அவ்வப்போது குஜராத்தை இந்தியாவின் முன்மாதிரி மாநிலம் “குஜராத் மாடல்” என்று விளம்பரப் படுத்துகிறது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல். குஜராத்தை வளர்ச்சியடைந்த, சட்டத்தின் ஆட்சி நடக்கும் மாநிலம் என்று கூறிக்கொள்ளுகிறது. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் இவ்வளவு பீற்றிக் கொள்ளும் மோடி அமித்ஷாவின் குஜராத் மாநிலம் தலித் மக்களைப் பொருத்தவரை மனுவின் மாடல்தான், அதாவது ‘சனாதன’ மாடல்தான் என்பதை கடந்த மூன்று, நான்கு ஆண்டு கால சம்பவங்களே எடுத்துக்காட்டிவிடுகின்றன. “தி வயர்” இணையதளத்தின் செய்தியாளர் நேரடியாக தலித் மக்களைச் சந்தித்து உரையாடி சில நிகழ்வுகளை மட்டும் எடுத்துக் காட்டி நிலைமையைப் புரிய வைத்திருக்கிறார்.
இதார் நகருக்கருகில் இருக்கும் நானே வடால் என்னும் கிராமத்தைச் சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க தினக்கூலி வேலை செய்யும் தலித் தொழிலாளி சைலேஷ்பாய் சென்வா. இவர் எப்போதுமே, ஆம் எப்போதுமே, அதாவது வீட்டுக்குள்ளேயே இருக்கும் போதுகூட தலையைக் கவிழ்த்தவாறே கையில் வைத்திருக்கும் வெள்ளைக் கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொள்கிறார். அவர் உடம்பில் பல இடங்களிலும் சிறியதும் பெரியதுமாக ஏராளமான தழும்புகள் காணக்கிடக்கின்றன. நடக்கும் போது கொஞ்சம் கால் தாங்கலாக நடக்கிறார். மற்றபடி சென்வாவுக்கு வேறு உடல் நலப் பிரச்சினை என்று எதுவும் இல்லை. ஆனால் கடந்த மார்ச் 11 அன்று ஊரார் முன்னிலையில் அவருக்கு இழைக்கப்பட்ட அந்த அநீதியினால் உடலும் உள்ளமும் நடுங்க மிகவும் கூனிக் குறுகிப் போனார். அவமானத்தினால் மன நலம் குன்றியதன் விளைவாகத்தான் எப்பொழுதும் தனது முகத்தை கைக்குட்டையால் மூடிக் கொள்கிறார்.
சம்பவத்தன்று இதார் நகரில் குளிர் பதன சேமிப்பு கிடங்கொன்றில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார் சைலேஷ் பாய் சென்வா. வழியில் திடுமென இடைமறித்த தாக்கூர் சாதி குண்டர்கள் அடங்கிய ஒரு கும்பல் அவரை குண்டுக்கட்டாக தூக்கிக் கடத்திச் சென்றது. அவருடைய உடலெங்கும் இரத்தக் காயங்கள் ஏற்படும் வகையில் பலரும் சேர்ந்து முரட்டுத்தனமாகத் தாக்கினர். வலி தாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்த சென்வாவுக்கு தன்னை எதற்காகத் தாக்குகிறார்கள் என்ன தவறு செய்தோம் என்றே புரியவில்லை.
பிறகு அவருடைய உள்ளாடை உட்பட ஆடை அனைத்தையும் களைந்து அம்மணமாக்கினர். அவரது சொந்த ஊரான நானே வடால் கிராமம் முழுதும் தெருத் தெருவாக ஊர்வலமாக நடத்திச் சென்றனர். சென்வாவும் அடி எடுத்து வைத்து நடக்க முடியவில்லை. கைகளை பின்னால் முறுக்கிப் பிடித்திருந்தனர். தனது ஊரார் முன்னால் தான் அம்மணமாக நிற்கிறோம் என்பதை என்ன முயன்றும் அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அம்மணமான நிலையிலேயே அவரிடம் ஒரு மன்னிப்பு கடிதம் எழுதச் சொல்லி வாங்கிக் கொண்டனர். இனிமேல் எந்த ஒரு தாக்கூர் சாதி பெண்ணுடனும் பேச மாட்டேன் என்று எழுதச் சொல்கிற போதுதான் அவரின் ‘குற்றம்’, அதாவது ஒரு பெண்ணிடம் பேசிய ‘குற்றம்’, அவருக்கு கொஞ்சமாகப் புரிய வந்தது.
அன்று எல்லோரும் தெருவோரத்தில் நின்று அவரது அம்மணத்தை அருவருப்புடன் பார்த்தனர். வினோதமான விலங்கைப் பார்ப்பது போல அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவரது இரத்தமெல்லாம் ஊனோடு சேர்ந்து உறைந்து போனது. நெஞ்சம் இறுகி கல்லாகிப் போனது போலிருந்தது. ஏனோ தெரியவில்லை, சைலேஷ்பாய் சென்வாவும் அவர்களைப் போன்றே உயிரும் உணர்வுகளும் உள்ள ஒரு மனிதன் என்று அவர்களால் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. யாரும் அவருக்கு ஆதரவாகப் பேசவோ அவர்களைத் தடுக்கவோ முன்வரவில்லை. இது எப்படி இவர்களால் முடிகிறது?
அதிலிருந்து சென்வா தன் முகத்தை மூடிக்கொள்ளாமல் தெருவில் இறங்கி நடப்பதில்லை.
***
வடக்கு குஜராத்தில் மேஷனா நகரத்தை ஒட்டிய சிறிய கிராமம் வன்சால். அக்கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் கிஷன்பாய் சென்மா. 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 அன்று அவரது திருமண நாள். அன்று நடந்ததை நினைத்துப் பார்க்கிறார். சென்மாவுக்கு அவரது திருமண நாள் நினைவு என்பது புது மனைவி குறித்த உள்ளம் துள்ளும் மகிழ்ச்சித் தருணங்கள் அல்ல. அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளி விட்டு மேலே தலை தூக்கி அருவருப்பையும் நடுக்கத்தையும் தருவது அவரது திருமண நாளில் நடந்த அந்த நிகழ்வு.
அன்று தனது உறவினர்கள் நண்பர்கள் என்று மக்களனைவரின் சிரிப்பொலிகளுடன் கூடிய வாழ்த்துக்களோடும் பல வண்ண மலர் மாலைகளோடும் முகத்தில் மகிழ்ச்சித் தெறிக்கக் குதிரையின் மீது அமர்ந்திருந்தார் சென்மா. குதிரை மீதேறி தன் வருங்கால மனைவியின் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தார். உள்ளமெல்லாம் மனைவி குறித்த பரவசம் நிரம்பி வழிந்தது. ஆனால் நொடிப்பொழுதில் அனைத்தும் தகர்ந்து நொறுங்கியது.
திடுமென அவ்விடத்திற்கு வந்த தாக்கூர் சாதி கும்பலொன்று காது கூசும் சாதி குறித்த வசவுச் சொற்களை உரக்கக் கத்திக் கொண்டே “உனக்குக் குதிரை சவாரியா?” என்று கூறி சென்மாவை குதிரையிலிருந்து பிடித்திழுத்து கீழே தள்ளியது. குதிரையைத் தடியால் அடித்து விரட்டியது. சென்மாவின் குதிரை சவாரி அவர் ஒரு தலித் சாதியைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காகக் கணத்தில் முறிக்கப்பட்டது. “மனுதர்மச் சனாதனத்தில் ஊறிப் போயிருந்த இந்த தாக்கூர்கள், எங்களை பூச்சி புழுக்களைப் போல் அற்பமாகக் கருதுகின்றனர். எப்பொழுதும் எங்களை அப்படித்தான் பார்த்தனர், நடத்தினர். ஆனால் இனிமேல் நாங்கள் அவற்றைச் சகித்துக் கொள்ளப் போவதில்லை. நாங்கள் மனிதர்கள்” என்று தி வயர் செய்தியாளரிடம் பரவசத்துடன் நா நடுங்க கூறினார் கிஷன்பாய் சென்மா.
முதலில் அந்த சம்பவம் நடந்த உடன் அதை எதிர்த்து நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்று இளைஞர்கள் கொதித்தனர். ஆனால் அப்படி ஏதேனும் செய்தால் அது அவர்களை மேலும் கோபப்படுத்தவே செய்யும். இன்னும் கொடுமைகளைச் செய்யவே தூண்டும். மீண்டும் எல்லா கேடுகளும் நம்மையே வந்து சேரும். கோபமாய்ச் சீரிய இளைஞர்களை தலித் சாதி பெரியவர்கள் எனப்படுவோர் இதைச் சொல்லித்தான் அச்சமூட்டி அமைதிப்படுத்தினர்.
ஆனால் சிறிதும் தூக்கமின்றி பதட்டத்துடன் தவித்துக் கொண்டிருந்த சென்மாவுக்கு பல நாட்கள் முடிந்த பின்பும் அதை ஏற்று ஜீரணித்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. பின்னர் திடீரென்று ஒரு நாள் போலீசில் புகார் கொடுத்தார். போலீசோ விசாரணை இன்றி எஃப்.ஐ.ஆர் போடாமலே பேசி முடிக்கவே முற்பட்டது. பிறகு தாமதிக்காமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சென்மா. தாக்கூர்கள் பார்க்காத வழக்கா? வாய்தாவா? ஆமை வேகத்தில் அவர்கள் போக்குக்கு நடத்திச் செல்கின்றனர் வழக்கை. இப்போது சென்மா-வால் எதுவும் செய்ய முடியவில்லை. கையறு நிலை என்பது இதுதானோ.
சுக்கா பாய் அக்கிராமத்தின் மூத்த குடிமகன். தன் வாழ்நாள் முழுவதும் எல்லா வகை சாதிய ஒடுக்கு முறைகளையும் பார்த்துக் கொண்டும் அனுபவித்துக் கொண்டும் வந்திருப்பவர். அவர் கூறுகிறார் “எங்கள் வாழ்க்கை மேலும் மேலும் மோசமாகிக் கொண்டு தான் வருகிறது. எங்களை அவர்கள் மனிதர்களாகவே கருதிப் பார்ப்பதில்லை. நாங்கள் படிப்பறிவில்லாத நாட்டுப்புற குலத்தைச் சேர்ந்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள். எங்களைப் பற்றிக் கவலைப்பட யாருமே இல்லை என்பது என் மனதை அறுக்கிறது. எங்கள் மன வேதனைகளைப் பற்றி யாருக்கு என்ன கவலை. நாளை நாங்கள் கொலையே செய்யப்பட்டாலும் கேட்பார் இல்லை என்பதே எங்களின் வாழ்க்கை நிலை” என்று கூறிவிட்டு வறண்ட கண்களுடன் வானத்தைப் பார்க்கிறார்.
***
காந்தி நகரின் கலோல் பகுதியைச் சேர்ந்த பிலேஸ்வர் கிராமம். சுற்றிலும் நகர்ப்புற தொழிற்சாலை கட்டடங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. 2024 ஜனவரி 29 அன்று கீதா பென் எனும் தலித் பெண் தான் வளர்க்கும் பசு மாட்டில் பால் பீய்ச்சிக் கொண்டிருந்தார். அருகே தாக்கூர் சாதி இளைஞர்கள் சிலர் கூச்சல் போட்டுக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களின் சத்தத்தில் மாடு மிரளுகிறது என்று அந்த இளைஞர்களை தள்ளிப் போய் விளையாடும் படி கூறினார் கீதாபன். ஆனால் அவர்கள் கீதா பென்-ஐ சாதி ரீதியான வக்கிரமான சொற்களைக் கொண்டு நக்கலடிக்கத் தொடங்கினர். கீதா பென்னுடைய மகன் ஓடி வந்து அவர்களுடன் சண்டையிட்ட பின்னர் அதுவே போலீசு வரை சென்று போலீசு முன்னிலையில் இருதரப்பினரும் பேசி முடித்தனர். அற்ப விஷயத்தை இப்படி பெரிது படுத்துகிறார்களே என்று அலுத்துக் கொண்டே அமைதிபட்டார் கீதாபென்.
ஆனால் அடுத்த நாள் மாலை சுமார் 200 பேர் கொண்ட தாக்கூர் சாதியைச் சேர்ந்த கும்பல் லாரி மற்றும் டிரக்குகளில் வந்து இறங்கியது. ரோஹித் பாஸ் எனப்படும் அந்த தலித் காலனி முழுவதையும் இரும்பு ராடுகள், மூங்கில் கம்புகள், கற்கள் கொண்டு அடித்து நொறுக்கினர். பெருத்த சத்தத்துடன் ஊளையிட்டுக் கொண்டே கையில் கிடைத்தவர்களை எல்லாம் அடித்துத் துவைத்தனர். கீதா பென்னின் மகன் உள்ளிட்டு அவருடைய குடும்பத்தார் அனைவரையும் இரத்தம் சொட்டக் கடுமையாகத் தாக்கினர்.
இவ்வளவு பயங்கரமான இந்த தாக்குதலுக்கு எதிராக போலீசிடம் புகார் கொடுக்க சென்றபோது போலீசு எஃப்.ஐ.ஆர் போட மறுத்தது. எஃப்.ஐ.ஆர் போடுவதால் ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை. ஒருவரையும் கைது செய்ய முடியாது. எங்காவது போய் பதுங்கி விடுவார்கள் என்று சாதாரணமாகக் கூறியது. எஃப்.ஐ.ஆர் போட்டாக வேண்டும் என்று காலனியைச் சேர்ந்த பலரும் உறுதியாக நின்றதால் வேறு வழியில்லாமல் குற்றம் பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் என்ன? உடனேயே தாக்கூர்கள் தாங்களும் தாக்கப்பட்டதாக அதே போன்றதொரு புகாரை உடனே தயாரித்துக் கொடுக்க, கீதா பென் குடும்பத்தார் அனைவரின் மீதும் எஃப்.ஐ.ஆர். போட்டது போலீசு.
அக்கிராமத்தின் முதிய பெண்மணி பல்தேவ் பாய், “குஜராத்தைப் பொருத்தவரை நாளுக்கு நாள் சாதிக் கொடுமைகள், அடக்குமுறைகள், எல்லாம் அதிகரித்துக் கொண்டுதான் போகின்றன. நாங்கள் இன்னும் பழைய நிலைமையை நோக்கித் தள்ளப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். எங்கள் மீது தாக்கூர்கள் எல்லா விதத்திலும் அதிகாரம் செலுத்துகிறார்கள். கேட்பாரற்ற அதிகாரத்தைச் செலுத்துகிறார்கள் என்பது மட்டும் உண்மை” என்று கூறுகிறார்.
அந்த கலோல் பகுதி எம்.எல்.ஏ லட்சுமணபாய் புஞ்சாஜி பா.ஜ.க-வை சேர்ந்த தாக்கூர் சாதியினர் தான். உள்ளூர் போலீசோ பா.ஜ.க கட்சியினர் கையடக்கத்தில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் அவர்களைக் கேட்பதற்கோ அடக்குவதற்கோ யாருமே இல்லை. கலோல் மாவட்ட நீதிமன்றத்தில்தான் கீதா பென்னின் வழக்கு நடந்து வருகிறது. கீதா பென் எப்போதும் எதுவும் நடக்கலாம் என்கிற நிலைமையில் அச்சத்துடன்தான் இருந்து வருகிறார். ஒரு வருடம் ஆகப் போகிறது இன்னும் அச்சப்படக் கூடிய நிலைமைதான் இருந்து வருகிறது. ” தி வயர் ” செய்தியாளர் அந்தப் பகுதியில் உள்ள மற்ற சில கிராமங்களையும் பார்வையிட்டு தலித் மக்களின் நிலைமைகளை விசாரித்துப் பதிவு செய்திருக்கிறார்.
அங்குள்ள சித்தரோடி என்னும் கிராமத்தில் தலித் மக்கள் மீது அசாதாரணமான வடிவங்களில் ஒடுக்குமுறைகள் நடந்து வருவதைப் பற்றிக் கூறுகிறார் சோம் பாய் சென்வா. அவர் தனக்குச் சொந்தமான சிறிய நிலத்தில் பருத்தி விவசாயம் செய்கிறார். ஆடு மாடுகள் செடிகளை மேய்ந்துவிடும் என்பதால் அக்கரையுடன் காவல் காத்து வந்தார். ரபாரி சாதியைச் சேர்ந்தவர்கள் பயிர்களை அழிக்கும் நோக்கத்துடனேயே திட்டமிட்டு மாடுகளை ஆளில்லாத நேரத்தில் அவிழ்த்து விட்டு பயிர்களை மேய விடுகின்றனர். பயிர்கள் நாசமாவது பற்றி கேட்ட பொழுது மண்டை உடையும்படி தாக்கப்பட்டுள்ளார். ஒரு தலித் வாழவே கூடாது என்று கருதும் மனநிலையை எப்படிப் புரிந்து கொள்வது?
2019 ஜனவரி தாஹி பென் வெங்கார் என்னும் 65 வயதான தலித் முதியவரின் பேரன் அந்த நகரப் பகுதியில் நடந்த ஒரு பட்டம் விடும் போட்டியில் வெற்றி பெற்று விட்டான் என்பதற்காக தாக்கூர் சாதியினர் கடும் கோபமடைந்தனர். அதனால் தாஹிபென் வெங்காரின் வீடு புகுந்து கடுமையாகத் தாக்கியதுடன் பாத்திர பண்டங்களும் வீடும் அடித்து நொறுக்கப்பட்டன. ஜென் விகாஸ் என்கிற என்.ஜி.ஓ அமைப்பின் உதவியுடன் போலீசில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் அளித்தார். ஆனால் ஆறு வருடங்கள் ஆகியும் இன்னும் அந்த வழக்கு இதார் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. குற்றம் இழைத்தவர்கள் இன்றளவும் இயல்பான வாழ்க்கை நடத்தி வருகின்றனர். தனது குற்றங்களுக்காக யாரும் தன்னை தண்டிக்க முடியாது என்கிற நிலை இருந்தால் ஒரு சாதி வெறியன் தன் பகைவனுக்கு எதைத்தான் செய்ய மாட்டான்?
செய்தியாளர் சந்தித்த ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான சாதிய வன்கொடுமைத் தாக்குதலுக்கு ஆளான சம்பவங்களையும் அனுபவங்களையும் சொல்கிறார்கள். ஓ.பி.சி சாதியினர்தான் இந்தப் பகுதியில் தலித் பிரிவு மக்கள் மீது தாக்குதல்களை நடத்துகின்றனர். தாக்கூர், ரபாரிகள் மற்றும் சுதார் இந்த மூன்று சாதியினர்தான் பெரும்பாலும் தாக்குதல் நடத்துகின்றனர். “அற்பமான விஷயங்களையெல்லாம் அடிதடி, போலீசு, கோர்ட்டு என்று ஆக்கி விடுகிறார்கள். அவர்கள் வேறு எந்த பேச்சு வார்த்தைக்கும் நீதி நியாயங்களுக்கும் கட்டுப்படக் கூடியவர்களாக இல்லை. தலித் மக்களைப் பிறப்பிலேயே வேறானவர்கள் என்று மட்டுமல்ல, தங்களின் பகைப் பிறப்பாகவே பார்க்கப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்” என்று தன் அனுபவமாகக் கூறுகிறார் ஒரு தலித் முதியவர்.
ராஷ்டிரிய தலித் அதிகார் மஞ்ச் அமைப்பின் தலைவரும் தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஜிக்னேஷ் மேவானி கூறுகிறார், ஓ.பி.சி. சாதி மக்கள் மட்டுமல்ல அரசு எந்திரத்தின் போலீசும், ஊழியர்களும், அதிகாரிகளும் கூட சூத்திரர்களையும் தலித்துகளையும் எப்படி நடத்த வேண்டும் என்று மனு சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறதோ அவற்றில் ஆழமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதனால் தான் எந்த வழக்கிலும் ஒடுக்குமுறையாளர்கள் தண்டிக்கப்படுவதே இல்லை. தலித்துகளை அப்படித்தான் நடத்த வேண்டும் என்பது அவர்களின் பொது சிந்தனையாக இருக்கிறது. மற்றபடி சட்டம் சொல்வதெல்லாம் அவர்களுக்குப் பொருட்டே அல்ல என்கிறார்.
இந்த வன்கொடுமை வழக்குகளில் தண்டிக்கப்படுபவர்களின் சதவிகிதம் மிக மிகக் குறைவு என்பதே மொத்த அரசு எந்திரமும் அதே சாதிய கண்ணோட்டத்தில் ஊறிப் போய் இருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது என்கிறார். 2011 கணக்கெடுப்பின்படி குஜராத்தின் மொத்த மக்கள் தொகை 6.04 கோடி. குஜராத் மாநிலத்தில் தலித் மக்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 7% தான் என்பதனால் பா.ஜ.க-வை பொறுத்தவரை இஸ்லாமியர்களைப் போலவே தலித்துகளையும் தங்களின் வாக்கு வங்கி அரசியலுக்குக் கூட தேவையாகக் கருதுவதில்லை. பிற சாதி இந்துக்களின் வாக்குகளை மொத்தமாகப் பெற்றுவிட்டால் போதும் என்பதே ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் கணக்கு. அது அவர்களுக்கு வெற்றியையும் பெற்றுத் தந்திருக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளாகவே சாதிய கொடுமைகளுக்கு எதிராக அரசாங்க நடவடிக்கைகள் பிரச்சாரம் என்று எதுவுமே நடக்கவில்லை என்கிறார் ஜிக்னேஷ் மேவானி.
