நெல்லையில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கூட்டத்தில் பேசிய நெல்லை கண்ணனை நேற்று (01-01-2020) இரவு கைது செய்தது போலீசு. இந்தக் கைது நடவடிக்கையை தமிழகத் தலைவர்களும், செயல்பாட்டாளர்களும் கடுமையாகக் கண்டித்து வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை (29-12-2019) அன்று நெல்லையில் எஸ்.டி.பி.ஐ கட்சி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன் மற்றும் தமிழ்ப் பேச்சாளர் நெல்லை கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இக்கூட்டத்தில் பேசிய நெல்லை கண்ணன், மோடி – அமித்ஷா – ஆர்.எஸ்.எஸ். என அனைவரையும் அம்பலப்படுத்திப் பேசினார். இதனைத் தொடர்ந்து பாஜக தனது ‘நாடகப்’ போராட்டங்களைத் தொடங்கியது. தாம் காலால் போட்ட உத்தரவை உடனடியாகத் தலையால் நிறைவேற்றத் தயாராக இருக்கும் மாநில அரசும், நிர்வாகமும் இருக்கும் போது, போராட்டம் நடத்தி அரசைப் பணிய வைக்கப் போவதாக அவர்கள் செய்யும் அலப்பறைக்கு நாடகப் போராட்டம் என்ற பெயரே பொருத்தமாக இருக்கும்.

பாஜக கும்பலுக்கு காந்தும் வகையில் அப்படி என்ன பேசிவிட்டார் நெல்லைக் கண்ணன் ? “நான் ஒரு இந்து அல்ல. நான் ஒரு தமிழ் சைவன்” , “சபரிமலை ஐயப்பன் கோவிலில் முசுலீமான வாஃபர்தான் ஐயப்பனுக்குத் தளபதி” , என சங்க பரிவாரத்தின் புரட்டுகளை அம்பலப்படுத்தி பேசியுள்ளார்.
அதோடு நில்லாமல் இவர்களின் சித்தாந்த குருவான ‘வீர’ சாவர்க்கரின் கேடுகெட்டதனத்தையும் அம்பலப்படுத்திப் பேசியுள்ளார். அனைத்திற்கும் மேலாக, முத்தாய்ப்பாக, “மோடி ஒரு முட்டாள். ஒன்னும் தெரியாது,. இந்த அமித்ஷா தான் அபாயகரமான ஆள். ஒரு ஊடகம் விடாம எல்லாத்தையும் மிரட்டி வச்சிருக்கான்.” என்று மோடி – அமித்ஷா உறவை புட்டு வைத்துள்ளார்.
பஞ்ச்சோடு பஞ்ச்சாக, “அமித்ஷாவுக்கு சோலி முடிஞ்சதுன்னா மோடிக்கு ஒன்னும் தெரியாது; அவன் சோலியும் முடிஞ்சிடும். நீங்க முடிச்சிருவீங்கன்னு நினைச்சேன் ! அது நடக்கல” என்று பேசியுள்ளார்.
நெல்லை கண்ணன் எழுப்பிய மற்ற எந்தக் கேள்விக்கும் விமர்சனத்துக்கும் பதில் சொல்ல வக்கில்லாத சங்க பரிவாரக் கும்பல், மேற்கூறிய வசனங்களைப் பிடித்துக் கொண்டு. மோடி அமித்ஷாவுக்கு எதிராக நெல்லை கண்ணன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார், என்று கூறி அவரைக் கைது செய்ய வேண்டுமென கூக்குரலிடத் தொடங்கியுள்ளன.
படிக்க:
♦ 12 வயது சிறுவன் கைது : மோடி சேவையில் பீகார் போலீசு !
♦ பெசன்ட் நகர் கோலம் : பாகிஸ்தான் சதி என்கிறது சங்கி போலீசு !
சங்க பரிவாரத்தின் நாடகப் போராட்டங்களும், நாடகக் கைதுகளும் முடிந்த பிறகு நேற்று (01-01-2020) இரவு நெல்லை கண்ணனைக் கைது செய்திருக்கிறது போலீசு. இன்று நெல்லை நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய பின்னர், அவரது உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு, அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்து, ஜனவரி 13 வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது நெல்லை நீதிமன்றம்.
இதற்கு முன்னர் உயர்நீதிமன்றத்தை அதற்கு ‘உரிய’ மரியாதையோடு பேசிய எச்.ராஜா; அருவெறுக்கத்தக்க வகையில் பெண் பத்திரிகையாளர்களைப் பேசிய எஸ்.வி.சேகர்; பொதுக் கூட்டத்திலேயே வைரமுத்துவை கொலை செய்யலாமா கூடாதா என கூட்டத்தினரைப் பார்த்து கேட்ட நயினார் நாகேந்திரன் மற்றும் சமீபத்தில், CAA எதிர்ப்புக் கோலம் போடுபவர்களின் குடும்பத்தையே அலங்கோலமாக்கப் போவதாக மிரட்டிய பொன்னார்… என இவர்கள் மீது போலீசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காது என்பதுதான் இந்திய ‘ஜனநாயகத்தின்’ பார்ப்பனியப் பாரம்பரியப் பெருமை.
நெல்லைக் கண்ணன் கைதாக இருக்கட்டும், அல்லது கோலம் போட்டவர்களுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பதாக ‘கிளப்பிவிடுவதாக’ இருக்கட்டும், சங்கப் பரிவாரத்திற்கு பகிரங்கமாகச் சேவை புரியத் தயாராகி நிற்கிறது தமிழகப் போலீசு.
நந்தன்.