
12.12.2025
மக்கள் அதிகாரக் கழகத்தின் ஆறாவது தலைமைக் குழு கூட்டம்!!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!
மக்கள் அதிகாரக் கழகத்தின் ஆறாவது மாநில தலைமைக் குழு கூட்டம் டிசம்பர் 08, 09 ஆகிய நாட்களில் சிறப்பாக நடந்து முடிந்தது. நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு சிவப்பஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த ஒன்றரை மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் கழகத்தின் சார்பாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மக்கள் இயக்கங்கள், அவற்றின் அனுபவங்கள், படிப்பினைகள் விரிவாகப் பரிசீலிக்கப்பட்டன.
நவம்பர் 7 ரஷ்ய புரட்சி நாள் விழா தமிழ்நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. நக்சல்பாரி புரட்சியாளர் முதுபெரும் தோழர் சம்பத் அவர்களின் அர்ப்பணிப்பு தியாகத்தை வரித்துக் கொள்ளும் விதமாக தமிழ்நாடு-புதுச்சேரி முழுவதும் சிவப்பஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளும் நினைவேந்தல் கூட்டங்களும் ஜனநாயக சக்திகளின் பங்கேற்புடன் நடத்தப்பட்டது.
திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம் என்று தமிழ்நாட்டைக் கலவர பூமியாக மாற்ற துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணியின் சதித்திட்டங்களை முறியடிக்கும் வகையில் உறுதியோடு தொடர்ச்சியாக போராடிய மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம் தோழர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இக்காலகட்டத்தில் தேசிய, சர்வதேசிய நிலைமைகளைப் பரிசீலித்து கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சாதி மதம் கடந்து காதலிக்க-மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம்! மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணை செயலாளர் தோழர் நா.ரவி(எ)செல்வ கணேஷ், தோழர் இரா.ராதிகா ஆகியோரின் சாதி மறுப்பு, புரட்சிகர மணவிழா! டிசம்பர் 25 கீழ்வெண்மணி ஈகியர் நாளில் அ.பா.வளையாபதி மகால், திருமோகூர், ய. ஒத்தக்கடை, மதுரையில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
இம்மணவிழாவிற்கு ஜனநாயக சக்திகள், முற்போக்கு சிந்தனையாளர்கள், தோழர்கள் அனைவரும் அணி திரண்டு வருமாறு மக்கள் அதிகாரக் கழகம் அழைக்கிறது.
1. மக்கள் அதிகாரக் கழகத்தின் 6-வது தலைமைக் குழு கூட்டத்தில், மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா-லெ)-யின் தலைமைக் குழு உறுப்பினர், “புரட்சிப் புயல்” சித்தாந்த இதழின் ஆசிரியர் மற்றும் “புதிய ஜனநாயகம்” இதழின் முன்னாள் ஆசிரியருமான நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு சிவப்பஞ்சலி செலுத்தப்பட்டது.
தோழர் மறைவையொட்டி மக்கள் அதிகாரக் கழகம் அமைப்பு சார்பாக ஒரு வார காலம் துக்கம் அனுசரிக்கப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விருத்தாச்சலம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கோவை, திருவாரூர், இராஜபாளையம், வேலூர், கிருஷ்ணகிரி, உளுந்தூர்பேட்டை, புதுச்சேரி என தமிழ்நாடு முழுவதும் பல பெருநகரங்களிலும், அதை ஒட்டிய சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தோழர் சம்பத்தின் நினைவேந்தல் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
அரங்குகளிலும், பொதுமக்கள் கலந்துகொள்ளும் வகையில் தெருமுனைகளிலும் இக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த துக்க அனுசரிப்பு நடவடிக்கைகளின் மூலம் தமிழ்நாட்டின் புரட்சிகர – ஜனநாயக சக்திகள் மத்தியிலும், அமைப்பு செயல்படுகின்ற பகுதிகளில் உள்ள மக்கள் மத்தியிலும் தோழர் சம்பத் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.
2. நமது அண்டை நாடான இலங்கையில் “டிட்வா” புயல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தப் பேரழிவில் சுமார் 627-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்துள்ளனர், சுமார் 336 பேர் காணாமல் போயுள்ளனர். உயிரிழந்த மக்களுக்கு கழகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், ஆரம்பக் கட்ட கணக்கீட்டின்படி, இலங்கையில் சுமார் 7 பில்லியன் டாலர்கள் வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கெனவே, பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து கொண்டிருக்கும் இலங்கையின் நிலையை இப்பேரிடர் மேலும் மோசமாக்கியுள்ளது. இலங்கையின் மீதான ஐ.எம்.எஃப். கடனை இரத்து செய் எனவும் பொருளாதார இழப்புகளுக்கு சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்டுமாறும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
3. சூடானில் 2023 ஏப்ரல் மாதம் அந்நாட்டின் இராணுவ படைக்கும் (SAF), விரைவு ஆதரவுப் படைக்கும் (RSF) இடையில் தொடங்கிய உள்நாட்டுப்போர் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. இப்போரினால் இதுவரை ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். பெண்கள் மீதான பாலியல் வெறியாட்டம், பழங்குடி மக்கள் மீதான இனவெறி தாக்குதல் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது.
தங்கம் உள்ளிட்டு ஏராளமான கனிம வளங்கள் நிறைந்த சூடானை மேலாதிக்கம் செய்வதற்கான போட்டா போட்டியின் விளைவே இந்த உள்நாட்டுப் போர். எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பிராந்திய மேலாதிக்க நாடுகள் தங்களுடைய லாபவெறிக்காக சூடான் இராணுவத்திற்கும் அதன் துணைப்படையான விரைவு ஆதரவுப் படைக்கும் ஆயுதங்கள், நிதியுதவி அளித்துவருகின்றன. எனவே, இப்போரை நிறுத்துவதற்கு இந்நாடுகள் உடனான பொருளாதார உறவுகளை துண்டிக்க வேண்டியும், இனஅழிப்பு உள்ளிட்ட போர் குற்றங்களில் ஈடுபட்டுவரும் இரண்டு இராணுவ கும்பலையும் தண்டிக்கக் கோரியும் மக்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும் என கழகம் வலியுறுத்துகிறது.
***
4. தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் பறிக்கும் நான்கு தொழிலாளர் சட்டங்களை தொழிலாளர்களின் எதிர்ப்பை மீறி பாசிச மோடி அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதை கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், தொழிலாளர்களை, கார்ப்பரேட் முதலாளிகள், காண்ட்ராக்ட் முதலாளிகள், போலீசு கொண்ட ஒரு கும்பலின் அதிகாரத்தின் கீழ் கொத்தடிமைகளாக்கும், இச்சட்டங்களை திரும்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
5. விமானிகளின் ஓய்வு நேரத்தை அதிகரிக்கும் வகையில் புதிய ஓய்வு நேர விதிகளை (FDTL) சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) நடைமுறைக்கு கொண்டு வந்ததையடுத்து இண்டிகோ விமான நிறுவனம் ஆயிரக்கணக்கான விமானங்களை இரத்து செய்தது. பணியாளர்களை சுரண்டிக்கொழுத்த ஏகபோக கார்ப்பரேட்டான இண்டிகோ நிறுவனம் திட்டமிட்டே மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இச்சூழலைப் பயன்படுத்தி மற்ற விமான நிறுவனங்கள் கட்டணக் கொள்ளையடித்து வருகின்றன.
