27.08.2025
கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடும்
சமூக செயற்பாட்டாளர்களைக் கொலை செய்யும் மாஃபியா கும்பல்கள்!
கனிம வளக்கொள்ளையர்களை பாதுகாக்கும் அரசும் அதிகார வர்க்கமும்!
பத்திரிகைச் செய்தி
தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் கல்குவாரி கொள்ளையர்களால் பார்வார்ட் பிளாக் நகரச் செயலாளர் சசி என்ற சதீஷ்குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பாரதியார் நகர்ப் பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ்குமார் (40). இவர் கம்பத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். சதீஷ்குமார் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் நகரச் செயலாளராகவும் இருந்து வந்துள்ளார். இவரது சொந்த ஊர் காமயகவுண்டன்பட்டி.
தேனி மாவட்டத்தின் கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியின் சங்கிலிக்கரடு பகுதியில் பேரூராட்சி வருவாய் துறைக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது.
சதீஷ்குமார் கல்குவாரிக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் போராடி வந்துள்ளார். மேலும், அப்பகுதியில் வெட்டி எடுக்கப்படும் கனிம வளங்கள் கேரளாவுக்கு கொள்ளையடிக்கப்படுவதாகவும் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்துள்ளார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 26 அன்று இரவு காமயகவுண்டன்பட்டியில் உள்ள சமுதாய கூடத்தில், சசியை தற்பொழுது செயல்பட்டு வரும் கல்குவாரி சம்பந்தப்பட்டவர்கள் பேச்சுவார்த்தைக்காக அழைத்துள்ளனர். அப்பேச்சுவார்த்தையில் சதீஷ்குமாருக்கும் எதிர்த் தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த எதிர்த் தரப்பைச் சேர்ந்த சின்னசாமி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சதீஷ்குமாரை குத்தியுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசுதுறையினர் காயம் அடைந்த சதீஷ்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து சதீஷ்குமாரின் கொலைக்குக் காரணமானவர்களைக் கைது செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, உத்தமபாளையம் போலீசு கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு போராட்டத்தைக் கைவிட்டனர். அதன்பிறகு சதீஷ்குமார் கொலை வழக்கில் பெண்கள் உட்பட 10 பேர் மீது ராயப்பன்பட்டி போலீசு நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே, மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கனிமவள கொள்ளையன் பி.ஆர்.பி. பழனிசாமி கிரானைட் குவாரி நடத்தி வந்தார். கிரானைட் குவாரியில் நரபலி கொடுத்து வந்துள்ளார். தொடர்ச்சியான மக்கள் போராட்டத்தினால் கிரானைட் குவாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டது.
சமீபத்தில், தமிழ்நாட்டில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய கரூர் குப்பம் விவசாயி ஜெகநாதன், புதுக்கோட்டை திருமயம் காட்டுப்பாவா பள்ளிவாசல் ஜகபர் அலி, காவல்கிணறு மணி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை தமிழ்ச்செல்வன், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வெங்கலப்பாளையம் நடராஜன், திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காளிப்பட்டி வனசேகர், மதுரை வாடிப்பட்டி கச்சைகட்டி ஞானசேகரன், மதுரை மேலூரைச் சேர்ந்த கம்பூர். செல்வராஜ், பாளையங்கோட்டை பெனட்டிக் ராயன், தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் பேட்மா நகர் முத்துச்செல்வன், ஆலந்தா சுடலைமுத்து, விழுப்புரம் ஏனாதிமங்கலம் ராஜா, பத்திரிகையாளர் கன்னியாகுமரி ஜெபர்சன், கோவை அருண் பாலாஜி என தொடர்ச்சியாக கனிமவளக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய சமூக செயற்பாட்டாளர்கள் மாஃபியா கும்பலால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர்.
இதுபோன்று சமூக செயற்பாட்டாளர்களைப் பாதுகாக்க அரசு துப்பற்று போயுள்ளதால், அவர்கள் கனிமவளக் கொள்ளையர்களால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கனிமக் கொள்ளையைத் தடுத்ததற்காகவே அரசு அதிகாரியான தூத்துக்குடி திருவைகுண்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலை; சென்ற வாரம் திருச்செங்கோடு பாலமேடு கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி மீது கொலைவெறித் தாக்குதல்; புதுக்கோட்டை இலுப்பூர் கோட்டாட்சியர் சென்ற வாகனம் மீது கனிமவள கொள்ளையர்களின் வாகனம் ஏற்றி படுகொலை செய்ய முயன்றது ஆகியவை நடந்தேறின.
திருப்பூர் மாவட்டம் குண்டடம் இடையன் கிணறு பகுதியில், சட்டவிரோத வாகனத்தைப் பறிமுதல் செய்ததற்காக கனிமவளத்துறை வருவாய் ஆய்வாளர் சிவசக்தி, அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் பி.ஏ வினோத்தால் மிரட்டி அச்சுறுத்தப்பட்டார். அமைச்சரின் அடிவருடிகளால் ஏவிவிடப்பட்ட குண்டர் படையால் வாகனம் பிடுங்கிச் செல்லப்பட்டது. ஆனால், இன்று வரை கனிமவளத்துறை வருவாய் ஆய்வாளர் சிவசக்தி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு போலீசுதுறை முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை என்பது வேதனையான விசயமாக உள்ளது.
அரசு அதிகார வர்க்கத்தில் நேர்மையாகப் பணி செய்த சகாயம் ஐ.ஏ.எஸ். போன்று கனிமவள கொள்ளைக்கு எதிராக நிற்கும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் இதுதான் நிலைமை.
சட்ட விரோத கல் குவாரி கொள்ளையை எதிர்த்து தடுத்து நிறுத்தியதற்காக படுகொலை செய்யப்பட்ட தி.மு.க. கிளைச் செயலாளர் குப்பம் விவசாயி ஜெகநாதன் படுகொலை; கல்குவாரி உரிமையாளர்களால் படுகொலை செய்யப்பட்ட ஒன்றிய குழு உறுப்பினரும் அ.தி.மு.க. சிறுபான்மையினர் பிரிவு ஒன்றிய செயலாளருமான புதுக்கோட்டை திருமயம் ஜகபர் அலி படுகொலை என அரசியல் கட்சிகளில் நேர்மையாகச் செயல்படும் சமூக செயற்பாட்டாளர்களையும் மாஃபியா கும்பல் படுகொலை செய்து வருகிறது.
தேனி மாவட்டம் சதீஷ்குமார் படுகொலை சம்பவம் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், தமிழ்நாட்டில் கனிமவளக் கொள்ளையர்களை அரசும் போலீசுதுறையும் பாதுகாத்து வருவதும் சமூக செயற்பாட்டாளர்களைக் கொலை செய்வதை வேடிக்கை பார்ப்பதும் நடக்கிறது. கல்குவாரி, கிரானைட் குவாரி போன்ற கனிமவளக் கொள்ளைகள் தமிழ்நாடு முழுவதும் கொள்ளையர்களுக்கு ஆதரவாக அரசும் போலீச்துறையும் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டு வருகிறது.
இதுபோன்ற கல்குவாரி, கிரானைட் குவாரி போன்ற கனிமவளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த போராடுவோம்!
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டம், மேலூர் கிரானைட் குவாரி கொள்ளையை எதிர்த்த போராட்டம் போன்ற மக்கள் போராட்டங்களை முன்னெடுப்போம்!
இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்!

மக்கள் அதிகாரக் கழகம்,
மதுரை கிழக்கு மாவட்டம்.
8438631587
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram