privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாஜே.என்.யூ : ஒரு ஏபிவிபி ரவுடி கூட இன்னும் கைது செய்யப்படவில்லை !

ஜே.என்.யூ : ஒரு ஏபிவிபி ரவுடி கூட இன்னும் கைது செய்யப்படவில்லை !

ஜே.என்.யூ போன்ற பல்கலை மாணவர்கள், ஆசிரியர்கள் வெறுமனே அறிவுஜீவிகளாக மட்டுமில்லாமல் அவர்கள் மக்கள்பால் நேசமுள்ள இடதுசாரிகளாகவும் இருப்பது சங்கபரிவாரத்தின் கண்ணை உறுத்துகிறது.

-

புதுதில்லி ஜே.என்.யூ பல்கலையில் மூகமூடி போட்ட ஏபிவிபி குண்டர்கள் நுழைந்து இரும்புக் கம்பிகளால் தாக்கியிருக்கின்றனர். இதில் 31 மாணவர்கள், இரு ஆசிரியர்கள், இரு பாதுகாவலர்கள் தாக்கப்பட்டிருக்கின்றனர். இந்தக் கொலை வெறிச்சம்பவம் நடந்து 24 மணி நேரம் ஆகியும் இதுவரை தில்லி போலீசால் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலையில் நுழைந்து போராடிக் கொண்டிருந்த மாணவர்களை தாக்கிய போலீசு, ஜே.என்.யூ.வில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏபிவிபி குண்டர்கள் நுழைந்து மூன்று மணிநேரம் வெறியாட்டம் ஆடியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஏபிவிபி ரவுடிகள் தாக்கிய நேரம் மாலை ஆறு முதல் ஒன்பது மணி. போலீசுக்கு தகவல் போன நேரம் மாலை 4.57 மணி. இடைப்பட்ட மூன்று மணி நேரமும் போலீசு வரவே இல்லை.

தாக்கப்பட்ட மாணவர் சங்கத்தின் தலைவர் ஐய்ஷி கோஷ் !

ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ், ஏபிவிபி குண்டர்களால் தாக்கப்பட்டு அவரது காயத்திற்கு 16 தையல் போட்டிருக்கிறார். அவரது கூற்றுப்படி, இது திட்டமிட்ட தாக்குதல் மட்டுமல்ல, இதற்குப் பின்னே ஆர்.எஸ்.எஸ் ஆதரவு பேராசிரியர்கள் வன்முறையைத் தூண்டி விட்டிருக்கின்றனர். மாணவர் சங்கத் துணைத் தலைவர் சாகெத் மூன், “போலீசை இரண்டு மணி நேரத்துக்கு முன்பாகவே அழைத்தும் எந்த உதவியும் கிடைக்கவில்லை” என்கிறார்.

“இது திட்டமிட்ட தாக்குதல் மட்டுமல்ல. மாணவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டிருக்கின்றனர். இந்த தாக்குதலில் ஜே.என்.யூ நிர்வாகம், பாதுகாப்பு போலீசு, மற்றும் ஏபிவிபி குண்டர்கள் ஆகியோருக்கு தொடர்பிருக்கிறது. ஏனெனில் யாரும் தாக்குதலை தடுத்து நிறுத்த முன்வரவில்லை” என்கிறார் கோஷ். “ கடந்த நான்கைந்து தினங்களாகவே சில ஆர்.எஸ்.எஸ் பேராசிரியர்கள் எங்களது போராட்டத்தை முடக்கும் முகமாக வன்முறையை தூண்டி விட்டிருக்கின்றனர். ஜே.என்.யூ – தில்லி போலீசிடம் பாதுகாப்பு கேட்டது குற்றமா?” என்கிறார் கோஷ்.

ஞாயிறு அன்று நடந்த இந்த தாக்குதலை பார்த்த பலரும் இது ஏபிவிபி ரவுடிகளின் தாக்குதல் என்பதை பகிரங்கமாக தெரிவித்திருக்கின்றனர். ஆனால் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என ஏபிவிபி இதை திமிராக மறுத்திருக்கிறது.

தில்லி தென்மேற்கு காவல்துறை உதவி ஆணையர் தேவந்தர் ஆர்யா இந்த தாக்குதல் குறித்து தமக்கு முன்னுக்கு பின் முரணான தகவல்கள் வந்தது என்பதை ஒத்துக் கொள்கிறார். முதலில் இடதுசாரி மாணவர்களால் கல் வீச்சு என்று மாலை புகார் வந்ததாகவும், பின்னர் ஏழு மணிக்குத்தான் தாக்கியவர்கள் வேறு பிரிவினர் என்றும், மாலை 7.40-க்குத்தான் ஜே.என்.யூ நிர்வாகத்திடமிருந்து எழுத்துப் புகார் வந்ததாகவும் அவர் கூறுகிறார். இதிலிருந்து தெரிவது என்ன? அங்கே மாணவர்கள் ஏபிவிபி குண்டர்களால் இடையூறு இன்றி தாக்கப்படுவதற்கு போலீசு உதவியிருக்கிறது. அதனால்தான் திங்கட்கிழமை முதல் தகவல் அறிக்கை, அடையாளம் காணப்படாத நபர்கள் மீது கலவரம் செய்தல், சொத்துக்களை சேதப்படுத்துதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டிருக்கிறது.

ஏபிவிபி குண்டர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது மட்டுமல்ல, கொலைவெறியோடு தாக்கப்பட்ட மாணவர் சங்கத் தலைவர் ஐய்ஷி கோஷ் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது தில்லி காவி போலீசு !

படிக்க:
♦ ஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு ! | பாகம் – 1
♦ ஜே.என்.யூ : பேரணி சென்ற மாணவர்கள் மீது “காக்கிச்சட்டை அணிந்த குண்டர்கள்” தாக்குதல் !

ஆர்.எஸ்.எஸ் ரவுடிகளால் தாக்கப்பட்ட தங்களை ஜே.என்.யூ நிர்வாகம் சார்பாக ஒருவர் கூட வந்து பார்க்கவில்லை என்கிறார்கள் ஆசிரியர்களும், மாணவர்களும். துணை வேந்தரிடமிருந்தோ இல்லை நிர்வாகத்தின் மற்ற பொறுப்பாளர்களிடமிருந்தோ ஒரு குறுஞ்செய்தி கூட வரவில்லை என்கிறார் பேராசிரியர் சுக்லா சாவந்த். இவர் முகமூடி ஏபிவிபி ரவுடியால் கல் வீசி தாக்கப்பட்டவர்.

ஜே.என்.யூ துணைவேந்தர் விடுத்துள்ள அறிக்கையில், இந்த வன்முறை அனைத்தும் விடுதிக் கட்டண உயர்வோடு தொடர்புடையவை. தற்போதைய சூழலின் மூலம் போராடும் மாணவர்களது செயலாலும், பல்கலை செயல்பாட்டில் அவர்கள் தலையிட்டு நிறுத்துவதாலும் ஏற்பட்டவை. மேலும் போராட்டத்தில் இல்லாத மாணவர்களது கல்வி நடவடிக்கையையும் போராடும் மாணவர்கள் பாதித்திருக்கிறார்கள்.  மேலும் இடதுசாரி மாணவர்களும், ஜே.என்.யூ மாணவர் சங்கமும்தான் இந்த போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் என்று கூறியிருக்கிறார். இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட காவிக் குண்டர்களின் வக்கீலாக வாதிடுகிறார் இந்த காவி துணை வேந்தர்.

திங்களன்று பல்கலையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய ஜே.என்.யூ ஆசிரியர் சங்கம் உடனடியாக துணை வேந்தரை நீக்குமாறும், நீதிமன்ற கண்காணிப்பில் தாக்குதல் குறித்து விசாரணை நடத்துமாறும் கோரியிருக்கிறார்கள். ஒரு கல்வி நிறுவனத்தை நடத்துவதற்கு அவர் லாயக்கற்றவர் என்பதற்கு இதற்கு மேல் ஆதாரம் தேவையில்லை. இந்தமுறை நடந்த பயங்கரவாத தாக்குதல் வேறு தளத்திற்கு போய்விட்டது என்கிறார்கள் ஆசிரியர் சங்கத்தினர்.

ஏபிவிபி குண்டர்கள்

ஜே.என்.யூ இடதுசாரி மாணவர்கள், பல்கலையில் வந்து கொலைவெறித் தாக்குதல் நடத்திய ஏபிவிபி குண்டர்கள் பலரை அடையாளத்துடன் சமூகவலைத்தளங்களில் படங்களோடு வெளியிட்டுள்ளனர். ஆனால் இதுவரை போலீசால் ஒரு நபர் கூட அடையாளம் காணப்படவில்லை.

ஏனெனில் இங்கு நடப்பது பார்ப்பனிய பாசிசம். ஜே.என்.யூ போன்ற பல்கலை மாணவர்கள், ஆசிரியர்கள் வெறுமனே அறிவுஜீவிகளாக மட்டுமில்லாமல் அவர்கள் மக்கள்பால் நேசமுள்ள இடதுசாரிகளாகவும் இருப்பது சங்கபரிவாரத்தின் கண்ணை உறுத்துகிறது. அதனால்தான் அரசு, போலீசு, நிர்வாகத்தின் ஆசியோடு இந்த படுகொலை தாக்குதல் நடந்திருக்கிறது.

ஜே.என்.யூ மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாணவர்களும், உலக அளவில் பல்வேறு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களும் போராடி வருகின்றனர்.

ஜே.என்.யூ மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம். ஏபிவிபியை அடித்து விரட்டுவோம் !


மதன்