மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் பிரிகேட் பரேட் மைதானத்தில் (Brigade Parade Ground) கடந்த டிசம்பர் 7 அன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய சனாதன் சம்ஸ்கிருதி சங்கத் என்ற இந்துத்துவ அமைப்பு கீதை ஓதுதல் நிகழ்ச்சியை நடத்தியது. அதற்கு அருகே இரண்டு இஸ்லாமிய தெருவோர வியாபாரிகள் சைவ, இறைச்சி பட்டீஸ்களை (பஜ்ஜி) விற்பனை செய்துள்ளனர். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத மதவெறியர்கள், வியாபாரிகள் இருவரையும் கொடூரமாகத் தாக்கியதுடன், இஸ்லாமிய விரோத வார்த்தைகளால் இழிவாகப் பேசியுள்ளது.
கடந்த 22 ஆண்டுகளாக பட்டீஸ் விற்பனை செய்துவரும் அரம்பாக் பகுதியைச் சேர்ந்த ஷேக் ரியாசுல் இத்தாக்குதல் குறித்து கூறுகையில், “தாக்குதல் நடத்தியவர்கள் எனது பெயரைக் கேட்டார்கள். எனது பெயரை சொன்னவுடன் அவர்கள் என்னை அடிக்கத் தொடங்கினர். பின்னர், கட்டாயப்படுத்தி கீழே உட்கார வைத்து, கொடூரமான முறையில் காதுகளைப் பிடித்து திருகியதோடு உணவையும் சிதறடித்தனர்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். அதேபோல், இறைச்சி (Chicken) பட்டீஸ்களை விற்றதற்காக இஸ்லாமிய வெறுப்புணர்வை ஏற்படுத்தும் அவதூறு வார்த்தைகளால் தன்னை தாக்கியதாக தில்ஜாலாவை சேர்ந்த எம்.டி.சலாவுதீன் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய பின்னரே கொல்கத்தா போலீசு வழக்கு பதிந்தது. பாரதீய நியாய சன்ஹிதாவில் தாக்குதல், சட்டவிரோதக் கூட்டம், மத பகைமையை ஊக்குவித்தல் மற்றும் சொத்துக்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் இரண்டு முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்து மூவரை கைது செய்தது. ஆனால், கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே மூவரும் நீதிமன்றத்தால் பிணையில் (Bail) விடுவிக்கப்பட்டனர்.
இத்தாக்குதலை மேற்குவங்கத்தின் பன்முக கலாச்சார அடையாளம் மற்றும் உணவு கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று கண்டித்துள்ள ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் குணால் கோஷ், “இறைச்சி சாப்பிட வேண்டாம் என்றால் வாங்காமல் இருந்தால் போதும். ஏன் வியாபாரியை அடிக்கிறீர்கள்? இது அவரது வாழ்வாதாரம். அதேசமயம், தோல் (Leather) செருப்பு போட்டுக்கொண்டு வருபவர்களுக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மீன் மற்றும் இறைச்சியை தடை செய்யும் பா.ஜ.க-வின் நோக்கத்தை வெளிப்படுத்தும் சித்தரிக்கப்பட்ட காணொளியையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது.
படிக்க: உ.பி: இஸ்லாமியர்களின் கல்லறை மீது தாக்குதல் நடத்திய காவி குண்டர்கள்
பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தங்களின் வாழ்வாதாரத்திற்காக இறைச்சி கடைகள், உணவு விற்பனை செய்யும் இஸ்லாமிய மக்கள் மீது காவி குண்டர்கள் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்துவதும், படுகொலை செய்வதும் தொடர்ந்து வருகிறது. இத்தாக்குதல்களை இந்தியா முழுவதும் விரிவுபடுத்திவரும் பாசிச கும்பல், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை கைப்பற்ற வேண்டும் என்ற கொடுங்கனவோடு திட்டமிட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவை குறிவைத்து, ஆடு, கோழி பலியிட்டு வணங்கத் தடை விதிப்பது, மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதக்கலவரம் நடத்த முயற்சிப்பது என மக்களின் பண்பாடு – கலாச்சாரத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.
எனவே, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. மதவெறிக் கும்பலுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதுடன், பாசிச எதிர்ப்பு கலாச்சாரம், பண்பாட்டை கொண்ட பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு அமைக்கப் போராடுவதும் ஜனநாயக சக்திகள், புரட்சிகர அமைப்புகளின் உடனடி கடமையாகும்.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











