Friday, May 2, 2025
முகப்புசெய்திஇந்தியாநியூஸ் கிளிக் நிறுவனர் பிரபீர் புர்காயஸ்தா கைது சட்டவிரோதமானது

நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபீர் புர்காயஸ்தா கைது சட்டவிரோதமானது

ஊபா போன்ற கருப்பு சட்டங்களை ரத்து செய்யவும், ஏற்கெனவே இதுபோன்ற கருப்பு சட்டங்களால மோடி அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களை விடுவிக்கவும் களப்போராட்டங்களை கட்டியமைப்பதே தீர்வாக இருக்கும்.

-

நியூஸ் கிளிக் ஊடகத்தின் நிறுவனர் பிரபீர் புர்காயஸ்தா கைது சட்டவிரோதமானது
– உச்சநீதிமன்றம் தீர்ப்பு

“நியூஸ் கிளிக்” செய்தி ஊடகத்தின் நிறுவனரும் தலைமை ஆசிரியருமான 77 வயதான பிரபீர் புர்காயஸ்தாவை கைது செய்து சிறையில் அடைத்தது சட்டவிரோதமானது என்றும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கடந்த 15-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அவர் மீது ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அவரை விடுவிக்கும்போது சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு ஜாமீன் பத்திரங்களை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

டிஜிட்டல் மீடியா மூலம் தேசவிரோத பிரச்சாரத்தை மேற்கொள்ள சீனாவிலிருந்து நிதிப் பெற்றதாக கூறி கடந்த ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் பிரபீர் புர்காயஸ்தா கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படும்போது அவரின் நியூஸ் கிளிக் நிறுவனம் மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்கள், சுதந்திர பத்திரிகையாளர்களின் (Freelancers) வீடுகள் உட்பட 80-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மோடி அரசின் இந்த பாசிச தாக்குதலுக்கு பத்திரிகையாளர்கள், ஜனநாயக சக்திகள் என பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

படிக்க : சத்தீஸ்கர் போலி மோதல் கொலை: FACAM கண்டன அறிக்கை

ஆகஸ்ட் 17, 2023 அன்று பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் (எஃப்.ஐ.ஆர்.) அடிப்படையில்தான் புர்காயஸ்தாவை அக்டோபர் 3, 2023 அன்று டெல்லி போலீசின் சிறப்புப் பிரிவு கைது செய்திருந்தது. ஆனால்,  அந்த எஃப்.ஐ.ஆர். நகலை பொதுவெளியில் வெளியிடவில்ல. அந்த நகலை தனக்கு வழங்க வேண்டும் என்ற புர்காயஸ்தாவின் கோரிக்கையையும் போலீஸ் நிராகரித்தது.

அக்டோபர் 4, 2023 அன்று காலை 6 மணிக்கு போலீசால் புர்காயஸ்தா சிறையில் அடைக்கப்பட்ட பின்னரே அவருக்கு  எஃப்.ஐ.ஆர். நகல் வழங்கப்பட்டது. அவரின் வழக்கறிஞர் அர்ஷ்தீப் குரானாவிற்கு அக்டோபர் 5-ஆம் தேதி,  அதாவது புர்காயஸ்தா சிறையிலடைக்கப்பட்டு 24 மணிநேரத்திற்குப் பிறகுதான் அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்பட்டது. டெல்லி போலீசின் இந்த அராஜக நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பிரபீர் புர்காயஸ்தா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், பிரபீர் புர்காயஸ்தாவின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

“குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்வதற்கான காரணத்தை தெரிவிக்காமல் அவரை சிறையில் அடைப்பது; அவர் வழக்கறிஞரை அணுக முடியாமல், ஜாமீன் போன்ற சட்ட உதவிகளை பெற முடியாத வகையில் தடுப்பது என  இந்த முழுநடவடிக்கையும் ஒரு இரகசியமான முறையில் நடத்தப்பட்டுள்ளது. இது அப்பட்டமாக சட்டத்தின் செயல்முறையை தவிர்ப்பதற்கான முயற்சியே தவிர வேறில்லை” என நீதிபதி மேத்தா டெல்லி போலீசை கடுமையாக விமர்சித்தார்.

