28.07.2025
கிருஷ்ணகிரி நகராட்சி: குடிநீரில் சாக்கடை நீர் கலக்கும் அவலம்!
பத்திரிகை செய்தி
கிருஷ்ணகிரி நகராட்சி, 1வது வார்டின் ஷாப்ஜான் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் வழியாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் செல்கிறது.
இந்தக் குழாயின் வழியாகத்தான் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு, 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே, இரண்டு இரும்புக் குழாய்களின் பல இடங்களில் ஓட்டை விழுந்து சேதமாகி உள்ள நிலையில், தற்போது மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் செல்லும் குழாயில், 4 இடங்களில் ஓட்டை விழுந்து கடந்த 20 நாட்களாக பல இலட்சம் லிட்டர் குடிநீர் வீணாகியது.
இது குறித்து, அப்பகுதியை சேர்ந்த மக்கள், “சாக்கடைக் கால்வாயில் குடிநீர் குழாய் அமைத்துள்ளதால், இரும்புக் குழாயில் ஓட்டை விழுந்துள்ளது. புகார் தெரிவித்த பிறகு, நகராட்சி ஊழியர்கள் ஓட்டை விழுந்த குழாயை சரி செய்யாமல், 2 இடங்களில் மட்டும் பிளாஸ்டிக் கவர்களை வைத்துக் கட்டி விட்டு சென்றுள்ளனர். உடைந்த குழாய் வழியாக சாக்கடைக் கழிவு நீரும் கலப்பதால், குடிநீரில் கழிவுநீர் கலக்கிறது” என தெரிவித்தனர்.
இது குறித்து, நகராட்சி ஆணையர் ஸ்டான்லி பாபு, ”இதுகுறித்த புகார் வந்தது. அதை சரிசெய்ய உத்தரவிட்டிருந்தேன். ஆனால், ஊழியர்கள் பிளாஸ்டிக் கவரை சுற்றிக் கட்டியது தெரியாது. இதனை விசாரித்து, குடிநீர்க் குழாய் புதிதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
உரிய நேரத்தில் முறையான தீர்வை ஏற்படுத்தாமல் இவ்வாறு நகராட்சி ஆணையர் கூறுவது பொருத்தமாக இல்லை.
கிருஷ்ணகிரி நகராட்சியில் கால்வாய் தூர்வாராமல் இருப்பது; குடிநீரில் கழிவுநீர் கலப்பது; குப்பைகளை அகற்றாமல் இருப்பது போன்ற மக்களின் அடிப்படை சுகாதார பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன. நகராட்சி 4 மற்றும் 6-வது வார்டுகளில் மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக பிரச்சாரம் செய்யும் போது கூட இந்த பிரச்சினைகளைத் தான் மக்கள் முதன்மையாகத் தெரிவிக்கின்றனர்.
ஆனால், இதுவரை பிரச்சினையை சரிசெய்ய நகராட்சி சார்பாக முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும், ஒப்பந்த ஊழியர்களை கொண்டு தான் நகராட்சியில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களது எண்ணிக்கையும் பற்றாக்குறையாக உள்ள நிலையில் நகராட்சி முழுவதும் தூய்மைப் பணிகளை கொண்டு செல்ல முடியவில்லை என்பதே எதார்த்தமாகும்.
அரசின் சேவைத் துறைகளை கான்ட்ராக்ட் மயமாக்கப்பட்டு வரும் போக்கு தீவிரமாகி வருகிறது.
இதனடிப்படையில் தான் நகராட்சியில் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது; ஒப்பந்த அடிப்படையில் மட்டும் ஊழியர்களை எடுப்பது; உரிய உபகரணங்கள் வாங்காமல் இருப்பது என்ற போக்கில் அரசு செயல்படுகிறது.
இன்னொரு பக்கம் மாநகராட்சி, நகராட்சி விரிவாக்கம் என்ற பெயரில் வரியை உயர்த்தி மக்களைக் கொள்ளையடிக்கும் போக்குதான் தீவிரமடைந்து வருகிறது. தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களைத் தேடி வருவது என்பதே உள்ளது.
அடிப்படைப் பிரச்சினைகளை சரிசெய்யாமல் இருக்கும் கிருஷ்ணகிரி நகராட்சியின் அலட்சியப் போக்கை மக்கள் அதிகாரக் கழகம் கண்டிக்கிறது.
- கிருஷ்ணகிரி நகராட்சி நிர்வாகமே மக்களின் கோரிக்கையை நிறைவேற்று!
- 1 வது வார்டில் குடிநீர்க் குழாயை உடனடியாக சீர்படுத்து!
- நகராட்சி முழுக்க கால்வாய்கள் தூர்வாரும் பணியை விரைவுபடுத்து!
- குப்பைகளை முறையாக அகற்று!
- நிரந்தரமாகவும், தேவைக்கு ஏற்ப ஊழியர்களை பணியமர்த்து!
உழைக்கும் மக்களே!
நமது அடிப்படை உரிமைகளுக்காக அமைப்பாய் ஒன்றிணைந்து போராடுவோம்!
தோழர். இரஞ்சித்,
மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram