5000-க்கும் மேற்பட்ட வீடுகளையும் 1000-க்கும் அதிகமான சிறுவணிகர்களையும் விரட்டிவிட்டு யாருக்கு ஸ்மார்ட் சிட்டி?

ஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி (பொலிவுறு நகரம்) என்ற பெயரில் நகரின் மையப்பகுதியான மேல அலங்கம், வடக்கு அலங்கம், சேவப்பநாயக்கன் வாரி ஆகிய இடங்களில் வசிக்கும் சுமார் 8000 ஏழை எளிய குடும்பங்களை விரட்டியடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது மாநகராட்சி. அதேபோல் பழைய பேருந்து நிலையம், கீழவாசல் மார்க்கெட், பெரிய மார்க்கெட் (காமராஜர் மார்க்கெட்) ஆகிய இடங்களில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட சிறு வணிகர்களையும் அப்புறப்படுத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. இதனால் பொதுமக்களும், சிறுவணிகர்களும் அச்சமடைந்துள்ளனர். அரசின் இந்தச் செயல் அநீதியானது, மக்கள் விரோதமானது

மத்திய அரசு அறிவித்துள்ள 200 ஸ்மார்ட் சிட்டிகளில் ஒன்றுதான் தஞ்சாவூர். சுமார் 1290 கோடி செலவில் உருவாகப்போகும் தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி தஞ்சை மக்களுக்கு நவீன வசதிகளைத் தந்து வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் அரசின் திட்டமல்ல. தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி என்பது கம்பெனிகள் சட்டத்தின்படி பதிவு (எண்.114311) செய்யப்பட்ட ஒரு வியாபார நிறுவனம். அரசு, நிதி நிறுவனங்கள், தனியார் முதலாளிகள் எனப்பலரும் மூலதனம் போட்டு இலாபம் சம்பாதிக்கும் நோக்கத்திற்கானதே தவிர ஏழை எளிய மக்களுக்கு வசதி செய்து தருவதற்கல்ல.

கீழ்அலங்கம் பகுதியில் இடிக்கப்பட்ட வீடுகள்.

தஞ்சாவூர் நகரம் பெருமளவு சுற்றுலாவைச் சார்ந்துள்ளது. இந்தத் தொழிலை மேம்படுத்தி இலாபம் சம்பாதிக்க வேண்டுமென்றால் பெரிய கோயில், சரசுவதி மகால் அரண்மனை ஆகிய இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை அழகுபடுத்த வேண்டும். அதிநவீன குடியிருப்புகள், பிரமாண்டமான வணிக வளாகங்கள், கட்டப்படும். இதை பயன்படுத்தி ஒருசில தனியார் முதலாளிகள் கொள்ளையடிக்கத்தான் இப்பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான வீடுகளையும் கடைகளையும் ஈவிரக்கமின்றி இடிக்கத் துடிக்கிறது மாநகராட்சி.

படிக்க :
எது வளர்ச்சித் திட்டம் ?
கவுரி லங்கேஷ் , கல்புர்கி படுகொலை : ரப்பர் தோட்டத்தில் பயிற்சி எடுத்த சனாதன் சன்ஸ்தா !

மேல அலங்கம், வடக்கு அலங்கம், சேப்பநாயக்கன் வாரி ஆகிய இடங்களில் வாழும் காய்கறி விற்போர், ஆட்டோ ஓட்டுவோர், தையல் தொழில் செய்வோர், பிளம்பர், எலக்ட்ரீசியன் போன்ற உழைக்கும் மக்கள் தான் தஞ்சை நகரம் உயிர்போடு இருப்பதற்கு அடிப்படை. பழைய பேருந்து நிலையம், கீழவாசல் மார்க்கெட், பெரியமார்கெட், ஆகிய இடங்களில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவணிகர்கள்தான் நகரத்தில் உள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு ஓரளவு மலிவான விலையில் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுகின்றனர். இவர்கள் தான் இந்த நகரத்தை உருவாக்கியவர்கள், இந்த நகரத்தோடு இரத்தமும் சதையுமாக பிணைந்துள்ளவர்கள். பெற்ற தாயிடமிருந்து குழந்தையைப் பறிப்பது போல சுமார் 40 ஆயிரம் பேரை வெளியேற்றிவிட்டு தஞ்சை நகரை பணக்காரர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் உல்லாசபுரியாக்க வெறி கொண்டு அலைகிறது அரசாங்கம். இந்த அநீதியை எப்படி அனுமதிப்பது?

தஞ்சை நகரம் நமக்குச் சொந்தமானது. இங்கு வாழும் நமது உரிமையைப் பறிக்க எவருக்கும் அதிகாரம் இல்லை. நமது குடியிருப்பு, தொழில், வேலை, நமது குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் எல்லாவற்றிற்கும் இந்த இடம்தான் அடிப்படை. உயிரே போனாலும் வெளியேற்ற அனுமதிக்கக்கூடாது. யாராவது தீர்த்துவைக்க மாட்டார்களா என ஏங்குவதோ அல்லது யாரோ ஒரு தலைவர் போராடி பெற்றுத் தருவார் என நம்புவதோ பேதமை. வீதிக்கு வராமல் அஞ்சி நிற்பதால்; எந்தப் பலனுமில்லை எதிர்த்து நிற்பதே ஏற்ற வழி!

♦ பட்டா இல்லையென சட்டம் பேசுகிறார்களா? பட்டாக் கொடு! கொடுப்பதில் என்ன பிரச்சினை என்று கேளுங்கள்!

♦ போலீசு வந்து மிரட்டுகிறதா? சிவில் பிரச்சனையில் உனக்கென்ன வேலை எனக் கேளுங்கள்! சாஸ்திரா பல்கலைக்கழகம் அபகரித்த அரசு நிலத்தை எடுத்துவிட்டு வா என திருப்பி அனுப்புங்கள்!

♦ ஏழை உழைப்பாளிகளின் வீடுகளால் நகரின் அழகு கெடுகிறது என்றால், இது நம்மையும் நமது உழைப்பையும் அவமானப்படுத்தும் செயல் அல்லவா?

♦ நம்மை வெளியேறச் சொல்பவர்கள் பணக்காரர்களுக்கான உல்லாசபுரியை ஏழைகளே இல்லாத இடத்தில் அமைத்துக்கொள்ள வேண்டியதுதானே?

உழைக்கும் மக்களே!

♦ 8 வழிச்சாலை, ஹைட்ரோகார்பன் திட்டம் என பட்டா நிலத்தையே பறிக்கும் அரசு புறம்போக்கு நிலத்தை அவ்வளவு எளிதில் விட்டுவிடுமா? ஆனால், உழைக்கும் மக்கள் ஒன்றாக திரண்டால் முடியாதது எதுவுமில்லை. மக்களின் ஒற்றுமை என்ற ஆயுதத்திற்கு முன்னால் அரசின் எல்லா ஆயுதங்களும் மண்ணைக் கவ்வியதுதான் வரலாறு.

♦ நமது வாழ்வாதாரத்தைக் காக்க, நமது குடியிருப்பை நிரந்தரமாக உரிமையாக்கிக்கொள்ள ஓரணியில் திரள்வோம்! அரசின் மக்கள்விரோத திட்டத்தை முறியடிப்போம்!

தகவல்:
மக்கள் அதிகாரம்,
தஞ்சை.
தொடர்புக்கு : 94431 88285
93658 93062

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க