Friday, February 7, 2025
முகப்புசெய்திஇந்தியாஆட்டோமொபைல் வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் காரணமில்லை : மாருதி சுசூகி !

ஆட்டோமொபைல் வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் காரணமில்லை : மாருதி சுசூகி !

அமெரிக்க சந்தையை உதாரணம் காட்டியுள்ள ஸ்ரீவத்சவா, “உபேர் அங்கே பெரிய அளவில் செயல்பட்டிருக்கிறது; அதே சமயம் வாகன விற்பனையும் வலுவான நிலையில் உள்ளது” என்கிறார்.

-

ண்மையில் சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆட்டோ வாகன துறையின் மந்தநிலைக்கு இன்றைய தலைமுறையினர் ஓலா, ஊபர் போன்ற வாகன சேவைகளை பயன்படுத்துவதே காரணம் என்றார். நிர்மலா சீதாராமனின் இந்தக் கருத்து சமூக ஊடகங்களில் கேலிக்குள்ளானதோடு, ஒரு அமைச்சர் எந்தவித ஆய்வும் இல்லாமல் போகிற போக்கில் இத்தகைய கருத்துக்களை சொல்வதா எனவும் விமர்சிக்கப்பட்டது.

ola-nirmala-sitharamanஇந்நிலையில், தொடர்புடைய துறையைச் சேர்ந்த முக்கிய நிறுவனமான மாருதி சுசூகியின் சந்தை மற்றும் விற்பனை பிரிவின் நிர்வாக இயக்குனர் சசாங்க் ஸ்ரீவத்சவா, நிதியமைச்சரின் கருத்தை மறுக்கும்வகையில், அதுகுறித்து போதிய ஆய்வுகள் தேவை என கூறியுள்ளார்.

“இன்றைய தலைமுறையினர் ஓலாவும் ஊபரும் பயன்படுத்துவது ஆட்டோ வாகன துறையின் வீழ்ச்சிக்கு திடமான காரணமாக இருக்க முடியாது. ஒரு முடிவுக்கு வருவதற்கு முன் இது குறித்து முறையான ஆய்வுகளை செய்ய வேண்டும்” என சசாங்க் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “ஓலாவும் உபேரும் பயன்பாட்டுக்கு வந்து 6-7 ஆண்டுகள் ஆகின்றன. வாகனத் துறை இந்தக் காலக்கட்டத்தில் சிறப்பான வளர்ச்சியையும் பெற்றிருந்தது. கடந்த சில மாதங்களாகத்தான் மந்தநிலை மிகவும் மோசமடைந்துள்ளது. அதற்கு என்ன காரணம்? ஓலாவும் உபேரும்தான் காரணம் என நான் நினைக்கவில்லை” எனவும் பேசியுள்ளார்.

அமெரிக்க சந்தையை உதாரணம் காட்டியுள்ள ஸ்ரீவத்சவா, “உபேர் அங்கே பெரிய அளவில் செயல்பட்டிருக்கிறது; அதே சமயம் வாகன விற்பனையும் வலுவான நிலையில் உள்ளது” என்கிறார்.

படிக்க:
சுப்ரீம் கோர்ட்டும் ராமர் கோவிலும் எங்களுடையதுதான் : பாஜக அமைச்சர் !
♦ #SayItLikeNirmalaTai : நிர்மலா சீதாராமனுக்கு ‘ஐடியா’ கொடுத்த டிவிட்டர்வாசிகள் !

“இந்தியாவில் வாகனங்களை வாங்குபவர்களில் 46% பேர் முதல்முறை வாங்குபவர்களாகவே உள்ளனர். இது விருப்பத்தின் அடிப்படையிலான நடத்தை. மக்கள் பொது போக்குவரத்தாகத் தான் ஓலா, உபேரை பயன்படுத்தி வார நாட்களில் அலுவலகத்துக்குப் போனாலும் வார இறுதியில் குடும்பத்துடன் வெளியே செல்லக்கூடும்” என விளக்குகிறார் சசாங்க்.

“இந்தியாவில் உரிமை முறை இன்னமும் மாறவில்லை. வாங்கும் முறையில் கட்டமைப்பு மாற்றம் இருக்கிறதா என நீண்ட காலம் கவனிக்க வேண்டும்” என்கிற அவர், வாகன துறையின் மந்த நிலைக்கு பல காரணங்கள் உள்ளதாகக் கூறுகிறார்.

Shashank-Srivastava
மாருதி சுசூகியின் சந்தை மற்றும் விற்பனை பிரிவின் நிர்வாக இயக்குனர் சசாங்க் ஸ்ரீவத்சவா

பணப்புழக்க நெருக்கடி, ஒழுங்குமுறை சிக்கல்கள் காரணமாக பொருட்களின் விலைகள் அதிகரித்தல், அதிக வரி மற்றும் காப்பீட்டு தொகை உயர்வு போன்ற பல காரணங்கள் இருக்கின்றன என்கிறார்.

மந்தநிலையை சீராக்க கடந்த மாதம் அரசாங்கம் அறிவித்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றும் வாடிக்கையாளர்களின் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட துறை என்பதால் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இந்தத் துறையின் நீண்ட கால நலனுக்குத்தான் உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (Society of Indian Automobile Manufacturers ) உள்நாட்டு வாகன விற்பனை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 23.55 சதவீதம் வீழ்ந்துள்ளதாக கூறியுள்ளது. ஏப்ரல் முதல் ஆகஸ்டு மாதம் வரையிலான விற்பனை 15.89% வீழ்ந்திருப்பதாகவும் அது கூறியுள்ளது.

மாருதி சுசூகியின் உள்நாட்டு விற்பனை கடந்த ஆண்டைவிட 34.3% குறைந்துள்ளது. வரும் பண்டிகை காலங்களில் நிலைமை ஓரளவுக்கு சீராகும் என்கிற சசாங்க் ஸ்ரீவத்சவா, “அரசுக்கு இப்போதிருக்கும் நிலைமை நன்றாக தெரியும். அவர்கள் முழு பொருளாதாரத்தையும் சீராக்க வேண்டும். இந்தத் துறைக்கும் பொருளாதாரத்துக்கு சிறப்பானதை அவர்கள் செய்வார்கள்” என நம்புவதாகத் தெரிவித்தார்.

அரசாங்கத்தை பகைத்துக்கொள்ள முடியாத நிலையில், விமர்சனங்களை முன்வைக்க வாகன துறையினர் தயங்குவது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், இவர்கள் ‘நம்புவதை’ப் போல அரசாங்கம் பொருளாதார மந்த நிலையை அணுகவில்லை.

நிதியமைச்சரும், நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும் மந்த நிலை குறித்து சொன்ன கருத்துக்கள், அரசாங்கம் இந்தப் பிரச்சினையை எப்படி அணுகுகிறது என்பதற்கு உதாரணங்கள்.


அனிதா
நன்றி
: த வயர்.

  1. நிாமலா சிதாராமன் சொன்னது முழுமையான பதில் இல்லை.சரியான பதிலையாரும் சொல்லவில்லையே ஏன் ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க