2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 தேர்தல். மோடியின் பிரச்சாரப் பயணத்திற்கேற்ப பிற மாநிலங்களில் தேர்தல் பல கட்டங்களாகப் பிரித்து நடத்தப்படுகிறது. மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 7 கட்டத் தேர்தல். மோடி-அமித்ஷா கும்பலின் தேர்தல் பிரச்சாரத்திற்கு சுமார் 75 நாட்கள் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இந்துமுனைவாக்கக் கண்ணோட்டத்தில் பிரச்சாரம் செய்கிறது பா.ஜ.க. கும்பல். கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார் மோடி. எதிர்க்கட்சிகளை இந்து விரோதிகள் என்று பிரச்சாரம் செய்கிறார். தேர்தல் ஆணையமோ, இவை எவற்றையும் கண்டுகொள்ளாமல், மோடி வீட்டு ஏவலாளியைப் போல எஜமான விசுவாசத்தைக் காட்டி வருகிறது.
தேர்தல் பத்திரங்கள் வெளியீடு, தேர்தல் அதிகாரி நியமனம் முதலாக அனைத்து விசயங்களிலும் எல்லா மரபுகளையும் ஜனநாயக வழிமுறைகளையும் தூக்கியெறிந்துவிட்டது, மோடி-அமித்ஷா கும்பல். தேர்தலில் வெற்றிபெற வேண்டும், அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம், பேசலாம் என்பதுதான் அக்கும்பலின் ஒரே கொள்கை. சாம, தான, தண்ட, பேதம் எனும் பார்ப்பன சதிக் கோட்பாட்டையே தனது கொள்கையாக வைத்திருக்கும் இந்த கும்பல் எந்த கடைகோடிக்கும் செல்லும் என்பதற்கு இந்த தேர்தலை ஒட்டிய அந்த கும்பலின் அணுகுமுறைகளே சாட்சி.
எதிர்க்கட்சி கூட்டணியில் இருக்கும் சிறிய கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கியதில் செய்த அடாவடித்தனத்தைப் பாருங்கள். வி.சி.க., ம.தி.மு.க., நா.த.க-விற்கு ஒரு நீதி, ஜி.கே.வாசன் போன்ற பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுக்கு ஒரு நீதி. தேர்தல் கட்சிகளைக் கூட ஜனநாயகமாக அணுகத் தயாராக இல்லை.
தேர்தல் பத்திரங்கள் மூலமாக மட்டுமே பல்லாயிரம் கோடிகளைச் சுருட்டிய பா.ஜ.க. கும்பல், காங்கிரசு கட்சியின் வங்கிக் கணக்கை முடக்கியது; அதற்கு எதிராக நீதிமன்றத்திற்குச் சென்று போராடிய பின்னர், வருமான வரித்துறை மூலமாக காங்கிரசுக்கு நெருக்கடி கொடுத்தது.
எதிர்க்கட்சித் தலைவர்களை சுதந்திரமாகப் பிரச்சாரம் செய்யவும் அனுமதிக்கவில்லை. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது; பாரதீய ராஷ்டிரிய சமிதியின் தலைவர் கவிதா கைது; ஆம் ஆத்மி கட்சியின் தலைவர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது – இவ்வாறாக அமலாக்கத்துறையை ஏவி நாள்தோறும் எதிர்க்கட்சிகளை வேட்டையாடி வருகிறது.
இத்தனைக்கும் காரணம் என்ன?
தோல்வி பயம்!
ஆம், தோல்வி பயம் மோடி-அமித்ஷா கும்பலுக்குத் தொற்றிக் கொண்டது. இனி எந்த வகையிலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை அக்கும்பல் நன்குணர்ந்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் மோடி-அமித்ஷா கும்பல் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. விவசாயிகள் வருவாயை இரட்டிப்பாக்குவோம், வங்கிக் கணக்கில் ரூ.15,00,000 நிதி போடுவோம்; இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்; விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை சட்டப்பூர்வ உரிமையாக்குவோம்; பெண் கல்வியை மேம்படுத்துவோம்; கருப்புப் பணத்தை ஒழித்துக் கட்டுவோம்… அப்பப்பா, மோடி-அமித்ஷா கும்பல் அவிழ்த்துவிட்ட இந்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய், பித்தலாட்டம் என்பதை மக்கள் தமது சொந்த அனுபவத்தில் இருந்து உணர்ந்துவிட்டனர்.
