14.08.2025
உரிமைகளுக்காகப் போராடிய தூய்மை பணியாளர்கள் மீது
நள்ளிரவில் போலீசு தாக்குதல் – கைது நடவடிக்கை!
புழுத்து நாறும் ‘சமூக நீதி’யில் தமிழ்நாடு காரி உமிழட்டும்!
கண்டன அறிக்கை
நாளை இந்தியாவின் ’சுதந்திர’ நாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏற்ப, கடந்த 13 நாட்களாக பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகளுக்காகப் போராடி வந்த எல்.டி.யூ.சி.யூ. தலைமையிலான தூய்மைப் பணியாளர்கள், தமிழ்நாடு போலீசால் கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிப்பதுடன் கைது செய்யப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களையும் அவர்களுக்கு ஆதரவாகப் போராடிய அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.
நேற்று நள்ளிரவு தூய்மைப் பணியாளர்களின் உடைகளைக் கிழித்தும் அடித்தும் போலீசு கைது செய்து கொண்டிருக்கும் வேளையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூலி திரைப்படத்தை ரசித்துக் கொண்டிருந்தார். இதை விட தமிழ்நாட்டுக்கு வேறு ஏதும் அவமானம் தேவையா? வேறு ஏதேனும் இழிவு உண்டா?
13 நாட்கள் மிகவும் அமைதியாக போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் நடைபெற்ற அந்தப் போராட்டத்தைச் சிதைக்க தேன்மொழி என்பவரை ஏற்பாடு செய்து அவருக்காக மூத்த வழக்கறிஞரை வாதாடச் செய்து நீதிமன்றம் மூலம் பணியாளர்களின் கோரிக்கையைப் பற்றி பேசாமல் அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று ஆணையைப் பெற்றிருக்கிறது ’சமூக நீதி’ அரசு.
கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் நான்கு பிரிவுகளாக சென்னையில் வெவ்வேறு இடங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவை மீறினார்கள் என்று அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராம்கி என்ற ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்காக தி.மு.க அரசு மேற்கொண்ட இந்த அராஜக நடவடிக்கைகள் மிகவும் அருவருக்கத்தக்கவை.
தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் எழுந்த ஆதரவுக் குரல் வலையை நசுக்கியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பி.ஜே.பி-யை நுழைய விடக்கூடாது பாசிசம் வந்துவிடும் என்று சொல்லிக் கொண்டே, செய்யாறு சிப்காட், பரந்தூர் தொடங்கி தூய்மை பணியாளர் போராட்டம் வரை அனைத்திலும் கார்ப்பரேட்டுகளுக்கு அடியாளாகவே செயல்பட்டு இருக்கிறது தி.மு.க அரசு. அடித்தட்டு உழைக்கும் மக்களின் உரிமையைப் பறிப்பதில் சமூக நீதி இல்லை என்பதை தமிழ்நாடு தி.மு.க அரசுக்கு கற்றுக் கொடுக்கட்டும்.
ஆகவே, போராடுகின்ற தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை உடனடியாக தி.மு.க அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் கைது செய்யப்பட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற்று, அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram