19.12.2024

அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்திய ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிசக் கும்பலை
மக்கள் போராட்டத்தின் மூலம் வீழ்த்துவோம்!

பாசிசக் கும்பலின் திசைதிருப்பும் முயற்சியை முறியடிப்போம்!

பத்திரிகை செய்தி

டந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) நாடாளுமன்றத்தில், அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான விவாதத்தின்போது அண்ணல் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்துக்கு நாடு முழுவதும் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. காங்கிரஸ், தி.மு.க, வி.சி.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், ஜனநாயக அமைப்புகளும் நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் போராட்டங்களில் இறங்கியுள்ளன.

அமித் ஷா தனது உரையின்போது, “அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என கூறுவது பேஷனாகி விட்டது. இந்த அளவுக்கு கடவுளின் பெயரைப் பயன்படுத்தினால், ஏழு பிறவிகளுக்கும் நாம் சொர்க்கத்தை அடையலாம்” என்று வன்மத்தோடு பேசியுள்ளார்.

இந்தக் கருத்துக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும், பதவி விலக வேண்டுமென்றும் கோரியுள்ளன.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே “அம்பேத்கர் மனுஸ்மிருதிக்கு எதிரானவர், அதனால்தான் அவர்மீது இவ்வளவு வெறுப்பு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

பொதுவெளியில் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் அம்பலப்படத் தொடங்கியவுடன் இது குறித்து விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக் கும்பல் தள்ளப்பட்டது. தான் அவ்வாறு சொல்லவில்லை எனவும், AI தொழில்நுட்பத்தின் மூலம் தனது கருத்து திரிக்கப்பட்டுள்ளதாகவும் பம்மியுள்ளார் அமித்ஷா.

மேலும் ”அம்பேத்கரை ஒருபோதும் அவமதிக்க முடியாத கட்சியைச் சேர்ந்தவன் நான். அம்பேத்கரின் கொள்கைகளை நாங்கள் பரப்புரை செய்து வருகிறோம்” என்று வெட்கமின்றி கோயபல்ஸ் பாணியில் பேசியுள்ளார், அமித்ஷா.

சாதிய ஏற்றத்தாழ்வை நிலைநிறுத்தும் பார்ப்பனிய சித்தாந்தத்தையும், மனுஸ்மிருதியையும் எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் சித்தாந்த ரீதியாகவும், நடைமுறையிலும் போராடினார் அண்ணல் அம்பேத்கர். பார்ப்பன சனாதன கும்பலுக்கு பரம வைரியாக களத்தில் நின்றார். இந்த அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலுக்கு அண்ணல் அம்பேத்கர் மீது எப்போதும் வன்மம் உள்ளது.

அம்பேத்கரை உயர்த்திப் பிடிப்பதைப் போல நடித்து வந்தாலும், பார்ப்பன பாசிசக் கும்பலின் வன்மம் நிறைந்த உண்மை முகம் என்னவென்பது வெளிப்பட்டே தீரும் என்பதைத்தான் அமித்ஷா-வின் பேச்சு காட்டுகிறது.

அதே சமயம், அதானியின் ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குளிர்கால கூட்டத் தொடரின் தொடக்கத்தில் இருந்து குரல் எழுப்பி வருகின்றன. இன்னொரு பக்கம் ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டத்தை நிறைவேற்ற பா.ஜ.க துடித்து வருகிறது. தற்போது அது நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி, புதிய பிரச்சினையை பாசிசக் கும்பல் உருவாக்கியுள்ளது. அதாவது, ஒரு அநீதியில் இருந்து திசைதிருப்ப இன்னொரு அநீதியை உருவாக்குவது என்ற கோணத்திலும் மோடி – அமித்ஷா கும்பலின் செயல்பாட்டை நாம் பார்க்க வேண்டும்.

அதானி – அம்பானி – அகர்வால் வகையறா கார்ப்பரேட் கும்பலின் வரைமுறையற்ற சுரண்டலை உள்ளடக்கிய இந்துராஷ்டிர கொடுங்கோன்மை இலக்கை நிறைவேற்ற எல்லாத் திசையிலும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அதானி – அம்பானி பாசிசக் கும்பல் வேலை செய்து வருகிறது என்பதுதான் அடிப்படையான காரணியாகும். இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் மக்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியுள்ளது.


மக்கள் அதிகாரம்,
கிருஷ்ணகிரி,
8754674757.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க