பாசிச பயங்கரவாதம்
மாறாக, மோடி-அமித்ஷா கும்பலின் பத்தாண்டு ஆட்சி செய்ததுதான் என்ன?
கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பின்னடைந்துள்ளது; சிறுதொழில்கள் நசிந்துள்ளன; விவசாயம், சிறு வணிகங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன; சீனாவில் இருந்து இரும்பு, மலிவுவிலைப் பொருட்கள் போன்றவற்றின் இறக்குமதியால் இந்திய தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன; ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் மூலமாக தென்மாநிலங்களைச் சுரண்டி “பசு வளைய மாநிலங்கள்” என்றழைக்கப்படும் குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு மிகப்பெரிய அளவில் சலுகைகள் வழங்கப்படுகின்றன; நீட், தேசியக் கல்விக் கொள்கை, தேசிய நதிநீர் கொள்கை, குற்றவியல் சட்டத்திருத்தம், தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தம் போன்ற பல்வேறு மக்கள் விரோத சட்டங்கள், திட்டங்களால் மக்களின் பெரும்பகுதியினரின் வாழ்நிலைமை மேலும் மேலும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது; வேலையின்மை அதிகரித்துள்ளது; விலையேற்றம் அதிகரித்துள்ளது.
அம்பானி, அதானி, வேதாந்தா உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சியையே நாட்டின் வளர்ச்சியாக சித்தரிக்கிறது மோடி கும்பல். இந்த கார்ப்பரேட் முதலாளிகளோ உலகப் பணக்காரர்களாக உயர்ந்து வருகின்றனர். மொத்தத்தில், மக்களின் இரத்தத்தில், அம்பானிகளுக்கான சொர்க்கத்தை உருவாக்குகிறது பாசிச மோடி கும்பல்.
இந்த பத்தாண்டுகளில் ஆர்.எஸ்.எஸ். என்னும் நச்சுப் பாம்பானது, நாட்டின் சமூக, அரசியல், பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் அனைத்து இடங்களிலும் கிளை பரப்பியுள்ளது.
பெண்கள் மீது ஏவப்படும் பாலியல் வன்முறைகள், சமூகத்தை சீரழிக்கும் போதைக் கலாச்சாரம், கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபடும் ரவுடி கும்பல் போன்ற பல்வேறு குற்றங்களின் பின்னணியில் கணிசமான அளவுக்கு ஆர்.எஸ்.எஸ். கும்பல் உள்ளது. பா.ஜ.க-வின் பல முன்னணி பிரமுகர்கள் கேடி கிரிமினல்களாக இருப்பதையும் அவர்களது குற்றச்செயல்கள் அம்பலத்திற்கு வந்து அவ்வப்போது கைது செய்யப்படுவதையும் நாம் பார்க்கிறோம். இதுபோன்ற குற்றப் படையினரைக் கொண்டுதான் மதக்கலவரங்களை அரங்கேற்றி வருகிறது ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார கும்பல்.
டெல்லி, உத்தரப்பிரதேசம், அரியானா, மணிப்பூர், அசாம், திரிபுரா, கர்நாடகா, ஒரிசா, சத்தீஸ்கர், உத்தராகண்ட், குஜராத், மகாராஷ்டிரா என இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் இஸ்லாமியர்கள், தலித்துகள், உழைக்கும் மக்கள் மீது ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார கும்பலால் கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
தொழிலாளர்கள் உரிமை கேட்டுப் போராடினாலோ, விவசாயிகள் போராட்டங்கள் நடத்தினாலோ உள்ளூர் சமூக விரோதிகள், கார்ப்பரேட்டுகளுடன் சேர்ந்து கொண்டு மக்களை ஒடுக்குவதும் இந்த ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார கும்பல்தான்.
ஆம். ஒரு வரியில் சொன்னால், மோடி-அமித்ஷா கும்பல் பத்தாண்டுகளில் அரங்கேற்றியிருப்பது, பாசிச பயங்கரவாதம்.
படிக்க: டெல்லி சலோ 2.0: பாசிசத்தை வீழ்த்தும் பாதை!
போராட்டக் களம்
இந்த பாசிச பயங்கரவாதம் தோல்வி முகம் தழுவியதற்கு காரணம் என்ன?
மோடி கும்பலின் பயங்கரவாத நடவடிக்கைகளாக மேலே விளக்கியிருப்பவை ஒரு சிறு பகுதிதான். நமது நாட்டின் உழைக்கும் மக்கள் மீது மோடி-அமித்ஷா கும்பலும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கப் பரிவாரக் கும்பலும் திணித்திருக்கும் பயங்கரவாதம் என்பது கொஞ்ச நஞ்சமல்ல.
தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்னும் மறுகாலனியாக்கக் கொள்கைகளைக் கட்டற்ற முறையில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருந்த இந்த கும்பல், அதற்கெதிரான மக்கள் போராட்டங்கள் தீவிரமடையும் என்பதையும் உணராமல் இல்லை.
இப்போது மட்டுமல்ல, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நமது நாட்டை அடிமைப்படுத்தி சூறையாடிய போது அது உருவாக்கிய ஒரு கொள்கை இருக்கிறது. அதுதான் பிரித்தாளும் சூழ்ச்சி. இந்துக்களையும் இஸ்லாமிய மக்களையும் பிளவுப்படுத்தி ஆட்சி செய்யும் முறையை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் உருவாக்கியது. அதற்கு உற்றத் துணையாக இருந்த அமைப்புதான் 1925-இல் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். என்றழைக்கப்படும் ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம்.
இன்று, மறுகாலனியாக்கக் கொள்கைகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் போதும், அதே பிரித்தாளும் திட்டத்தை ஆர்.எஸ்.எஸ். கும்பல் நடைமுறைப்படுத்தி வருகிறது. அன்று, இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிய ஆர்.எஸ்.எஸ். இயக்கம், கிறிஸ்தவர்களான வெள்ளையர்களின் அடிமையாக இருந்தது. இன்றோ, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், தலித் மக்கள், பழங்குடி மக்கள் என ஒவ்வொரு பகுதிக்கும் இடத்திற்கும் ஏற்ற வகையில், பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு வருகிறது.
இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு மக்கள் பலியாகாமல் இல்லை. “வளர்ச்சி நாயகன்” என்ற மோடியின் பிம்பத்தைப் பார்த்தும், இந்துமுனைவாக்கத்திற்கு பலியாகியும் வடமாநில மக்கள் மோடிக்கும் பா.ஜ.க-விற்கும் மீண்டும் மீண்டும் ஆதரவளிக்கவே செய்கின்றனர்.
அதேவேளையில், மக்கள் மோடி-அமித்ஷா கும்பலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டுதான் இருந்தனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நூற்றுக்கணக்கான மக்கள் வங்கி வாசல்களில் வரிசையில் நின்றபடியே மரணமடைந்தனர். மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்தன. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பினால் சிறுதொழில்கள் நசிந்தன. கொரோனா திடீர் ஊரடங்கின் போது இலட்சக்கணக்கான மக்கள் உணவின்றி தவித்தனர். ஆக்ஸிஜன் இன்றி பல இலட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். இச்சூழல்களின் போதெல்லாம் வெவ்வேறு வகைகளில் மக்கள் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தனர்.
அதேவேளையில், பா.ஜ.க-விற்கு எதிரான மக்கள் போராட்டங்களும் வளர்ந்து வந்தன.
தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் பா.ஜ.க-விற்கு எதிரான உறுதியான மக்கள் போராட்டமாகும். 2019-ஆம் ஆண்டு குடியுரிமை சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்ட போது இஸ்லாமியப் பெண்கள் தொடங்கிய ஷாகின்பாக் போராட்டம் இந்தியாவே கிளர்ந்தெழுந்த முதல் போராட்டமாகும்.
மூன்று வேளாண் சட்டங்களை மோடி கும்பல் கொண்டுவந்த போது, டெல்லியை முற்றுகையிட்டு பஞ்சாப், அரியானா, இராஜஸ்தான், உ.பி. மாநில விவசாயிகள் தொடங்கிய போராட்டம், ஓராண்டுக்கும் மேலாக நீடித்தது; பல நூறு விவசாயிகள் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்தனர்; இப்போராட்டம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்றது. ஆம், மோடி-அமித்ஷா கும்பலைப் பணியவைத்த முதல் நாடுதழுவிய போராட்டம் இதுவே.
