ரபரக்கும் கிண்டி இரயில் நிலையம்… தனது இறுதி மூச்சை நிறுத்தக் காத்திருக்கும் தொழிற்பேட்டை இது. தமிழ்நாட்டு மக்களிடம் “Goback Modi’ என்று தொடர் உதை வாங்கிய மோடி தற்போது கட்டிப்பிடி வைத்தியம் செய்யக் கிளம்பியிருக்கிறார். அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். தேவையான நிலத்தைக் கையகப்படுத்தாமலேயே திருப்பூர் ஈ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். போதுமான நிதி, பட்ஜெட்டில் ஒதுக்காமல் மதுரையில் எய்ம்ஸ்-க்கு அடிக்கல் நாட்டினார். விளம்பரத்திற்காக மெட்ரோ ரயிலை தொடங்கி வைத்தார். இந்த கூத்துக்கள் அனைத்தையும் மீம்ஸ்-களாக்கி மோடியைப் பந்தாடுகிறார்கள் தமிழக இளைஞர்கள். நாமும் மோடி குறித்து தமிழக மக்களின் மனநிலையை அறிய சென்னையில் நகர்வலம் சென்றோம்.

ஆனந்தன், ஆட்டோ டிரைவர்.

அய்யய்யோ!  சார் மோடிக்கு ஓட்டா… கடந்த நாலரை வருசத்துல அவர் ஆட்சியில ஆட்டோ டிரைவரான எங்க மேலயே பலமுறை மோதிட்டாரு… நாங்க அந்த விபத்துலேருந்து மயிரிழையில தப்பிச்சிட்டோம். இனிமே நாங்க செத்தாலும் பிஜேபி-க்கு ஓட்டு போட மாட்டோம். மத்தவங்க கதய விடுங்க..என் கதய கொஞ்சம் கேளுங்க…

அஞ்சு ஆண்டுக்கு முன்ன மன்மோகன்சிங் ஆட்சியில ஆட்டோ வெலை ஆன்ரோடு ரூ. 1,05,000/- தான். இப்ப எவ்ளோ தெரியுமா, ரூ.1,90,000/- அது மட்டுமில்ல, ஒவ்வொரு ரேட்டும் தலைகீழா மாறிப்போச்சு. இன்சூரன்சு ஆண்டுக்கு ரூ.3000/- இருந்தது, இப்ப ரூ. 8500 ஆயிடுச்சு. ஒரு வருசத்துக்கு எஃப்.சி கட்டணம் ரூ.500-ஆ இருந்தது, இப்ப ரூ.1600/ ஆயிடுச்சு. ஆட்டோ பர்மிட் ரெனிவல் பண்றது ( 5 வருசத்துக்கு ஒரு முறை) ரூ.2000/-மா இருந்தது, இப்ப ரூ.7500. இது மட்டுமில்ல, ஆட்டோ ஸ்பேர்  பார்ட்ஸ்-ங்க இப்ப வாங்கவே முடியல, வண்டி திடீர்னு ரிப்பேர் ஆனா, உடனே எங்களால அத சரி பண்ண முடியல. அந்த காச ரெடி பண்றதுக்கு ரெண்டு நாளாகும்.

கிளட்சு வயரு , கியர் வயருன்னு எது எடுத்தாலும் விலைவாசி பல மடங்கு ஏறி போச்சு, 5 ரூபா இருந்ததெல்லாம் இப்ப 25ரூபா. 60 ரூபா இருந்த அவுட்டர் வயரு 190 ரூபா. என் வாய கெளராதீங்க.. நேத்து நைட்டு 9 மணிலேருந்து கண்ண முழிச்சி இன்னும் என் பாக்கெட்ல 500 ரூபா சேரல…. இப்ப காலை மணி பத்தாகுது…இன்னும் ஒரு சவாரி வரல…ஆனா, எனக்கு ஒரு நாள் செலவு ரூ.200. வண்டிக்கு பெட்ரோல் ஊத்தனும், மேற்கொண்டு வீட்டுக்கு எடுக்கனும் , வண்டிக்கு வாடகை கொடுக்கனும் , இத நெனச்சாலே தெனமும் தூங்க முடியல.

தண்டல் வாங்குன பணத்த திருப்பி கொடுக்க முடியல. அதுக்கே மாசம் வட்டி போகுது. இன்னொரு தடவ மோடி வந்தா நாங்க குடும்பத்தோட சாகனும் வேற வழியில்ல….

சுந்தர், எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி மாணவர்.

மோடி-பிஜேபி இவுங்களுக்கு சவுத் இண்டியான்னா குறிப்பா தமிழ்நாடுன்னா வேப்பங்காயா கசக்குது. தமிழ்நாட்டு வளத்த எப்படி அழிக்கிறது, அதன் வளர்ச்சிய எப்படி தடுக்குறதுன்னு தீயா வேல செய்றாங்க…ஸ்டெர்லைட், மீத்தேன்,  நியூட்ரினோ, எட்டுவழிச்சாலை, டிஃபென்ஸ் காரிடார் இப்படி எத எடுத்தாலும் அழிவுத்திட்டம் தான். அத வளர்ச்சித் திட்டம்னு ஏமாத்துறாங்க… இதுல எதுன்னா வளர்ச்சின்னா அது அவுங்களுக்குத் தான், ஆனா நமக்கில்ல…

திலீப், பாலக்காடு, கேரளா.

நான் 15 வருசத்துக்கு முன்னாலயே தமிழ்நாட்டுல குடியேறிட்டேன். சின்ன வயதில் 90-ம் ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்-இல் ஷாகா உறுப்பினராக இருந்து தீவிரமாக வேலை செய்தேன். அதில் போலீசுடன் பிரச்சினை ஏற்பட்டு இங்கே வந்துவிட்டேன். இருந்தும் ஆர்.எஸ்.எஸ். செய்த வேலை எனக்குப் பிடிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்-ன் முக்கிய நிகழ்ச்சிகளின் போது குறிப்பிட்ட நபரிடம் கொடியை ஏன் கொடுத்தீர்கள். அவன் வேற என்பார்கள். ஏனென்று கேட்டால் அதெல்லாம் விளக்கமாக பொதுவில் சொல்ல முடியாது என்பார்கள். கடைசியில் தான் தெரிந்தது, தலித் – தாழ்த்தப்பட்டவர்களை தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்வார்கள். ஆனால், அடிமைகள் மாதிரி நடத்துவார்கள், அதை நாசூக்காக செய்வார்கள். இது அங்கே எனக்குப் பிடிக்கவில்லை. இப்படி அங்கே ஆயிரம் குறை இருந்தாலும் நான் ஒரு இந்து இந்துத்துவவாதி என்பதில் எனக்கு பெருமையுண்டு. அதை விட்டுக்கொடுக்க மாட்டேன். நீங்கள் எல்லாரும் சொல்வது போன்று மோதி-ஜி எல்லாருக்கும் ரூ.15 இலட்சம் கொடுப்பதாகச் சொல்லவேயில்லை. அவர் சொன்னது வெளி நாட்டில் இருக்கும் கருப்புப் பனத்தைப் பிடித்தால் அவ்வளவு பணம் தேறும் என்பதுதான். நீங்கள் அதை பொய் பிரச்சாரமாக்கி மோதி-ஜியின் பேரைக் கெடுக்கிறீர்கள். இந்தத் தேர்தலிலும் மோடி தான் திரும்ப வரவேண்டும். ஆனால், நீங்கள் சொல்வது போன்று பசுவின் பெயரில் மனிதரைக் கொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. மாட்டையே கொல்வது தவறு எனும்போது மனிதனைக் கொல்வது எப்படி சரியாகும். இப்படி பிடிக்காத பிரச்சினைகள் ஆர்.எஸ்.எஸ்.-இல் இருக்கிறது. மற்றபடி பார்த்தால் பிஜேபி நல்ல ஆட்சிதான் கொடுத்துள்ளது. அது மீண்டும் வருவது நல்லதுதானே.

கல்யாணி, குடும்பத்தலைவி.

எனக்கு அவர சுத்தமா பிடிக்காது. அவருக்கு ஓட்டு போடமாட்டேன். கேசுக்கு மானியத்த பேங்குல அவர யாரு போடச்சொன்னது? அப்படி எதுவும் எந்த பணமும் ஒழுங்கா எங்களுக்கு வரல. இப்ப மட்டும் எலெக்சன் வருதுன்னு கேஸ் வெலய கொறச்சி கொடுக்குறாங்க…அத அப்பவே பண்ணிருக்கலாம்ல…இப்படி ஏமாத்துனா எங்களுக்குத் தெரியாதா….

சுரேஷ், தனியார் நிறுவன ஊழியர்.  (புகைப்படம் தவிர்த்தார்)

தமிழ்நாட்டில் பிஜேபி வருவதற்கான வாய்ப்புக்களே இல்ல, டீமானிட்டைசேஷன், ஜிஎஸ்டி வந்ததுக்கப்புறம் பொருளாதார வளர்ச்சிங்குறதே இல்லாம போச்சு….

குமாரவேல், சென்னைக் குடிநீர் வாரியம்.

அதிமுக-பாஜக கூட்டணி ஜெயிக்கிறது கஷ்டம் தான்… அந்தம்மா இருந்தப்ப பிஜேபி-காரங்க இவ்ளோ அராஜகம் பண்ணதில்ல…. கேஸ் சிலிண்டர் விலைய ஏத்துனாங்க, டிமானிட்டைசேஷன்-னு சொல்லி மக்கள அலைகழிச்சாங்க..பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து போச்சு, காய்கறி வெலையெல்லாம் ஏறிப்போச்சு, ஜிஎஸ்டி-ய கொண்டு வந்து தொழிலெல்லாம் முடங்கிப்போச்சு….இப்ப எத சொல்லி இந்த பிஜேபி காரங்க ஓட்டு கேட்டு வருவாங்கன்னு தெரியல…. மக்கள் இவுங்க விடுற கதையெல்லாம் நம்பமாட்டாங்க…..

படிக்க:
ஜார்கண்ட் – தொடரும் பட்டினி மரணங்கள் !
கோத்ரா ரயிலை எரித்தது நாங்கள்தான் ! பெண் சாமியாரின் ஒப்புதல் வாக்குமூலம் | காணொளி

கணேஷ், சவுத் இண்டியன் பேங்க் ஊழியர். (போட்டோ தவிர்த்தார்)

ஜி… நான் பாமக சப்போர்ட்டர், ஆனா அதிமுக-பிஜேபி கூட பாமக கூட்டணி வெக்கிறது எனக்கு பிடிக்கல….ஒரு வேள பாமக அவுங்க கூட கூட்டணி வெச்சா நான் நோட்டாவுக்குத் தான் ஓட்டு போடுவேன்.

அன்பழகன், தனியார் நிறுவன ஊழியர்.

வேலை நிமித்தமாக அவசர கதியில் சென்றுகொண்டிருந்தவரை இடைமறித்து கேள்வி கேட்டதும் புன்னகையுடன் பதிலளித்தார். பிஜேபி தமிழ்நாட்டில் ஜெயிக்க முடியாது சார். கேஸ் விலைய ஏத்திவிட்டது தான் எங்கள மாதிரி மக்கள ரொம்ப பாதிச்சிருச்சு, 400ரூபா இருந்த சிலிண்டர 800ரூபா ஆக்குனது மட்டுமில்லாம, நம்ம காசு கொடுத்து வாங்குனப்புறம் பணத்த பேங்குல போடுறேன்னு சொன்னாங்க…கையில அவ்ளோ காசு இருந்தாத்தானே சிலிண்டர வாங்கமுடியும்… ஆதார் கார்ட பேங்குல இணைக்கனும்னு சொல்லி எத்தன நாளு எங்கள அலக்கழிச்சாரு மோடி, மறந்துருவோமா?

சஜின், ராம், லயோலா கல்லூரி மாணவர்கள்.

மோடிய பத்தி என்னத்த சொல்றது… டீமானிட்டைசேஷன், ஜிஎஸ்டி, நியூட்ரினோ, மீத்தேன் திட்டம் இதெல்லாத்தையும் மறந்துட்டவுங்க வேனா மோடிக்கு ஓட்டு போடலாம். வீதி விருது வழங்கும் விழா-ன்னு எங்க காலேஜ்-ல ஒரு ஈவண்ட் நடந்துச்சு. அதுல சில ஓவியங்கள் அவுங்கள அவமதிச்சதுன்னு எச்.ராஜா, தமிழிசை-யெல்லாம் என்ன சவுண்டு விட்டாங்க தெரியுமா…இத்தனைக்கும் அந்த ஓவியங்கள் எல்லாமே நிஜத்தில நடந்ததுதான். வரஞ்சதுல என்ன தப்ப கண்டாங்கன்னு தெரியல…எங்க ஃப்ரண்ட் மீம்ஸ்-ல பிஜேபி-ய வெச்சு செய்வான். இப்ப அவன் வரல… தாமரை மலரவே மலராது ப்ரோ….

எட்வின்,  பேராசிரியர் – நூருல் இஸ்லாம் கல்லூரி – நாகர்கோவில்.

திமுக-காங்கிரஸ் கூட்டணி பிடிக்கலன்னாலும், அதிமுக-பிஜேபி-ன்னு பாக்குறப்ப இந்த நாலு பேத்த தவிர வேற யாராவது வந்தா பரவாயில்ல தான். சீமான், திருமா, வேல்முருகன் இவுங்கள்ல யாராவது வந்துட்டு போகட்டும். ஒருவேளை திமுக கூட வரலாமே தவிர பிஜேபி-யெல்லாம் வரவே கூடாது. பிஜேபி சாதி வெறி பிடித்தவுங்களுக்கான கட்சி. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துல முதுநிலைப் பொறியியல் முதலாமாண்டு படிக்கும் போது என்னோட ரூம் மேட்டா திருச்சி ஸ்ரீரங்கத்துலேருந்து ஸ்ரீராம்-னு ஒருத்தன் இருந்தான். ரூம் மேட்டா இருந்த வரைக்கும் ஒன்னா சாப்பிட போவோம், வெளியில சுத்துவோம்; ஹாஸ்டல்ல இருக்குற வரைக்கும் நார்மலா தான் பழகுவோம்… கேம்பஸ்ச விட்டு வீட்டுக்குப் போனப்புறம் அவன் பிராமினா இருப்பான், நான் தலித்தா இருப்பேன்…. இந்தக் காலத்துல அந்த மாதிரி நெலம கூட இருக்க விடாம பண்ணுது பிஜேபி கட்சி… ஆர்.எஸ்.எஸ். சொல்றத தான் பி.ஜே.பி. செய்யுது, ஆர்.எஸ்.எஸ் யாருக்கானது? அதுல உயர்சாதி இந்துக்கள் தான் இருக்க முடியும், வருணாசிரமம் சரின்னு சொல்லுற கட்சிய எப்படி ஆதரிக்க முடியும்? இன்னொருமுறை பிஜேபி ஆட்சிக்கு வந்தா என்ன நடக்கும்னு நெனச்சி கூட பாக்கமுடியல…

நசுருதீன், அஜ்மல், தனியார் நிறுவன ஊழியர்கள் – நசுருதீன் கேரள சிபிஎம் கட்சியில் உறுப்பினராக உள்ளார்.

எலெக்சன் நடக்கற நேரமா பாத்து தான் காஷ்மீர்ல குண்டுவெடிக்குது. ரஃபேல் ஊழல் பூதாகரமா வெடிக்கிற நேரத்துல இந்த மாதிரி திசை திருப்புறாங்களான்னு சந்தேகம் வருது. கேரளாவுல போன எலெக்சனப்ப காங்கிரஸ் வின் பண்ணுன இடத்துல தான் பிஜேபி ஜெயிச்சது. இந்த எலெக்சன்-ல கண்டிப்பா அது மாதிரி நடக்காது. நான் கேரளாவில இருந்தாலும், தமிழ்நாடு பிஜேபி-ய எதிர்க்கிறத வச்சு பாக்கும்போது ரெண்டு ஸ்டேட்டும் ஒரே மாதிரி தான் இருக்குறோம்னு தெரியுது. பிரிட்டிஷ் காரன் எப்படி டிவைட் அண்ட் ரூல்-னு நம்மள பிரிச்சி வச்சு கொள்ளையடிச்சானோ, அதே மாதிரி கொள்ளையடிக்கிற வேலயத்தான் பிஜேபி-யும் பண்ணுது…கேரளாவுல பிஜேபி ஜெயிக்கிறதுக்கு வாய்ப்பே இல்ல…தமிழ்நாட்டுல அப்படித்தான் நடக்கும்னு கேரளாகாரங்க நம்புறோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க