25.05.2025
அனகாபுத்தூரில் மக்கள் வீடுகளை இடித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கும் திமுக அரசு!
பத்திரிக்கை செய்தி
சென்னை பல்லாவரத்திற்கு அருகில் உள்ள அனகாபுத்தூரில் தாய்மூகாம்பிகை நகர், டோபிகானா தெரு உள்ளிட்ட பகுதியில் வாழும் உழைக்கும் மக்களின் வீடுகளை புல்டோசர் இயந்திரங்களைக் கொண்டு அராஜகமாக இடித்து தள்ளி வருகிறது திமுக அரசு. இதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
கடந்த சில நாட்களாக தாம்பரம் மாநகர துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி தலைமையில் அனகாபுத்தூரில், 300க்கும் மேற்பட்ட போலீசை குவித்து சாந்தி நகர், எம்ஜிஆர் நகர் மூன்றாம் தெரு, காயிதேமில்லத் நகர் போன்ற பகுதிகளில் வாழும் 700க்கும் மேற்பட்ட வீடுகளையும் இடித்து 3500 க்கும் மேற்பட்ட மக்களை சொந்த மண்ணில் அகதிகளாக்கி வருகிறது. மேலும் அப்பகுதியில் கல்லூரி மற்றும் பள்ளியில் பயின்று வரும் 400க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
அனகாபுத்தூரில் வாழும் மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு என அனைத்து சான்றுகளையும் பெற்று, வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் செலுத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பட்டா வைத்துள்ள மக்களின் வீடுகளையும் இடிப்பதாக அடாவடியாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளை இடிக்கிறோம் என்று கூறுகிறது தமிழ்நாடு அரசு. அதே நீதிமன்றத்தில் அதே மக்கள் தொடுத்த வழக்கு இன்றும் நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த வருடம் அவர்கள் போட்ட மேல் முறையீடு நிலுவையில் உள்ளன. தமிழ்நாடு அரசோ புதிய நிறுவனத்தை CRTCL உருவாக்கி அந்த நிறுவனத்தின் மூலம் டென்டர் விடப்பட்டு பிரைவேட் கம்பெனி PRIME MERIDIAN SURVEYS PRIVATE LIMITED மூலம் சர்வே எடுத்து அப்பகுதி மக்கள் ஆக்கிரமித்து உள்ளனர் என்று சதித்தனமாக புதிதாக ஒரு சர்வே மேப்பை தயார் செய்து அதன் மூலம் பகுதி மக்களை அப்புறப்படுத்தி வருகிறது.
புதிதாக எடுக்கப்பட்ட சர்வேயின்படி உழைக்கும் மக்கள் வாழ்கின்ற பகுதியை மட்டும்தான் நீர்வழி ஆக்கிரமிப்பு பகுதி என்று வரையறுத்து உள்ளது. ஆனால் ஆற்றை எதிர்புறத்தில் ஆக்கிரமித்துள்ள காசா கிராண்ட் நிறுவனத்துக்கு பட்டா வழங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு இதுக் குறித்தான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அடையாறு நதியை முழுவதுமாக புனரமைத்து கரையோரம் உள்ள பகுதிகளில் கழிவுநீர் கலப்பதை அறவே தடுத்து, நீர்வாழ் உயிரினங்கள் வாழும் சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என்றால், கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும் அதன் மூலம் மாசுபடுவதை தடுக்கவும் கரையோரம் உள்ள குடியிருப்புகளை அகற்றுவது அவசியம் எனத் தெரிவித்துள்ளது.
அடையார் ஆற்றை முழுமையாக புனரமைப்பு செய்வது என்று கூறுவதெல்லாம் பச்சை பொய். அது இவர்களின் நோக்கமும் இல்லை. ஆற்றை ஆக்கிரமித்து காசா கிராண்ட் போன்ற பல்வேறு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டவும் அதில் வாழும் மேட்டுக்குடி வர்க்கங்களுக்கு நடைபாதை அமைப்பதற்காகவும், பொழுதுபோக்கு வளாகங்கள் கட்டுவதும்தான் உண்மையான நோக்கம்.
சமூக நீதி, திராவிட மாடல் எனப் பேசும் தி.மு.க. அரசும் ஸ்மார்ட் சிட்டி, சிங்கார சென்னை 2.0 போன்ற திட்டங்கள் மூலம் புதிய நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் காசா கிராண்ட், ஜி ஸ்கொயர், அதானி எண்டர்பிரைசஸ் போன்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு உழைக்கும் மக்கள் நிலங்களை அபகரித்து தருகின்றது. சொந்த நாட்டு மக்களை அகதியாக்கும் வேலையை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.
இதை கண்டித்து மே 17 இயக்கம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் களத்தில் நின்று மக்களோடு போராடி வருகிறோம். அனகாபுத்தூரில் மக்களுக்காக அனைத்து ஜனநாயக சக்திகளும், உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து போராடுவது ஒன்றே தீர்வு!
தோழமையுடன்
தோழர் அமிர்தா,
சென்னை மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
73584 82113
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram