privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைஃபேஸ்புக் பார்வைஹேப்பி ஹைப்பாக்சியா என்றால் என்ன ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 

ஹேப்பி ஹைப்பாக்சியா என்றால் என்ன ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 

கொரோனா தொற்று பிரச்சினையில், இந்த ஹைப்பாக்சிய என்பது எவ்வகையில் தாக்கம் செலுத்துகிறது. தெரிந்து கொள்ள படியுங்கள்...

-

ஹேப்பி ஹைப்பாக்சியா என்றால் என்ன? What is Happy Hypoxia ?

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில், 90% பேர் அறிகுறிகள் இல்லாமல் இருப்பதை நாம் அறிவோம். இதில் அறிகுறிகள் வெளியே தோன்றாத நிலையிலும் பலருக்கு இந்த ஹேப்பி ஹைபாக்சியா எனும் பிரச்சனை ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

“ஹேப்பி ஹைப்பாக்சியா” என்றால் என்ன???

இந்த வகை மக்களுக்கு நுரையீரலில் பல்வேறு ரத்த கட்டிகள் (Blood clots) ஏற்பட்டு நுரையீரலின் நுண்ணிய ரத்த நாளங்களை அடைத்துக்கொண்டு நுரையீரலின் முக்கிய வேலையான ரத்தத்தை தூய்மை செய்து ஆக்சிஜனேற்றம் செய்வதில் தொய்வை ஏறபடுத்தும்.

இதனால் ரத்தத்தில் தேவையான அளவு ஆக்சிஜன் இருக்க வேண்டிய இடத்தில் குறைவான அளவு இருக்கும். இதை spO2 எனும் அளவு கொண்டு அறிய முடியும்.

spO2 என்பது Peripheral Capillary Oxygen Saturation என்று பொருள்.

நுரையீரலில் இருந்து ஆக்சிஜனேற்றம் செய்யப்படும் நமது ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்லும் பொறுப்பை ஏற்று செய்வது ஹீமோகுளோபின் எனும் இரும்பு கலந்த புரதமாகும்.

ஹேப்பி ஹைப்பாக்சியாவில் நுரையீரல் பழுதடைவதால் தேவையான அளவு ஆக்சிஜன் உடல் முழுவதும் சென்று சேராது. பொதுவாக இவ்வாறு தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்காத நிலையை Hypoxia (ஹைப்பாக்சியா) என்று அழைப்போம்.

இந்த வகை ஹைப்பாக்சியா நிலைகளில்
மூச்சு விடுவதில் சிரமம்
(Shortness of Breath)
மூச்சுத்திணறல் (Breathlessness)
ஏங்கி மூச்சு விடுதல் (Gasping) போன்ற அறிகுறிகள் தென்படும்.

ஆனால் இந்த சைலண்ட்/ஹேப்பி ஹைபாக்சியா எனும் நிலையில்
நமக்கு தேவையான ஆக்சிஜன் அளவு மிக மிக தாழ்வான நிலைக்கு குறைந்தாலும்
நமக்கு அதற்கான அறிகுறிகள் ஏற்படுவதில்லை.

படிக்க:
♦ மாணவர்களின் உயிரைவிட தேர்வு முக்கியமா ? 10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய் !
♦ கொரோனா பாதித்தவர்களுக்கு என்ன சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன ?

பொதுவாக SpO2 அளவு 95-100% என்ற அளவில் இருக்கும். இதில் 93%க்கு கீழ் ஆக்சிஜன் அளவு குறைந்தால், அது ஹைபாக்சியா எனும் அளவு என்று கொள்ளப்படும்.

இந்த ஹேப்பி ஹைபாக்சியா எனும் இந்த பிரச்சனையில் ஆக்சிஜன் அளவுகள்
90%
80%
70%
60% வரை கூட குறைந்திருந்தாலும், நோயாளிக்கு எந்த வெளிப்புற அறிகுறியும் தோன்றாமல் இருக்கும்.

ஆனாலும் நுரையீரலில் பெரும்பகுதி ரத்தக்கட்டிகளால் அடைக்கப்பட்டு அதன் செயல்திறன் மிகவும் குறைந்து விடும்.

அடுத்து குறைவான அளவு ஆக்சிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்வதால் முக்கியமான உறுப்புகளான;
1.மூளை
2. இதயம்
3. சிறுநீரகம் போன்றவற்றிற்கு தொடர்ந்து மிக குறைவான அளவு ஆக்சிஜன் கிடைக்கும்.

இதன் விளைவாக அந்த உறுப்புகளின் செயல்திறன் குறைந்து போனதும் சிறுகச் சிறுக செயலிழக்கும் நிலை ஏற்படும் நிலை உருவாகலாம். இதை Multi Organ Dysfunction என்று அழைக்கிறோம்.

சரி.. எப்படி இவ்வளவு குறைவாக ஆக்சிஜன் அளவுகள் ரத்தத்தில் இருக்கும் நிலை வந்தாலும் வெளியே தெரியாமல் இருக்கிறது???

பொதுவாக உயர்ந்த மலையேற்றத்தில் ஈடுபடும் மக்களுக்கு அல்லது உயர்ந்த மலைவாசஸ்தலத்தில் வாழ்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவு ஆக்சிஜன் இருக்கும். காரணம் அவர்கள் வாழும் இடங்களில் காற்றில் தரைமட்டத்தை விட குறைவான அளவு ஆக்சிஜன் இருக்கும்.

