மிரர் நவ் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த பத்திரிகையாளர் ஃபாயே டிசோசா, மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோத திட்டங்களை ஊடகங்கள் விமர்சிக்க இடம் தருவதில்லை எனக் கூறி தனது பணியிலிருந்து விலகினார். காஷ்மீரில் 370-வது பிரிவு நீக்கப்பட்டபின், அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் அரசின் அடக்குமுறைகளை எதிர்த்தும்; குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்தும் உறுதியான கருத்துகளை தெரிவித்து வருகிறார் ஃபாயே டிசோசா.

கோவா அரசின் கலை மற்றும் கலாச்சார துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டி.டி. கோசாம்பி விழாவில் பேச ஃபாயே டிசோசா அழைக்கப்பட்டிருந்தார். குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு நிலைப்பாடு காரணமாக அவருடைய உரை நிகழ்வை ரத்து செய்திருக்கிறது கோவா அரசு.
இந்தக் காரணத்துக்காகத்தான் ஃபாயே உரை ரத்து செய்யப்பட்டதாக கோவாவை ஆளும் பாஜக அரசின் கலாச்சார துறை அமைச்சர் கோவிந்த் கோவாடே தெரிவித்துள்ளார் :
“அவர் உரை நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பேசி வருகிறார் என எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் குழப்பங்களும் பிரச்சினையும் ஏற்பட நாங்கள் விரும்பவில்லை” என கோவிந்த் கோவாடே கூறியுள்ளார்.
இந்த நிகழ்வு அரசால் நிதியளிக்கப்பட்டது என்பதால், நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் எந்தவித ‘சர்ச்சைகள்’ ஏற்படுவதையும் விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர்.
கோவாவின் பானாஜில் உள்ள கலா அகாதமியில் ஜனவரி 27 முதல் 30 வரை தொடர் சொற்பொழிவு நடைபெற உள்ளது.
பிரதமர் மோடியின் அலுவலகத்திலிருந்தோ அல்லது முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அலுவலகத்திலிருந்தோ உரை நிகழ்த்துபவர்களின் பட்டியலிலிருந்து பத்திரிகையாளர் ஃபாயே டிசோசாவை நீக்கச் சொல்லவில்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
படிக்க:
♦ ஆர்.எஸ்.எஸ். : நாட்டையே அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ் | கேலிச்சித்திரம்
♦ பிரேசில் அதிபருக்கும் மோடிக்கும் என்ன ஒற்றுமை ?
“பிரதமரோ முதலமைச்சரோ CAA குறித்து விவாதிக்க எப்போதும் தயாராக இருக்கிறார்கள்” என்கிறார் அமைச்சர். ஆனால் CAA-வை எதிர்த்தார் என்ற காரணத்துக்காகவே உரை நிகழ்விலிருந்து ‘குழப்பம்’ வரக்கூடாது என்ற காரணத்துக்காக நீக்கியிருக்கிறார்கள்.
பாஜகவினர் எதிர்ப்புக்குரல்களைக் கண்டு பயப்படவும் செய்கிறார்கள்; பயப்படாதமாதிரி நடிக்கவும் செய்கிறார்கள் என்பதற்கு ‘கலாச்சார’ துறை அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார்.
கலைமதி
நன்றி : நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.