விவசாயிகள் வாழ்க்கையை தான் முன்னேற்றப் போவதாகவும் அவர்களின் வருவாயை இரட்டிப்பு ஆக்குவதாகவும் கூறி மீண்டும் ஆட்சிக்கு வந்தது பா.ஜ.க அரசு. ஆனால் தன்னுடைய  2019 ஆண்டு பட்ஜெட் மூலம்  விவசாயிகளின் வாழ்வில் மறுபடியும் இருண்ட அத்தியாயத்தைத் தான் எழுதி இருக்கிறது.

இந்த ஆண்டு 2019 தேர்தல் அறிக்கையில்  இருபது லட்சம் கோடி ரூபாய் விவசாய துறையில் முதலீடு செய்யப்படும் என்று மார்தட்டிய பா.ஜ.க, முதல் ஆண்டில் விவசாய அமைச்சகத்துக்கு ஒதுக்கிய தொகை வெறும் ரூ. 1,30,485 கோடி மட்டுமே. இது கடந்த ஆண்டில் விவசாயத் துறைக்கு ஒதுக்கிய ரூ. 67,800 கோடியை விட அதிகமாக இருப்பதுபோல ஒரு தோற்றத்தை உருவாக்கலாம். ஆனால் இத்தொகையிலிருந்து பிரதான் மந்திரி கிசான் திட்டத்திற்கு ஒதுக்கிய தொகை மட்டும் ரூ. 75,000 கோடி.

பிரதான் மந்திரி கிசான் திட்டம் விவசாய உற்பத்தித் திறனை அதிகரிக்கப் போவதில்லை. இது போன்ற திட்டங்கள் விவசாயிகள் வாழ வழியில்லாமல் நிர்கதியாக நிற்பதற்கு ஆதாரமாக இருக்கிறது. விவசாய நெருக்கடியைத் தீர்ப்பதில் இந்த அரசு தோல்வியுற்றதைத்தான் இது போன்ற திட்டங்கள் காட்டுகின்றன.

தன் தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. குறிப்பிட்ட காலவறையக்குள் 100% நீர்ப்பாசனத் திறனை விரிவாக்குவோம் என்று கூறியிருக்கிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.4,000 கோடி நீர்ப்பாசனத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு வெறும் ரூ. 3,500 கோடி மட்டும்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது சென்ற ஆண்டை விடக் குறைவு. பிறகு எப்படி நீர்ப் பாசனத்திறனை 100% அதிகரிக்க முடியும்?

2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருவாயை இரட்டிப்பாக்குவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக மார்தட்டுகிறது பா.ஜ.க-வின் 2019 தேர்தல் அறிக்கை. ஆனால் அதன் பட்ஜெட்டில் விவசாய வருவாய் இரட்டிப்பு பற்றி எந்த விதமான காத்திரமான திட்டமும்  இல்லை.

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பு ஆக்குவதுதான் தன்னுடைய கனவு என்று பிப்ரவரி 2016-ம் ஆண்டிலிருந்து வாய்ச்சவாடால் அடித்துக்கொண்டு வருகிறார் மோடி. இதற்கு ஒரு தொலை நோக்குத் திட்டம் அவசியமாக இருப்பதாக மோடி கூறி மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டன. நான்கு பட்ஜெட்கள் பா.ஜ.க அரசு கொண்டு வந்து விட்டது. அந்த இரட்டிப்பு நாடகம்தான் நடக்கவில்லை.

மேலும் 2016-ம் ஆண்டிலிருந்து விவசாயிகளின் போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. விவசாய வருவாய் வீழ்ச்சி மோசமாகி வருகிறது.

படிக்க:
ஆதார் மேனியா : ஆதார் இல்லாமல் சாகக் கூட முடியாதா ?
தஞ்சாவூர் : உழைக்கும் மக்களை விரட்டிவிட்டு யாருக்கு ஸ்மார்ட் சிட்டி ?

இந்த பட்ஜெட்டில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய – மாநில அரசுகளோடு சேர்ந்து E-NAM , விவசாயப் பொருட்களின் சந்தைப்படுத்துதல் குழு மூலம்  விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற பழைய பல்லவியைத்தான் திரும்ப பாடியிருக்கிறார்.

விவசாய நெருக்கடியை தீர்ப்பது பற்றி தீர்க்கமான  திட்டம் இல்லாமல், செலவில்லா விவசாயம் குறித்து நிர்மலா பரபரப்பூட்டுகிறார். எவ்வாறு விவசாயிகள்  வருவாய் இரட்டிப்பு ஆக்கப்படும் என்ற தெளிவான விபரங்களோ, திட்டங்களோ இல்லாமல் வெற்று வாய்ச்சவடால் பட்ஜெட்டாகத்தான் உள்ளது.

விவசாய வருவாய் இரட்டிப்பு என்ற நாடகத்தை இப்போதும்  மோடி அரசு பேசிவருகிறது. ஆனால் விவசாயிகளைப் பொருத்தவரையிலும், உள்ள வருவாயே வராத நிலைதான் தொடர்கிறது.


பரணிதரன்
நன்றி : நியூஸ் கிளிக்ஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க