privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஐ.பி.எஸ் அரவிந்தின் ரவுடித்தனம் – கை, கால் முறிக்கப்பட்ட குற்றவாளிகள் !

ஐ.பி.எஸ் அரவிந்தின் ரவுடித்தனம் – கை, கால் முறிக்கப்பட்ட குற்றவாளிகள் !

-

சென்னை பூந்தமல்லி குமணஞ்சாவடியில் இரவுப் பணியில் இருந்த தலைமை காவலர் அன்பழகனை மூன்று இளைஞர்கள் அறிவாளால் வெட்டி, செல்போனை பறித்துச் சென்றதை அறிந்திருப்பீர்கள். அப்போதே அந்த இளைஞர்களுக்கு  லாடமோ, என்கவுண்டரோ நிச்சயம் என்பதை தமிழக போலீசின் கிரிமினல் வரலாற்றை அறிந்தோர் எதிர்பார்த்திருப்பர்.

அந்த எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.

ஏட்டையா அன்பழகன் மருத்தவமனையில் சேர்க்கப்பட்டதும், அவரது செல்பேசி டவர் இருப்பிடத்தை வைத்து அந்த இளைஞர்களை திருவேற்காடு அருகே போலிசார் பிடித்தனர். தற்போது அந்த இளைஞர்களை நீதித்ததுறை மொழியில் சொல்வதாக இருந்தால் குற்றம் சாட்டப்பட்ட சதீஷ்குமார், பன்னீர் செல்வம்,  ரஞ்சித் மூவரின் கை கால்களை உடைத்து, பரிதவிக்கும் விழிகளோடு ஃபோட்டோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். யார் வெளியிட்டது?

சென்னை தி.நகர் துணை ஆணையரும், ஐ.பி.எஸ் அதிகாரியுமான அரவிந்தன் அந்தப் புகைப்படங்களை வெளியிட்டு, “மூவரும் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால், கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும்” என குறிப்பும் போட்டிருக்கிறார்.

ips aravind police rowdyism
ஐ.பி.எஸ் அரவிந்தன் வெளியிட்ட அடித்து நொறுக்கப்பட்ட குற்றவாளிகளின் புகைப்படங்கள் !

இந்த செய்தியும், படமும் நகலெடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் மிகவேகமாக பரவ ஆரம்பித்தன. பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் மட்டுமல்ல சில போலீசு அதிகாரிகளும் இந்த செய்தியைப் பார்த்து திடுக்கிட்டனராம். மக்களும், ஆர்வலர்களும் திடுக்கிட்டதற்கு காரணம் அவர்கள் தாம் ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்ற நம்பிக்கையினால். போலீசின் அதிர்ச்சி என்பது தமது குற்றம் இப்படி பகிரங்கமாக வெளியே கசிந்தால் என்ன ஆவது என்ற பதற்றம்.

ஏற்கனவே போலீசார் மீது சர்ச்சைகள் பல இருக்கும் போது இப்படி படம் போட்டு செய்தி வெளியிட்டால், மற்ற கடை கோடி காவலர்கள் மனதில் எந்த மாதிரி எண்ணத்தை வளர்க்கும் என ஒரு போலீசு அதிகாரி தனது முகநூலில் செய்தி வெளியிட்டாராம். இதை தமிழ் இந்து வெளியிட்டுள்ளது.

அதாவது ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியே இப்படி வீரம் காண்பித்தால் சாதா போலீசு புகுந்து விளையாடுமே என அவர் பதற்றம் அடைந்திருக்கலாம். ஏற்கனவே இத்தகைய படங்கள் அதாவது குற்றம் சாட்டப்பட்டவரை அடித்து நொறுக்கிய படங்கள் வெளியானாலும் கேள்விகள் எழும்பவில்லை, தற்போது அதை ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி செய்ததுதான் பிரச்சினை என்று இந்த முன் ஜாக்கிரதை முத்தண்ணா அதிகாரிகள் யோசிக்கின்றனர். பிறகு மேலிடத்து அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் ஐ.பி.எஸ் அரவிந்த் அந்த செய்தி, படங்களை நீக்கியிருக்கிறார். என்றாலும் இதுதாண்டா போலீஸ் என்ற அவரது கெத்து விருப்பம் வெளியே பரவி நிலைபெற்றுவிட்டது. இது அவருடையது மட்டுமல்ல, போலீஸ் துறையின் விருப்பமும் கூட.

பூந்தமல்லியில் அந்த இளைஞர்கள் இப்படி ஒரு போலீசு ஏட்டையாவை தாக்கியது தமிழகம் என்பது ரவுடிகளால் நிறைந்திருக்கும் மாநிலமாக பலருக்கும் தோன்றியிருக்கும். இது உண்மையல்ல. ஏனெனில் ஒரு நாட்டில் ஜனநாயகம் இல்லை எனும் போது அந்த ஜனநாயகம் வலியோரால் ஏறி மிதிக்கப்படும்போது மட்டுமே ரவுடிகள் கூட ஒரு போலீசை அசட்டுத்தனமாகவோ இல்லை போலீசின் குற்றப் பாரம்பரியத்தை வைத்தோ எதிர்க்க துணிந்திருக்க முடியும். ஏனெனில் ஒரு நாட்டின் பாதுகாப்பும் நீதியும் சட்டத்தால் நிலை நிறுத்தப்படுவது வேறு, ஆயுதம் தாங்கிய சீருடைக் கும்பலால் நிலை நிறுத்தப்படுவது வேறு.

ஒரு ஏட்டையாவை சில சாத ரவுடிகள் வெட்டியதற்கே அரவிந்தனுக்கு இத்தனை கோபம் என்றால் இந்த போலீஸ் ரவுடிகள் தமக்கு இழைத்த குற்றத்திற்காக மக்கள் கோபம் அடைந்தால் என்ன நடக்கும்?

அந்தியூர் விஜயா, வாச்சாத்தி பழங்குடி பெண்கள், சத்யமங்கலம் காட்டில் அதிரடிப்படையின் அட்டூழியம், சிதம்பரம் பத்மினி என்று ஆரம்பித்து சமீபத்தில் திருச்சி கர்ப்பிணிப் பெண் உஷா வரைக்கும் தமிழக போலீசார் செய்த குற்றங்களும், கொலைகளும், வன்புணர்ச்சிகளும் நூற்றுக்கணக்கில் உள்ளன. இவற்றினால் பாதிக்கப்பட்ட மக்கள் அரவிந்தன் போல போலிசாரை அடித்து நொறுக்கி நலம் பெற வாழ்த்து தெரிவித்து பதிவு போட ஆரம்பித்தால் அது முகநூலின் சர்வரே கொள்ளாத அளவுக்கு நிரம்பி வழியும்.

உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட ஏ 1 குற்றவாளி ஜெயலலிதா படத்தை வைத்தே அன்றாடம் அனைத்துக் கூட்டங்களையும் எடப்பாடி அரசு நடத்துகின்றது. மாவட்ட ஆட்சியர்கள், சட்டம் ஒழுங்கிற்காக மாநில அளவில் நடந்த போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் கூட நடுநாயகமாக குற்றவாளி ஜெயலலிதாதான் பெரிய படத்தில் ஆசீர்வாதம் அளித்தபடி இருக்கிறார்.

இந்த குற்றவாளி படத்தை வைத்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் இலட்சணம் எப்படி இருக்கும்? அ.தி.மு.க கும்பல் கடைசி வாய்ப்பில் இருப்பதால் முடிந்த வரை சுருட்டும் வேலையை தீவிரமாக செய்து வருகிறது. அதன் வழியில் போலீசின் ஆட்டமும் அதிகரித்து வருகிறது. இன்னொரு புறம் சாதாரண போலீசார் மத்தியிலேயே அதிகாரிகளின் அட்டூழியத்தை எதிர்த்து குரல்கள், போராட்டங்கள் கிளம்ப ஆரம்பித்துள்ளன. அது கமிஷனர் அலுவலகத்தில் தீக்குளிப்பு வரை வந்து விட்டது.

இப்படி தமிழக அரசிடமோ, தமிழக காவல் துறையிடமோ ஜனநாயகம் என்பது கண்ணுக்கே தெரியாத நிலையில் காவல் துறைக்கு அன்றாடம் கோடிக்கணக்கில் மாமூல் கொடுக்கும் குற்றவாளிகளும் அவர்களது அடிப்பொடிகளும் சுதந்திரமாக சுற்றமாட்டார்களா என்ன?

குட்கா ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளை இதே போல பாத்ரூம் நலம்பெறும் காட்சியில் ஐ.பி.எஸ் அரவிந்தனால் உட்கார வைக்க முடியுமா?

இந்தியா முழுவதும் இன்று போலீசின் ஆட்சிதான். என்கவுண்டர் எண்ணிக்கையில் ரவுடி சாமியார் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உத்திரப்பிரதேசம்தான் முதலிடம் வகிக்கிறது. இந்திய அரசின் அதிகாரப் பூர்வ அட்டூழியங்கள் நடக்கும் காஷ்மீரிலோ பெல்லட் குண்டுகள் பறித்த வாழ்வே நூற்றுக்கணக்கில் உள்ளன.

ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு போலீசு சில ரவுடிகளால் தாக்கப்படுவது என்பது ஒரு குற்றச் செய்தி மட்டுமே. ஆனால் அதே ரவுடிகளை போலீசு நிலையத்தில் வைத்து மிருகங்களைப் போல அடித்து நொறுக்கி அதையும் ஆணவத்துடன் படங்களாக வெளியிட்டால் அது அந்த நாட்டில் ஜனநாயகம் இல்லை என்ற அபாயத்தை காட்டுகின்ற செய்தி.

பூந்தமல்லி ஏட்டையாவை தாக்கிய குற்றவாளிகளை நாம் ஆதரிக்கவில்லை. அவர்கள் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்றே கூறுகிறோம். ஆனால் சட்டத்தை விடுத்து போலீசின் மேலேயே கை வைத்து விட்டாயா என்று சட்டவிரோதமாக கொட்டடி  சித்தரவதை செய்யும் போலீசுக்கு அந்த குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தண்டனையை விட அதிகம் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்கிறோம். ஏனெனில் அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் போலீசு செய்யும் தவறும் அந்தக் குற்றவாளிகள் செய்த தவறும் ஒன்றல்ல.

இல்லையேல் திருச்சி உஷாவைக் கொன்ற காமராஜுக்கு இதே விதிப்படி சிறையில் வழுக்கி விழுந்து நலம் புரிய விரும்பும் செய்திகளை திருச்சி சிறையில் உள்ள சிறைவாசிகள் செய்தால் அதை யார் எதிர்க்க முடியும்? அரவிந்தன் ஐ.பி.எஸ் பதில் சொல்வாரா?