privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியா19 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியில் வாகன விற்பனை !

19 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியில் வாகன விற்பனை !

வாகன விற்பனையில் மட்டுமல்லாமல், நுகர்வோர் சந்தையிலும் கடுமையான வீழ்ச்சி நிலையே தொடர்ந்து வருகிறது. ஒட்டுமொத்தமாக வீழ்ச்சியை நோக்கி இந்திய பொருளாதாரம் நகர்ந்துகொண்டிருக்கிறது.

-

வாகன விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 19 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 18,25,148 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி 18. 71 சதவீதமாக அது வீழ்ச்சியடைந்துள்ள நிலை, முக்கிய துறையில் நேர்ந்திருக்கும் தொடர் சரிவு இந்திய பொருளாதாரம் ஆழமான சிக்கலில் உள்ளதை சுட்டிக்காட்டுகிறது.

உன்னிப்பாக கவனிக்கப்படும், பயண வாகனங்களின் விற்பனை 30.98 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 2,90,931 யூனிட்டுகள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு 2,00,790 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளன.

பயணிகள் வாகன விற்பனையின் வீழ்ச்சி தொடர்ச்சியாக ஒன்பதாவது மாதமாக சரிவில் உள்ளது. இது வாகன துறையில் ஏற்பட்ட நிதி நெருக்கடிகளின் காரணமாக பரந்த அளவிலான வேலை இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (Society of Indian Automobile Manufacturers – SIAM) மேற்கண்ட விவரங்களை வெளியிட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையில் ஒட்டுமொத்த வாகன 18.71 சதவீதம்  சரிவைக் கண்டுள்ளது. டிசம்பர் 2000-ம் ஆண்டு 21.81 சதவீதமாக இருந்த விற்பனையைக் காட்டிலும் இது மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.

கார்களின் விற்பனை கடந்த ஆண்டு இதே மாதம் 1,91,979 யூனிட்டுகள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு 1,22,956 யூனிட்டுகள், 35.95 சதவீதமாக சரிவைக் கண்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளர்களான மாருதி சுசூகி இந்தியாவின் ஜூலை மாத விற்பனை 96,478 யூனிட்டுகள், அதாவது 36. 71 சதவீதம். ஹூண்டாய் மோட்டார் இந்திய லிமிடெட் நிறுவனம் 39,010 யூனிட்டுகளை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

அதுபோல, இருசக்கர வாகனங்களின் விற்பனை கடந்த ஆண்டு இதே மாதத்தில் 18,17,406 யூனிட்டுகளாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 15,11,692 யூனிட்டுகளாக சரிந்துள்ளது.

ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் விற்பனையில் 22.9 சதவீதம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. 5,11, 374 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளன.

வணிக வாகனங்களின் விற்பனையும் சரிவிலேயே உள்ளது. கடந்த 2018 ஜூலை மாதம் 76, 545 யூனிட்டுகள் விற்பனையான நிலையில் இந்த ஆண்டு 25. 71 சதவீத சரிவைக் கண்டுள்ளது.  56, 866 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளன.

இந்த விவரங்களை வெளியிட்டு பேசிய வாகன உற்பத்தியாளர் சங்கத்தின் இயக்குனர் விஷ்ணு மாத்துர், அரசிடமிருந்து உடனடியான மீட்பு நடவடிக்கை தேவை என்பதை புள்ளிவிவரங்கள் சொல்வதாகக் கூறினார்.

அவசரமாக இப்போது நடவடிக்கை தேவை. விற்பனையை அதிகரிக்கும் வகையில் அனைத்தையும் இந்தத் துறை செய்துகொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் வாகன துறைக்கு அரசு கைக்கொடுக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.

வாகன துறையில் ஏற்பட்டுள்ள மந்தம் காரணமாக 3. 41 இலட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறும் மாத்துர், கிட்டத்தட்ட 300 டீலர்கள் தங்களுடைய விற்பனையகங்களை மூடிவிட்டதால் 2.3 இலட்சம் பேர் தங்களுடைய வேலையை இழக்க உள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

“வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியாளர்கள் 1 இலட்சம் பணியிழப்புகளை உறுதி செய்துள்ள நிலையில், அசல் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் 15 ஆயிரம் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்திருக்கிறது” என்ற தகவலையும் அவர் தெரிவித்துள்ளார்.

5 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகவாகவும் பணி அளித்துக்கொண்டிருக்கும் வாகன துறையின் வீழ்ச்சி குறித்து துளியும் அக்கறையில்லாமல் இருக்கிறது மோடி அரசு.ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், “இது சுழற்சி காரணமாக ஏற்படக்கூடிய மந்த நிலைதானே தவிர, கட்டமைப்பு ரீதியானதல்ல” என்றார். ஆனால், வாகன உற்பத்தி துறையைச் சார்ந்தவர்கள் இது கட்டமைப்பு ரீதியானது என்கிறார்கள்.

சுழற்சி நிலை சில மாதங்களில் சரியாகக்கூடியது. ஆனால் கட்டமைப்பு ரீதியிலான பிரச்சினை அப்படிப்பட்டதல்ல. அதற்கு அரசின் உதவியும் ரிசர்வ் வங்கி கடன் புழக்கத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதும் அவசியம் என துறை சார்ந்தவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

வாகனத் துறை கடந்த 2008-09 மற்றும் 2013-14 ஆகிய ஆண்டுகளில் சரிவைக் கண்டது. ஆனாலும் அப்போது தணிக்கும் காரணிகளாக இந்தத் துறையின் சில பிரிவுகள் வளர்ந்தன. இப்போது அனைத்து பிரிவுகளும் வீழ்ச்சியில் உள்ளதாக மாத்துர் தெரிவிக்கிறார்.

மோடி அரசால் அமலாக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட வாகன உற்பத்தி துறை தற்போது, கண்கூடாக வீழ்ச்சி நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. துறை சார்ந்தவர்கள் ஜி.எஸ்.டி வரி விதிப்பை 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், வாகன பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டுதல்களாலும் புதிய கார்கள் வாங்குவதற்கான உயர் வட்டி விகிதங்களாலும்  மூன்றாண்டு இன்சூரன்ஸ் பாலிசி நடைமுறையாலும் வாகன விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் கூறுகிறார்.

படிக்க:
வாகன விற்பனையில் மந்த நிலை :  32000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் !
கார்கள் : வளர்ச்சியின் அறிகுறியா ? முதலாளித்துவ அழிவின் குறியா ?

“இந்தத் துறையில் வீழ்ந்து கொண்டே சென்றால் அனைத்தும் பாதிக்கப்படும். உற்பத்தி, வேலையிலிருந்து அரசின் வருமானம் வரை பாதிக்கப்படும்” என்கிறார் மாத்துர்.

ஆனால், அதுகுறித்த எந்தவித சுரணையும் அற்ற மோடி அரசு பொருளாதாரத்தை பார்க்கக்கூடாது; பொருளாதாரம் குறித்து பேசக்கூடாது, பொருளாதாரம் குறித்து கேட்கக்கூடாது என்கிற நிலையில் இருக்கிறது.

வாகன விற்பனையில் மட்டுமல்லாமல், நுகர்வோர் சந்தையிலும் கடுமையான வீழ்ச்சி நிலையே தொடர்ந்து வருகிறது. ஒட்டுமொத்தமாக வீழ்ச்சியை நோக்கி இந்திய பொருளாதாரம் நகர்ந்துகொண்டிருக்கிறது. அதை திசை திருப்பவே 70 ஆண்டுகால காஷ்மீர் பிரச்சினையை ஒரே நாளில் தீர்த்து வைப்பதாக ‘அவதாரம்’ எடுத்திருக்கிறது மோடி – அமித் ஷா கூட்டணி. எத்தனை காலத்துக்கு உண்மையான பிரச்சினையை மூடிவைக்க முடியும்?

அனிதா
நன்றி
: டெலிகிராப் இந்தியா.