருங்க.”

“என்ன சாமி நீங்களே உங்க ஆளுங்களுக்கு எதிரா பேசுறீங்களே?”

“எங்காளுங்க பன்னுனா தப்பில்லையா.”

“நீங்க பெரியார பத்தி உயர்வா சொல்றீங்க. ஆனா எச் ராஜா பெரியார் சிலைய ஒடைக்கனுன்னு சொல்றாறே.”

“அந்தாளு ஒரு உளறு வாயி. அது அவரோட தனிபட்ட கருத்து. பெரியாரு பகுத்தறிவு பாசறை. சிந்தனை வாதி. பெரியார் சாதிய ஒழிக்கனுமுன்னு சொன்னதுக்கு காரணமே தர்மகர்த்தா – பணவசதி படைச்ச ஐயருங்க திமிருதான்.”

அதுக்குப் பிறகு நான் என்னத்தை பேச? இப்ப ஐயரே பேச்ச முடிக்கலாம்னுட்டாரு.

“தப்பா எடுத்துக்காதிங்க. எனக்கும் நிறைய பேசனுன்னு ஆசைதான் ஆனா காலையிலதான் பல்லுக்கு வேர் சிகிச்சை பண்ணிட்டு வந்தேன். சத்தமா பேச முடியல. இதுவரைக்கும் பேசுனதே ஒரு பக்கம் வலிக்கிது. இன்னொரு நாளைக்கி பேசலாமா?”

பல் சிகிச்சை எடுத்துக்கிட்டே இவரு இப்படி பேசுராறுன்னா, நல்லா  இருக்கும் போது இன்னும் நல்லா பேசுவாரேன்னு, இன்னொரு வாட்டி பேசுறேன் சாமின்னு வணக்கம் சொல்லிட்டு வந்தேன்.

இதை  பல தோழருங்கிட்ட சொன்னதும் அவங்களுக்கும் ஆச்சரியம்தான். என்ன இருந்தாலும் பார்ப்பனருங்கிட்டயே சமத்துவத்தை கொண்டு வந்ததற்கு பெரியார்தான் காரணமுன்னு ஒரு ஐயரே சொல்லிட்டாரே!

– சரசம்மா
(உண்மைச் சம்பவம்)

  1. எல்லாம் சரி. கோவில்ல காசு எடுத்தது தப்புனு சொல்லவே இல்ல. கோவிலில் காசு கொடுப்பது கோவிலுக்கு சேரனும் இல்லை அங்க வேலை செய்பவர்கு சேரனும்.

  2. சிந்திக்க வைத்த பதிவு
    தந்தை பெரியாரை மறக்காமல் வைக்க உதவும் பதிவு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க