இதோ இன்றும் தொடர்கிறது, மோடி-அமித்ஷா கும்பலுக்கெதிரான மக்கள் போராட்டங்கள்.
குறைந்தபட்ச ஆதாரவிலையை சட்டமாக்கக்கோரி டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராடி வருகின்றனர்; மகாராஷ்டிராவில் மராத்தா சாதியினர் இடஒதுக்கீடு கேட்டு போராடி வருகின்றனர்; காஷ்மீரைப் பிரித்தபோது லடாக் மக்களுக்கு பழங்குடி அந்தஸ்தும் மாநில அந்தஸ்தும் வழங்குவதாக சொன்ன மோடி-அமித்ஷா கும்பலின் பொய்யை நம்பி ஏமாந்த லடாக் மக்கள் 21 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர்.
ஆம், மக்களின் போராட்ட அலை, இந்துமுனைவாக்கத்தை மழுங்கடிக்க வைத்துள்ளது. அதனால்தான், தோல்வி பயத்தில் இருக்கும் பாசிசக் கும்பல், அனைத்து ஜனநாயக, சட்ட வழிமுறைகள் மீதும் நம்பிக்கையிழந்து, வெறிப்பிடித்து எதிர்க்கட்சிகளை வேட்டையாடி வருகிறது.
படிக்க: பாசிச பா.ஜ.க-வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி? || சிறுநூல் – PDF வடிவில்!
எதிர்க்கட்சிகளின் வெற்றியின் அடிப்படை
மக்கள் போராட்டங்கள்தான் எதிர்க்கட்சிகளையும் வெற்றிப்பெற வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் 2014-ஆம் ஆண்டில் நடந்தது என்ன?
2ஜி அலைக்கற்றை ஊழல் என்ற ஒரு பொய்யைப் பரப்பி ஆ.ராசா, கனிமொழி கைது செய்து சிறையில் வைக்கப்பட்டிருந்தனர். தி.மு.க. மீது ஊழல் முத்திரை குத்தப்பட்டிருந்தது. தமிழ்நாட்டின் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. மிக மோசமான தோல்வியைத் தழுவியது.
ஆனால், 2019-இல் நடந்ததென்ன?
கொங்குவேளாளர் சாதி அடித்தளத்தைக் கொண்ட அ.தி.மு.க-வும், வன்னிய சாதி அடிப்படையைக் கொண்ட பா.ம.க-வும் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தன. இத்துடன், தே.மு.தி.க. போன்ற கட்சிகளும் இணைந்து நின்றன. ஆனால், தி.மு.க. கூட்டணி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றது!
இதற்கு என்ன காரணம்? தி.மு.க. ஊழல் கட்சி அல்ல என்று மக்கள் கருதிவிட்டார்களா? தி.மு.க-வுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் எல்லாம் பாசிச எதிர்ப்புக் கட்சிகள் என்று மக்கள் நம்பிவிட்டார்களா? இல்லை.
தமிழ்நாட்டு மக்களிடம் எழுந்த மோடி எதிர்ப்பலைதான், தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறவைத்தது. அப்போது மட்டுமல்ல, 2021 சட்டமன்றத் தேர்தலிலும் மோடி எதிர்ப்பலைதான் முதன்மையான பங்காற்றியது.
மோடி எதிர்ப்பலை என்பது மோடி என்ற தனிமனிதருக்கு எதிரான எதிர்ப்பலை அல்ல. ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார கும்பலின் இந்துராஷ்டிர வெறி அரசியலுக்கும் பா.ஜ.க. அரசின் கார்ப்பரேட் ஆதரவு, மக்கள் விரோதத் திட்டங்களுக்கும் எதிரான அலையாகும்.
ஆகையால், மக்கள் போராட்டங்களே எதிர்க்கட்சிகளை வாழவைக்கிறது.
மக்களின் விழிப்புணர்வு
மக்களின் விழிப்புணர்வு வளர்ந்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை தமிழ்நாட்டில் நடந்த மக்கள் போராட்டங்களைக் கவனியுங்கள்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகள் என பல்வேறு பிரிவினர் தி.மு.க. அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி போராடினர்.
இப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கூட தமிழ்நாட்டில் நிலைமை என்ன?
மேல்மா சிப்காட்டிற்கு எதிராக அங்கிருக்கும் விவசாயிகள் போராடி வருகின்றனர்; பரந்தூர் விமான நிலையத்திற்கு எங்களது விளைநிலங்களை ஒருபோதும் கொடுக்க மாட்டோம் என அம்மக்கள் போராடி வருகின்றனர். காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் அமைக்கப்படுவதற்கெதிராக மீனவ கிராம மக்கள் போராடி வருகின்றனர். இவை மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தங்களது நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றப்படாததை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர்.
ஆம், பாசிச மோடி கும்பலை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பது மக்களின் உணர்வாகும். அதேவேளையில், எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் கார்ப்பரேட் ஆதரவு, மக்கள் விரோத நடவடிக்கைகள் காரணமாக, எதிர்க்கட்சிகள் மீதும் மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர். அதன் விளைவுதான், தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்ற தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்களாகும்.
மக்கள் இந்த அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். அதற்கு காரணம், பா.ஜ.க. மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளும்தான்.
ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கப் பரிவார கும்பலுக்கு ஜனநாயகம் மீதும் சமத்துவத்தின் மீதும் தீராத வெறுப்பு இருப்பதை மக்கள் நன்கறிவர். இதனால்தான், அக்கும்பல் முன்வைக்கும் இந்துராஷ்டிரம் தங்களுக்கு வேண்டாம் என்று மக்கள் கருதுகின்றனர்.
ஆனால், “அரசியல் சாசனத்தைப் பாதுகாப்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்” என்று முழங்கும் எதிர்க்கட்சிகள்தான், இந்த அரசியல் அமைப்பின் மீது மக்கள் நம்பிக்கை இழப்பதற்குக் காரணமாக இருக்கிறார்கள். இந்த நிலைமை மாறாமல், பா.ஜ.க-வை தேர்தலில் வீழ்த்துவதால் எந்தப் பயனும் இல்லை என்று மக்கள் கருதுகின்றனர். அதன் விளைவுதான், தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்கள்.
படிக்க: தேவை, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு || வெளியீடு
மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். மோடி-அமித்ஷா கும்பல் கொண்டுவந்த அத்தனை சட்டத் திட்டங்களும் நடைமுறையில் இருக்கும் என்றால், எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்று என்ன பயன் என்பதுதான் மக்களின் கேள்வி.
மக்களுக்குத் தேவை, அரசியல்-பொருளாதார மாற்றுத் திட்டமாகும். அதுதான், பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசாகும்.
ஆம், வைரஸ் நோய்க்கிருமி தொற்றிலிருந்து மக்களைக் காப்பற்ற ஆண்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்துவதைப் போல, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுதான் பாசிசம் வளர்வதற்கான அடிப்படைகளைத் தகர்க்கும்.
குறைந்தபட்ச ஆதாரவிலை, எட்டுமணி நேர வேலை, பணிப்பாதுகாப்பு, அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு, இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாயிகள், பழங்குடியினர் தங்களது வாழ்விடத்திலேயே வாழ்வதற்கான உத்தரவாதம் என அனைத்து வகையிலும் மக்களின் உரிமைகளை இந்த பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுதான் பாதுகாக்கும்.
இந்த மாற்றுக் கொள்கைதான், பா.ஜ.க-வைத் தேர்தலிலும் வீழ்த்தும்! அதனால்தான், மக்கள் போராட்டக் களத்தில் நிற்கிறார்கள்.
பாசிசக் கும்பலால் எதிர்க்கட்சிகள் தேர்தல் களத்தில் இருந்து விரட்டியடிக்கப்படுவதைத் தடுக்க எதிர்க்கட்சிகளும் இப்போது போராட்டக் களத்திற்கு வந்துள்ளார்கள்.
தேர்தல் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்கான மார்ச் 31 டெல்லியில் நடக்கும் “இந்தியா கூட்டணி”யின் போராட்டம், மக்கள் உரிமைகளுக்கான போராட்டங்களுடன் கைகோர்க்கட்டும். இதன்மூலம் தான் தேர்தல் வெற்றியை மட்டுமல்ல, பாசிசத்திற்கு எதிரான வெற்றியையும் சாதிக்க முடியும்!
வெற்றிவேல் செழியன்
(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2024 | மின்னிதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube