14.05.2025

கிருஷ்ணகிரி மா விவசாயிகளின் அவலநிலை

பத்திரிகை செய்தி

மிழகத்தில் மா உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. குறிப்பாக, ஊத்தங்கரை, பர்கூர், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம், சூளகிரி, ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட மா ரகங்கள் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. மல்கோவா, அல்போன்ஸா, செந்தூரா, பீத்தர், தோத்தாபுரி ஆகிய ரகங்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் அதிக வரவேற்பு உள்ளது. இவற்றில் தோத்தாபுரி ரகம் 60 சதவீதமும் செந்தூரா மற்றும் நீலம் ரகங்கள் 30 சதவீதமும் அல்போன்சா 5 சதவீதமும் சாகுபடி செய்யப்படுகிறது. பீத்தர், பங்கனப்பள்ளி, காலப்பாடு, மல்கோவா போன்றவை 5 சதவீதமும் விளைவிக்கப்படுகின்றன.

மேலும், ஊறுகாய், மாங்கூழ் போன்ற மதிப்புக் கூட்டுப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் 2.60 லட்சம் மெட்ரிக் டன் மா சாகுபடியாகும் நிலையில் 1.20 லட்சம் மெட்ரிக் டன் பழங்கள் மாங்கூழ் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மா விவசாயம் மூலம் ஆயிரக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்து வருகிறது. ஆகையால், கிருஷ்ணகிரி மாவட்ட வளர்ச்சியில் மா சாகுபடி முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆனால், ஆண்டுதோறும் பருவநிலை மாற்றங்களாலும் அரசின் அலட்சியத்தினாலும் விவசாயிகள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். நிகழாண்டில் மாமரங்களில் அதிகளவில் பூக்கள் பூத்திருந்த நிலையில், கோடை வெயிலின் தாக்கத்தால் மரங்களில் பூக்கள் கருகியும், காய்கள் பிடிக்காமலும் மகசூல் குறைந்துவிட்டது. இதில் பூச்சிகளின் தாக்குதலும் ஒரு காரணியாகும். ஆதலால் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மா விளைச்சல் குறைந்துள்ளது, விலையும் கடுமையாகச் சரிந்துள்ளது. இந்நிலையில் மா விவசாயிகளிடம் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து மிகவும் குறைந்த விலைக்கு கேட்கின்றனர். நஷ்டத்தையே முதலீடாகப் போட்டு விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு இது மேலும் ஒரு இடியாக அவர்களது தலையில் இறங்கியுள்ளது.

கடந்த ஆண்டு 40 ஹெக்டேரில் நடந்த மா உற்பத்தி இந்த ஆண்டு 33 ஹெக்டேர்  என்ற சதவீத அளவில்தான் விளைவிக்கப்படுகிறது, இந்நிலை தொடர்ந்தால் விவசாயிகள் மா உற்பத்தியைக் கைவிட்டு மாற்று விவசாயத்திற்கு செல்வார்கள் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். ஆகையால், மா உற்பத்தி மாவட்டமாக இருக்கும் கிருஷ்ணகிரியில் மா தோட்டங்கள் இல்லாமல் போவதற்கான வாய்ப்புள்ளது.

மேலும், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மா சாகுபடியில் பல்வேறு இழப்புகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். இயற்கை இடர்பாடுகளாலும் பல்வேறு காரணங்களாலும் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு மேல் மா மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. கடந்த 2024 ஆண்டு விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்த நிலையில், நிவாரணம் வழங்கக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் தற்போது வரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மா விவசாயிகளுக்கு எதிரான அரசின் போக்கை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

விவசாய மாவட்டமான கிருஷ்ணகிரியை கார்ப்பரேட் தொழிற்துறை நகரமாக மாற்ற அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக விளைநிலங்களை அழித்தும், விவசாயிகளிடமிருந்து பறித்தும் அரசு சிப்காட் அமைத்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா விளைச்சலில் இரண்டாம் இடம் வகிக்கும் போச்சம்பள்ளியில் மட்டும் 2 சிப்காட் அமைக்கப்பட்டுள்ளது என்பது இதற்கு சான்றாகும். தொழில்துறையை ஊக்குவிப்பது என்ற பெயரில்  விவசாயிகளையும் பலிகொடுப்பது என்ற போக்கைத் தான் அரசு கடைப்பிடித்து வருகிறது. கார்ப்பரேட் இலாப நோக்கத்திற்காக விவசாயிகளை திட்டமிட்டே புறக்கணித்து வருகிறது.

மா விவசாயிகளின் துயரங்களுக்கும் இதுவே அடிப்படைக் காரணமாகும்.

மா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்க, கீழ்க்கண்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

  1. மாம்பழங்களை அரசே நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும்.
  2. மாங்கூழ் உற்பத்திக்கான தொழிற்சாலைகளை அரசு பரவலாக உருவாக்க வேண்டும்.
  3. மா விவசாயிகளுக்குத் தேவையான உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் மருந்துகளுக்கு மானியம் வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
  4. உள்ளூர் விவசாயிகளிடம் மாம்பழங்கள் வாங்கும் மாங்கூழ் உற்பத்தியாளர்களுக்கு மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.
  5. வறட்சி, மழை உள்ளிட்ட சூழலியல் காரணங்களால் மா விவசாயிகள் பாதிக்கப்படும் போது உடனுக்குடன் அவற்றை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
  6. விவசாயிகளுக்கு எதிராக வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
  7. இலாப நோக்கில் வெளியில் இருந்து மாம்பழங்கள் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுவதை தடை செய்ய வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துப் போராட வேண்டியுள்ளது.

மேலும் விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கும் நோக்கில் பயிர், விளைநிலங்கள் தரவுகளை டிஜிட்டல் முறையில் அரசு தற்போது சேகரித்து வருகிறது. இந்தப் பணியில் பாரம்பரிய பயிர்களான தென்னை, மா, வாழை, கரும்பு, கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம், பருத்தி, மஞ்சள், நிலக்கடலை என அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இது விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதற்கான சதித் திட்டமே ஆகும்.

மேற்கூறிய கோரிக்கைகளுடன் விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கும் போக்கிற்கு எதிராகவும் போராட வேண்டியுள்ளது என்பதை மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.

விவசாயிகளின் உரிமைகளுக்காக மக்கள் அதிகாரக் கழகம் துணை நின்று போராடும்.


மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்,
8754674757.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க