(பாரத் ஜோடோ அபியான் (Bharat Jodo Abhiyan) அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரான யோகேந்திர யாதவ் அவர்களின் பயண அனுபவம் தான் இக்கட்டுரை)
மேற்கு உ.பி., தெற்கு பஞ்சாப், வடக்கு ஹரியானா மற்றும் கிழக்கு ராஜஸ்தான் வழியாக 1500 கி.மீ தூரம் ஐந்து நாள் பயணத்தை நாங்கள் முடித்திருந்த போது, எனக்கு “இந்த அசாதாரண காலத்தில் இருந்து இயல்பான அரசியலுக்கு திரும்புவது எவ்வளவு கடினமான ஒன்று?” என்ற கேள்வி எழுந்தது.
இந்தப்பயணத்தை ஒரு எளிய கேள்வி உடன் தொடங்கினோம். 2014 மற்றும் 2019-இல் வீசியது போல இம்முறையும் ‘இந்தி இதயம்’ முழுவதும் பா.ஜ.க. அலை வீசுகிறதா? எதிர்க்கட்சிகள் இம்முறையும் ‘வாஷ் ஆவுட்’ ஆகப்போகிறார்களா? என்பதுதான் அக்கேள்வி.
இக்கேள்விக்கு தெருக்கள், வீடுகள், சந்தை போன்ற பல இடங்களுக்கு சென்று சுமார் 400 வாக்காளர்களிடம் பேசியதிலிருந்து, எளிமையான அதே சமயம் அழுத்தமான “இல்லை” என்ற பதில் கிடைத்தது.
மக்கள் அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள், உள்ளூர் பிரச்சனைகள், பதவியில் இருப்பவர்கள் மீதான வெறுப்பு, சாதி மற்றும் சமூக முரண்பாடுகள் போன்றவற்றை வெளிப்படுத்தியதிலிருந்து பிரதமர் மோடி தோற்கடிக்கப்பட முடியாதவர் என்ற பிம்பம் உடைந்துள்ளது என்ற எதார்த்தத்தை உணர முடிந்தது. மக்களின் இந்த பொது மனநிலை தேர்தல் முடிவுகளாக மாறினால், மோடியின் பா.ஜ.க. இந்த பிராந்தியத்தில் பெரும்பான்மையாக வெற்றிப்பெற முடியாது.
படிக்க: 2024 நாடாளுமன்றத் தேர்தல்: வேண்டும் மக்களுக்கான ஜனநாயகம்!
இருப்பினும், இது ஒரு அசாதாரண காலமாக உள்ளது. தேர்தலும் எந்தளவிற்கு நேர்மையாக நடக்கும் என்பது தெரியவில்லை. இது “மக்களிடையே நிலவும் இந்த கோபமும் கவலையும் பொதுக் கருத்தாக மாறுமா?” என்ற கேள்வியை நமக்கு எழுப்புகிறது. உண்மையில், மக்களின் வாக்குகள் உண்மையிலேயே தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்குமா? இதைப்பற்றி நாங்கள் தொடங்கியதை விட அதிகமான கேள்விகளுடன் திரும்பினோம்.
சரிந்துவரும் மோடியின் பிம்பம்
கிழக்கு ராஜஸ்தானில் 30 வயதான ஒருவர் கூறினார். “எல்லாவற்றிற்கும் காலாவதி தேதி உள்ளது. கொரோனாவிற்கு ஒரு காலாவதி தேதி இருந்தது, பின்னர் அது தானாகவே மறைந்து விட்டது. அதேபோல் மோடி மேஜிக் கூட அதன் காலாவதி தேதியை எட்டியுள்ளது” என்றார். இந்த கருத்து நாங்கள் சென்ற அனைத்து இடங்களிலும் பெரும்பான்மை மக்கள் தெரிவித்த கருத்தை படம் பிடித்துக்காட்டும் விதமாக இருந்தது.
மக்கள் பார்வையில் இருந்து மோடி மறைந்து விடவில்லை; கருத்துக்கணிப்புகள் மோடி எதிர்க்கட்சியினரை விட முன்னணியில் இருப்பதாக சொல்வதில் சந்தேகமில்லை; தீவிர மோடி ஆதரவாளர்களையும் நாங்கள் சந்தித்தோம்; ஆனால், எல்லா பிரச்சினைகளையும் மூடி மறைக்க தற்போது மோடியின் பிம்பம் மட்டும் போதவில்லை, அவரின் கவர்ச்சி குறையத் தொடங்கிவிட்டது. மாறாக மோடியின் பிம்பம் நீண்ட கால சிக்கல்களுக்குதான் வழி வகுத்துள்ளது.
மக்களிடம் உரையாடியதில் இருந்து பா.ஜ.க-வை தற்காப்பு நிலைக்கு தள்ளும் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லை என்பது தெரிய வந்தது. வேலையின்மை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி கடுமையான பிரச்சனையாக உள்ளது. எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு பொய்கதையை கட்டமைக்க கூடிய தீவிர பா.ஜ.க. ஆதர்வாளர்களால் கூட வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி கேட்கும் போது பதிலளிக்க முடியாமல் திணறுகின்றனர்.
‘சீனாவை வெற்றி கொள்கிறோம்’ போன்ற பா.ஜ.க.-வின் பொய் பிரச்சாரங்களை சிலர் நம்பலாம். ஆனால், பா.ஜ.க. விசுவாசிகள் கூட தங்கள் குடும்பகளில் நிலவும் வேலையின்மையை மூடி மறைக்க முடியாத சூழலே நிலவுகிறது. அக்னிபாத் என்பது பணமதிப்பிழப்பு போன்ற ஏமாற்றுத் திட்டம் என்பது அம்பலமாகியுள்ளது.
அடுத்து பணவீக்கம் என்பது இரண்டாவது பெரிய பிரச்சனையாக உள்ளது. பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்கள், வழக்கமாக வழங்கப்படும் ரேஷன் பொருட்களுக்கு மோடிக்கு நன்றி தெரிவித்தாலும் (தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்டம் காங்கிரசு அரசால் கொண்டுவரப்பட்டது), இது அவர்களின் துன்பத்தை தணிக்க போதுமானதாக இல்லை.
படிக்க: ஊழலில் உலக சாதனை படைக்கிறது RSS-BJP!
அதுமட்டுமின்றி, விவசாயிகளின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமலே உள்ளது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் வழங்கப்படும் 6000 ரூபாய் என்ற அற்ப நிதி அதிகரித்துவரும் டீசல் மற்றும் உரங்கள் விலையைக்கூட ஈடுசெய்யவில்லை என்கின்றனர். இதைத்தவிர உள்ளூர் பிரச்சினைகள் நிறைய உள்ளன. கால்வாய், சாலை போன்ற கட்டுமானம் வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இதுவரை விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு என்பது வழங்கப்படவில்லை, மருத்துவச் செலவுகள், வெட்கக்கேடான அன்றாட ஊழல்கள் என மக்கள் பிரச்சனைகளை பட்டியிலிடுகின்றனர்.
ஆனால், இந்த நீண்ட பட்டியலில் அயோத்தி ராமன் கோவில் திறப்பு இல்லை. மக்கள் யாரும் சுயமாக அயோத்தியில் ராமன் கோவில் திறப்பு குறித்து பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க. ஆதரவாளர்கள் கூட இந்தியாவின் சர்வதேச நிலையை உயர்த்தியதையும், 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்ததில் முக்கிய பங்காற்றியதையும் மோடியின் சாதனைகளாக குறிப்பிட்ட பின்னரே அயோத்தி ராமன் கோவில் குறித்து பேசுகின்றனர்.
பழங்குடி சமூகத்தைச் சார்ந்த இளைஞர் ஒருவர் ராமர் கோவில் திறைப்பை கடுமையாக எதிர்த்து பேசினார், “கோவில்ல இருக்க கடவுள அரசியலுக்கு இழுத்துட்டு வந்துட்டாங்க. பொது மக்களை கோவிலுக்குள்ள தள்ளுறாங்க” என்றார்.
பதவியில் இருக்கும் அமைச்சர்களின் செயல்பாடும் இம்முறை முக்கிய பிரச்சனையாக உள்ளது. இந்தப் பிராந்தியத்தில் பதவியில் இருப்பவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் பா.ஜ.க-வை சேர்ந்தவர்கள், அதுவும் மூன்று முறை அல்லது அதற்கும் மேலாக பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளில் இவர்கள் ஒருமுறை கூட மக்களிடம் முகத்தைக்காட்டவில்லை. இவர்கள் மீதான மக்களின் வெறுப்பு பா.ஜ.க-விற்கு பெரிய நெருக்கடியாக உள்ளது.
சர்வாதிகாரம் பற்றிய உரையாடல்கள்
இவை அனைத்தும் மோடி கும்பல் கூறும் 400 இடங்களை பிடிப்போம் என்ற பிரச்சாரத்திற்கு எதிரானவையாக உள்ளது. நாங்கள் கேட்ட மக்கள் கருத்துகள் பொதுக்கருத்தாக உருவாகி, உண்மையாக வாக்குப்பதிவு செய்யப்பட்டு, வாக்குகள் ஒழுங்காக எண்ணப்பட்டால் பா.ஜ.க. தோற்பதை நாம் எதிர்ப்பார்க்கலாம்.
எதிர்க்கட்சிகளை முடக்கி சமமற்ற ஆடுகளகத்தை பா.ஜ.க உருவாக்கியிருந்தாலும், பா.ஜ.க 2019 தேர்தலில் பெற்ற வெற்றியை இந்த 2024 தேர்தலில் பெறுவது கடினம். மோடி எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கூறுவதற்கு மாறாக, ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் மாநிலங்களில் எண்ணிக்கை குறைவதற்கான வாய்ப்புகளே உள்ளன.
நாம் சாதாரண காலத்தில் வாழவில்லை என்பது மக்களுக்கும் தெரிகிறது. ஏனெனில், இந்த நான்கு தசாப்தங்களில் நான் கேள்விப்பட்டதை விட மக்கள் ‘சர்வாதிகாரம்’ என்ற சொல்லை உரையாடல்களில் குறிப்பிடுகின்றனர். பா.ஜ.க-வை எதிர்ப்பவர்கள் முன்னெப்போதையும் விட சர்வாதிகாரம் குறித்தான அச்சத்தை அதிகம் தூண்டுகிறார்கள்.
மக்களிடையே ‘மோடி ஊடகங்கள்’ என்ற சொல்லாடல் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. எதிர்க்கட்சி அரசாங்கங்களை கவிழ்ப்பது, கட்சித்தாவல், அரவிந்த் கெஜ்ரிவால் கைது ஆகியவற்றை சர்வாதிகாரத்தின் சான்றுகளாக மக்கள் மேற்கோள் காட்டுகின்றனர். அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ குறித்து கிராம மக்கள் பேசும்போது, வாஷிங்மெஷின் என்பதும் அடிபடுகிறது. ரெய்டு செய்யப்பட்டு உள்ளூர் காங்கிரஸ் தலைவர் பா.ஜ.க-விற்கு மாறியப்பின்னர் ”கிளீன் சீட்” வழங்கப்பட்டது குறித்தும் அவர்கள் விவாதிக்கின்றனர்.
முதன் முறையாக இ.வி.எம் குறித்தான சந்தேகம் மக்களிடையே பரவலாக உள்ளது. “ஒரு பட்டனை அழுத்தினா, வேற சின்னத்துல ஓட்டு விழுது” என்று மக்கள் குறிப்பிடுகின்றனர். முன்பெல்லாம் இந்த சந்தேகம் மக்களிடையே நிராகரிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது, ஆனால் தற்போது இது வாக்காளர்கள் மத்தியில் ஆழமாக உள்ளது.
அசாதாரண காலங்கள் பல அரசியல் முரண்பாடுகளை உருவாக்குகிறது. மக்களின் அடிமட்ட பிரச்சனைகள் தேசிய ஊடகங்களில் பேசுபொருளாக்கப்படுவதில்லை. பொது கருத்தாக்கத்தில் இருந்து சாதாரண உழைக்கும் மக்களின் கருத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தொடர்புடைய தேசிய செய்திகள் அவர்களையே சென்றடைவதில்லை. சான்றாக, நாங்கள் பேசிய வாக்காளர்களில் ஒரு சிறு பகுதியினர் மட்டும்தான் தேர்தல் நிதிப்பத்திர பிரச்சனை குறித்து கேள்விப்பட்டிருந்தனர். நிறைய பேருக்கு அதுகுறித்து ஒன்றுமே தெரியவில்லை.
நாட்டில் என்ன நடக்கிறது என்பது பற்றிய மக்களின் கருத்து அவர்களின் தனிப்பட்ட அனுபவத்திலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. “கடந்த ஐந்தாண்டுகளில், எனது மற்றும் எனது குடும்பத்தின் நிலை மோசமடைந்துள்ளது. ஆனால், நாடு முன்னேறி வருவதாகத் தெரிகிறது” என்பது எப்போதும் சொல்லப்படும் கருத்தாக உள்ளது. பொது கருத்து என்பதிலிருந்து, தனிப்பட்ட தேர்வுகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இந்திய வாக்காளர்கள் தாங்கள் ஆதரிக்கும் குதிரையே வெல்லப் போகிறது என்று நம்புவார்கள். ஆனால், இம்முறை பல வாக்காளர்கள் “நாங்கள் பா.ஜ.க.-விற்கு வாக்களிக்க மாட்டோம், எங்கள் குடும்பம், கிராமம் யாரும் பா.ஜ.க-விற்கு வாக்களிக்க மாட்டோம்” என்று கூறியுள்ளனர்.
ரித்திக்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube