26.08.2025
தமிழ்நாட்டின் மதநல்லிணக்கத்தின் சான்றான “பரமசிவனும் பாஷாவும்”
ஆவணப்படத்தை தடுக்கும் போலீசின் அராஜகத்தை எதிர்த்து நிற்போம்!
கண்டன அறிக்கை
“திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க அனுமதியோம்!” என்ற பரப்புரையை தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்டு வருகின்றன மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகள் “திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம்” என்று முழங்கிய ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, இந்து முன்னணி பாசிச கும்பலுக்கு எதிராக தொடர்ந்து மேற்கொண்டு வரும் பரப்புரையானது தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் அமைப்புகளாலும் வரவேற்புக்குரியதாக உள்ளது.
வேத – வர்ண – சாதி – பார்ப்பனிய எதிர்ப்பை உயிர் நாடியாக கொண்டுள்ள தமிழ்நாட்டின் மரபை சீர்குலைக்க முயலும் பார்ப்பன – இந்து மத வெறி பாசிச கும்பலுக்கு எதிரான இன்னொரு ஆயுதமாக மதுரையின் மதநல்லிணக்க வரலாற்றை எடுத்துக் கூறும் “பரமசிவனும் பாஷாவும்” என்ற ஆவண படத்தை எமது அமைப்புகள் தயாரித்து 25.08.2025 அன்று மதுரையில் வெளியிட திட்டமிட்டு இருந்தன.
திடீரென்று அரங்கத்திற்கு உள்ளே புகுந்த போலீசு படத்தை திரையிடக்கூடாது என்று தடுத்துள்ளது. தணிக்கைச் சான்றிதழ் வாங்கவில்லை என்று பொருத்தமற்ற ஒரு காரணத்தை கூறி ஆவணப்படம் வெளியிடுவதை தடுத்துள்ளது. இதனால் ஆவணப்படம் வெளியீடு நிகழ்ச்சி நடைபெறாமல் கருத்தரங்கமாக அந்த நிகழ்வு நடைபெற்றது.
நாள்தோறும் பல நூறு குறும்படங்களும் ஆவணப் படங்களும் இணையதளங்களில் வெளியாகின்றன. அவற்றை திரையிட்டு விவாதம் நடத்துவது என்பது இயல்பான ஒன்று. இந்து முன்னணி, பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் பாசிச கும்பலுக்கு எதிராக எவ்வித ஆவணமும் புதிதாக உருவாகி விடக்கூடாது என்பதில் மதுரை போலீசு மிகத் தீவிரமாக இருப்பதையே மேற்கண்ட நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.
மத நல்லிணக்க மண்ணான தமிழ்நாட்டின் மக்களின் வரியில் சம்பளம் வாங்கும் போலீசு, மதவெறிக் கலவரங்களை நடத்தி பிழைப்பு நடத்தும் இந்து மத வெறி பாசிச கும்பலுக்கு அடியாளாக செயல்படுவதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் அனைத்து ஜனநாயக சக்திகளும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையின் மீதான தாக்குதலை கண்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.
மேலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க – இந்து முன்னணி பாசிச கும்பலுக்கு எதிரான பரப்புரையை மேற்கொள்வதைத் தடுக்கும் போலீஸின் மீது உரிய நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram