சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார் மோடி.
நெருங்கிவரும் ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இந்தத் திட்டத்தை அறிவித்தார்.
இரண்டு ஹெக்டேர் விவசாய நிலத்திற்குக் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மற்றும் ஆண்டுக்கு ஒன்றரை கோடிக்குக் கீழ் வியாபாரம் செய்யும் சிறு வணிகர்கள் மற்றும் சுயதொழில் முனைவோர் ஆகியோர் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடையத் தகுதி வாய்ந்தவர்கள். இத்திட்டத்தில் சேர்வதற்கு வயது வரம்பு 18 முதல் 40 வரையாகும்.
இந்தத் திட்டத்தில் பயனடைபவர், வருமானவரி செலுத்தும் அளவிற்கு வருமானம் பெறுபவராக இருக்கக் கூடாது. இந்த தகுதி உள்ளவர்கள் தங்களது பெயரை நாடு முழுவதும் இருக்கும் பொது சேவை மையங்களில் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ளலாம் என்று இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் சுமார் 25 லட்சம் சிறு வணிகர்களை இணைப்பதற்கும், 2023- 2024 – நிதியாண்டிற்குள் இந்த எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்துவதற்கும் அரசு இலக்கு வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 5 கோடி விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் இணைவார்கள் என்றும் இலக்கு வைத்துள்ளது.
இத்திட்டத்தின்படி 18 முதல் 40 வயதுக்குட்பட்ட விவசாயிகளும் சிறு வணிகர்களும் பிரீமியம் தொகையாக மாதம் ரூ. 55 முதல் 200 வரை தங்களது வயதுக்குத் தகுந்தபடி செலுத்த வேண்டும். இதே அளவு தொகையை மத்திய அரசும் அவர்களது ஓய்வூதியக் கணக்கில் செலுத்தும். அவ்வாறு 60 வயது வரை செலுத்திவந்தால், அவர்களுக்கு 60 வயது ஆனபிறகு மாதம் ரூ. 3000 ஓய்வூதியத் தொகையாகக் கொடுக்கப்படும்.
படிக்க :
♦ கேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம் – எதிர்காலக் கல்வி
♦ 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி | CCCE
அதாவது 40 வயது பயனாளர், மாதாமாதம் சந்தா தொகையை 20 ஆண்டுகள் தொடர்ந்து செலுத்தினால், அதற்குப் பிறகு மாதம் ரூ.3000 ஓய்வூதியமாக வழங்கப்படும். 18 வயது பயனாளர், மாதாமாதம் சந்தா தொகையை 42 ஆண்டுகள் தொடர்ந்து செலுத்தினால அவருக்கும் மாதம் ரூ. 3000 ஓய்வூதியமாக வழங்கப்படும்.
இன்றைய விலைவாசி நிலைமையில் மாதம் ரூ.3000-ஐ வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்தவேண்டும் என்றால் சாலையோரத்தில் தங்கிக் கொண்டு வாழ்ந்தால் கூட சாத்தியமில்லை. விலைவாசி ஏறும் வேகத்தில் இன்னும் 20 முதல் 42 ஆண்டுகள் கழித்து ரூ. 3000 என்பது ஒரு வார டீ செலவுக்குக் கூட போதாத தொகையாகவே இருக்கும்.
இன்னும் விரிவாகப் புரிந்து கொள்ள சற்றுப் பின்னோக்கிச் செல்வோம். கடந்த 1980-ம் ஆண்டில் மாதச் சம்பளம் ரூ. 400 என்பது ஒரு நடுத்தவர்க்கம் இரண்டாம் தட்டு நகரத்தில் வாழ்வதற்குப் போதுமான தொகையாக இருந்தது. அதே ரூ. 400 மாத வருமானத்தைக் கொண்டு 2000-ம் வருடத்தில் அந்தக் குடும்பம் என்ன செய்திருக்க முடியும் ? 5 நாள் செலவுக்குக் கூட போதாத தொகை அது.
நடப்பு 2019-ம் ஆண்டில் ரூ.400-ஐ வைத்துக் கொண்டு ஒரு குடும்பம் என்ன செய்ய முடியும்? ஒருநாள் செலவுக்குத்தான் அது போதுமானதாக இருக்கும். இத்தனைக்கும் 2000-க்குப் பின்னரே விலைவாசி ஏற்றம் பெருமளவு அதிகரித்தது. இன்று ஜெட் வேகத்தில் அதிகரிக்கும் விலைவாசியை இதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மோடியின் அறிவிப்பு மிகப்பெரிய பித்தலாட்டம் என்பதும், விவசாயிகளிடமும் சிறு வணிகர்களிடமும் இருக்கும் பணத்தையும் சதித்தனமாக பறித்து நிதியாதிக்கக் கும்பலுக்கு தாரைவார்க்கும் திட்டம் என்பது கண்கூடு.
ஏற்கெனவெ பிடித்தம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் வைப்பு நிதியையும், அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் தொகையையும் பங்குச் சந்தையில் தனியார் நிதி நிறுவனங்கள் சூதாடுவதற்கு உகந்த வகையில் திறந்து விட்டிருப்பது ஊரறிந்த விசயமே..
இந்த கொள்ளை வரம்பிற்குள் இன்னும் வராத விவசாயிகளையும் சிறு வியாபாரிகளையும் கொள்ளையடிக்க இப்படி ஒரு திட்டத்தையும் கொண்டு வந்திருக்கிறது மோடி அரசு.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்… மற்றுமொரு கேள்வி நம்முன்னே யதார்த்தமாக வந்து நிற்கிறது. விவசாய விளைபொருளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்காமல், விவசாயிகளை ஓட்டாண்டிகளாக நகரத்தை நோக்கி வீசியெறிகிறது மோடி அரசு.
படிக்க :
♦ பொருளாதார வீழ்ச்சி : மறைக்கும் நிர்மலா ! வீதிக்கு வரும் ஆதாரங்கள் !
♦ விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பு – பாஜக அரசின் பட்ஜெட் நாடகம் !
இதே மோடி அரசுதான் இரண்டாண்டுகளுக்கு முன்னர் பணமதிப்பழிப்பையும், ஜி.எஸ்.டி வரியையும் விதித்து சிறு வணிகர்களையும், சுயதொழில் முனைவோர்களையும் தொழிலில் இருந்தே துரத்தியடித்து தொழிலாளர்களாகவும், உதிரித் தொழிலாளர்களாகவும் வீசியெறிந்தது.
ஒரு பக்கம் சிறு விவசாயிகளையும், சிறு குறு வணிகர்களையும் படிப்படியாக அழித்துக் கொண்டு, இன்னொரு பக்கம் அவர்களுக்கு இன்னும் 20 – 40 ஆண்டுகளில் ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் பகட்டாக மோடி அறிவித்திருப்பது யாரை ஏமாற்ற ?
நந்தன்
செய்தி ஆதாரம் : தி வயர்
ஏற்கனவே தொழிலாளர் ஓய்வூதியத்தை உயர்திக்கொடுக்க உச்சநீதிமன்றம் சொல்லியும் அதை கிடப்பில் போட்ட புண்ணியவாளன் இவரா விவசாயிகளுக்கும் நன்மைசெய்ய போறாரு