privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புதலைப்புச் செய்திசிறு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளன் – 27 ஆண்டுகள் சிறையில் !

சிறு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளன் – 27 ஆண்டுகள் சிறையில் !

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டு 27 வருடங்கள் ஓடிவிட்டன. இந்த அநீதியின் வரலாற்றை தொகுத்துக் கூறும் கட்டுரை!

-

பேரறிவாளன் : தாமதத்தின் வலி மரணத்தை விட கொடூரமானது !

இராஜீவ் கொலை வழக்கில் “சிறு விசாரணை” என்று பேரறிவாளன் அழைத்து செல்லப்பட்டு இன்றோடு 27 ஆண்டுகள் முடிந்து விட்டன

  புதிய வாழ்க்கை சும்மா கிடைத்து விடாது அதற்குரிய விலையை அவன் கொடுத்தாக வேண்டும் மேலும் அது பெரும் உற்சாகத்தையும், பெரும் துன்பத்தையும் அவனுக்குத் தரும் என்று அவனுக்குத் தெரியாது ஆனால் ஒரு புதிய வாழ்க்கையின் துவக்கம் அது – படிப்படியாக புத்தாக்கமடையும் மனிதனைப் பற்றிய கதை, அவன் தன்னுடைய வாழ்க்கையை மறுவார்ப்பு செய்யும் கதை, ஓர் உலகிலிருந்து மறு உலகிற்கு செல்லும் அறிமுகமில்லா புதிய வாழ்க்கைக்கான அவனது துவக்கம் அது. புதிய கதை ஒன்றின் விசயமாக அது இருக்கலாம். ஆனால் தற்போதைய கதை முடிவுக்கு வந்துவிட்டது.

– ஃபியோடார் தஸ்தோவ்ஸ்கி, குற்றமும் தண்டனையும். 

ராஜீவ் கொலை வழக்கில் ’சிறு விசாரணை’ என்று பேரறிவாளன் அழைத்து செல்லப்பட்டு இன்றோடு 27 ஆண்டுகள் முடிந்து விட்டன. இரண்டு சிறிய 9 வோல்ட் மின்கலங்கள் வாங்கிக் கொடுத்ததற்காக அவருக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகின்றன. இந்தியக் குடியரசுத் தலைவரால் அவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகின்றன. பேரறிவாளனின் வாக்குமூலத்தை வெட்டி ஒட்டியதற்காக அவ்வழக்கின் விசாரணை அதிகாரி தியாகராஜன் மன்னிப்பு கேட்டு 5 ஆண்டுகள் ஆகின்றன. மரண தண்டனையை குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 4 ஆண்டுகள் ஆகின்றன.

பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரையும் விடுவிக்க தமிழக சட்ட அவை முடிவெடுத்திருப்பதாக ஜெயலலிதா கூறி 4 ஆண்டுகள் ஆகின்றன. “அடுத்த மூன்று நாட்களில் மைய அரசு பதிலளிக்கவில்லை எனில் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள்” என்று அப்போது அவர் கூறினார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க மைய அரசிற்கு அதிக அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் கூறி 3 ஆண்டுகள் ஆகின்றன. பல்நோக்கு ஒழுங்குமுறை கண்காணிப்பகம் சரியாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டி வழக்கு விசாரணையை கண்காணிக்க வேண்டும் என்று பேரறிவாளன் முறையிட்டு 7 ஆண்டுகள் ஆகி விட்டன. வழக்கின் மறு விசாரணை அறிக்கையை அளிக்க சி.பி.ஐக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டு ஓராண்டாகிறது.

இராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் தங்களது தந்தையைக் கொலை செய்த அனைவரையும் மன்னித்து விட்டதாக கூறி மூன்று மாதங்கள் ஆகின்றன. மைய அரசும் விரும்பினால் அனைவரையும் விடுதலை செய்ய தயார் என்று தமிழக அரசு கூறியும் ஒரு மாதம் ஆகிறது. இந்த வழக்கு நீண்ட காலத்திற்கு முன்பே தர்க்க ரீதியாக முடிந்திருக்க வேண்டும். ஆயினும், இத்தனை ஆண்டுகள், மாதங்கள், நாட்கள், நொடிகள் என இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஒரு மிகப் பெரிய பத்தியைப் படிக்க நமக்கு எவ்வளவு சிரமமாக இருக்கும்? அதே போல கடந்த 27 ஆண்டுகளாக பேரறிவாளன் சந்தித்த பயங்கரம் எப்படி இருந்திருக்கும் என்பதைப் பற்றியும் ஒரு கணமாவது சிந்திப்போமா? 27 ஆண்டுகளாக மிகப்பெரிய சிலந்தி வலையொன்றில் சிக்கிக்கொண்ட சிறிய பூச்சியாக அவர் இருக்கிறார்.

80 மற்றும் 90 களில் ஒட்டுமொத்த தமிழகமும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்தது. அன்று பல இளைஞர்களுக்கு பிரபாகரன் ஒரு நாயகன். விடுதலைப்புலிகள் தமிழகம் வருவதும் அவர்களது ஆதரவாளர்களின் இடங்களில் தங்குவதும் இயல்பாக இருந்தது. அன்றைய அரசியல் சூழலில் திராவிட இயக்கங்கள் விடுதலைப்புலிகளிடம் நெருக்கமான தொடர்பில் இருந்தன. பேரறிவாளனின் பகுத்தறிவு குடும்பமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஏனெனில் அன்றைய சூழலில் இந்த சார்பு நிலை இயல்பிற்கு முரணானதாக இல்லை. இருப்பினும் அந்த பயங்கரமான சம்பவம் எந்த அரசியல் பின்னணியும்  செல்வாக்கும் இல்லாத ஒரு சாமானிய இளைஞனான பேரறிவாளனின் வாழ்க்கையை பயங்கரமாக தாக்கியது.

தவறான விசாரணை

இராஜீவ்காந்தி

1991 ஆம் ஆண்டு மே 21 அன்று இராஜீவ் காந்தியின் படுகொலை சர்வதேச சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நாட்டின் பாதுகாப்புக் குறித்து சந்தேகங்களைத் தோற்றுவித்த நிலையில் அதை உறுதிப்படுத்த பல கைது நடவடிக்கைகள் செய்யப்பட்டன. சமூகத்தின் கூட்டு மனசாட்சியின் பயத்தை தணிக்க எப்படியாவது கைது செய்யப்பட வேண்டும் என்ற நிலையில் மைய புலனாய்வு அதிகாரிகள் புலிகளின் ஆதரவாளர்களை இலக்காகக் கொண்டனர். சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களிடையே பேரறிவாளனும் இருந்தார். அப்போது அவர் மின்னணு மற்றும் தகவல்தொடர்பு டிப்ளமா பட்டப்படிப்பை முடித்து உயர் கல்வியை தொடர சென்னையில் உள்ள திராவிடர் கழக தலைமையகமான பெரியார் திடலில் தங்கியிருந்தார். ஒரு சிறிய விசாரணைதான் என்று சி.பி.ஐ கூறிய போது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவரது பெற்றோர்களான அற்புதம் அம்மாளும் குயில்தாசனும் அவரை அனுப்பி வைத்தனர். இது நடந்தது ஜூன் 11, 1991. இன்றோடு இரண்டு ஆயுள் தண்டனைகளுக்கு சமமான காலத்தினை சிறையில் அவர் கழித்துள்ளார்.

நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்த பின்னர் அவர்களில் 41 பேரின் மீது பூந்தமல்லியில் பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. இந்த அரசியல் படுகொலைக்கு முழுக்க விடுதலைப் புலிகள்தான் காரணம் என்று சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட சிலர் தலைமறைவாகிவிட்டனர். வழக்கு தொடங்கும் முன்பே குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேர்கள் இறந்துவிட மீதி இருந்த 26  பேர்களுக்கு 1998-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ம் தேதி மரண தண்டனை விதித்து, விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிவராசனுக்கு மின்கலங்கள் (பேட்டரி) வாங்கிக் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு பேரறிவாளனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. முதன்மையாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலைமறைவாகிவிட நிகழ்வுக்கு நேரடியாக தொடர்பில்லாத அப்பாவிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணையை அடிப்படையாக கொண்டால் இந்தியாவின் பாதி மக்கள் சிறையில் தான் இருக்க நேரிடும்.

இன்றுவரை வழக்கு அதன் உண்மையான குற்றவாளிகளை நோக்கி ஒரு அங்குலம் கூட நகரவில்லை. தானு வெடிக்கச் செய்த அந்த வெடிக்குண்டினைத் தயாரித்த நபர் யார் என்று கண்டறிய முடியவில்லை என்று 2005-ம் ஆண்டு ஜூலை 31 ம் தேதி ஜூனியர் விகடனுக்கும் அதே ஆண்டு ஆகஸ்டு 10-ம் தேதி குமுதத்திற்கும் அளித்த பேட்டியில் புலனாய்வு குழுவிற்கு தலைமை வகித்த கே.இரகோத்தமன் ஒப்புக்கொண்டார். ஆனால் இத்தோல்வியை ஒப்புக்கொள்ள இந்த அரசு இன்னும் மறுக்கிறது.

வி.தியாகராஜன்

சிவராசனுக்கு மின்கலங்கள் வாங்கிக்கொடுத்ததை ஒப்புக்கொண்ட பேரறிவாளன், அதன் பயன்பாடு குறித்தும் இராஜிவ் காந்தியின் படுகொலை குறித்தும் தனக்கு ஏதும் தெரியாது என்று அந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.  பேரறிவாளனின் வாக்குமூலத்தில் ஒரு பாதியை மட்டுமே பதிவு செய்ததாகவும் மீதியை விட்டுவிட்டதாகவும் புலனாய்வு அதிகாரியான தியாகராஜன் உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

பேரறிவாளனின் பங்கு குறித்து சி.பி.ஐ-க்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால் சதியில் அவருக்கு தொடர்பில்லை என்பது இராஜீவ் கொலை விசாரணையின் அடுத்தடுத்த கட்டங்களில் உறுதியானது என்று தியாகராஜன் கூறியதாக ’தி ஹிந்து’ பத்திரிகை தெரிவித்தது. சுபா, தாணு மற்றும் தன்னைத் தவிர வேறு யாருக்கும் இந்த விஷயம் தெரியாது என்று 1991-ம் ஆண்டு மே 7-ம் தேதி புலிகளின் முக்கிய பொறுப்பில் இருந்த பொட்டு அம்மனுக்கு சிவராசன் அனுப்பிய தந்தித் தகவலை சான்றாக அவர் கூறினார். வெறுமனே மின்கலங்களை வாங்கிக் கொடுத்தது இராஜீவ் கொலை சதிக்குற்றத்தில் ஈடுபட்டதாக ஆகாது என்று அவர் மேலும் கூறியிருந்தார். சதியில் பேரறிவாளனுக்கு தொடர்பில்லை என்பதற்கு அந்த தந்தியே சாட்சியாக இருக்கிறது.

பணியிலிருந்து ஓய்வு பெற்று நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் பேரறிவாளனுக்காக தியாகராஜன் அளித்த வாக்குமூலத்தை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. இது ஆச்சரியமாக இருக்கிறது. இன்னும் முடியாமல் இருக்கும் ஒரு வழக்கைப் பொறுத்தமட்டில் புலனாய்வு செய்த அதிகாரியின் வாக்குமூலம் இன்னும் ஏற்கத்தக்கதே. அவர் அலுவலகத்தில் இருக்கிறாரா அல்லது ஓய்வு பெற்று விட்டாரா என்பது தேவையில்லாத விடயம். இரண்டு பத்தாண்டுகளாக பல்வேறு கட்டங்களில் இழுத்துக்கொண்டிருக்கும் இந்த வழக்கில் தியாகராஜனின் வாக்குமூலத்தை நிராகரிப்பது முறையல்ல என்கின்றனர் இந்த வழக்கினை தொடர்ந்து கவனித்து வருபவர்கள்.

