ஒரு தொழிலாளி. வாய் பேசமுடியாதவர். ஒரு நிறுவனத்தில் ஆபீஸ்பாயாக வேலை பார்த்தார். 2016-ல் சொந்தப் பிரச்சினையில் வேலையில் இருந்து தானாகவே நின்றுவிட்டார்.

உடல்நிலை குறைவால் 2017-ல் இறந்துவிட்டார். அவருக்கு திருமணமாகவில்லை. அப்பா இல்லை. வயதான தாயார் மட்டுமே. இறந்தவருடைய பி.எஃப் தொகையை வாங்கிக் கொடுத்தால், அந்த அம்மா கொஞ்ச காலத்திற்கு நிம்மதியாக இருப்பார்.

படிக்க :
முகிலன் கடத்தப்பட்டதற்கு யார் காரணம் ? கருத்துக் கணிப்பு
கியூபாவில் ஒருவர் பணக்காரனாக உருவாகவே முடியாதா ?

அவருடைய பி.எஃப் தொகையை அந்த அம்மா பெற, உரிய விண்ணப்பம், வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், வங்கிக் கணக்கு, இறந்தவருடைய பள்ளிச் சான்றிதழ், வாக்காளர் அட்டை என எல்லாவற்றையும் வைத்து விண்ணப்பித்தோம்.

அந்த பி.எஃப் அதிகாரி “இறந்தவருக்கு ஆதார் இல்லையா? பான் இல்லையா” என்றார்.

“வேலை பார்த்தது ஆபிஸ் பாய். அவருக்கு பான் கார்டு எல்லாம் எப்படி மேடம்?” என்றேன்.

“இப்ப எல்லாம் எல்லோரும் பான்கார்டு வைத்திருக்கிறார்கள்” என்றார் அபத்தமாய்!

ஆதார் இல்லையெனில் கல்லறையிலும் இடமில்லை

“ஆதார் நீங்கள் இணைக்கவில்லை. அதைக் கொண்டு வாருங்கள்” என சொன்னார்.

“இறந்தவருடைய குடும்பத்தாரிடம் முதலில் ஆதார்தான் கேட்டோம். அவர் எடுக்கவில்லை என்றார். பிறகுதான் அவர் பெயரில் என்னவெல்லாம் இருக்கிறதோ அதை எடுத்து வாருங்கள் என்றோம். அப்படி சொன்னதால்தான், பள்ளி சான்றிதழ், வாக்காளர் அட்டை எடுத்து வந்தார்கள்” என்றேன்.

“ஆதார் இல்லாமல் இருக்காது. அதைக் கொண்டு வரச் சொல்லுங்கள்” என தொடர்ந்து அடம்பிடித்தார்.

எரிச்சலாகி “மீண்டும் ஒருமுறை கேட்டுப்பார்க்கிறேன்” என சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.

அந்த வயதான தாயாரை இன்னும் எவ்வளவு காலத்திற்கு அலையவிடப் போகிறார்களோ எனக் கவலை வந்தது.

***

1/7/2017-லிருந்து ஆதார் இருந்தால்தான், பி.எஃப் இருக்கும் நிறுவனத்தில் ஒரு தொழிலாளி வேலை செய்ய முடியும். இல்லையென்றால், வேலை செய்ய முடியாது. பி.எஃப். இல்லாத நிறுவனமாகப் பார்த்து வேலை செய்து பிழைத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள்.

ஆதாரில் ஏதேனும் திருத்தம் இருந்தாலும், பி.எஃப் தளம் அனுமதிப்பதில்லை. நம் நாட்டில் கூப்பிடுவதற்கு ஒரு பெயர். சான்றிதழில் ஒரு பெயர் இருக்கும். மேலே இறந்தவருடைய பெயரை, நிறுவனத்தில் “பாபு” என அழைப்பார்கள். அப்படித்தான் அலுவலக பதிவேட்டிலும் இருக்கிறது. செத்துப்போன பிறகு “சிட்டிபாபு” என சான்றிதழ் தருகிறார்கள். சான்றிதழில் ஒரு பிறந்ததேதி. ஆதாரில் ஒரு பிறந்ததேதி இருக்கும். ஆதாரில் வருடம் மட்டும் இருக்கும். பிறந்த தேதி, மாதம் இருக்காது. இதையும் பி.எஃப் தளம் அனுமதிக்காது.

கடந்த ஒரு வருடமாக, பி.எஃப் பணத்தை திரும்பப் பெற ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும் எனச் சொல்லிவிட்டார்கள். அதிலும் பல குழப்பங்கள். அவருடைய தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் பி.எஃப் தளத்திலும், அவர் வைத்திருக்கிற ஆதார், பான், வங்கிக் கணக்கு என சரியாக இருக்கவேண்டும். அதன்பிறகு, ஆதாரில் நம்முடைய செல்பேசி இணைக்கப்பட்டிருக்கவேண்டும். அதுவும் அந்த எண் இப்பொழுது நம் கையில் வைத்திருக்கவேண்டும். மேலே சொன்ன குழப்பங்கள் இருக்கும் பொழுது, தொழிலாளர்கள் என்ன செய்வார்கள்?

பி.எஃப். தொகையை எடுக்க ஆதார் அவசியம் என்பதை எதிர்த்து வழக்கு (செய்தி : தினகரன்)

பி.எஃப் அலுவலகம் எப்பொழுது சென்றாலும், 300, 400 பேர் வரிசையில் நின்றுகொண்டிருக்கிறார்கள். ஒரு விண்ணப்பத்தை வாங்கிப் பொறுமையாக பார்த்து, எதுவெல்லாம் இல்லை? என பார்த்துச் சொல்வதில்லை. இரண்டு குறைகள் சொல்வார்கள். பர்மிசன், விடுமுறை எடுத்து அந்த தொழிலாளி அலைந்து திரிந்து அதையெல்லாம் சரி செய்து கொண்டு வருவார். அடுத்து இரண்டு விசயங்கள் இல்லை என்பார்கள். இப்படி தொழிலாளர்கள் தங்களுடைய பி.எப் பணத்தை வாங்குவதற்கே தொடர்ந்து அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

இந்த பட்ஜெட்டிலும் ‘ஆதார்’மேனியா அதிகரிக்கப்பட்டிருக்கிறது. பான் கார்டு இல்லாமலே இனி தனிநபர் வருமான வரி தாக்கல் செய்யலாம் என்றார் நிதி அமைச்சர். அப்படி தாக்கல் செய்தபிறகு, வீட்டிற்கே பான் கார்டு அனுப்பி வைப்போம் என பான் கார்டு அலுவலகம் இன்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

படிக்க :
ஆதார் உச்சநீதிமன்றத் தீர்ப்பு : கட்டாயமில்ல … ஆனா கட்டாயம்தான் !
ஆதார் : பார்ப்பனியத்தின் டிஜிட்டல் பாசிசம் !

மோடி அவர்கள் விழுந்து கும்பிட்ட மக்களவையில், ஆக்கப்பூர்வமாக விவாதித்து ஆதார் திட்டத்தை அறிமுகப்படுத்தவில்லை. கொல்லைப்புறமாகத்தான் கொண்டு வந்தார்கள். மாநிலங்களவையில் செல்வாக்கு இல்லாததால், பண மசோதாவாக (Money Bill) அறிமுகப்படுத்தினார்கள்.

உச்ச நீதிமன்றத்திலும் பல கோடி பேர் எடுத்துவிட்டார்கள் என நைச்சியமாய் விவாதித்தார்கள். இதோ, இப்போது அத்திவரதரைப் பார்க்கவேண்டும் என்றாலும் ஆதார் வேண்டும் என சொல்லிவிட்டார்கள்.

‘ஆதார்’மேனியா அதிகரித்துக்கொண்டே போகிறது. இது அதிகபட்சமாக எங்கே போய் முடியும் என தெரியவில்லை!

குருத்து

4 மறுமொழிகள்

  1. ஆதார் வந்த பின்தான் போலி ரேஷன் கார்டு, போலி கேஸ் கனெக்ஷன், போலி ஆசிரியர் மாஸ்டர் ஒழிக்கப்பட்டது.

    • இறந்தவருக்கு நீதி கேட்கிறது இந்த பதிவு. அரசின் குரலையே நீங்களும் திரும்ப சொன்னால் எப்படி?

  2. ஆதார் வந்த பிறகுதான் நான் என்னுடைய இரண்டாவது கேஸ் கனெக்ஷன், இரண்டாவது வாக்காளர் அட்டையை வாங்கினேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க