மேலும், “புர்காயஸ்தா கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை அவருக்கும், அவரது நியமிக்கப்பட்ட வழக்கறிஞருக்கும் எழுத்துப்பூர்வமாக வழங்கவில்லை. அரசியலமைப்பு பிரிவு 22(1) படி, கைது செய்யப்பட்டதற்கான காரணங்களைப் பற்றித் தெரிவிக்க வேண்டும் (கைது செய்யப்பட்ட நபருக்கு அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் மற்றும் அவர் விரும்பும் வழக்கறிஞரை அணுக அனுமதிக்க வேண்டும்) என்ற அடிப்படை உரிமையை மீறியுள்ளது, கைது செய்து சிறையிலடைக்கும் செயல்முறையை சட்டவிரோதமாக்கியுள்ளது” என தீர்ப்பு வழங்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை வரவேற்று “சுதந்திர ஊடகங்களுக்கு ஒரு நல்ல நாள்” என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் நியூஸ் கிளிக் ஊடகம் தெரிவித்திருக்கிறது. மேலும், “ப்ரஸ் கிளப் ஆப் இந்தியா” (Press club of india), “டிஜிபப்” (Digipub) போன்ற அமைப்புகளும் ஜனநாயக சக்திகள் பலரும் இத்தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

ஆனால், பிரபீர் புர்காயஸ்தா மீது போடப்பட்டுள்ள வழக்கு புனையப்பட்டது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் “நியூயார்க் டைம்ஸ்” (Newyork Times) பத்திரிகையில் சீனாவுக்கு ஆதரவான செய்திகளை வெளியிடுவதற்கு நிதியளிக்கப்பட்ட நிறுவனங்களில் நியூஸ் கிளிக் நிறுவனமும் ஒன்று என்ற பொய்களால் புனையப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டதே புர்காயஸ்தாவின் மீதான சட்டவிரோதமான மற்றும் அடாவடித்தனமான கைதுக்கு காரணமாக கூறப்படுகிறது.

புர்காயஸ்தா மீது டெல்லி போலீசால் பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், அவர் சட்டவிரோதமாக பல கோடி ரூபாய் வெளிநாட்டு நிதியைப் பெற்றதாகவும், இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் பாதுகாப்பை சீர்குலைக்கும் நோக்கத்துடன் அதைப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.  சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டங்கள், மூன்று வேளாண் சட்டங்களுக்கெதிரான விவசாயிகள் போராட்டம், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தைக் கையாளுவதில் அரசின் மீதான விமர்சனங்கள் போன்ற செய்திகளை வெளியிட்டதை அதற்கான சான்றுகளாக போலீசு தெரிவித்திருந்தது.

ஆனால், இவற்றிற்கு எல்லாம் எந்த ஆதாரமும் இதுவரை சமர்பிக்கப்படவில்லை. குற்றம் ஏதுவும் நிரூபிக்கப்படாமலேயே புர்காயஸ்தா ஆறு மாத காலம் சிறைத் தண்டைனையை அனுபவித்து வந்துள்ளார். புர்காயஸ்தா மட்டுமல்ல நாடுமுழுவதும் மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள் என பலரும் கருப்பு சட்டமான ஊபாவின் கீழ் கைது செய்யப்பட்டு ஆண்டுக்கணக்கில் சிறையில் சித்தரவதையை அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கு பிணையும் வழங்கப்படுவதில்லை.

படிக்க : இனவெறிபிடித்த இஸ்ரேலின் தொடரும் இனப்படுகொலைகள்

மோடி அரசால் பொய்யாக புனையப்பட்ட  பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளரான கௌதம் நவ்லகாவிற்கு  ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதேப்போல் கடந்த மார்ச் மாதம் மோடி அரசால் பொய்யாகக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேராசிரியர் சாய்பாபா மற்றும் பிரசாந்த் ராஹி, மகேஷ் திக்ரி, ஹேம் கேஷ்வதத்தா மிஸ்ரா, விஜய் நான் திக்ரி ஆகியோரை “குற்றத்தை நிரூபிக்க போதுமான ஆதாரம் இல்லை” என மும்பை உயர்நீதிமன்றம் மார்ச் 5-ஆம் தேதி விடுதலை செய்ய உத்தரவிட்டது.

ஊபா எனும் கருப்பு சட்டத்தின் கீழ் 2016 முதல் 2020 வரை நாடுமுழுவதும் மொத்தம் 5027 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதில் 24,134 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ஆனால், 212 பேர் மட்டுமே குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர். 386 விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் விடுதலையும் தொடர்ச்சியான களப்போராட்டங்களின் மூலமே சாத்தியமாகியுள்ளது. எனவே ஊபா போன்ற கருப்பு சட்டங்களை ரத்து செய்யவும், ஏற்கெனவே இதுபோன்ற கருப்பு சட்டங்களால மோடி அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களை விடுவிக்கவும் களப்போராட்டங்களை கட்டியமைப்பதே தீர்வாக இருக்கும்.

ஆயிஷா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க