மரண தண்டனை வழங்கிய நீதிபதி, எழுதிய கடிதம்

இந்த சி.பி.ஐ வழக்கு விசாரணை இந்தியக் குற்றவியல் நீதி முறையின் மன்னிக்க முடியாத ஒரு குறைபாட்டை வெளிப்படுத்திருப்பதாக பேரறிவாளன் உள்ளிட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவரான கே.டி.ஜோசப் 2017-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி சோனியா காந்திக்கு எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

“தங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியை ஏற்கனவே சிறையில் கழித்துவிட்டதால் அவர்களை மன்னித்து விடுகிறோம் என்று நீங்கள் ஜனாதிபதிக்கு எழுதினால் மைய அரசு அதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளக்கூடும். இந்த மனிதாபிமான உதவியை உங்களால் செய்ய முடியும் என்று எனக்குப் படுகிறது. இவர்களுக்குத் தீர்ப்பளித்தவன் என்ற முறையில் இதை உங்களிடம் கண்டிப்பாக தெரிவித்தால்தான் உங்களது கருணையைக் காட்ட முடியும் என்று நான் நினைக்கிறேன்” என்று அக்கடிதம் கூறியது. காந்தி கொலை வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குப் பிறகு முதன்மை குற்றவாளியான நாதுராம் கோட்சேவின் உடன் பிறந்தவரான கோபால் கோட்ஸே, 1964-ம் ஆண்டு மைய அரசினால் விடுதலை செய்யப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். பேரறிவாளனை விடுதலை செய்ய குரல் கொடுத்தவர்களில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான வி.கே. கிருஷ்ணய்யரும் ஒருவர்.

விசாரணை அதிகாரி, ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்த அதிகாரி மற்றும் மரண தண்டனை வழங்கிய நீதிபதி என அதில் ஈடுபட்ட அனைவராலும் இந்த வழக்கு விசாரணையின் தன்மை குறித்து தீவிரமான சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் அவர்களை மன்னிப்பதற்கு முன் வந்துள்ளனர். அவர்களை விடுதலை செய்வது குறித்து மைய அரசு இன்னமும் தயக்கம் காட்டினால் சமாதானமாக இன்னும் வேறு யாரை எதிர்பார்க்கிறது?

வாழ்நாள் சிறை

அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் குடிமை சமுதாயம் என அனைவரும் தங்களது பொறுப்புணர்வை வெளிப்படுத்தியிருந்த போதிலும் நிறுவனரீதியான அநீதிக்கு எதிரான இந்த போராட்டத்தை தனியே நடத்திக் கொண்டிருப்பவர் பேரறிவாளன்.

சிறையில் மின்சார அதிர்ச்சி உள்ளிட்ட எல்லாவகை சித்தரவதைக்கும் அவர் ஆளானார். எந்த மனிதனும் தனிமைச் சிறையில் இருக்கும் போது அனைத்து நம்பிக்கையும் இழப்பது இயல்பு. ஆனால் பேரறிவாளன் சிறையிலேயே பி.சி.ஏ, எம்.சி.ஏ பட்ட படிப்புகள் மற்றும் ஐந்து சான்றிதழ் படிப்புகளையும் முடித்துள்ளார். சிறை நூலக பராமரிப்பிலிருந்து கைதிகளுக்கு உதவி செய்வது வரை நீண்ட போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார். மேலும் இந்த வழக்கில் தன்னுடைய குற்றமின்மையை வாதிடுவதற்காக “தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்” என்ற நூலினையும் எழுதியிருக்கிறார்.

2011-ம் ஆண்டு தூக்குத்தண்டனை முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் பேரறிவாளன் மற்றும் சிலர் அதை நிறுத்துவதற்கு உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்கள். இராம் ஜெத்மலானியும் கொலின் கோன்சால்சும் அவர்களுக்காக வாதிட்டனர். தூக்குத்தண்டனை நிறுத்தப்பட்டதுடன் உச்சநீதிமன்றம் அதை ஆயுள் தண்டனையாக மாற்றியது. ஜெயலலிதா மாநில அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏழு கைதிகளையும் விடுதலை செய்யப் போவதாய் அறிவித்தவுடன் மாநில மற்றும் மைய அரசுகளின் அதிகாரத்தைப் பற்றிய பரவலான விவாதத்திற்கு அது வித்திட்டது. மைய அரசின் இணக்கம் இதற்கு அவசியம் என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. இன்று அது மூன்று நபர் கொண்ட நீதிமன்ற அமர்வு முன்பு நிலுவையில் இருக்கிறது.

1999-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு இந்த படுகொலையில் வெளிநாட்டு சதி பற்றி ஆய்வு நடத்த பல்நோக்கு ஒழுங்குமுறை கண்காணிப்பு ஆணையத்திற்கு சென்னை தடா நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. ஆனால் அதன் பிறகு கண்காணிப்பு ஆணையம் தொடர்ச்சியாக அனுப்பிய ஆவணங்களை தடா நீதிமன்றம் கண்டு கொள்ளவேயில்லை. அந்த ஆவணங்களைப் பிரித்துப் பார்க்க வேண்டி பேரறிவாளன் நீதிமன்றத்தை அணுகிய போதும் அது மறுத்துவிட்டது. கண்காணிப்பு ஆணையத்தின் ஆய்வைத் தொடர வேண்டி, சென்னை உயர்நீதிமன்றத்தை பேரறிவாளன் அணுகிய போதும் இது தடா நீதிமன்றம் சம்மந்தப்பட்டிருப்பதால் உச்சநீதிமன்றம் தான் இதில் தலையிட முடியும் என்று நீதிபதி மாலா மறுத்துவிட்டார். இது 2016-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் காதுகளுக்கு எட்டிய போது கால தாமதம் குறித்த ஆச்சரியத்தை வெளிப்படுத்திய நீதிபதி இரஞ்சன் கோகோய் உடனடியாக அந்த ஆவணங்களைக் கேட்டார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கும் அதே வேளையில் தண்டனையை நீக்கக்கோரியும் உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் விண்ணப்பம் ஒன்றை பேரறிவாளன் தாக்கல் செய்தார்.

மும்பை குண்டுவெடிப்புக் குற்றவாளி சஞ்சய் தத்

இந்த இடைப்பட்ட காலத்தில் 1993 ம் ஆண்டு நடந்த மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய்தத் நன்னடத்தை காரணமாக முன்னதாகவே விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் சஞ்சய்தத் விடுதலை செய்யப்பட்டதன் அடிப்படை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள புனேவின் எர்வாடா சிறை நிர்வாகத்திற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார் பேரறிவாளன். எந்த பதிலும் இல்லாததால் மாநில தகவல் ஆணையத்திடம் விண்ணப்பித்தார். ஆனால் அங்கும் இதுவரை பதிலில்லை.

257 பேரை பலி கொண்ட மும்பை தொடர் குண்டு வெடிப்புகளில் முறை கேடாக ஆயுதங்களை வாங்கி கொடுத்ததற்காக 1993-ம் ஆண்டில் சஞ்சய்தத் கைது செய்யப்பட்டார். மும்பை தடா நீதிமன்றம் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. மைய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட ஆயுதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட சஞ்சய் தத்திற்கு பரோலும் தண்டனைக் குறைப்பும் விடுதலையும் கிடைத்தது. மைய அரசின் ஒப்புதல் தேவைப்பட வேண்டிய இந்த வழக்கில் மாநில அரசு தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி சஞ்சய் தத்தை விடுவித்தது. பேரறிவாளனின் கேள்வியும் அதுதான்: மாநில அதிகார வரம்பில் வரும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன் கீழ் அவரது வழக்கு இருக்கையில், மைய அரசு ஏன் கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதிக்கிறது?

நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் தொடர்ந்து தன்னுடைய அவலநிலை குறித்த கவன ஈர்ப்பை பேரறிவாளன் பெற்றிருக்கிறார். பொதுவாக, கொடூரமான கொலைக் குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலல்லாமல் பேரறிவாளன் தமிழகம் முழுவதும் அறியப்பட்டவராகி விட்டார். சிறு விசாரணை என்று அவரை காவல்துறை அழைத்து சென்றபோது அவருக்கு வயது வெறும் 19. நோயுற்ற தனது தந்தையை முதன்முறையாக பரோலில் பார்க்க வந்தபோது அவரின் வயதோ 46.

பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள்

பேரறிவாளனின் பெற்றோர் குறிப்பாக அவரது தாயார் அற்புதம் அம்மாள் தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் தன்னுடைய மகனின் விடுதலைக்காகவும் மரண தண்டனையை ஒழிக்கவும் போராடியிருக்கிறார். அவரது மகன் கைது செய்யப்பட்டவுடன் புலனாய்வு அலுவலகத்திற்கு நடக்கத் தொடங்கியதிலிருந்து இன்றுவரை அவர் ஓயவில்லை. தன்னுடைய மகனின் அறிவுரைகளை சுமக்கும் அவர் ஒருவாரம் கூட தன்னுடைய மகனை சந்திக்காமல் இருந்ததில்லை. மரண தண்டனையை ஒழிக்க தமிழகத்தில் எழுப்பப்படும் குரல் என்று ஒன்று இருந்தால் அது அற்புதம் அம்மாளின் குரல் மட்டுமே. 27 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு வேறு என்ன வேண்டும் என்று அவர் வினவுகிறார்.

மரண தண்டனையை விட தாமதப்படுத்தப்படும் நீதி மிகவும் கொடூரமான தண்டனை. விசாரணையின் வலுவற்ற தன்மை ஏற்படுத்தும் தாமதத்தின் வலி, கொல்லப்படுவதை விட கொடூரமானது. 27 ஆண்டுகள் போதாதா? பேரறிவாளனின் வாழ்க்கை விளையாட்டாய் போய்விட்டதா? இருட்டுச்சிறையில் ஒரு மனிதன் சாவதை நீதி என்று எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?  இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பின்தங்கிய சமூகப் பொருளாதாரப் பின்னணி கொண்டவர்கள் என்று முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதியிருக்கிறார். இந்தியாவின் சிறைகளில் நியாயமான விசரணையின்றி வாடும் ஆயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களின் சின்னம்தான் பேரறிவாளன்.

சஞ்சய் தத் விடுவிக்கப்படுகிறார் பேரறிவாளன் தண்டிக்கப்படுகிறார் எனில் சமூகத்தின் கூட்டு மனசாட்சி உயர் சாதி மற்றும் மேல்தட்டு வர்க்கத்தின் பால்தான் இரக்கங்கொள்கிறது. பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட நீதியானது இந்திய அரசு, புலனாய்வு நிறுவனங்கள் மற்றும் நீதிமன்றங்களின் மீது படிந்துள்ள ஒரு கறை. பேரறிவாளனை விடுதலை செய்வதன் மூலம் மட்டுமே இந்த வரலாற்றுப் பிழையை சரி செய்ய முடியும்.

நான் மீண்டும் உங்களை தஸ்தோவ்ஸ்கியிடம் அழைத்துச்செல்கிறேன். புதிய வாழ்க்கை ஒன்றை அமைத்துக்கொள்ள பேரறிவாளன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். சமூகம் இதை உறுதி செய்யாவிடில் சமூகம் என்று அழைக்கப்படும் உரிமையை அது இழக்கிறது.

நன்றி – தி வயர் இணையதளத்தில் ஜெயராணி அவர்கள் எழுதிய கட்டுரை
தமிழாக்கம்: வினவு செய்திப் பிரிவு