இச்சம்பவம், இந்திய விமானத் துறையில் இண்டிகோ நிறுவனத்தின் ஏகபோகத் தன்மையை எடுத்துக்காட்டுகிறது. மேலும், இந்திய பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா கார்ப்பரேட்டிடம் தாரைவார்க்கப்பட்டதன் கோர விளைவைக் காட்டுகிறது. ஆனால், பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திய இண்டிகோ நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காத மோடி அரசு, புதிய விதிகளை நிறுத்தி வைத்துள்ளது. இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு பதிலாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் பாசிச மோடி அரசை கழகம் கண்டிக்கிறது. தனியார் ஏகபோகத்தை ஒழித்து விமானத்துறையை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
6. பீகாரைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர். எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) நடைமுறைப்படுத்தி வருகிறது தேர்தல் ஆணையம். கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமை மற்றும் குடியுரிமையை பறிப்பது, தேசிய மக்கள் தொகை பதிவேட்டை மறைமுகமாக அமல்படுத்துவது உள்ளிட்ட பாசிச நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே எஸ்.ஐ.ஆர். அமல்படுத்தப்படுகிறது.
மேலும், அடுத்தாண்டு தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், அத்தேர்தலில் மோசடிகளில் ஈடுபடுவதற்கு ஏதுவாகவும் இப்பாசிச நடவடிக்கையை பா.ஜ.க. கும்பல் மேற்கொள்கிறது. எனவே, எஸ்.ஐ.ஆர். என்பது இந்துராஷ்டிர அடிக்கட்டுமான நடவடிக்கைகளில் ஒன்று என்பதை உணர்ந்து புரட்சிகர, ஜனநாயக சக்திகள் அதனை எதிர்த்து போரட வேண்டும் என கழகம் வலியுறுத்துகிறது.
7. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டெல்லியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன், கடந்த ஆறு ஆண்டுகளாக பட்டாசு வெடிப்பதற்கு இருந்த தடையை உச்சநீதிமன்றத்தின் மூலம் நீக்கியது. இதனால் டெல்லியில் தீபாவளி முடிந்த மறுநாள் காற்றின் தரக்குறியீடு 2,000-ஐ எட்டியது. தற்போது, நிலைமை மோசமடைந்து காற்றின் தரக் குறியீடு (AQI) 287-ஆக உள்ளது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தத் தவறிய பாசிச பா.ஜ.க. அரசைக் கண்டித்து, கடந்த நவம்பர் 10 மற்றும் நவம்பர் 23 ஆகிய தேதிகளில், டெல்லியின் இந்தியா கேட் பகுதியிலும், நகரின் மற்ற பகுதிகளிலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களும் தாய்மார்களும் குழந்தைகளும் தங்களின் சுகாதாரமான சுவாச உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், காற்று மாசுபாட்டைத் தடுக்க வக்கற்ற பாசிச பா.ஜ.க. அரசு போராட்டக்காரர்கள் மீது போலீசின் மூலம் கொடூர அடக்குமுறையை ஏவியது. இதனை கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், காற்று மாசுபாட்டைத் தடுப்பதற்கு சுற்றுச்சூழலை நாசமாக்கும் தொழில்களை தடை செய்வது; தனியார் வாகனப் பயன்பாட்டைக் குறைத்து பொதுப் போக்குவரத்தை அதிகரிப்பது; இயற்கை வளக் கொள்ளையைத் தடை செய்வது; சுற்றுச்சூழலை அழிக்கும் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கு தடைவிதிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மையப்படுத்தி உழைக்கும் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
8. நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், 13 புதிய மசோதாக்களை பாசிச மோடி அரசு கொண்டுவர இருக்கிறது. இவற்றில், இந்திய அணுசக்தித் துறையை கார்ப்பரேட்மயமாக்கும் “அணுசக்தி மசோதா 2025”, சாலைகள் அமைப்பதற்கு வரைமுறையின்றி விவசாய நிலங்கள், காடுகளை அழிக்க வழிவகை செய்யும் “தேசிய நெடுஞ்சாலைகள் (திருத்த) மசோதா, 2025”, யு.ஜி.சி. (UGC), ஏ.ஐ.சி.டி.இ. (AICTE), என்.சி.டி.இ. (NCTE) போன்ற உயர்கல்விக்கான தனித்தனி ஒழுங்குமுறை அமைப்புகளை ஒழித்துக்கட்டி ஒற்றை உயர்கல்வி ஆணையத்தை உருவாக்கும் “இந்திய உயர்கல்வி ஆணையம் (HECI) மசோதா, 2025” உள்ளிட்ட பல்வேறு பாசிச மசோதாக்கள் அடங்கியுள்ளன. இதனை கழகம் கண்டிப்பத்துடன் இம்மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் தடுப்பதற்கு புரட்சிகர, ஜனநாயக சக்திகள் குரலெழுப்ப வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
9. பா.ஜ.க. ஆளும் அசாம் மாநிலத்தில், தேசிய குடிமக்கள் பதிவேடு மூலம் இலட்சக்கணக்கான மக்களின் குடியுரிமையை பறித்து அவர்களை முகாம்களில் அடைத்து சித்தரவதை செய்து வருகிறது பாசிச கும்பல். மிகவும் சுகாதாரமற்ற வகையில் மக்கள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால், எளிதில் நோய்த் தொற்றுக்கு உள்ளாகின்றனர். இங்கு, விலங்குகள் உண்பதற்குக் கூட தரமற்ற வகையிலான உணவுகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. முக்கியமாக, நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சையை மறுப்பதன் மூலம் அவர்களை படுகொலை செய்து வருகிறது அசாம் அரசு. அகதிகள் முகாம் என்ற பெயரில் அப்பட்டமான வதைமுகாம்களை நிறுவி வருகிறது பா.ஜ.க அரசு.
இந்நிலையில், அசாமில் பா.ஜ.க மேற்கொண்டுவரும் இப்பாசிச நடவடிக்கையை நாடுமுழுவதும் விரிவுப்படுத்தும் நோக்கத்தில் செப்டம்பர் 2-ஆம் தேதி நாட்டின் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடைத்து வைப்பதற்கான தடுப்பு முகாம்களை கட்ட வேண்டும் என்று அறிவித்திருக்கிறது பாசிச மோடி அரசு. இந்த அறிவிப்பை பாசிச மோடி அரசின் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையுடனும், பா.ஜ.க. கும்பல் ஆளும் மாநிலங்களில் புல்டோசர் பயங்கரவாதம் நிலைநாட்டப்படுவதுடனும் இணைத்துப் பார்க்க வேண்டும். இதன் பேரபாயத்தை உணர்ந்து இப்பாசிச நடவடிக்கைக்கு எதிராக புரட்சிகர, ஜனநாயக சக்திகள் போராட வேண்டும் என்பதை கழகம் வலியுறுத்துகிறது.
10. இராணுவத்தில் லெப்டினன்ட் ஆகப் பணியாற்றிய கிறித்தவரான சாமுவேல் கமலேசன், குருத்துவாராவின் கருவறைக்குள் சென்று பூசை செய்ய மறுத்த காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், உச்சநீதிமன்றம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 25-ஆவது பிரிவை மறுக்கும் வகையில், இராணுவ நிர்வாகத்தின் நடவடிக்கையை ஆதரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை கழகம் கண்டிக்கிறது. மேலும், இத்தீர்ப்பானது, மோடியின் ஆட்சியில் இந்திய இராணுவம் இந்துத்துவமயமாகி வருவதையும் நீதித்துறை உள்ளிட்டு அரசின் அனைத்து உறுப்புகளும் காவிமயமாக்கப் பட்டிருப்பதையும் காட்டுகிறது.
11. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நாடகத் துறையைச் சார்ந்த மாணவர் புஷ்பராஜ் மாணவர்களிடையே தகராறில் ஈடுபட்டதாக அப்பட்டமாக பொய் குற்றஞ்சாட்டி கடந்த நான்கு மாதங்களாக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் புஷ்பராஜ் “சோமாயணம்” என்ற நாடகத்தை அரங்கேற்றினார். இது இராமாயணத்தை கொச்சைப்படுத்தியதாகக் கூறி ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. போராட்டத்தில் ஈடுபட்டது. ஏ.பி.வி.பி. குண்டர் படைக்கு ஆதரவாக புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர் புஷ்பராஜ் மீது தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வருகிறது. இதனை கழகம் கண்டிப்பதுடன் மாணவர் புஷ்பராஜ்ஜின் இடை நீக்கத்தை உடனடியாக இரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறது.
