28.07.2025
ஓசூர் மாநகராட்சியில் தெருநாய்களால் மக்கள் கடும் அவதி!
பத்திரிகை செய்தி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தெருநாய்களின் தொல்லையால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். செம்பட்டி கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் முனிராஜ் தனது லாரியை பழுது பார்ப்பதற்காக சீதாராம் நகர் பகுதியில் உள்ள சர்வீஸ் மையத்திற்கு தனது மனைவி ரமாமணி மற்றும் 7 வயது மகன் கிருஷ்ணாவையும் அழைத்து வந்துள்ளார். லாரி சர்வீஸ் முடிந்து எடுத்துச் செல்லும்போது அங்கு நின்ற தெருநாய் ஒன்று சிறுவன் கிருஷ்ணாவை கொடூரமாகக் கடித்துக் குதறியுள்ளது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த முனிராஜும் ரமாமணியும் நாயை விரட்டியடித்து மகனை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். நாய் கடித்ததில் சிறுவனுக்கு தலை மற்றும் காது பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் சிறுவனுக்கு 16 தையல்கள் போட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஓசூர் பகுதியில் இதுபோன்று நடப்பது முதல்முறையல்ல!
ஓசூர் அருகிலுள்ள குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எட்வின் பிரியன் என்கிற எம்.பி.ஏ பட்டதாரியை இரண்டு மாதங்களுக்கு முன்பு நாய் கடித்து உள்ளது. நாய்க்கடிக்கு உரிய முறையில் சிகிச்சை பெறாத நிலையில், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஜூலை 10 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோன்று மூன்றாம் வகுப்பு படிக்கும் ராம்சரண் என்கிற சிறுவனும் அவனது நண்பனும் சேர்ந்து விளையாட சென்றுள்ளனர். அருகிலுள்ள ஒரு கோழிப்பண்ணையில் இருந்த நாய் ஒன்று இருவரையும் துரத்தி கடித்துள்ளது. இதில், ராம்சரணின் தலை, முதுகு, காது, மூக்கு, கன்னம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடித்துள்ளது. இதனையடுத்து, பெற்றோர்கள் சிறுவனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவமனையில் சிறுவனுக்கு 40 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதேபோல, ஓசூர் தர்கா பகுதியைச் சேர்ந்த தனியார் வங்கியில் பணியாற்றி வரும் முத்துலட்சுமி (25) என்பவர், தேர்ப்பேட்டை பகுதியில் டூவீலரில் சென்றபோது தெரு நாய் ஒன்று அவரை துரத்தித் துரத்தி கடித்துள்ளது. இதில், அவருக்கு காலில் காயங்கள் ஏற்பட்டன. நாக்கொண்டபள்ளியில் 3 வயது குழந்தையை தெரு நாய் கடித்ததால் 10க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டது. ஓசூர் மாநகராட்சி பகுதியில் கடந்த சனிக்கிழமை முதல் இதுவரை 8 நாட்களில் 36 பேருக்கு நாய்க்கடி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தெருநாய்களின் அச்சுறுத்தலால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஒருவித அச்சத்துடனே வெளியில் சென்று வரும் நிலை உள்ளது.
சமீபத்தில் கூடிய ஓசூர் மாநகராட்சி பொது சுகாதாரக் குழுக் கூட்டத்தில் நாய்க்கடி பிரச்சினைக்கு தீர்வு காணுவது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பொது மக்கள், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும், புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த புகார் எண்களும் முறையாக வேலை செய்யவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
கண்துடைப்பிற்கு நடவடிக்கை எடுக்காமல் உரிய முறையில், நிரந்தரமான தீர்வு ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
மாநகராட்சி நிர்வாகமே!
- தெருநாய்களை பிடித்து உடனடியாக கருத்தடை செய்து தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்து!
- குப்பைகளில் உள்ள இறைச்சிக் கழிவுகள், பொருட்களை உணவாக உட்கொண்டே தெருநாய்கள் வளர்கின்றன. ஆகையால், குப்பைகளை உரிய முறையில் அகற்றிட நடவடிக்கை எடு!
- ரேபிஸ் நோய் குறித்தும் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்தும் அனைத்து தரப்பு மக்களிடத்திலும் தீவிரமாக விழிப்புணர்வை ஏற்படுத்து!
- தெருநாய்கள் போன்றே இந்தியாவில் தடைசெய்யப்பட்ட வளர்ப்பு நாய்களை வளர்க்கும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடு!
தோழர். அருண்,
மாவட்ட இணைச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram