இந்திய உற்பத்தித் துறையில் மோட்டார் வாகனத்துறையின் பங்கு 49 சதவீதமா ? இத்துறை 3 கோடியே 70 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கிறதா?

ந்திய உற்பத்தித் துறையின் மொத்த உற்பத்தி மதிப்பில் மோட்டார் வாகனத் தொழிற்துறையின் பங்கு 49 சதவீதம் என்று கூறப்படுவது சரியான மதிப்பீடுதானா? மோட்டார் வாகனத் தொழில்துறை 3 கோடியே 70 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறதா?

இந்த இரு கேள்விகளுக்குமான பதில் ‘இல்லை’ என்பதே. உண்மையான புள்ளி விவரமோ, சொல்லப்படும் அளவில் அரைக்கால்வாசிக்கும் தேறாது.

இப்படி ஒரு பூதாகாரமான புள்ளிவிவரத்தை வெளியிடுவது யார்?

மோட்டார் வாகன துறையின் தலைமையில் இருப்பவர்கள்தான் இவ்வாறு செய்கிறார்கள். மோட்டார் வாகனத் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (GDP) 7 அல்லது 7.5% என்றும், மொத்த தொழில்துறை உற்பத்தி மதிப்பில் இது 49% என்றும், இத்துறை 3.7 கோடி அல்லது 4 கோடி “நேரடி மற்றும் மறைமுக” வேலை வாய்ப்புகளை வழங்குகிறது என்றும் இத்துறை சார்ந்த அமைப்புகள் கூறுகின்றன.

அவர்கள் ஏன் இப்படி பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்?

மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும், வேலை வாய்ப்புக்கும் மோட்டார் வாகன துறையின் பங்களிப்பை பன்மடங்காக உயர்த்திக் காட்டுவதன் மூலம் இத்துறையின் கனவான்கள் மேலும் கூடுதலான சலுகைகளையும் மானியங்களையும் அரசிடமிருந்து பிதுக்கி எடுக்க விரும்புகிறார்கள்.

ஆனந்த் மகேந்திரா

இதே புள்ளிவிவரங்களை முன்னிறுத்தி, “சில குறுகிய கால சலுகை நடவடிக்கைகள் மூலமாக மோட்டார் வாகனத் துறையை உதைத்து கிளப்பி ஓடவிடுவது விரிந்த தேசிய நலனுக்கு உகந்தது,” என்று கூறி இத்துறைக்கு வரிச் சலுகைகளை கோருகிறார் ஆனந்த் மகேந்திரா.

இதே புள்ளிவிவரங்களில் சில ஜால வித்தை காட்டி, இத்துறையை கைதூக்கி விட மாநில அரசுகள் ‘அரிசினாச்சும்’ போட வேண்டும் என்கிறார் மாருதி சுசுகி நிறுவனத்தின் தலைவர்.

வாகன உற்பத்தியாளர்கள், உதிரிப்பாக தயாரிப்பாளர்கள் மற்றும் கார் டீலர்கள் ஆகியோரது அமைப்புகள் நிதி அமைச்சரிடம் ஊக்க உதவித்தொகை கோரியபோதும் இதே புள்ளிவிபரங்களைத்தான் முன் வைக்கிறார்கள். கூகுளில் தேடியபோது செய்தி ஊடகங்களில் இந்த புள்ளிவிவர மேற்கோள்கள் திரும்பிய பக்கமெல்லாம் தாக்கின.

இந்த மோட்டார் வாகனத் துறை அரசின் பிணை எடுப்புத் தொகுதியை (bail-out package) பெறுவதற்கு தகுதியானது தானா?

ஓராண்டு காலமாகவே இந்திய மோட்டார் வாகனத் தொழில்துறை நெருக்கடியில் இருக்கிறது; அதன் உற்பத்திக்கு ஏற்ப சந்தையில் வேண்டல் (demand) இல்லை என்பது உண்மைதான். (வாகன விற்பனையில் மிகப்பெரும் அளவுக்கு கடனுதவி செய்துவந்த வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஏற்பட்டிருக்கும் தற்போதைய நெருக்கடி மோட்டார் வாகன துறையின் நெருக்கடிக்கான உடனடி தூண்டுதலாக அமைந்துவிட்டது. (1)) பெரு நிறுவனங்களின் விற்பனை திருகு சுழல் வடிவில் மெல்லச் சரிந்துவருகிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து திண்டாடுகிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் ஒப்பந்தத் தொழிலாளிகள். இந்த தானியங்கி வாகனத் துறையே மிகப்பெரும் விகிதத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி இருக்கும் துறையாகும்.

படிக்க:
மோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் !
♦ சரிவின் விளிம்பில் செல்போன் பழுது நீக்கும் கடைகள் | படக் கட்டுரை

இருப்பினும், அனைத்து உற்பத்தி துறைகளும், சொல்லப்போனால் மொத்த பொருளாதாரமுமே, திருகுச்சுருள் வடிவில் மெல்ல சரிவது போல தோன்றுகிறது. வேலை இழப்புகள் பல்வேறு துறைகளிலும் கொடூரமாகப் பரவியிருக்கிறது. ஆகப் பெரும்பான்மையான மக்களுக்கு பாரம்பரியமான வாழ்வாதாரமாக இருந்துவந்த வேளாண்மை, நெசவு, கட்டுமான வேலைகள், பெட்டிக் கடைகள், அமைப்பு சாரா உற்பத்தி போன்ற துறைகள் சிறிது காலமாகவே நெருக்கடியில் இருந்து வருகின்றன. நிலைமை இவ்வாறிருக்க, அரசின் உதவிக்கு காத்திருக்கும் இந்த கையேந்தி வரிசையில் குறுக்கே நுழைவதற்கு, கார்ப்பரேட் ஆதாயங்களுக்கு அப்பால் தங்களது துறை – அகண்ட காவேரி படித்துறை போல – விரிந்த பொருளாதார மற்றும் சமூக நலன் சார்ந்த துறை என்று காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை மோட்டார் வாகனத் துறையின் கனவான்கள் நன்கறிவர். மகேந்திராவின் வார்த்தைகளில் இதுதான் “விரிந்த தேசிய நலன்”.

ஜி.டி.பி யிலும் வேலைவாய்ப்பிலும் மோட்டார் வாகனத் துறையின் உண்மையான பங்களிப்புதான் என்ன?

அனைத்து தானியங்கி ஊர்திகள் மற்றும் ஊர்திகளுக்கான டயர், டியூப் உள்ளிட்ட அனைத்து உதிரிபாகங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நிலையங்களில் வேலைசெய்வோர் எண்ணிக்கை சுமார் 14 லட்சம் மட்டுமே (2) . இதுதான் எதிர்பார்க்கக்கூடிய அளவும் கூட. ஏனெனில் மோட்டார் வாகன உற்பத்தி என்பது பெருத்த மூலதனக் குவிப்பு தேவைப்படுகின்ற கனரக தானியங்கி எந்திரங்கள் சார்ந்த உற்பத்தித் துறை; வேலை வாய்ப்பை உருவாக்கும் துறையல்ல.

மேலும் GDP-யில் இந்த தொழிற்துறையின் ஒட்டுமொத்த பங்களிப்பு சுமாராக 1% மட்டுமே. அனைத்து உற்பத்தி துறைகளின் மொத்த உற்பத்தி மதிப்பில் இத்துறையின் பங்களிப்பு 6.4 % மட்டுமே. (3) இந்த உண்மை நிலையோ மோட்டார் வாகனத் துறை தலைவர்கள் அள்ளி விட்டதும் ஊடகங்கள் அதை வாங்கி அளந்து விட்டதுமான புள்ளிவிவரங்களில் மீச்சிறு துளியே.

மோட்டார் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் விற்பனை மற்றும் பிற சேவைகளை வழங்கும் அதன் துணை துறையின் வேலை வாய்ப்புகள் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

விற்பனை மற்றும் பழுது நீக்க நிலையங்களை கணக்கில் கொண்டால் அது மோட்டார் தொடர்பான வேலைவாய்ப்பு எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தும். மோட்டார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் விற்பனை மற்றும் பணிமனைச் சேவைகள் 2017-18 -ம் ஆண்டின் கணக்குப்படி இந்திய உழைப்பு சக்தியில் 0.78 சதவீதத்தினருக்கு, அதாவது 38 லட்சம் தொழிலாளர்களுக்கு, வேலைவாய்ப்பு அளித்திருக்கிறது (4) இதில் 9 லட்சம் பேர் விற்பனை தொடர்பாகவும், 29 லட்சம் பேர் பணிமனை சேவைகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கையை மேற்சொன்ன உற்பத்தி தொடர்பான வேலைவாய்ப்பு எண்ணிக்கையுடன் கூட்டினால் சுமார் 52 லட்சம் தொழிலாளர்கள் மோட்டார் வாகன உற்பத்தி, விற்பனை மற்றும் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வருகிறது.

இது மிகப்பெரிய எண்ணிக்கைதான். எனினும் இதற்கும் மோட்டார் வாகன தொழில் துறை தலைவர்கள் கூறுகின்ற 3 கோடியே 70 லட்சம் அல்லது 4 கோடி வேலைவாய்ப்புகளுக்கும் மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி உள்ளது.

பெரிதும் உயர்த்தப்பட்ட இந்த புள்ளிவிவரத்தை மோட்டார் வாகனத்துறை எப்படிக் கணக்கிட்டது?

இத்துறை கோமான்கள் மறைமுக வேலைவாய்ப்பின் வரம்பை முடிந்த அளவுக்கு இழுத்து விரித்து அதில் வாகன ஓட்டுநர்கள், காப்பீட்டு முகவர்கள் போன்ற எல்…..லோரையும் கொண்டுவந்து அதன் எண்ணிக்கையை அளவுகடந்து உயர்த்துகிறார்கள்.

தானியங்கித் துறையின் இலட்சிய திட்டம் 2006-16 ( Automotive Mission Plan 2006-16 : இது பெரிதும் அத்துறை சார்ந்தவர்களாலேயே தயாரிக்கப்பட்டது) -ன் படி ஒரு கார் 5.3 வேலையை உருவாக்குகிறது; ஒரு வர்த்தக பயன்பாட்டு வண்டி -லாரி, டிரக் – 13.3 வேலையை உருவாக்குகிறது; ஒரு இருசக்கர வாகனம் 0.5 வேலையை உருவாக்குகிறது; மற்றும் ஒரு மூன்று சக்கர வாகனம் 3.9 வேலையை உருவாக்குகிறது.(5)எந்த அடிப்படையில் இவ்வாறு கணக்கிடப்பட்டது? அது பற்றி ஒரு விவரமும் இல்லை. இருப்பினும் இந்த விகிதாச்சாரப்படி கணக்கிட்டால் இந்த கோமான்கள் கணக்கு கோமாளிக் கணக்கு ஆகிவிடுகிறது.

படிக்க:
கேள்வி பதில் : தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன ?
♦ தீபாவளி இனிக்காது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள் !

2018-19 ஆம் ஆண்டின் மோட்டார் வாகன உள்நாட்டு விற்பனையை மட்டும் எடுத்துக் கொண்டு கணக்கிட்டால் அவர்களது கண்டுபிடிப்பின்படி 4 கோடியே 40 லட்சம் வேலைவாய்ப்புகளை அந்த வாகனங்கள் உருவாக்கியிருக்க வேண்டும். (6) ஓராண்டில் கழித்துக் கட்டப்படும் வண்டிகளின் எண்ணிக்கையை விலக்கிவிட்டு பார்த்தாலும் இந்த வேலை உருவாக்க எண்ணிக்கை நம்பத் தக்கதன்று.

மோட்டார் வாகனத் துறையின் உற்பத்தி மொத்த உற்பத்தி மதிப்பில் 49% என்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7% என்றும் இந்த துறையினர் எந்த அடிப்படையில் கணக்கிட்டார்கள் என்பது பற்றி நமக்கு ஒன்றும் தெரியவில்லை.

உற்பத்தியாகும் ஒவ்வொரு காரும் ஓட்டுநர்கள், கிளீனர்கள், காப்பீட்டு முகவர்கள் போன்ற பல வேலைகளை உருவாக்குகிறது என்று சொல்வது சரியா?

உற்பத்தி செய்யப்படும் ஒரு கார் அல்லது ஒரு சரக்கு ஊர்தி ஓட்டுநருக்கான வேலையை உருவாக்குவதில்லை. ஒரு டிரைவரை வேலைக்கு அமர்த்தும் முன்னர் அந்த கார் அல்லது டிரக் ஒருவரால் வாங்கப்பட்டு இருக்க வேண்டும். நிலவுகின்ற பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த வேண்டல் (demand) வளர்முகத்தில் இருக்கும் போது போக்குவரத்தின் தேவையும் அதிகரிக்கிறது. அது கார் அல்லது டிரக்கை வாங்கவும், ஓட்டுநரைப் பணியில் அமர்த்தவும் கோருகிறது. ஆனால் இன்றைய பிரச்சனையோ ஒட்டுமொத்த வேண்டலில் ஒரு சரிவு ஏற்பட்டிருக்கிறது என்பதே. (7)

உண்மையில் இந்த வேலைவாய்ப்புகள் எதையும், போக்குவரத்து உள்ளிட்ட எதிலும், மோட்டார் வாகனத் துறை உருவாக்கவில்லை என்பதையே இத்துறையின் நெருக்கடி சாராம்சத்தில் வெளிப்படுத்துகிறது. மாறாக, போக்குவரத்து துறைக்கான தேவை அதிகரிக்கும் போது அது வாகன தேவையையும், வேலைவாய்ப்பையும் மோட்டார் வாகனத் துறையில் உருவாக்கும் என்று சொல்லுவதே பொருத்தமானதாக இருக்கும்.

தானுந்து ஊர்தித் துறைக்கு அரசு என்ன உதவிகளைச் செய்கிறது?

அரசு இத்துறைக்கு ஏராளமான பல பொருளாதார சலுகைகளை வழங்கி வருகிறது. மலிவு விலையில் நிலம், மின்சாரம், நீர், கடன்கள், வரிச்சலுகை போன்ற பலவாறான சலுகைகளில் பெரும்பகுதியை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் வழங்குகின்றன. உதாரணமாக மோடி தலைமையில் இருந்த குஜராத் மாநில அரசு டாடாவின் நானோ கார் உற்பத்தி திட்டத்திற்கு வழங்கிய மானியங்களின் மதிப்பு ரூ.1 லட்சத்திற்கு விற்கப்பட இருந்த கார் ஒன்றுக்கு ரூ.60,000 என கணக்கிடப்பட்டது. (8)

நானோ திட்டம் தொடர்பான விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்து விட்டன. ஆனால் அதே அளவில் மானியங்கள் வெளியில் தெரியாமல் பிற நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. பெரிதும் தனியார் வாகனங்களால் பயன்படுத்தப்படும் நகர்புற சாலைகளின் மேம்பாட்டு திட்டங்களுக்கு அரசு செலவழிக்கும் தொகையையும் சேர்த்துக் கணக்கிட்டால் இந்த துறைக்கான மானியத்தொகை உண்மையில் பன்மடங்கு பெரிதாக இருக்கும்.

இத்துறையை புத்தெழுச்சி பெறச் செய்வதற்காக நிதி அமைச்சர் சமீபத்தில் ஒரு அறிவிப்பு மழை பொழிந்தார். மத்திய அரசு தனது அலுவலக பயன்பாட்டிற்காக புதிய கார்கள் வாங்குவதற்கு விதித்துக்கொண்டிருந்த சுய தடையை நீக்குவது; புதிய பயன்பாட்டு நீக்க கொள்கை (new scrappage policy); உயர்த்தப்பட்ட வாகனப் பதிவுக் கட்டணத்தை 2020-ம் ஆண்டுக்கு ஒத்தி வைத்தல்; 15% கூடுதல் தேய்மான மதிப்பை அனுமதித்தல் ஆகியவை இந்த அறிவிப்புகள். ஆனால் இத்துறைக் கோமான்களுக்கு இச்சலுகைகள் போதவில்லை; அவர்கள் தங்களது கோரிக்கைக்கான அழுத்தத்தை அதிகரிக்கிறார்கள். கார்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது அவர்களது உடனடி கோரிக்கை.

மோட்டார் வாகன பயன்பாட்டை அரசு ஊக்குவித்து வளர்க்க வேண்டுமா?

இல்லை தனியார் வாகனங்களை அல்ல, மாறாக பொது போக்குவரத்தை மட்டுமே அரசு ஊக்குவித்து வளர்க்க வேண்டும். மோட்டார் வாகனத்துறை வளர்ச்சியை ஒரு பொதுநலன் சார்ந்த முன்னுரிமையாக கருதுவதும் அரசின் மேக் இன் இந்தியா தளத்தில் செய்திருப்பது போல இதை ஒரு ”சூப்பர்ஸ்டார் தொழிற்துறை” என்று விளம்பரப்படுத்துவதும் முறைகேடான கொள்கையாகும்.

மோட்டார் வாகனங்கள் நகர்ப்புறங்களில் சுற்றுச்சூழல் சீரழிவையும் கடுமையான போக்குவரத்து நெரிசலையும் உருவாக்குகின்றன. ஆகப் பெரும்பான்மையான நகர்புற மக்கள்தான் இதனால் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள் சொந்தமாக கார் எதையும் வைத்திருக்கவில்லை. மலிவுக் கட்டணத்தில் நல்ல விதத்தில் இயங்குகிற பொதுப் போக்குவரத்து இல்லாத காரணத்தாலேயே இந்த உழைக்கும் மக்கள் தொகையில் ஒரு பகுதியினர் இருசக்கர வாகனங்களை வாங்க நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். இருந்த பொதுப் போக்குவரத்தின் வீழ்ச்சியும் கூட மோட்டார் வாகன தனியார் துறை வளர்ச்சி மற்றும் மோட்டார் அரசியல் தரகு கும்பலுடன் (auto lobby) தொடர்புடையதே.

மோட்டார் வாகனத் துறைக்கு மானியங்களும் வரி தள்ளுபடிகளும் வழங்க கூடாது என்பதற்கு இது போன்று பல காரணங்கள் உள்ளன. இத்துறையில் வேலை செய்த தொழிலாளர்கள் வேலை இழந்து மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை‌. இருப்பினும் சமூகப் பயன்பாடு மிக்க நல்ல தொழில் துறைகளின் வளர்ச்சி, அல்லது உடனடி மாற்றாக, விரிந்த பொருளாதார திட்டத்தின் ஒரு பகுதியாக நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டங்கள் போன்றவை மோட்டார் வாகனத் தொழிலில் வேலை இழந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க முடியும்.

மோட்டார் வாகனத் துறைக்கு உதவக் கூடாது என்றால் வேறு எந்தப் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அரசு உடனடியாக உதவி செய்ய வேண்டும்?

தானாக இயங்கிய அமைப்புசாரா தொழில்துறையை முடமாக்கி விட்டு அதைப்பற்றி கவலைப்படாமல் தானியங்கி ஊர்தி துறையின் மீது அளவு மீறி அக்கறை படுவது அடாவடித்தனமாக இருக்கிறது, ஆனால் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இந்திய வேலைவாய்ப்பில் ஐந்தில் நான்கு மடங்குக்கும் மேலாக பங்கினை அமைப்புசாரா துறைதான் வழங்குகிறது. இதிலிருந்து வேளாண்மைத் துறையை விலக்கிவிட்டு பார்த்தாலும் மீதமுள்ள வேலைவாய்ப்புகளில் மூன்றில் இரண்டு மடங்கிற்குக் கூடுதலான பங்கினை அமைப்புசாரா தொழில் துறை தான் வழங்குகிறது.

படிக்க:
ஆட்டோ டிரைவரான எங்க மேலயே பலமுறை மோதிட்டாரு மோடி | மக்கள் கருத்து
♦ ஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி !

நாம் அந்த 16 கோடி தொழிலாளர்களை பற்றி பேசுகிறோம். 2016-ம் ஆண்டுக்கு முன்னரே இந்த அமைப்பு சாரா தொழில் துறை பலவிதத்திலும் அடி வாங்கிக் கொண்டிருந்தது. பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகிய இரண்டு நடவடிக்கைகளும் அத்துறைக்கு மரண அடி கொடுத்தன. இத்துறையில் வேலையிழப்பு என்பது பெரிதும் கண்ணுக்கு புலப்படாமல் நடக்கிறது. இங்கே முழுமையான வேலை இழப்புக்கு பதிலாக கொடூரமான வருவாய்ச் சரிவு ஏற்படுகிறது.

இருப்பினும், அமைப்புசாரா தொழில் துறையின் வேலை இழப்புகளைப் பற்றி மந்திரத்தில் மாங்காய்களாக புள்ளிவிவரங்களை வருவித்துக் கொண்டு, மஞ்சள் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளை தருவித்துக் கொண்டு பேரம்பேச ஒரு அரசியல் தரகு கும்பல் இல்லை; நிதியமைச்சருடன் விவாதிக்க அமைப்புசாரா தொழிற்துறையின் பிரதிநிதிகளுக்கு சிறப்புப் பார்வை நேரம் ஏதும் ஒதுக்கி தரப்படுவதில்லை; பொருளாதார மந்தத்தில் அடியாழத்தில் அழுந்திக் கிடக்கும் வேண்டலை (demand) வெளிக்கொணர்ந்து துயருற்றிருக்கும் பல லட்சம் இந்திய உற்பத்தியாளர்களை காக்க, பாதாளக் கொத்துக் கரண்டி போல, ஒரு ஊக்க உதவித் தொகுப்பை அறிவிப்பதற்கு அந்த அம்மையார் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு அவசர அழைப்பு ஏதும் விடுக்கப்போவதும் இல்லை.

*****

அடிக்குறிப்புகள் :

(1) கடந்த சில ஆண்டுகளில் நடந்த நுகர்வோர் வாகன விற்பனையில் சுமார் 30 சதவீதமும், வர்த்தக வாகன விற்பனையில் 55-60 சதவீதமும், இருசக்கர வாகனங்கள் விற்பனையில் 65 சதவீதமும் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன்களின் மூலமே நடந்திருப்பதாக குறிப்பிடுகிறது ஐ.சி.ஆர்.ஏ எனும் பொருளாதார மதிப்பீட்டு நிறுவனம். ( How the NBFC crisis sent India’s automobile sector into a tailspin )

(2) ஆலைகள் குறித்த வருடாந்திர சர்வே (Annual Survey of Industries 2016-17) மூலம் கிடைக்கும் தரவுகளின் படி, வாகன உற்பத்தி, வாகனங்களின் வெளிப்புற கட்டுமானம், உதிரி பாகங்கள் தயாரிப்பு, இருசக்கர வாகன உற்பத்தி மற்றும் சக்கரங்கள் உற்பத்தி ஆகிய துறைகளில் சுமார் 13 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டிருப்பதாக தெரியவருகின்றது. அதே போல் தேசிய மாதிரி சர்வேயின் 73-வது சுற்றின் மூலம் கிடைக்கும் தரவுகள், 2015-16 ஆண்டுக்கான ஒழுங்கமைக்கப்படாத உற்பத்தித் துறை குறித்த விவரங்களை அளிக்கிறது. அதன்படி, ஒழுங்கமைக்கப்படாத வாகன உற்பத்தித் துறையில் சுமார் 96,000க்கும் குறைவான தொழிலாளர்களே ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது.

(3) ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தி ஆலைகள் வாகன உற்பத்தி மற்றும் அது சார்ந்த உப தொழில்களின் மூலம் உற்பத்தி செய்த மொத்த மதிப்பு ருபாய் 146,556 கோடி. ஒழுங்கமைக்கப்படாத வாகன உற்பத்திப் பட்டறைகள் உற்பத்தி செய்த மொத்த மதிப்பு 1509 கோடி. இது தேசிய மாதிரி சர்வேயின் 73ம் சுற்றில் (2015-16) இருந்து கிடைக்கும் விவரம். 2016-17ம் நிதி ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூபாய் 152,53,714 கோடி – இதில் உற்பத்தித் துறையின் பங்கு 23,29,220 கோடி.

(4) Periodic Labour Force Survey, 2017-18.

(5) ”நேரடி வேலை வாய்ப்பு என்பது தொழிலாளர்களை வாகன உற்பத்தி மற்றும் உதிரி பாக உற்பத்தி ஆலைகள் பணிக்கு அமர்த்திக் கொள்வதாகும். மறைமுக வேலை வாய்ப்பு என்பது, வாகனக் கடன்கள் ஏற்பாடு செய்யும் நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீடு நிறுவனங்கள், வாகனங்கள் பழுது பார்க்கும் பட்டறைகள், சேவை நிலையங்கள், உதிரிபாக டீலர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள், டயர் தொழிற்சாலைகள், உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் வாகன உற்பத்திக்கு ஈடாக உண்டாகும் வேலை வாய்ப்புகள். – Automotive Mission Plan, 2006-2016.

(6) வாகன உற்பத்தித் துறை வெளியிட்டுள்ள விவரங்களின்படி, 2018-19 நிதி ஆண்டில் வாகன விற்பனையைப் பொருத்தமட்டில் 34 லட்சம் கார்களும், 10 லட்சம் வர்த்தக வாகங்களும், 7 லட்சம் மூன்று சக்கர வாகங்களும், 2.12 கோடி இரு சக்கர வாகங்களும் விற்பனை ஆகியுள்ளன. Automobile Domestic Sales Trends

(7) தேவையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை வங்கியல்லாத நிதி நிறுவானங்கள் சந்திக்கும் நெருக்கடி நிலை தூண்டி விட்டது என்பதில் சந்தேகமில்லை. எனினும், நிதி நிறுவனங்கள் சந்திக்கும் நெருக்கடியும் கூட தேவையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் பாதிப்புக்கு உட்பட்டது தான்.

(8) டாடா குழுமம் சுமார் 9,750 கோடி மென் கடன் பெற்றுள்ளது. இந்தக் கடனை 20 ஆண்டுகளில் 0.1 சதவீத வட்டியோடு திருப்பிச் செலுத்தினால் போதும். இதைத் தவிற அரசு தரப்பில் நான்கு வழிச் சாலை இணைப்பு, மின் கட்டண விலக்கு, பதிவுக் கட்டண விலக்கு மற்றும் நிலத்தை மாற்றுவதற்கான கட்டண தள்ளுபடி என டாடா நிறுவனம் சலுகைகள் பெற்றுள்ளது. மேலும், அரசு தரப்பில் கழிவு சேகரிப்பு மையம் ஒன்றும், அகமதாபாத் நகரத்திற்கு அருகே நூறு ஏக்கர் நிலமும், இயற்கை எரிவாயு இணைப்பும் டாடா நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. குஜராத் அரசு ஒவ்வொரு டாடா நானோ காருக்கும் சுமார் 60,000 ரூபாய் அளவுக்கு மானியம் வழங்குவதாக காங்கிரசு கட்சி குற்றம் சாட்டியுள்ளது. Modi’s offer to Tata: Rs 9,570-cr soft loan


தமிழாக்கம் : ரவி வர்மன்
மூலக்கட்டுரை : – RUPE India 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க