privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாசுப்ரீம் கோர்ட்டும் ராமர் கோவிலும் எங்களுடையதுதான் : பாஜக அமைச்சர் !

சுப்ரீம் கோர்ட்டும் ராமர் கோவிலும் எங்களுடையதுதான் : பாஜக அமைச்சர் !

“அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவது எங்கள் உறுதியான முடிவு. உச்சநீதிமன்றம் எங்களுடையது. இந்த நீதித்துறை, இந்த நாடு, இந்தக் கோவில் அனைத்தும் எங்களுடையதே”

-

த்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர், “பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர்கோவில் கட்டுவோம். சுப்ரீம் கோர்டே நம்முடையதுதான்” என்று கூறியுள்ளார்.

ரவுடி சாமியார் யோகி ஆதித்யநாத்தின் தலைமையிலான உ.பி. பாஜக அரசாங்கத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சராக முகுத் பிஹாரி வர்மா பதவி வகித்து வருகிறார். கடந்த செப்டெம்பர் 9-ம் தேதி அன்று பஹ்ரைச் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

உ.பி. பாஜக அரசாங்கத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சராக உள்ள முகுத் பிஹாரி வர்மா.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்து அவர் கூறுகையில், “பாஜக அரசு வளர்ச்சியை வாக்குறுதியாகக் கொடுத்து ஆட்சி அமைத்திருந்தாலும், ராமர் கோவில் கண்டிப்பாகக் கட்டப்படும். ஏனெனில் அவ்வாறு செய்ய கட்சி உறுதிபூண்டுள்ளது” என்றார். மேலும், “அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவது எங்கள் உறுதியான முடிவு. உச்சநீதிமன்றம் எங்களுடையது. இந்த நீதித்துறை, இந்த நாடு, இந்தக் கோவில் அனைத்தும் எங்களுடையதே” என்று கூறினார்.

சிறப்பு நீதிமன்றத்தில், பாபர் மசூதி இடிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்றத்தில் பாபர் மசூதி இட சர்ச்சை வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த இருவழக்குகளும் நீதிமன்றத்தில் இருக்கையில் ஒரு பாஜக அமைச்சர், “உச்சநீதிமன்றம் நம்முடையதுதான்” என்று கூறியிருப்பது பத்திரிகையாளர்களை அதிர்ச்சியுறச் செய்திருக்கிறது.

இது குறித்து பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புக் கிளம்பியதும், அப்படியே பல்டி அடித்துள்ளார் பாஜக அமைச்சர். பல்டி அடிப்பது சங்கபரிவாரத்தின் வானரப் படைகளுக்கு ஒன்றும் புதியது இல்லையே…

படிக்க :
♦ அயோத்தி: இராமன் தொடுத்த வழக்கு! குரங்கு எழுதிய தீர்ப்பு!! – தோழர் மருதையன்
♦ தந்தை பெரியார் : பொது அறிவு வினாடி வினா – 21

“நான் சுப்ரீம் கோர்ட் எங்களுடையது எனச் சொன்னது, இந்த நாட்டின் மக்களாகிய நம் அனைவருக்குமுடையது என்ற பொருளில்தான் கூறினேன், பாஜக அரசாங்கத்திற்குரியது என்ற பொருளில் கூறவில்லை” என்று பல்டியடித்திருக்கிறார்.

பாஜகவும் அதன் அமைச்சரும் யோக்கிய சிகாமணிகள் என்றே வைத்துக் கொள்வோமே.. ஒருவேளை அவர் அந்தப் பொருளில்தான் சொல்லியிருக்கிறார் என்றாலும் கூட, சுப்ரீம் கோர்ட் அவ்வாறு ராமர் கோவில் கட்டும்வகையில் தீர்ப்பளிக்கும் என்று இவர் எப்படி உறுதியாகக் கூற முடியும் ?

”உச்சநீதிமன்றம் இப்படித்தான் தீர்ப்பு வழங்கும், ஏனெனில் அது எங்களுடையது” என ஒரு ஆளும்கட்சி அமைச்சர் பேசுகிறார். அதற்கு உச்சநீதிமன்றம் வெறும் கண்டனம் மட்டும் தெரிவிக்கிறது, அதுவும் எதிர்தரப்பு வழக்கறிஞர் கடந்த வியாழன் அன்று இது குறித்து நீதிமன்றத்தில் முறையிட்ட பிறகுதான். குறைந்தபட்சமாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கூட அந்த அமைச்சர் மீது தொடுக்கப்படவில்லை. வெறும் கண்டனத்தோடு மவுனம் காக்கிறது எனில், இதில் இரண்டே வாய்ப்புகள்தான் இருக்க முடியும். ஒன்று உச்சநீதிமன்றம், அமைச்சருக்கும் பாஜக அரசுக்கும் பயந்து பம்மியிருக்க வேண்டும். அல்லது, அமைச்சர் முகுத் பிஹாரி வர்மா கூறியது போல உச்சநீதிமன்றத்தில் விசாரணை முடியும் முன்னரே தீர்ப்பு உறுதிசெய்யப்பட்டிருக்க வேண்டும்.

இச்சம்பவம் வேறொரு சம்பவத்தை நினைவுபடுத்துகின்றது. சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை பெருங்குடி பகுதிக்கு சட்டவிரோதமாக வேன்கள் எஸ்.ஆர்.பி நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும். வேன் டிரைவர்கள் பணவசூலுக்காக எஸ்.ஆர்.பி நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் கீழ்நிலைப் போலீசிடம் அன்றாடம் ரூ.20 கப்பம் செலுத்துவார்கள். அந்த வேன்களில் பயணிகளிடம் பணம் வசூலிக்க பணியமர்த்தப்படும் சிறுவர்கள், அந்தப் போலீசை வேனில் இருந்தபடியே “யோவ் இங்க வாயா… இதப் பிடி .. ட்ரிப்பு கிளம்ப வேணாமா?” என அவமரியாதையோடு அழைத்து ரூ.20-ஐ அவர்கள் கையில் திணித்துவிட்டுச் செல்வார்கள். போலீசும் பயணிகள் முன் கெத்து காட்ட, “ஒழுங்கா போ” எனக் கூறி வண்டியை ஒரு தட்டுதட்டுவார்.

மொத்தத்தில் போலீசிடம் அந்தச் சிறுவன் விடும் அதட்டலை, அந்தப் போலீசும் கண்டு வெகுளமாட்டார். வேன் டிரைவரும் கண்டிக்கமாட்டார். வெறும் ‘சவுண்டோடு’ அச்சம்பவம் கடந்து சென்றுவிடும். பயணிகளும் இருதரப்புக்குமான உடன்பாட்டைப் புரிந்து கொள்வர்.

இங்கும் பாஜக அமைச்சரின் கருத்தை உச்சநீதிமன்றமும் கண்டனத்தோடு கடமை முடித்துக் கொண்டது. பாஜகவும் கண்டிக்கவில்லை. கண்டனங்களோடு கடந்து விடுகின்றனர். நாம் புரிந்து கொள்ளவேண்டிய ‘உடன்பாட்டைப்’ புரிந்து கொண்டோமா ?

(இந்தக் கட்டுரை 13-செப்டெம்பர்-2019 அன்று 15:30 மணியளவில் உச்சநீதிமன்றத்தின் கண்டனம் குறித்த செய்தியோடு மேம்படுத்தப்பட்டது)


நந்தன்
நன்றி : இந்தியா டுடே