privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரபுகைப்படக் கட்டுரைபுறாக்களுக்கு ஒரு சேட்டு இருக்கிறார் - கோவிந்தசாமிக்கு ஒரு பெட்டிக்கடை இருக்கிறது !

புறாக்களுக்கு ஒரு சேட்டு இருக்கிறார் – கோவிந்தசாமிக்கு ஒரு பெட்டிக்கடை இருக்கிறது !

ஒரு கடற்கரை. இரு காட்சிகள். இது துருவ வாழ்க்கைகள். அஃறிணையும், உயர்திணையும் கருணையும், அவலமும் இடம் பொருள் ஏவல் மாறுகின்றன!

-

சென்னை மெரினா கடற்கரையின் காலை நேரம், மழைச்சாரலின் குளிர்ந்த காற்று. எதிரே நூற்றுக்கணக்கான புறாக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. ஒரு சிறு பையை தரையில் விரித்து, பத்மாசனத்தில் இரு கைகளையும் விரைப்பாக நீட்டி வயிறு குலுங்க மூச்சுப் பயிற்சி செய்து கொண்டிருக்கிறார், 70 வயது மதிக்கத்தக்க உக்கம்ராஜ் ஜெயின்.

உக்கம்ராஜ் ஜெயின்

அருகில் வரலாமா என்ற சைகை மொழி காட்டி மெல்ல அடிவைத்துச் செல்கிறோம். ஆனாலும், பறவைகள் படபடத்தன. “மெதுவா வா சார்” என்று கண்டிக்கிறார்.

“இவன் வெறும் க்ரெய்ன்ஸ் (தானியங்கள்) மட்டுமே சாப்டும், ரொம்ப நல்லவன். அதுவும் ஒரு ஜீவன்தானே. அதான் ராகி, கோதுமை, கம்புன்னு டெய்லி 4 கிலோ கொண்டு வருவேன். இப்ப நீ பாக்குறது கம்மி சார். பத்தாயிரத்துக்கும் மேல வருவான். காலையில அஞ்சரை மணிக்கல்லாம் வந்து பாரு.

விரும்புறவங்க யார்னாலும் வாங்கி போடலாம். பக்கத்துல இருக்குற பெட்டிக்கடையில நெறைய மூட்டை கொடுத்து வச்சிருக்கேன். அவங்காளல முடிஞ்ச டொனேசன் கொடுத்து தானியம் வாங்கிக்குவாங்க. அதுக்கு ரெசிப்ட்கூட கொடுத்துடுவோம். இது எனக்கு ஆத்ம திருப்தியை கொடுக்குது.

சௌகார்பேட்டையில தாமஸ் குக் (சர்வதேச சுற்றுலா நிறுவனம்), பிரான்சசைஸ் ( கிளை உரிமம்) எடுத்து டூர்ஸ் & டிராவல்ஸ் வச்சிருக்கோம். இப்ப என்னால கம்பெனிய பாக்க முடியாது, சன்னுதான் பாக்குறார். ஆண்டவன் அருளால என்னால் முடிஞ்சத இந்த வாயில்லா ஜீவராசிகளுக்கு செஞ்சிகிட்டிருக்கேன்.

பாவம் அவனுக்கு யாரு சாப்பாடு போடும்?” என்றார் அந்த பறவை அபிமானி.

*****

புறாக்களுக்காக கருணை உள்ளத்தோடு கடமையாற்றும் உக்கம்ராஜ் ஜெயின் இருந்த இடத்திற்கு சற்று அருகே ஒரு மனிதர். அந்த முதியவரின் முகத்தில் ஓராயிரம் கதைகள் முகச் சுருக்கமாக வரி வரியாக காட்சியளிக்கின்றன.

கோவிந்தசாமி

“பத்து வருஷத்துக்கு முன்னாடியே போயிருக்க வேண்டிய உசுரு இது. நிம்மதியா போயி சேர மாட்டோமான்னு காத்துகிட்டிருக்கேன்” என்கிறார் மெரினா கடற்கரையில் பெட்டிக்கடை நடத்தும் 80 வயது முதியவர் கோவிந்தசாமி.

இருபது தண்ணீர் பாட்டில்கள், இருபது கூல்டிரிங்க்ஸ் பாட்டில்கள், ஒன்றிரண்டு சாக்லெட் டப்பாக்கள், கொஞ்சம் பீடி, சிகரெட்டுகள்… – இதுதான் கோவிந்தசாமியின் கடையை நிரப்பியிருக்கும் மொத்தப் பொருட்கள். காலை 7 மணிக்கு திறக்கும் கடையை மாலை 5 மணிக்கு மூடுகிறார்.

“பத்து வருஷமா இந்த கடையை நடத்திகிட்டிருக்கேன். இந்த பெட்டி அடிச்சது மட்டும்தான் என்னோட காசு, இருக்குற சரக்கெல்லாம் கம்பெனியிலிருந்து போடுவாங்க, வித்தபெறகு காசு வாங்கிப் போவாங்க. ஒரு நாளைக்கு 200, 300 ரூபா கெடைக்கும். அதுலதான் என்னோட வாழ்க்கையும் ஓடிக்கிட்டிருக்கு.

புள்ள கார்ப்பரேஷன்ல வேலை செஞ்சிகிட்டிருக்கான். தனிக்குடித்தனம் போயிட்டான். கடைப்பக்கம் எட்டியே பாக்க மாட்டான். பேரன்தான் எப்போதாவது சாயந்திரத்துல கடையைப் பாத்துக்க வருவான். எனக்கு ஓய்வும் வாழ்வும் இந்தக் கடைதான்.

கடை வக்கிறதுக்கு முன்னே, மீனு புடிக்கிறதுதான் என்னோட தொழில்.

பத்து வருஷத்துக்கு முன்னாடி எப்போதும் போல கடலுக்குப் போனோம். நெறைய சங்கு கெடச்சது. திரும்பும்போது திடீர்னு பலமான காத்து. வெயிட்டு தாங்காம போட்டு கவுந்து போச்சு. கடல்ல தத்தளிச்ச எங்கள இன்னொரு போட்டுலேருந்து வந்து காப்பத்தி கரை சேர்த்தாங்க.

ஒரே கூட்டம். போலீசுகூட வந்துருச்சு. ஒரு போலீஸ்காரம்மா என்ன கோஸா ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போகச் சொல்லி ஏற்பாடு பன்னுனாங்க. அதெல்லாம் ஒன்னும் வேணாம்மா. எனக்கு குளிரு தாங்க முடியல, கோச்சுக்காம ஒரே ஒரு பீடி வாங்கிக் கொடுத்தீங்கன்னா போதும்னு நடுங்கிக்கொண்டே சொன்னேன். அந்தம்மாவும் என்ன அப்பா மாதிரி நெனச்சு ஓடிப்போயி பீடி வாங்கிக் கொடுத்தாங்க. அப்பகூட ஆஸ்பத்திரி பக்கம் போனதில்ல.

அப்போ நெலம வேற (70 வயதுக்கு முன்). இப்ப வயசாகுது, ஒரு வேல செய்ய முடியல. எப்பதான் இந்த உசுரு நிம்மதியா போயி சேருமோன்னு காத்துகிட்டிருக்கேன்.

மீனவர் கோவிந்தசாமிக்கு வாழ்க்கையே போராட்டம்தான். கடலில் துவங்கிய வாழ்க்கை கரை ஒதுங்கினாலும் அங்கே அவரைக் காப்பவரோ, காப்பதோ எதுவுமில்லை. முதுமையின் துயரத்திற்காக இங்கே வருந்துவதற்கு யாருமில்லை! முதுமையோடு வறுமையும் சேர்ந்தால் அது ஒரு பெட்டிக்கடையைப் போல யாருடைய கவனத்தையும் பெறப் போவதில்லை!

பரவாயில்லை இந்நாட்டில் சில புறாக்களுக்காவது தீனி கிடைக்கிறதே!