அதற்கு ஈடாக அவர்கள் ரத்தத்தில் அதிகமான ரத்த சிவப்பு அணுக்கள் உருவாகும். (POLYCYTHEMIA) மேலும் மலையேற்றம் செய்பவர்கள் சரசரவென்று மேலே ஏறாமல் ஆங்காங்கே இடைவெளி விட்டு சிறு தங்கல்கள் செய்து ஏறுவார்கள். இதனால் அவர்கள் ரத்தத்தில் ஆக்சிஜன் குறைவதும்… ரத்த சிகப்பு அணுக்கள் அளவுகளில் கூடுவதும் ஒரே சேர மெதுவாக நடக்கும் இதை “ACCLAMATIZATION” என்று கூறுவோம். அதாவது உயரமான இடங்களில் வாழ்வதற்கு உடல் தன்னை தகவமைத்துக்கொள்ளும் கலை.

இந்த வகை தகவமைப்பு என்பது நுரையீரல் நல்ல முறையில் செயல்படுபவர்களுக்கு நிகழும் ஆனால்;

நுரையீரலில் கோவிட் போன்ற நியுமோனியா தொற்று இருப்பவர்களுக்கு
 உடல் பருமன் இருப்பவர்களுக்கு
 நுரையீரல் அழற்சி/ ஆஸ்துமா போன்ற நோய் இருப்பவர்களுக்கு
 வயதான மற்றும் குழந்தைகள்

போன்றோருக்கு அத்தனை சிறப்பாக நிகழாது. எனவே இவ்வகை மக்கள் மலையேற்றத்தில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளனர்.

இதே விசயத்தை கோவிட்19 மூலம் நிகழும் இந்த சைலண்ட் ஹைபாக்சியாவிற்கு பொறுத்திப்பாருங்கள். அதாவது நன்றாக இருக்கும் நுரையீரலை
கொரோனா வைரஸ் தாக்குகிறது.

அது தாக்கும் போது நுரையீரலின் சிறு குறு ரத்த நாளங்களில் பெரும்பான்மை கட்டிகளால் அடைக்கப்பட்ட நிலையில் கூட வெளியில் தெரியாமல் இருக்கிறார்கள்

இவர்களுக்கு என்னென்ன அறிகுறிகள் போன்ற வாய்ப்பு இருக்கிறது. உடல் முழுவதும் குறைவான ஆக்சிஜன் கிடைப்பதால்
1. உடல் சோர்வு
2. உடல் வலி
3. மூச்சு விடுவதில் லேசான சிரமம் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.

இவ்வாறான குறைவான ஆக்சிஜன் அளவுகளுக்கு சென்ற ஒரு நபர், இன்னும் நுரையீரலுக்கும் இதயத்துக்கும் அதிக வேலையைக் கோரும் வேலைகளைச் செய்தால் சைலண்ட் ஹைபாக்சியா வையலண்ட்டாக மாற வாய்ப்புள்ளது.

ஓட்டம் / மலையேற்றம்/ அதிக ஆக்சிஜன் கோரும் உடற்பயிற்சிகளை செய்யும் போது இந்த நிலை முற்றும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும் இத்தகைய நிலையில் மருத்துவமனையை அடையும் மக்களுக்கு ரத்த கட்டியை கரைக்கும் ஹெபாரின் மருந்து, ஆக்சிஜன் மற்றும் வெண்ட்டிலேட்டர் உதவி கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நிலை இருக்கிறதா என்பதை எப்படி கண்டறிவது?

Pulse Oximeter எனும் கருவி மூலம் ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்சிஜனின் அளவுகளை அறிய முடியும்.

இது கை விரல்களி்ல் மாட்டி சோதிக்கும் finger pulse oximeter கருவிகள் இப்போது பார்மசிகளில் பல ப்ராண்ட்களில் கிடைக்கின்றன.

அனைவரும் தங்களின் spo2 அளவுகளை தொடர்ந்து இந்த பல்ஸ் ஆக்சிமீட்டர்களை வாங்கி சோதித்து கொண்டே இருக்க வேண்டுமா???

தேவையில்லை.

காரணம் சந்தையில் கிடைக்கும் பல்வேறு வகை பல்ஸ் ஆக்சிமீட்டர்களின் தரம் குறித்து ஆய்வு செய்து கூறுவது இயலாது. அனைவராலும் அதை வாங்கி உபயோகிக்கவும் முடியாது.

ஆனால் கோவிட் தொற்று பரவி வரும் நோய் தொற்று மண்டலங்களில் இருப்பவர்களுக்கு அதீத உடல் அசதி / சோர்வு / உடல் வலி
/ மூச்சு விடுவதில் சிரமம் / திணறல் இருந்தால் மருத்துவமனையை அணுகுவதில்
நேரவிரயம் இருக்கக்கூடாது.

காரணம் நமக்கு தோன்று ஒரே அறிகுறியாக அது இருக்கலாம். சைலண்ட் ஹைபாக்சியா என்பது கோவிட் நோயின் ஒரு வடிவம் என்பதை அறிந்துகொண்டோம் தொடர்ந்து விழிப்புடன் இருப்போம்.

நன்றி

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.