Saturday, May 10, 2025
முகப்புசெய்திதமிழ்நாடுநெல்லை பழைய பேட்டை கைத்தறி நெசவாளர் நிலை : நிவாரணம் கேட்டுப் போராடினால் வழக்கா ?

நெல்லை பழைய பேட்டை கைத்தறி நெசவாளர் நிலை : நிவாரணம் கேட்டுப் போராடினால் வழக்கா ?

நொடிந்து வரும் கைத்தறி நெசவாளர்களின் கழுத்தை நெருக்குகிறது, கொரோனாவைவிட கொடுமையான இந்த அரசுக் கட்டமைப்பு.

-

நெல்லை மாநகராட்சிக்குப்பட்ட பகுதி பழைய பேட்டை. இப்பகுதியில் நெசவுத் தொழில் சார்ந்து 700 குடும்பங்கள் உள்ளன. அரசின் தனியார்மயக் கார்ப்பரேட் கொள்கைகள் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் சிறு தொழில்களில் நெசவும் ஒன்று. அப்படி இருந்தும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நெசவு செய்து வந்துள்ளனர். குறிப்பாக துண்டு தயாரித்து சுற்றுவட்டார துணிக்கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

“பழைய பேட்டை தொழிலியல் நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்” என்ற நிர்வாக அமைப்பின் கீழ் தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர். 20 வருடங்களாக கூட்டுறவு சங்கம் முறையாக இயங்கியுள்ளது. கூட்டுறவு சங்கத்திற்கு கட்ட வேண்டிய PF தொகையையும் முறையாக செலுத்தி வந்துள்ளனர். ஆனால் அதற்கு பொறுப்பாக இருந்த அதிகாரிகள் முறையாக அரசுக்கு அத்தொகையை கட்டாமல் இருந்துள்ளனர். இதை கண்காணித்து முறைப்படுத்தும் வேலையையும் அரசின் தரப்பில் செய்யவில்லை எனத் தெரிகிறது. PF தொகை கட்டாததால் சங்கத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடத்திற்கு சீல்வைக்கப்பட்டு விட்டது.

அதன் பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைத்தறி துறை சார்ந்த அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர். அவரோ PF பணத்தை முறையாக கட்டாத அதிகாரிகளைத் தண்டிப்பதற்கு பதிலாக தொழிலாளிகளையே ஃபைன் கட்டச் சொல்லியிருக்கிறார். லட்சக்கணக்கில் கட்ட வேண்டி வந்ததால் நெசவாளர்களால் கட்ட முடியவில்லை.

இதனால் என்ன செய்வதென்று அறியாத நிலையில் பலரும் கிடைத்த வேலைக்கு செல்வது என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். துணிக்கடைக்கு பெரும்பாலானோர் வேலைக்குச் செல்கின்றனர். சிலர் பீடி சுற்றும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரனோ ஊரடங்கின் காரணமாக, உணவிற்கும் வழியில்லாமல் 35 குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த மே 1 அன்று பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்கு நிவாரணம் வேண்டி சமூக இடைவெளி விட்டு அப்பகுதியில் போராட்டம் நடத்தினர். அவர்களின் கோரிக்கையை கேட்டு நிவர்த்தி செய்வதற்கு பதிலாக, அப்பகுதி VAO -வின் புகார் அடிப்படையில் முன்னணியாளர்கள் மீது போலீசு வழக்கு போட்டுள்ளது.

படிக்க:
♦ கோவில் திருவிழா பணத்தை கொரோனா நிவாரணத்திற்கு பயன்படுத்திய கிராம மக்கள் !
♦ தொழிலாளர்களுக்கு இது ஒரு கடினமான மே நாள் !

தன் நிர்வாகத்திற்குட்பட்ட பகுதி மக்களின் பிரச்சினைகளை களத்தில் ஆய்வு செய்து அதைத் தீர்த்து வைப்பதுதான் VAO வின் வேலை. ஆனால் அவ்வாறு செய்யாமல் தங்களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். பின்னர் அம்மக்களிடம் பேசிய மாவட்ட நிர்வாகம் தேவையான உதவிகளைச் செய்வதாகக் கூறியுள்ளது. 4 நாட்களாகியும் இன்னும் உதவிகள் சென்று சேரவில்லை. “பசித்தவனுக்கு உதவி செய்ய அரசு தாமதிப்பது மட்டும் குற்றமில்லையா?” என்று நாம் கேட்க முடியாது. கேட்டால் அதற்கும் வழக்குப் போடலாம். தற்போது வரை தன்னார்வலர்கள்தான் உதவிகள் செய்து வருகின்றனர்.

நெசவாளர்கள் முன்வைக்கும் முக்கியமான கோரிக்கைகள் :

  1. ஊரடங்கில் பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்கு உணவுப் பொருட்கள், நிதி போதுமான அளவு தர வேண்டும்.

முக்கியமாக,

  1. தங்களது கூட்டுறவு சங்கத்திற்கு மீண்டும் உரிமம் தர வேண்டும். இதன் மூலம்தான் தங்களுக்கான நிரந்தரமான வாழ்வாதாரத்தை உத்தரவாதம் செய்ய முடியும்.

தமிழகம் முழுவதும் காஞ்சிபுரம், கும்பகோணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் லட்சக்கணக்கான நெசவாளர்களின் நிலைமையும் ஏறக்குறைய இதுவாகத்தான் இருக்க முடியும் என்பதை அவதானிக்க முடிகிறது. வங்கி மோசடியில் ஈடுபட்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கேட்காமலேயே 68,000 கோடி (தற்போது மட்டும்) கடன்தள்ளுபடி செய்யும் அரசு, பழைய பேட்டை போன்ற லட்சக்கணக்கான கைத்தறி நெசவாளர்களின் குரலுக்கு செவி சாய்க்குமா?

தகவல் :
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க