Sunday, May 4, 2025
முகப்புதலைப்புச் செய்திஸ்டெர்லைட் மூடப்பட்டதில் மகிழ்ச்சியே என்கிறார்கள் ஸ்டெர்லைட் தொழிலாளிகள் !

ஸ்டெர்லைட் மூடப்பட்டதில் மகிழ்ச்சியே என்கிறார்கள் ஸ்டெர்லைட் தொழிலாளிகள் !

தூத்துக்குடி மண்ணை விசமேற்றிய ஸ்டெர்லைட் ஆலையில் முந்தைய ஐந்து ஆண்டுகளில் (2006 – 2010), 20 மரணங்கள் நடந்திருக்கின்றன. படுகாயமுற்றோர், உடல் ஊனமுற்றோர் பலர். அனைத்தையும் பணபலத்தால் ஊற்றி மூடியுள்ளது வேதாந்தா நிறுவனம்.

-

”ஒரு கை இல்லாமல் வாழ்வதை விட இறப்பது எவ்வளவோ மேலானது” என்கிறார் தூத்துக்குடி புறநகர் பகுதியில் வசிக்கும் 34 வயது கார்த்தீபன். கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தத் தொழிலாளியான கார்த்தீபனின் கை, கன்வேயர் பெல்டில் சிக்கி நசுங்கியது.

கார்த்தீபன் : மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது (படம் : சுற்றுச் சூழல் தன்னார்வலர் நித்யானந்த் ஜெயராம்)

உடனடியாக அருகில் உள்ள ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கார்த்தீபன். கார்த்தீபனின் பாதிக்கப்பட்ட கையை வெட்டி எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. எவ்வளவு கொடுத்தாலும் ஈடு செய்யமுடியாத இழப்பை சந்தித்த கார்த்தீபனுக்கு, சட்டப்படி கொடுக்கவேண்டிய இழப்பீட்டுத் தொகையைக் கூட கொடுக்காமல் பிறகு வா, நாளை வா எனக் கூறி இழுத்தடித்துள்ளது ஸ்டெர்லைட் நிர்வாகம். இன்றுவரையில் இழப்பீட்டுத் தொகையை தரவில்லை.

ஸ்டெர்லைட்டைப் பொறுத்தவரையில் கார்த்தீபன் மட்டும் ஒரு விதிவிலக்கான உதாரணம் அல்ல. ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் அலட்சியத்தாலும், பாதுகாப்பற்ற பணிச்சூழலாலும் காயமடைந்து, உறுப்பிழந்து ஆலையால் கைவிடப்பட்ட பல தொழிலாளர்களுள் அவரும் ஒருவர்.

அப்பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் அதிசயகுமார், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக சட்ட உதவி செய்து வருகிறார். தகவலறியும் உரிமைச்சட்டத்தின்படி, கடந்த 2006 – 2010-ம் ஆண்டுகளுக்கிடையே ஸ்டெர்லைட் ஆலையில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் கேட்டு விண்ணப்பித்தார். அதில் கிடைத்த தகவல் அவருக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.

அந்த ஐந்தாண்டுகளில் மட்டும் ஆலையில் ஏற்பட்ட மரணங்களுக்காக சிப்காட் போலீசு நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை இருபது. ஒவ்வொரு வழக்கிலும் ’நடவடிக்கை கைவிடப்பட்டது’ என்ற குறிப்போடு வழக்கு இழுத்து மூடப்பட்டிருந்தது. ”ஒவ்வொரு வழக்கும், சட்ட நடைமுறைக்கு வெளியே பணம் கொடுத்து ’பஞ்சாயத்து’ செய்து முடிக்கப்பட்டுள்ளன” என்கிறார் அதிசயக்குமார்.

