அன்பார்ந்த உழைக்கும் மக்களே,
பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளே!
மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய எமது புரட்சிகர அமைப்புகளால், அரசியல் கோட்பாடு ரீதியாக முன்வைக்கப்பட்ட “காவி-கார்ப்பரேட் பாசிசம்” என்ற வரையறையை, இன்னும் கூர்மையாகவும் வெகுமக்களுக்கு எளிதில் உணர்த்தும் வகையிலும்,“ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!” என்ற மைய முழக்கமாக வடித்து, அதன்கீழ் தொடர்ச்சியாக பல்வேறு அரசியல் இயக்கங்களை எடுத்துவருகிறோம்.
கடந்த 2022 செப்டம்பர் 17-இல் இம்மைய முழக்கத்தின் கீழ் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசத்தை முறியடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி ஒரு சிறு வெளியீடு கொண்டுவரப்பட்டது. பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் அன்றைய சூழலில், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கு இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வழிகாட்டின.
அந்த மாநாட்டுத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் வகையில், எமது அமைப்புகள் சார்பாக பல்வேறு மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில், எமது மைய இயக்கத்தின் தொடர்ச்சியாக 2023 மே மாதம், மதுரையில், “சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு துவளாது போராடு!” என்ற முழக்கத்தின் கீழ் மாபெரும் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டின் நோக்கத்தை விளக்கி ஒரு சிறு வெளியீடு கொண்டுவரப்பட்டது. அந்த வகையில், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு இந்த மாநாட்டின் தீர்மானங்கள் வழிகாட்டின.
ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசத்தை வீழ்த்த வேண்டும் எனில், மக்கள் எழுச்சி உருவாக்கப்பட வேண்டும். அந்த வகையில், பாசிசத்தை வீழ்த்துவதற்கு மக்களை அமைப்பாக்கிப் போராட வேண்டும் என்ற நோக்கத்தில், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.
எமது மாநாடுகளில் உரையாற்றிய பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள், நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அந்த வகையில், தற்போது 2024 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி, “வேண்டாம் பி.ஜே.பி, வேண்டும் ஜனநாயகம்” என்ற முழக்கத்தை முன்வைத்து “கோடி மக்களிடம் கொண்டு செல்வோம்” என்ற இயக்கத்தை ஆகஸ்டு மாதம் முதலாக தொடங்கி பிரச்சாரம் செய்துவருகிறோம்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவது மட்டுமல்ல; பாசிசத்தின் அடிக்கட்டுமானங்கள் தகர்க்கப்படுவதும், பாசிசம் மீண்டெழாத வகையில் ஒரு மாற்றுக் கட்டமைப்பு உருவாக்கப்படுவதும் அவசியம் என்பதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். அந்தத் திசையில் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி வருகிறோம்.
எமது அமைப்புகள் முன்வைக்கும், “பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு” எனும் அரசியல் மாற்று (political alternative) குறித்து சுருக்கமாக விளக்கும் வகையில் இக்கையேடு கொண்டுவரப்பட்டுள்ளது. இத்துடன், பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசின் கடமைகளையும் பின் இணைப்பாக இணைத்துள்ளோம்.
இவற்றை ஊக்கமாக விவாதிக்குமாறும் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் எம்முடன் இணைந்து செயல்பட முன்வருமாறும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
புரட்சிகர வாழ்த்துகள்!
நாள்: 08-09-2023
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, (மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு-புதுவை
நன்கொடை: ரூ.30/-
வெளியீடுகளைப் பெற தொடர்பு கொள்ள வேண்டிய எண்:
97916 53200, 94448 36642,
73974 04242, 99623 66321