privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாகோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை !

கோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை !

காந்தி கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளிகளாகிய நாதுராம் கோட்சேவின் நீதிமன்ற வாக்குமூலத்தை பாடமாக இணைக்க வேண்டும் என இந்து மகாசபா கோரிக்கை விடுத்துள்ளது.

-

த்திய பிரதேச பள்ளிப் பாடத்திட்டத்தில் கோட்சேயின் நீதிமன்ற வாக்குமூலத்தை பாடமாக இணைக்க வேண்டும் என இந்து மகாசபா கோரிக்கை விடுத்துள்ளது.

கோட்சேயின் நினைவுநாளான நவம்பர் 15-ஐ ஒட்டி, இந்து மகாசபா இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளது.

நாதுராம் விநாயக் கோட்சேவின் நினைவுநாளை ஒட்டி, இந்து மகா சபா அலுவலகத்தில் அதன் உறுப்பினர்கள் ஒன்றுகூடி, காந்தி கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளிகளாகிய நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தே ஆகிய இருவரின் படங்களுக்கு மரியாதை செலுத்தினர்.

நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே மற்றும் சாவர்கர் – காந்தி கொலை வழக்கு விசாரனையின் போதான புகைப்படம்.

அதன் பின்னர் பேசிய இந்து மகா சபாவின் துணைத் தலைவர் ஜெய்வீர் பரத்வாஜ், “இந்திய சுதந்திரப் போரில் இந்த இருவரின் பங்களிப்பும் மறக்கடிக்கப்பட்டு விட்டன” என்றார்.

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, காங்கிரசு ஆட்சியாளர்கள், கோட்சேவின் நீதிமன்ற வாக்குமூலத்தை வெளிவராதவாறு பார்த்துக்கொண்டனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இது குறித்துக் கூறுகையில், “மத்திய பிரதேச முதலமைச்சர், மாவட்ட நிர்வாகம் ஆகியோருக்கு ஒரு தீர்மானத்தை சமர்ப்பித்திருக்கிறோம். வழக்கு விசாரணையின் போது, கோட்சே நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்தை பள்ளிகளின் பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறோம்.” என்றார்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர், இந்து மகாசபா தனது அலுவலகத்தில் கோட்சேவின் சிலை ஒன்றை வைத்திருந்தது. தொடர்ச்சியாக பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புக் கிளம்பியதால், அந்த சிலையை மாவட்ட நிர்வாகம் பறிமுதல் செய்திருந்தது.

படிக்க:
மாலேகான் குண்டுவெடிப்பு கிரிமினல் பிரக்யாசிங் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராம் !
♦ காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் கோட்சே – ஆதாரங்கள்

தற்போது அரசாங்கத்திடம் முன் வைத்திருக்கும் தீர்மானத்தில் அந்த சிலையை தங்களிடம் திரும்பக் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறியுள்ளார் பரத்வாஜ்.

கடந்த நவம்பர் 15 அன்று நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது மத்தியப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி.

காங்கிரசின் ஊடகப் பிரிவு துணைத் தலைவர் பூபேந்திர குப்தா இது குறித்துக் கூறுகையில், “வன்முறையை ஆராதனை செய்திருக்கிறது இந்து மகாசபை நடத்தியிருக்கும் இந்த நிகழ்வு. இது கண்டனத்திற்குரியது. இவர்கள் இந்திய அரசியல் சாசன சட்டத்தின் மீது நம்பிக்கையற்றவர்கள். கோட்சே கூட தனது மன்னிப்புக் கடிதத்தை, பிரிட்டிஷ் அரசிக்குத் தான் எழுதினாரே தவிர இந்தியாவின் உச்சநீதிமன்றத்திற்கு எழுதவில்லை.” என்று கூறுகிறார்.

இந்துமகா சபையின் பரத்வாஜ் கூறியதில் மிகச் சிறந்த நகைச்சுவைப் பகுதியே, சுதந்திரப் போராட்டத்தில் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தேவின் பங்களிப்புக் குறித்துப் பேசியதுதான். கோட்சேவின் ஆவியோ, இல்லை அவரது குருவான சாவர்க்கரின் ஆவியோ ஒருவேளை இதைக் கேட்டிருந்தால் விழுந்து புரண்டு சிரித்திருக்கும். “எங்களை விட வெள்ளைக்காரன் சொல்படி கேட்டு நடந்தோரை பூமியில் எங்கு தேடினாலும் கண்டுபிடிப்பது சிரமமடா” என ஒரே குரலில் கூவியிருப்பார்கள் கோட்சேவும், சாவர்க்கரும்.


நந்தன்
நன்றி : அவுட்லுக்