அதிசயகுமாரின் இந்த வாதத்தை உறுதிப்படுத்துகிறார், அப்பகுதியில் பணிபுரிந்த முன்னாள் ஆலை கண்காணிப்பாளரான பாக்கியராஜ். ’ஸ்டெர்லைட் நிறுவனத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள் வந்து உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்களுடன் பேரம் பேசி பணத்தைக் குறைத்து இறுதியில் ஒரு தொகையை அவர்கள் கையில் கொடுத்து கணக்கை முடித்துவிடுவார்கள்” என்கிறார் பாக்கியராஜ்.

அவர் மேலும் கூறுகையில், ”ஸ்டெர்லைட் தமது பாதுகாப்பற்ற பணிச் சூழலில் வேலை செய்ய வட இந்தியத் தொழிலாளர்களைப் பெருமளவில் உபயோகித்திருக்கிறது. அவர்கள்தான் மோசமான பணிச்சூழலில் ஏற்படும் விபத்துகளால் பணிக்கு உபயோகமற்றவர்களாகும் போது எளிதில் தூக்கியெறிவதற்கு வசதியாக இருக்கின்றனர். அவர்களால் தமக்குப் பிரச்சினை குறைவு எனக் கருதுகிறது ஸ்டெர்லைட் நிர்வாகம்” என்கிறார்

பீகாரைச் சேர்ந்த 25 வயதேயான மாதவ் ஸ்டெர்லைட்டில் பணிபுரிந்து வந்தார். ஆலை விபத்தில் அவரது கையை இழந்தார். ஆனால் அவருக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டை நிர்வாகம் தராமல் இழுத்தடித்தது. அதன் காரணமாக வெறுத்துப் போய் தனது சொந்த ஊருக்கே திரும்பினார். “இங்கு வந்த பின் எனது வாழ்க்கையே வீழ்ந்து விட்டது. பணமின்றி எனது ஊருக்குச் செல்கிறேன். இந்த வீடியோ சேர வேண்டிய மக்களுக்குச் சேரும் என நம்புகிறேன்” என ஊருக்குச் செல்லும் முன் மனம் நொந்து ஒரு வீடியோ பதிவிட்டுச் சென்றுள்ளார்.

ஜாம்பியாவில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வேதாந்தாவின் சுரங்கத்தைக் கண்டித்து இங்கிலாந்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

ஸ்டெர்லைட்டின் தாய் நிறுவனமான வேதாந்தாவின் இத்தகைய மனிதத்தன்மையற்ற செயல்களுக்காக, இந்நிறுவனத்திற்கு பல அமைப்புகள் பல்வேறு வகைகளில் தங்களது கண்டனத்தைத் தெரிவித்திருக்கின்றன.

கடந்த 2007-ம் ஆண்டே, நார்வே நாட்டின் மக்களின் ஓய்வூதியப் பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான அரசு அமைப்பான ”நார்வே தொழில் அறத்திற்கான கவுன்சில்”, வேதாந்தா நிறுவனத்தை தனது கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. ”நார்வே அரசு ஓய்வூதிய நிதியத்திற்கு” வேதாந்தா நிறுவனத்திலிருந்து தமது பங்குகளை விலக்கிக் கொள்ளுமாறும், இனி வேறெந்த பங்குகளையும் வேதாந்தா நிறுவனத்தில் வாங்கக் கூடாது என்றும் பரிந்துரைத்தது.

மனித உரிமைகள் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, தொழிலாளர் பாதுகாப்பு முதலானவற்றை செயல்முறைப்படுத்துவதற்கான நெறிமுறைகளை வேதாந்தா நிறுவனம் மீறியதற்காக இந்த நடவடிக்கையை எடுப்பதாக தெரிவித்தது.

நார்வேயின் இம்முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கடந்த 2015-ம் மற்றும் 2016-ம் ஆண்டில் வேதாந்தா நிறுவனம் கோரியது. அதற்கு பதிலளித்த நார்வே தொழில் அறத்திற்கான கவுன்சில், 2016-ம் ஆண்டில் வேதாந்தாவின் நடவடிக்கைகளை ஆய்வு செய்ததில், தடையை விலக்குவதற்கான எவ்வித முகாந்திரமும் இல்லை என்றும் தடை தொடரும் என்றும் தெரிவித்தது.

நியமகிரியைக் கொள்ளையடிக்கும் வேதாந்தாவை கண்டித்து சமூக ஆர்வலர்களின் போராட்டம்

தற்போது தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையின் காரணமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருக்கின்ற நிலையில், சுமார் 3,500 பேர் நேரடியாக பணியிழக்க நேரிடும். இந்த ஆலையைச் சார்ந்து இயங்கும் பிற நிறுவனங்களும் அதன் பணியாளர்களும் இதனால் பாதிப்படையலாம்.

கார்த்தீபனின் மனைவியும் ஸ்டெர்லைட் ஆலையில் பணி புரிந்து வந்தார். தற்போதைய சூழலில் அவரும் பணியிழந்துள்ளார். இவரைப் போன்றே தங்களது வேலையை இழந்த மற்றும் வேலையிலிருந்து வெளியேறிய தொழிலாளர்களும் இருக்கின்றனர்.

பண்டாரம்பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி அவ்வாறு வேலையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒருவர். ”நானும் எனது வேலையை இழந்துவிட்டேன். அதனால் என்ன? இந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்திற்காக பலரும் தமது வாழ்க்கையை இழந்துள்ளனர். அதை ஒப்பிடும்போது, எனக்கு இதெல்லாம் பெரிய விசயமில்லை” என்கிறார் முத்துப்பாண்டி.

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்திற்கு சில நாட்களுக்கு முன்னர், அதற்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு தெரிவித்து ஆட்சியருக்குக் கடிதம் கொடுக்க தொழிலாளர்களிடம் கையெழுத்து கேட்டது நிர்வாகம். கையெழுத்திட மறுத்துள்ளார் முத்துப்பாண்டி.

”இந்த ஆலை பணிபுரியும் எங்களுக்கு பாதுகாப்பற்றதாக இருக்கிறது என்பது எங்கள் அனைவருக்குமே தெரியும். எனது மனசாட்சிப்படி பார்த்தால் நான் சுவாசிக்கும் காற்றை மாசுபடுத்தும் அதே நிறுவனத்தில்தான் நான் வேலை பார்க்கிறேன். எனது வருங்கால சந்ததியினருக்கு ஆரோக்கியம் கிடைக்குமெனில் இந்த நிறுவனத்தை மூடுவது எனக்கு பிரச்சினையே இல்லை” என்று கூறுகிறார் முத்துப்பாண்டி.

ஸ்டெர்லைட்டில் பணிபுரிந்து வந்த மாலதி ஸ்டெர்லைட் ஆலை குறித்துக் கூறுகையில், ” எப்படியும் வேலை மீண்டும் கிடைத்துவிடும். இப்படி சீல் வைப்பதும், கதவடைப்பதும் தற்காலிகமானதுதான்” என்கிறார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அமைதியடைந்து உடலை வாங்கிச் செல்வதற்காகவே தற்போது தற்காலிகமாக ஆலையை மூடியிருக்கிறது மாநில அரசாங்கம் என்பதைத் தெளிவாகக் கூறுகிறார் மாலதி.   .

ஸ்டெர்லைட்டில் பணிபுரிந்த மற்றொரு தொழிலாளியான மேரி, ”ஆலை அடுத்தடுத்து மூடப்பட்டும் திறக்கப்பட்டும் கொண்டிருக்கிறது. எதற்காக இப்படி செய்கிறார்கள் என்றே புரியவில்லை? இந்த அரசாங்கத்தை நாங்கள் நம்பவில்லை. போலீசையும் நாங்கள் நம்பமாட்டோம். அனில் அகர்வாலால் எங்கள் வலியைப் போக்க முடியாது. நாங்கள் எங்கே போவோம்?” என்கிறார்.

நன்றி: தி வயர், திவ்யா கார்த்திகேயன்.
தமிழாக்கம்: வினவு செய்திப் பிரிவு
மூலக்கட்டுரை:Sterlite Workers: ‘Anil Agarwal Can’t Undo Our Pain. Where Do We Go From Here?’