வாகன விற்பனையில் ஏற்பட்டிருக்கும் தேக்கம் காரணமாக 18 மாதங்களில் இந்தியா முழுவதும் உள்ள 286 முகவர்கள் தங்கள் முகமைகளை மூடியுள்ளனர். இதனால் இவர்களை நம்பியிருந்த சுமார் 32 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நான்கு சக்கர வாகனப் பிரிவின் நகர்ப்புற, பகுதி நகர்ப்புற சந்தை இதனால் கடுமையாக பாதிப்படையும்.
ஆட்டோமொபைல் முகவர்களின் அமைப்பான Federation of Automobile Dealers Associations (FADA) வெளியிட்ட தகவலில், ஏப்ரல் 2019 வரையான கடந்த 18 மாதங்களில் பயணிகள் கார் விற்பனைப் பிரிவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 84 முகமைகள் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாடு (35), டெல்லி (27), பீகார் (26), இராஜஸ்தான் (21) ஆகிய மாநில முகமைகளும் மூடப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நகரங்களில் செயல்பாட்டுச் செலவுகள் குறைவு என்றாலும், மோசமான விற்பனை காரணமாக முகவர்கள் தங்களுடைய பிரிவுகளை விரிவுபடுத்துவது கடினமானதாக உள்ளது. இது ஆரோக்கியமற்ற போட்டிக்கு வழிவகுத்தது என ஆட்டோமொபைல் முகவர்களுக்கான அமைப்பைச் சேர்ந்த வின்கேஷ் குலாட்டி தெரிவிக்கிறார்.
கடந்த ஐந்தாண்டுகளில் இந்த வர்த்தகத்தை நடத்துவதற்கு இரட்டைச் செலவு செய்யவேண்டிய நிலையில், மொத்த இலாபம் 10-15% குறைந்தது.
அதுபோல, ஆட்டோமொபைல் சில்லறை விற்பனை கடந்த பத்து மாதங்களில் இருந்தது போலவே, கடந்த ஜூன் மாதம் வரை சுணக்கமாகவே உள்ளது. புதிய வாகனங்கள் பதிவு செய்வது 5.4% குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 17,81,431 யூனிட்டுகள் விற்பனையான நிலையில் இந்த ஆண்டு 16,46,776 மட்டுமே விற்பனையாகியுள்ளன.
வணிக வாகன விற்பனையும் 19.3 % குறைந்துள்ளது. இருசக்கர வாகன விற்பனை 5% குறைந்துள்ளது. மூன்று சக்கர வாகன விற்பனை 2.8% வீழ்ந்துள்ளது. நிறுவனங்களின் உற்பத்தியை வாங்கிவிற்கும் பழைய முகவர்களில் 5-10% மட்டுமே மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்கிறது ஆட்டோமொபைல் முகவர்கள் அமைப்பு.
படிக்க:
♦ தர்மபுரி சாதிமறுப்பு திருமணம் : இளைஞரின் குடும்பத்தையே கட்டி வைத்து அடித்த ஆதிக்க சாதி வெறி !
♦ மாணவர்கள் கையில் பட்டாக்கத்தி : யார் காரணம் ?
“கார் முகவர்கள், இருசக்கர வாகன முகவர்கள் விற்பனை மந்த நிலையில் இருப்பது குறித்து கவலை கொள்ளலாம். ஆனால், வரவிருக்கும் பண்டிகை காலங்கள், இந்த நிலைக்கு புத்துணர்வு ஊட்டக்கூடும்” என்கிறார் வின்கேஷ்.
தாமதமான பருவமழை, இறுக்கமான பணப்புழக்க நிலைமைகள் காரணமாக வாகன துறை மந்த நிலை கண்டுள்ளதாக இவர்கள் கூறுகிறார்கள். ஜி.எஸ்.டி. யில் தற்காலிக அல்லது பகுதி வரி குறைப்பு, பணப்புழக்கத்தை உண்டாக்குவதன் மூலம் இந்தத் துறை புத்துணர்வு பெறும் எனவும் இவர்கள் நம்புகிறார்கள்.
அதெல்லாம் சரிதான் ! ஆனால் தொடர்ச்சியாக நீடித்திருக்கும் பொருளாதார மந்தநிலையில், மக்களின் வாங்கும் சக்தி அதல பாதாளத்திற்கு இறங்கிக் கொண்டிருக்கையில் எங்கிருந்து புத்துணர்வு பிறக்கும் என்றுதான் நமக்கும் புரியவில்லை ! நமது ‘வளர்ச்சி நாயகன்’ மோடிஜிக்கே வெளிச்சம் !
கலைமதி
நன்றி : thewire