2010க்கு பிறகு நிலைமை மேலும் மோசமடைந்திருக்கிறது என்கிறது எஸ்.சி / எஸ்.டி-கான செல் எனும் அரசின் அமைப்பு. இது மேவானி சொல்வதை அப்படியே ஆமோதிப்பதாக இருக்கிறது. தேசிய குற்றவியல் அமைப்பின் அறிக்கையின்படி 2013 முதல் 2018 வரை இந்த வன்கொடுமை குற்ற எண்ணிக்கை 32 சதவீதம் அதிகரித்து இருக்கிறது என்று அமைச்சர் சட்டமன்றத்தில் கூறியிருக்கிறார். நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் சமீபத்தில் முன் வைக்கப்பட்ட விவரங்களின்படி குஜராத்தில் 2018 முதல் 2021 வரையிலான நான்காண்டுகளில் தலித் மக்கள் மீதான வன்கொடுமை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்ட வழக்குகள் 3.065 சதவீதம் மட்டுமே. இது தேசிய சராசரியை விடவும் மிகவும் குறைவாகும்.
ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட இன்னொரு தகவலின் படி குஜராத்தில் தான் தலித் மக்கள் மீதான வன்கொடுமை குற்றங்கள் அதிகம் நடக்கின்றன. 2018 – 2021 ஆகிய நான்காண்டுகளில் மொத்தம் 5,369 வழக்குகள் பதியப்பட்டுள்ளன (வழக்குகள் பதியாதவை இன்னும் சில மடங்குகள் இருக்கும் எனக்கொள்ளலாம்). இதுவரையிலும் முடிந்த வழக்குகளில் வெறும் 32 வழக்குகளில் தான் தண்டனை தரப்பட்டிருக்கின்றன. கொலை மற்றும் பாலியல் வல்லுறவு குற்றம் சுமத்தப்பட்ட 1012 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பல வழக்குகள் இழுத்தடிக்கப்பட்டு நடந்து கொண்டிருக்கின்றன.
எனில் இந்தக் கட்டமைப்பை நீதி வழங்கும் முறை என்று நாம் அங்கீகரிக்க முடியுமா? குற்றம் நிரூபிக்கப்படவும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் இவர்கள் வைத்திருக்கும் வேலைப் பிரிவினைகள், விசாரணை முறைகள், சட்ட நுணுக்கங்கள் ஆகியன நீதியை உண்மையை நிலை நிறுத்தக்கூடியவை என்று ஏற்க முடியுமா?
நிலைமை இவ்வாறிருக்க உயர் நிலை அதிகாரிகளும், நீதித்துறையினரும், மக்களில் பலரும், அறிவுஜீவிகள் என்றறியப்படும் சிலரும் கூட நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று பல அரங்குகளில் நாகூசாமல் பேசி வருகின்றனர்.
எனில், “மனிதர்கள் அனைவரும் எல்லா வகையிலும் சமமானவர்கள்”, “எல்லா மனிதர்களும் பிற எல்லோரையும் போல எல்லா உரிமைகளையும் பெறத் தகுதியுடையவர்கள், உரிமை கொண்டவர்கள்” என்கிற ஜனநாயக உணர்வு இவர்களிடம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இவர்களுக்கு ஜனநாயகம் பற்றிய சிந்தனையே துளியும் இல்லை. பழைய மன்னர் ஆட்சிக் காலம் போல் மக்களின் ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினரை அடக்கி ஆளும் மனநிலையைக் கொண்டிருக்கின்றனர். இது பாசிசம் வளர்வதற்கு உகந்த விளைநிலமாகும். இந்த அடித்தளத்திலிருந்து ஜனநாயக உணர்வு ஒருபோதும் பிறக்க முடியாது.
இன்று நாட்டில் வளர்ந்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் என்பது மேற்பார்வையில் தெரிவதைப் போன்று முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. பாசிசம் பார்ப்பனிய சாதியப் படிநிலையின் மேல்தான் கட்டியெழுப்பப்படுகின்றது. குஜராத்தில் மட்டுமல்ல நாடு முழுவதிலும் உள்ள தலித் மக்கள் சாதி ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறவும் பாசிசம் வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்துக்கட்டப்பட வேண்டும்.
செய்தி ஆதாரம்: தி வயர்
ஆதி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram