ந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மின்னணுப் பொருட்கள் விற்பனை செய்யுமிடம் சென்னை ரிச்சி தெரு. உலகின் அதிநவீன மின்னணுப் பொருட்கள் அனைத்தும் முதன்முதலில் தமிழகத்தில் நுழையும் இடமும் இதுவே.

இங்கு மின்னணுப் பொருட்கள் பழுது நீக்கும் சிறிய மற்றும் பெரிய கடைகள் ஏராளம். கிட்டத்தட்ட 2,000-க்கும் மேற்பட்ட கடைகளைக் காணலாம். வியாபாரம் மட்டுமின்றி, ஒவ்வொரு புதிய வரவையும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து அலசிப் பழுது நீக்கும் நிபுணர்களையும் பார்க்க முடியும். தமிழகத்தின் பலதரப்பட்ட மனிதர்கள் இங்கு வந்து செல்கிறார்கள். அச்சாலையின் இருமருங்கிலும் கைப்பேசி கடைகள் இருப்பதைக் காணலாம். அதில் விற்பனையுடன் பழுதுநீக்கம் செய்வதும் உண்டு.

அவ்வீதியில் ‘மொபைல் விசன்’ என்ற கடையில் இளைஞர்கள், வயதானவர்கள் எனச் சிலர் தங்களது கைப்பேசிகளை கொடுப்பதும், வாங்கிச் செல்வதுமாக இருக்கிறார்கள்.

ஒவ்வொரு கைப்பேசிக்கும் ஓராயிரம் பிரச்சினைகள்: சவுண்ட் வரவில்லை, பிக்சர் மங்களாகத் தெரிகிறது, அதுவாகவே ஆஃப் ஆகிறது, ஓவர் ஸ்பீடாகிறது, ஃபோன் கான்டாக்ட் திடீரென காணவில்லை; முக்கியமான ஆஃப் இயங்கவில்லை; கீழே விழுந்து விட்டது; பாத் ரூமில் விழுந்து விட்டது; பேட்டரி நிற்கவில்லை; சார்ஜ் ஆகவில்லை… இப்படி பல புகார்களை சொல்லிச் செல்கின்றனர்.

கடை உரிமையாளர் முகம்மது உவைஸிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு, தொழில் நிலவரத்தைக் கேட்டோம்.

“கம்பெனியில சாதாரணமான வேலை செய்வோர் மற்றும் சிறு வியாபாரிகளே இங்கு வருகின்றனர். கடையின் தோற்றத்திற்கு ஏற்ற மாதிரிதான் அதன் வாடிக்கையாளர்களும் இருப்பார்கள். பிரதான சாலைகளில் இருக்கும் பிரமாண்டமான கடைகளுக்கு முதல்தர கஸ்டமர்கள் போய் விடுவார்கள். எங்கள மாதி சிறு சந்துபொந்துகளில இருக்கிற கடைகளுக்கு பேரம் பேசும் வாடிக்கையாளர்களே வருவார்கள்.

‘மொபைல் விசன்’ கடை உரிமையாளர் முகம்மது உவைஸ்.

அதிகபட்சம் ரூ. 15 ஆயிரம் 20 ஆயிரம் சம்பாதிப்பவர்கள், மிட் ரேஞ்ச் என்று சொல்லக்கூடிய ஃபோனைத்தான் பயன்படுத்துவார்கள். 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து வாங்கியிருப்பார்கள். எம்.ஐ, சாம்சங், வைவோ, ஓப்போ, ஹானர் இதுதான் இப்போ மிட் ரேஞ்சில் டாப் பிராண்ட். ஒழுங்காக வைத்திருந்தால் ஓராண்டுக்கு பிரச்சினை இருக்காது. வாங்கியது மாதிரி தொடர்ச்சியாக பராமரிக்க மாட்டார்கள். கண்டபடி வைப்பது, குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருளாகக் கொடுப்பது, ஓயாமல் அதை நோண்டுவது, மனைவி மீது இருக்கும் கோபத்தை அதன் மீது காட்டுவது, காதலர்கள்கிட்டே பிரச்சினை வரும்போது ஃபோனை விசிறி எறிவது… என்று அதன் ஆயுளை பாதியிலேயே முடித்து விடுவார்கள்.

படிக்க:
இசையும் குழந்தைகளுக்கான கல்வி போதனையும் !
♦ குன்றத்தூரில் குழிகளுக்கு கொண்டாட்டம் | படக் கட்டுரை

நாங்கள் பேட்டரி, டிஸ்ப்ளே மாற்றுவதற்கு 1,000-லிருந்து 1,200 வரை சார்ஜ் செய்வோம். சவுண்ட் வரவில்லை, ஆன் ஆகவில்லை, சூடாகிறது போன்ற பிரச்சினைகளுக்கு அதிகபட்சம் 500, 600 ரூபாயில் முடித்து விடுவோம்” என்றார்.

“ஃபோனில் பிராண்ட்டைத் தாண்டி, எதை முக்கியமாக வாடிக்கையாளர்கள் கருதுகிறார்கள்? புது ஃபோன் வாங்கும்போது எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்?” என்றோம்.

கைப்பேசியில் என்ன பிரச்சினை எனப் பார்த்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக பழுதுநீக்கி வாடிக்கையாளர்களிடம் ஒப்படைத்து விடுகிறார்கள்.

“வயது, வயசுக்குத் தகுந்த மாதிரி அவர்களது தேவையும் மாறுது. இளைஞர்கள் கேமராவுக்கும், வியாபாரிகள் பளிச்சென தெரியும் ஸ்கிரீனுக்கும், மார்கெட்டிங் வேலை செய்றவங்க ஸ்பீடுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. இப்போ, 4 கேமரா ஃபோன், டிஎஃப்டி, அமோல்டு (Active-Matrix Organic Light-Emitting Diode) ஸ்கிரீன்; வெறும் ஸ்டீரியோவுக்கு பதில் டால்ஃபி ஸ்டீரியோ, 1 ஜிபி, 2 ஜிபி ரேம் போயி இப்போ 12, 24 ஜிபி ரேம் என்று பார்த்துப் பார்த்து பாக்கெட்டிற்குள் போடுவதற்குள் அடுத்த மாடல் வந்து விடுகிறது. எதை வாங்குவது, எதை விடுவது என்று தெரியாமல் குழம்பி வெறுத்துப் போகிறார்கள்.

இப்படி எத்தனை முறை ஃபோனை வாங்கினாலும் திருப்தியடையாமல் இல்லாத மாடலுக்காக ஏங்குகிறார்கள். கார்பென்டர், பிளம்பரை போல ஃபோனை, தேவைக்கான ஒரு டூலாக பார்க்காமல், பெண்கள் நகை வாங்குவது போல் வாங்குகிறார்கள்.

இன்னும் பெரிய அளவு செல்ஃபோனை வெளியில் தெரியும்படி வைத்துக்கொள்வதை சிலர் விரும்புகிறார்கள். அதிலும், நல்ல பிராண்டாக இருந்தால் கூடுதல் பெருமை அடைகிறார்கள். ஷேர் மார்கெட் பிசினெஸ், மெயில் அனுப்புறது, கஸ்டமர்களுக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்புவது, பிசினெஸ் ஆர்டர் கேட்பது, மணி டிரான்ஸ்பர் செய்வது… இப்படி தேவையைக் கருதி ஒருசிலர்தான் பயன்படுத்துகிறார்கள். மற்றபடி 99 சதவீதம் பேர் பொழுதுபோக்குக்காகத்தான் பயன்படுத்துகிறார்கள்” என்றார்.

***

மதங்கள் கடந்து ஒன்றுசேர்ந்தோம் ! இப்போ, கடன்தான் மிச்சமிருக்கு !

தே தெருக் கோடியில், இன்னும் உட்புறமாக 5-க்கு 5 அடி அளவுள்ள சிறு கடையில் (கடை என்று சொல்ல முடியாது, கட்டிடத்தின் விரிவாக்கப்பட்ட தாழ்வாரப்பகுதி) வாடிக்கையாளரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பழைய கைப்பேசிகள் விற்பனை மற்றும் பழுது நீக்கம் செய்யும் கடைக்குச் சென்றோம். முகம் தெரியாத நம்மிடம், தொழிலில் ஏற்பட்டிருக்கும் கஷ்டங்கள் பற்றி மனம் திறந்து கொட்டினார்கள்.

பழைய கைப்பேசி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை நடத்தும் நியாமதுல்லா, உதயகுமார்.

“வாங்க, வாங்க… இப்பதான் தண்டல் பணத்தை எப்படி  அடைப்பது என்பது பற்றி பேசிக்கொண்டிருந்தோம். நாங்க மூன்று பேரும் நண்பர்கள். பார்ட் டைமாக சேர்ந்தவர்கள், இப்போ முதலாளியாகி சிறு கடையை நடத்துகிறோம்.

முருகன், நியாமதுல்லா, உதயகுமார் – நாங்க மூன்று பேரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். அதெல்லாம் எங்களுக்கு பிரச்சினையில்லை. இப்போ தொழில் நடக்கல என்பதுதான் ஒரே பிரச்சினை. நீங்களே பாருங்கள், அரை டஜனுக்கு மேல் தண்டல் நோட்டுகளை வைத்துக் கொண்டு எதைக் கட்டுவது, எதை நிறுத்துவது என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் சுயமாகக் கற்றுக் கொண்டு இந்தத் தொழிலுக்கு வந்தோம். பல வேலைகளில் மிச்சம் பிடித்தப் பணத்தில் சிறு தொகையை பங்காகப் போட்டு கடையை கூட்டாக நடத்திக் கொண்டிருக்கிறோம். பழைய ஃபோன் சர்வீஸ் செய்வது, விற்பது  என்று ஒன்றுசேர்ந்தோம். இப்போது கூட்டாக எங்களுக்குள் கடன்தான் மிச்சமிருக்கிறது.

நியாமதுல்லா, உதயகுமாரின் மற்றொரு பார்ட்னர் முருகன் (எ) டேனியல்.

மாதமாதம் கரண்ட் பில் கட்டுவதற்கே தண்டல் வாங்கும் நிலைக்கு வந்து விட்டோம். வியாபாரம் படுத்து போச்சு. இதிலிருந்து கூலியை எங்கே எடுப்பது? எங்க நெலமய வெளியே சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது. குடும்பத்துக்குத் தேவையான அரிசி, பருப்பு வாங்கக் கூட கடன் வாங்க வேண்டியிருக்கு. இந்தச் சின்ன கடையக் கூட பளிச்சினு வச்சிக்க முடியல. வாடிக்கையாளர்கள், இது என்ன கடைன்னு கேவலமாகப் பார்த்துட்டுப் போறாங்க. கடையோட போர்டு வெளுத்துப்போச்சு, ஃப்ளெக்ஸ் அடிச்சு புதுசா ஒரு போர்டுகூட மாட்ட முடியல. கொறைஞ்சது ஆயிரமாவது வேணும்” என்றார் சீனியர் பார்ட்னர் நியமதுல்லா.

அவரது நண்பர் டேனியல் என்ற முருகன், “சார் எனக்கு 5-வது படிக்கிற சின்ன பொண்ணு ஒன்னு இருக்கு. முன்னெல்லாம் வாரத்துக்கு ஒருமுறை பீச், மால்னு கூட்டிப் போவேன். இப்ப பல மாதங்களாச்சு. “ஏம்பா வெளியிலேயே கூட்டிப்போக மாட்டேங்குறீங்க”ன்னு சொல்லி அழுவுது. என்னோட கஷ்டத்த எப்படிச் சொல்லி புரியவைப்பது?

படிக்க:
5, 8 -ம் வகுப்பு பொதுத் தேர்வு : ஏழைகளை கல்வியிலிருந்து விரட்டும் சதி ! கரூர் புமாஇமு ஆர்ப்பாட்டம்
♦ கேள்வி பதில் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன ?

இப்பல்லாம் குழந்தைய சமாளிக்கறதே பெரும் பிரச்சினையாயிருக்கு. முன்னெல்லாம் கடைய மூடிட்டு வீட்டுக்குப் போகும்போது குழைந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் பக்கோடா, ஐஸ் கிரீம்னு வாங்கிப் போவேன். இப்ப அதைகூட செய்ய முடியல. கடைய சாத்திட்டு வீட்டுக்குப் போயி வெறுங்கையோட கொழந்தைய பார்க்குறதே கஷ்டமாயிருக்கு.

‘அம்மா நீ பொம்பள பொண்ணு, இனிமேல் சிக்கன் பக்கோடாவெல்லாம் அதிகம் சாப்பிடக் கூடாது, ஒடம்புக்கு பிரச்சினையாகிடும்’ என்று சொல்ல வேண்டியிருக்கு” என்றார் வேதனைச் சிரிப்போடு.

“இந்த ஐநூறு ஆயிரம் ரூபா ஃபோன ஒன்னு விக்கிறதுக்குள்ளே தாவு தீர்ந்துடும். கஷ்டமர் ஆயிரம் கேள்வி கேக்குறான். லட்சம் ரூபா கொடுத்து ஆப்பிள் ஃபோன் வாங்குனாகூட இந்த கேள்விய கேக்கமாட்டாங்க” என்கிறார் பார்ட்னர் உதயகுமார்.

“இதோ எங்களுக்குத் தண்டல் கொடுக்கும் பைனான்சியர் வருகிறார். நீங்களே அவரிடம் எங்க கதையைக் கேளுங்கள்” என்றனர் கோரசாக.

***

தண்டல்காரர் ரவி

தண்டல்காரர் ரவி

“இவர்களுக்கு 8 வருசமாக தண்டல் கொடுக்கிறேன். ஆளுக்குத் தனித்தனியாக 80 ஆயிரம் வரை கொடுத்திருக்கேன், எந்தப் பிரச்சினையும் இல்லாம கட்டியிருக்காங்க. ஆனா, இப்போது அவர்கள் கடனைத் திருப்பித்தர திணறுகிறார்கள். அதனால் அவர்களுக்கு கடன் கொடுப்பதை குறைத்து விட்டேன்.

தற்சமயம் வெறும் 20 ஆயிரம் ரூபாய்தான் கொடுத்திருக்கிறேன். அதை திருப்பிக் கொடுப்பதற்கே முடியாமல், வெறுங்கையோடு அனுப்புகிறார்கள். இந்தச் சூழலில் மேலும் அவர்களுக்குப் பணத்தைக் கொடுத்து ஏன் நெருக்கிப் பிடிக்க வேண்டும்? ஆதலால், கடன் சுமையை அவர்களுக்கு கொடுக்க விரும்பவில்லை. நீங்களே சொல்லுங்கள், நான் செய்தது நல்லதா, கெட்டதா” என்று நம்மைக் கேட்கிறார்.

அரை டஜனுக்கு மேல் தண்டல் நோட்டுகளை வைத்துக் கொண்டு எதைக் கட்டுவது, எதை நிறுத்துவது என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

“இப்படி கடனை வாங்கியவர்கள் சரியாக திருப்பிக் கொடுக்காததால், தண்டல் கட்டும் 30 பேரிலிருந்து 10 பேராக குறைந்து விட்டார்கள். வசூல் ஆனாதானே சார் மற்றவர்களுக்கும் கொடுக்க முடியும்” என்கிறார்.

***

50 ஆண்டுகளுக்கும் மேலாக மின்பொருள் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த  பழமையான ரிச்சி தெரு, இன்று வெறிச்சோடி காணப்படுகிறது. சிறு, நடுத்தர வியாபாரிகளும் தொழிலாளிகளும் தங்களது எதிர்காலம் இருண்டு விடுமோ என்ற அச்சத்தில் உறைந்து கிடப்பதைப் பார்க்க முடிகிறது.

நான்கு வருடங்களுக்கு முன்பு கூட “எள்ளு போட்டால் கீழே விழாத..” அளவிற்கு வாடிக்கையாளர்களைக் கொண்ட சென்னை ரிச்சி தெரு, இன்று வெறிச்சோடிக் காணப்படுகிறது.

சாலையின் இருமருங்கிலும் சந்து சந்தாக உள்ள கடைகளில் பெரும்பாலானவை மூடியே காணப்படுகின்றன.

மேலும் படங்களுக்கு : 

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க