***
12. திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து , ஆர்.எஸ்.எஸ் – இந்து முன்னணி, இந்து மதவெறி கும்பல் கலவரம் நடத்தத் திட்டமிட்டு வருவதை மக்கள் அதிகாரக் கழகம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றது. கழகம் இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் பல்லாயிரக்கணக்கான வெளியீடுகளையும், துண்டறிக்கைகளையும் மக்களிடம் பரப்புரையாகக் கொண்டு சென்றது. கழகம் முன்கூட்டியே அறிவித்ததைப் போலவே, கார்த்திகை தீபத்தை முன்வைத்து, இந்து மதவெறி பாசிஸ்டுகள் நீதிமன்றத்தை பயன்படுத்தி சிக்கந்தர் தர்கா அருகில் உள்ள எல்லைக் கல்லில் தீபம் ஏற்ற உத்தரவு பெற்று கலவரம் நடத்தத் தயாராகினர்.
இதற்கெதிராக ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் எழுந்து நின்றது. தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. அரசு உறுதியாக இருந்ததன் விளைவாக தமிழ்நாட்டின் மதநல்லிணக்கப் பண்பாடும் பார்ப்பனிய எதிர்ப்பு பாரம்பரியமும் இப்போதைக்குத் தக்கவைக்கப்பட்டுள்ளது. ஆகவே, சங்கி கும்பலை மண்ணைக் கவ்வ வைத்த தமிழ்நாட்டு மக்களுக்கு கழக தலைமைக்குழு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
13. திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பானது, முந்தைய தீர்ப்புகளையும் நீதிபரிபாலனத்தையும் புறந்தள்ளி இந்து மதவெறியர்கள் தமிழ்நாட்டை கலவர பூமியாக்குவதற்கு அடித்தளமிட்டது. 15 நாட்களில் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியது; இரண்டு நாட்களில் இரு முறை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுத்தது; நீதிமன்ற பாதுகாப்பிற்கு இருக்கும் சி.ஐ.எஸ்.எஃப். படையை தீபம் ஏற்ற இந்து சங்கி ராம.ரவிக்குமாருக்கு பாதுகாப்பாக செல்ல உத்தரவிட்டது என தமிழ்நாட்டில் ஆளுநர் ரவி போன்று ஓர் இணையாட்சியை நடத்தும் முயற்சியில் ஜி.ஆர்.சுவாமிநாதன் ஈடுபட்டதை கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், நீதிமன்ற முன்தீர்ப்புகளை புறந்தள்ளி தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்பட்ட நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனை பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை கொண்டுவருவதற்கு 107 “இந்தியா” கூட்டணி எம்.பி-கள் ஆதரவளித்திருப்பதை கழகம் வரவேற்கிறது.
14. திருப்பரங்குன்றத்தில் கலவர முயற்சியில் ஈடுபட்ட இந்து முன்னணி – பா.ஜ.க கும்பலை கண்டிக்காத அடிமை கும்பலான அ.தி.மு.க, பிழைப்புவாத கட்சிகளான பா.ம.க., தே.மு.தி.க., த.வெ.க. ஆகியவற்றை கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாட்டுக்கு விரோதமான இக்கும்பல்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.
15. திருப்பரங்குன்றத்தை அடுத்து, திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ மண்டு கருப்பணசாமிக்கு காா்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளிக்கக்கோரி சங்கி கும்பல் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தது. இக்கோயிலின் முன்னுள்ள காலி இடத்தை பயன்படுத்துவது தொடா்பாக அங்குள்ள இந்து, கிறித்தவ மக்களிடையே கடந்த பல ஆண்டுகளாக சர்ச்சை நிலவி வருகிறது. இந்நிலையில், அந்த இடத்தில் தீபம் ஏற்ற சங்கிகளுக்கு ஆதரவாக நீதிமன்றம் அனுமதி அளித்தது பரபரப்பான சூழலை உருவாக்கியது. இதனையடுத்து அரசு அங்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து கலவரத்தை தூண்டுவதற்கு எத்தனித்துவரும் சங்கிக் கும்பலுக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பதைக் கழகம் வலியுறுத்துகிறது.
16. தூய்மைப் பணியை ராம்கி எனும் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு தாரைவார்ப்பதற்கு எதிராக நூறு நாட்களுக்கும் மேலாக உறுதியாக போராடிவரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை கழகத் தலைமைக் குழு ஆதரிப்பதுடன் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.
17. மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கெடு விதிக்கும் வகையில் உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இத்தீர்ப்பு குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சதித்தனமாக எழுப்பிய 14 கேள்விகளுக்கு பதிலளித்த நீதிபதி கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு நீதிமன்றம் காலகெடு விதிக்க முடியாது என்று கருத்துரையை வழங்கியுள்ளது. மாநில உரிமைகளுக்கு சவக்குழி வெட்டும் இக்கருத்துரையை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மேலும், பாசிசமயமாகிவரும் இந்த அரசுக் கட்டமைப்பையும் அரசியலமைப்பையும் பயன்படுத்தி மாநில உரிமைகள் உள்ளிட்ட எந்த உரிமையையும் நிலைநிறுத்த முடியாது என்பதையே இந்த உச்சநீதிமன்ற கருத்துரை தெளிவுப்படுத்துகிறது. எனவே, உரிமைகளை நிலைநாட்ட பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு என்ற மாற்றுக் கட்டமைப்பை அமைப்பதற்கான போராட்டங்களை மேற்கொள்வது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மக்கள் அதிகாரக் கழகம் தீர்க்கமாக முன்வைக்கிறது.
18. மதுரை மாவட்டம் மேலூர் அருகே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி முத்துராஜா என்பவர், கீரனூர் பகுதியில் உள்ள 190.74 ஏக்கர் பஞ்சமி நிலங்களை நிலமற்ற பட்டியல் சமூக மக்களுக்கு வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இதனை சகித்துக்கொள்ள முடியாமல் ஆதிக்க சாதி வெறிபிடித்த மிருகங்கள் முத்துராஜாவை கொடூரமாக தாக்கியுள்ளது. இதனை கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மேலும், தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தலித் மக்கள் மீது வன்முறைகள் அதிகரிக்கக் காரணமான, ஆதிக்கச் சாதிச் சங்கங்களைத் தடை செய்ய வேண்டும்; ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க-வை தடை செய்ய வேண்டும் என்று கழகம் வலியுறுத்துகிறது.
19. மதுராந்தகம் அருகே ஒன்றிய நெல் கொள்முதல் நிலையத்தில் ஐந்தாயிரம் நெல் மூட்டைகளும், விருத்தாச்சலத்தில் எருமனூர் நேரடி கொள்முதல் நிலையத்தில் பத்தாயிரம் நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து நாசமாகியுள்ளன. ஒன்றிய – மாநில அரசுகளின் அலட்சியத்தால் நெல் கொள்முதல் செய்யப்படாமல் மழையில் நனைந்து முளைத்து நாசமாவது தொடர்ந்து வருகிறது.
குறிப்பாக, கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை மோடி அரசு நிராகரித்துள்ளது. இதனை கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. விவசாயிகளின் கோரிக்கைகளை புறக்கணித்து அவர்களை விவசாயத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்; விவசாயத்துறையை கார்ப்பரேட்மயமாக்க வேண்டும் என்ற நோக்கத்திலிருந்தே ஒன்றிய – மாநில அரசுகள் இந்த விவசாய விரோதப் போக்கை கடைப்பிடித்து வருகின்றன.
20. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடமிருந்து பட்டம் பெற மறுத்த மாணவியின் பட்டத்தை ரத்துசெய்யக் கோரி வழக்கு பதியப்பட்டுள்ளது. இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பல்கலைக்கழக மாண்பைச் சீர்குலைக்கும் வகையில் யார் நடந்துகொண்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது. இதனை கழகம் கண்டிப்பதுடன் மாணவி மீதான வழக்கை இரத்து செய்ய வலியுறுத்துகிறது.
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram




